அ.தி.மு.க.வின் நிரந்தரத் தலைவியும், தமிழகத்தின் நிரந்தர முதல்வராக அக்கட்சி கருதும் அம்மா(!) ஆட்சி அதிகாரத்தை இழந்த 15 நாட்களில் 75க்கும் மேலான அக்கட்சித் தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டோ, மாரடைப்பாலோ மரணமடைந்துள்ளார்கள்.
""இப்படிச் செய்யவேண்டாம்; இதனால் தனது மனம் மிகுந்த வேதனையடைகிறது. நடந்து முடிந்த தேர்தல்களில் தனது கட்சி தோல்வியடையவில்லை; இதுவரை இல்லாத சாதனை அளவு ஓட்டுக்களை வாங்கியிருக்கிறது; தீய சக்தி கருணாநிதியின் கட்சிதான் வாக்குவிகிதத்தில் சரிவைக் கண்டுள்ளது. எனவே நாம் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் நாளை நமதே'' என்று ஒவ்வொரு சாவுக்கும் இரங்கல் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார், ஜெயலலிதா. ஆனால், ""தியாகி''களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
""புரட்சித் தலைவி அம்மா''வின் ஆட்சியின் மீதும் கட்சியின் மீதும் அக்கட்சித் தொண்டர்கள் இவ்வளவு பற்று வைத்திருக்கிறார்களா என்று எண்ணிவிட வேண்டாம். ஒவ்வொரு சாவுக்கும் ஒரு இலட்சம் ரூபாய் என்று தவறாது ஜெயலலிதா ""கட்டை மொய்'' (திருமணத்துக்கு மொய் எழுதுவதைப் போல சாவுக்கு எழுதப்படும் மொய்) எழுதுவதுதான் இந்த அதிர்ச்சித் தியாகங்களுக்கும் காரணம். இவர்களெல்லாம் மனநோயாளிகள் என்பதா அல்லது நல்ல தொகைக்குக் காப்பீடு செய்துவிட்டு, சாவுச் சான்றிதழ்கள் தயாரித்து மோசடி செய்யும் கிரிமினல்களா என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. மைத்ரோயன்களும் மலைச்சாமிகளும் மட்டும் இந்தத் தியாகிகள் பட்டியலில் சேராது தளபதிகளாகவே உள்ளனர். பார்ப்பனர்கள், பண்ணையார்கள் வீட்டுப் பெண்களுக்கு மட்டும் சாமியும் வருவதில்லை; பேயும் பிடிப்பதில்லை!