Language Selection

06_2006.jpg

எந்தச் சாதியில் பிறந்தவராக இருப்பினும் தகுதியான நபர்களை இந்துக் கோயில்களில் அர்ச்சகராக்க வகை செய்யும் சட்டத்தை இயற்ற விருப்பதாக தி.மு.க. அமைச்சரவை அறிவித்துள்ளது. 1972இல் இதே சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்தபோது, சங்கர மடம் மற்றும் ஆதீனங்கள் ஒன்றிணைந்து இதற்கெதிரான தீர்ப்பை உச்சநீதி மன்றத்தில் பெற்றன. ஆகம விதிகளின் அடிப்படையில் அமைந்த கோயில்களில் பார்ப்பனரல்லாத யாரும் அர்ச்சகராக முடியாது என்ற இந்தத் தீண்டாமைக் கோட்பாட்டை "இந்து மத உரிமை' என்ற பெயரில் அங்கீகரித்தது அன்றயை உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு.

 

            சமூக நடவடிக்கைகளில் தீண்டாமை என்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டாலும், இந்து மத விவகாரங்களில் தீண்டாமை மத உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பனரல்லாதாருக்கு எதிராக மட்டுமின்றி, தமிழ் வழிபாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் எதிராகவும் இந்தத் தீண்டாமை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகம விதிகள், மரபுகள் என்ற பெயரால் இது நியாயப்படுத்தப்படுகிறது.

 

            அரசியல் சட்டத்தின் பிரிவு 25(1) அரசுக்கு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தீண்டாமை மத உரிமையல்ல என்பதை நிலைநிறுத்தும் வண்ணம் அரசியல் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். இல்லையேல், தற்போது தி.மு.க. அரசு கொண்டு வரவிருக்கும் சட்டமும் பல்வேறு வழக்குகளால் முடக்கப்படும் சாத்தியம் உள்ளது.

 

            தகுதியுள்ள அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தில் பெண்களுக்கும் அர்ச்சகராகும் உரிமை வழங்கப்பட வேண்டும். மேலும், அரசு வேலை வாய்ப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு முறை அர்ச்சகர் நியமனத்திலும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

 

            பெரும்பான்மை மக்களின் மத உரிமை மற்றும் வழிபாட்டு உரிமையை நிலைநிறுத்தும் விதத்தில் தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் தமிழில்தான் வழிபாடு என்பதைச் சட்டப்படி நிலைநிறுத்த வேண்டும். சமஸ்கிருதமயமாக்கப்பட்ட கோயில்கள், கடவுளர்கள், ஊர்களின் பெயர்களை அவற்றின் முந்தைய தமிழ்ப் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

 

            ஏற்கெனவே சாதி அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள பார்ப்பன அர்ச்சகர்கள் "தகுதி' பெற்றவர்களாக அப்படியே நீடித்திருக்க, புதிதாக வரும் பார்ப்பனரல்லாதாருக்கு மட்டுமே "தகுதிக்கான பயிற்சி' என்பது நெறியற்றது. புதிய தமிழ் வழிபாட்டு முறையில் அனைவரும் பயிற்றுவிக்கப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படுவோர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும்.

 

            ஆகம விதி, மரபு என்ற பெயரில், அர்ச்சகர் பயிற்சி மற்றும் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பார்ப்பன மடங்களும், ஆதீனங்களும் கொண்டிருக்கும் சிறப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டும். பார்ப்பனரல்லாதார்  பெண்கள்  தமிழ்மொழி ஆகிய மூன்றின் மீதும் திணிக்கப்பட்டிருக்கும் பார்ப்பனிய ஒடுக்குமுறை ஒருங்கிணைந்த முறையில் முறியடிக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

 

            1993இல் எமது அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்ட சிறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தில் சூத்திரர், பஞ்சமர் என்று இழிவுபடுத்தப்பட்டோருடன் பெண்களும் அவர்கள் எழுப்பிய தமிழ் முழக்கங்களும் இணைந்துதான் அரங்கநாதன் கருவறைக்குள் நுழைந்தனவென்பதையும், தம் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனிய சாதி முறைக்கு எதிராகப் போராடிய பெரியார், அம்பேத்கர் படங்களையும் எமது தோழர்கள் கருவறைக்குள் ஏந்திச் சென்றார்கள் என்பதையும் இங்கே நினைவு கூர்கிறோம். இக்கோரிக்கைகளுக்காகப் போராட தமிழ் மக்களை அறைகூவி அழைக்கிறோம்.

 

 ம.க.இ.க., தமிழ்நாடு.