பிள்ளையான் வாரான்! ரவுடி பின்ளையான் வாரான்! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்!
மக்கள் தாமாக தெரிவு செய்த தேர்தலாம்! இதில் வென்ற பிள்னையான் கதை பிள்ளையார் கதை போன்றது. அதிகப்படியான விருப்பு வாக்கால் மக்கள் கிழக்கு 'விடிவெள்ளி"யை தெரிவு செய்துள்ளனராம்! வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான, ஏன் வடக்குக்கு எதிரான கிழக்கு மக்களின் வாக்குகளாம்! இதுதானாம் தேர்தல் சொல்லும் செய்தியாம்!
இப்படித் தான் பிள்ளiயான் கதை, எம்முன் வருகின்றது. யார் இந்த பிள்ளையான்? கருணாவின் எடுபிடியாக, கருணாவின் தனிமனித பிளவின் பின் ஓட்டிக்கொண்ட ஒரு லும்பன். கருணா புலியிடமிருந்து தப்பிப்பிழைக்க அரசின் தயவில் தலைமறைவாகிவிட, கருணாவின் முதுகில் குத்தித் தான் அதிகாரத்தைக் கைப்பறியவன். இதற்காக கருணா விசுவாசிகளை கொன்றும், பலரை மிரட்டியும் அடிபணிய வைத்தவன். இவனின் அரசியல் என்ன?
கருணாவின் பின் ஓடி வந்ததற்கு அப்பால், சொந்த அரசியல் கிடையாது. கருணாவை எதிராக நிறுத்திய போதும், எந்த அரசியலும் கிடையாது. கருணாவை தொலைத்துக் கட்ட, பேரினவாதத்தின் காலை நக்கிய தகுதியைத் தவிர, வேறு எதுவும் கிடையாது.
ரவுடியாக, குண்டனாக பேரினவாதத்துக்கு சேவை செய்ததால், கிடைத்த அதிகாரம். பேரினவாதம் வழங்கிய பிச்சையில், முதலமைச்சர் கனவுடன், தேர்தல் களத்தில் 'அண்ணனாக" இறக்கப்பட்டவர். வடக்கில் டக்கிளஸ் ஐயா, பேரினவாதத்தை நக்கி வடக்கு அதிகாரத்தைப் பெற்றது போல் தான், இதுவும். இப்படி பிள்ளையான் திடீர் அரசியல் வாதியாக, மக்கள் தாமாகவே முன்வந்து தெரிவு செய்ததாக கூறுவது நகைச்சுவை தான். பிள்ளையானுக்கு பதில், பேரினவாதம் யாரை நிறுத்திருந்தாலும், அவனும் வென்று தான் இருப்பான். அது தனிக் கதை.
கவனம் பிள்ளையான் வாரான்! ரவுடி பின்ளையான் வாரான்! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்! கைகூப்பி வணங்குங்கள்! கிழக்கு அரச அவைக் கோமாளியாக 'ஜனநாயக" மகுடம் சூட வாரார்! எல்லோரும் அடிபணியுங்கள். இப்படி குண்டர் படைத் தலைவன், பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆயுதங்களை, தலைக்கு மேல் சுத்தியபடி கிழக்கு மக்கள் முன் காட்சியளிக்கின்றான்.
இந்த அண்ணன்மார்கள் தமது 'ஜனநாயக"த்தை நிறுவ, எப்படிப்பட்ட வேஷத்தை கட்டியாடினார்கள்? கிழக்கு 'ஜனநாயகம்" பூத்துக் குலுங்க, கிழக்கின் 'விடிவெள்ளிகள்" பாசிசத்தையே, தமது தேர்தல் கூத்தாக அரங்கேற்றினர்.
அங்கிருந்து கசிந்துவரும் செய்திகள், இந்த அண்ணன்களின் ரவுடிசத்தை உலகறிய அம்லமாக்குகின்றது. புலிகளுக்கு சற்றும் குறையாது, தமது சொந்த நடத்தையால் தேர்தலை அமர்க்களமாக்கினர். மக்களின் வாக்குரிமை என்பது மக்களுக்கு கிடையாது. மாறாக இந்த கடையார் கூட்டத்தின் துப்பாக்கி முனையில் அவை மிதிக்கப்பட்டது.
பேரினவாத பாசிட்டுகளும், பதவி வெறிபிடித்த முஸ்லீம் காடையர்களும் ஒன்றுசேர, 'கிழக்கு விடிவெள்ளிகள்" நடத்திய தேர்தல் நாடகம், புலிப் பாசிசத்தை மிஞ்சியது. புலிகள் இவ்வளவு காலமும் தனித்து நடத்தியதை, கூட்டாக எப்படி செய்வது என்பதை 'கிழக்கு விடிவெள்ளிகள்" நடத்திக் காட்டினர். வேடிக்கை என்னவென்றால், அரசுடன் கூடி வடக்கிலும் கிழக்கிலும் இயங்கும் கூலிக் கும்பல் கிழக்கில் தம்முடனில்லை என்பதற்காக, அவர்களுக்கு எதிராக 'விடிவெள்ளிகள்" நடத்திய காடைத்தனம் அந்த பாசிசத்தின் கோரத்தை தெளிவாக எடுத்துக் காட்டியது.
கிழக்கு மக்களை நடைப்பிணமாக்கி விட்டு, அவர்களை மீட்கப்போவதாக கூறும் காடையர் கூட்டம், மக்கள் மேல் சவாரி விட்டனர். தமக்குத் தாமே மாலைகளை அணிவித்துக் கொண்டு, தம்மைத்தாமே மக்களின் பெயரில் 'ஜனநாயகத்தின்" பெயரில் வெல்ல வைத்தனர்.
ரவுடிசத்தை மறைக்க, மாலையும், ரையும், கோட்டும் போட்டு உலகறிய இரட்டை வேஷம் போட்டனர். காடைத்தனத்தையும் பாசிசத்தையும் மூடிமறைக்க 'ஜனநாயகத்தை" வரிக்குவரி உச்சரித்தனர். தமக்கு எதிராக எழும் குற்றச்சாட்டை மறுக்க தமிழ்செல்வனின் பல்லுப் போல், 'ஜனநாயகம்" பேசும் 'ஜனநாயக" வள்ளல்கள்.
கிழக்கு மக்கள் மேலான 'கிழக்கு விடிவெள்ளிகள்" தமது பாசிச எடுபிடி வன்முறையை மூடிமறைக்க, அதை 'ஜனநாயகமாக" விளக்க, பாரிசில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழக்கு அரசியல் ஆலோசகர். பாலசிங்கம் தோற்றுப் போகுமளவுக்கு 'ஜனநாயகம்" பற்றிய, பாசிச வழிகாட்டல்கள்.
புலியிலிருந்து பிரிந்தவர்களோ, தாம் வெறும் ஆயுதம் ஏந்திய குண்டர்கள் தான் என்பதை மக்கள் முன் நிறுவினர். குண்டர்களுக்கு பயந்து மக்கள் அடங்கி ஒடுங்கி நிற்பது இயல்பு. முன்பு புலிகள், இன்று பேரினவாத குண்டர்கள். இந்த கிழக்கு குண்டர்கள் பேரினவாதத்தின் அடியாட்களாக போட்ட ஆட்டம் தான், இந்த 'ஜனநாயக"த்தின் பெயரிலான தேர்தல்.
பி.இரயாகரன்
11.05.2008