Language Selection

06_2006.jpg

கடந்த 25 ஆண்டுகளாகப் புரட்சிகர இயக்கத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் ஊக்கமுடன் செயல்பட்டு வந்த கோவை  கணபதியைச் சேர்ந்த தோழர் நா.இராமமூர்த்தி, கடந்த 9.5.06 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனது 47வது வயதில் மரணமடைந்து விட்டார்.

 

            கோவையில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பின்னர், அரசு பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறை  அட்டூழியங்களுக்கு மத்தியில், துணிவாகப் புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்வதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்தான் தோழர் இராமமூர்த்தி. தெருமுனைக் கூட்டங்கள் நடத்தியதற்காகவும் சுவரொட்டி பிரச்சாரம் செய்ததற்காகவும் அவர் பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறையிடப்பட்ட போதிலும், இம்மியளவும் சோர்வடையாமல் தொடர்ந்து உற்சாகமாகச் செயல்பட்ட தோழர்தான் இராமமூர்த்தி. கடைசல் தொழிலாளியான அவர், தொழிலாளி வர்க்கத்துக்கே உரித்தான போர்க்குணத்தோடு போலீசு நிலையம், வழக்குமன்றம், சிறைச்சாலை என எங்குமே சமரசத்திற்கு இடம் தராமல் உறுதியாக நின்று போராடினார். புரட்சிகர இயக்கத்தின் எந்த நிகழ்ச்சியானாலும், தான் மட்டுமின்றி, தனது குடும்பத்தாரையும் உடன் அழைத்து வந்து பங்கேற்பது அவரது தனிப்பண்பு.

 

            கோவைகணபதி நகரம் இதுவரை கண்டிராத வகையில், சாதிமதச் சடங்குகள் ஏதுமின்றி பாட்டாளி வர்க்க உணர்வோடு நடந்த தோழரது இறுதி ஊர்வலத்திலும், அதன் பின்னர் நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்திலும் திரளாக தோழர்களும் பகுதிவாழ் உழைக்கும் மக்களும் பங்கேற்றனர். பு.ஜ.தொ.மு. தலைவர் தோழர் முகுந்தன், ம.க.இ.க. பொருளாளர் தோழர் சீனிவாசன் ஆகியோர் தோழர் இராமமூர்த்தியின் உயரிய கம்யூனிசப் பண்புகளை நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்தினர்.

 

            தோழர் இராமமூர்த்தியின் கடின உழைப்பு, எளிய வாழ்வு, அடக்குமுறைக்கு அஞ்சாத உறுதி, பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்வதில் அவரது ஆர்வம்  ஆகிய உயரிய கம்யூனிசப் பண்புகளை உறுதியாகப் பற்றி நின்று புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்!

 

—  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை.