அந்நிய ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் மறுகாலனியாதிக்கமே நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளைத் தீர்மானிப்பது என்றாகி விட்டது. அதன் விளைவாக, நாட்டின் இறையாண்மையும் மக்களின் வாழ்வுரிமைகளும் சூறையாடப்பட்டு வரும் சூழலில் நாடாளுமன்ற சட்டமன்ற ஜனநாயகமும் தேர்தல்களும், தனிநபர்வாதமாகவும் கலாச்சாரச் சீரழிவாகவும் மாறி வருவதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, தமிழக அரசியல்.
உலகவங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் மட்டுமல்ல; மேல்நிலை வல்லரசுகளின் அரசு இராணுவ அதிகாரிகளே இந்த அரசு நிர்வாகத்தில் தலையீடு செய்து ஆட்டுவிப்பது என்றான பிறகு, நாடாளுமன்ற சட்டமன்ற ஆட்சியமைப்பும் தேர்தல்களும் முக்கியமாக ஒரே நோக்கத்துக்குத்தான் பயன்படும். ""நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள்தாம் இன்னமும் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். நம்ம ஆட்சிதான் நடக்கிறது'' என்ற தோற்றத்துக்குத்தான் பயன்படும். இந்த மாயத்தோற்றத்தைப் பராமரிக்கும் வகையிலான ஓட்டுக் கட்சி அரசியல் மட்டுமே நடத்தப்படுகிறது. அரசியல் கட்சிகள் என்னதான் சாணக்கியத்தனம் மிக்கதாக இருந்தபோதும், இந்த வரம்புகளுக்குட்பட்டு தான் செயல்பட வேண்டும் என்று வால் நறுக்கப்பட்டபிராணிகளாக வளைய வருகின்றன.
இதனால்தான் காந்தியிசம், கம்யூனிசம், அண்ணாயிசம், இந்துயிசம், அம்பேத்கரிசம், பெரியாரிசம் போன்ற கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் ஆகியவற்றின் இடத்தைக் கவர்ச்சித் திட்டங்களும் கவர்ச்சி நடிகர்நடிகைகளும் பிடித்துக் கொண்டார்கள். தனிநபர்வாதம், கவர்ச்சிவாதம், பிழைப்புவாதம், சாதியவாதம், பொறுக்கி அரசியல் என்று எல்லா வகையிலும் முன்னோடியாக விளங்குகிறது, ஜெயலலிதா கும்பல். கருணாநிதியின் குடும்பவாரிசு அரசியலை எதிர்த்த போராட்டம் என்பதே கூட, தொட்டுக் கொள்ளும் ஊறுகாயாகவே பயன்படுத்தப்படுகிறது.
ஜெயலலிதா கும்பலின் ""எதேச்சதிகார ஆட்சி எதிர்ப்பு'' என்ற முழக்கம் வைத்திருந்தாலும் ஜெயலலிதாவின் அரசியலையே தானும் பின்தொடர்ந்து செல்லுகிறார், கருணாநிதி. இனம், மொழி, சமூகநீதி எல்லாவற்றுக்குமான முழக்கங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, ""சர்வாதிகார எதிர்ப்பு ஜனநாயக மீட்பு'' என்று விலையும் மதிப்பும் கூடுதலான பொருளை விற்பதற்கே கூட, தள்ளுபடி விற்பனை இலவச இணைப்புகளை சேர்த்துக் கொண்டு வந்தபோதுதான் கருணாநிதியின் உடன்பிறப்புகளே கூட எழுச்சியுற்றார்கள்.
தேர்தல் களத்தில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் எந்த இலட்சியத்தோடு எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை இரத்தினச் சுருக்கமாக இரண்டே பத்திகளில் பின்வருமாறு புதிய ஜனநாயகம் மே மாத இதழில் குறிப்பிட்டிருந்தோம்.
""தோற்பது நானாக இருந்தாலும் வெல்வது பொறுக்கி அரசியலாக இருக்க வேண்டும். வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது சீரழிவாக இருக்க வேண்டும்'' என்ற கொள்கையுடன் ஓட்டுப் பொறுக்கி அரசியலை அடியாழம் காணமுடியாத அதல பாதாளத்தை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார், புரட்சித்தலைவி.
முதல்வர் நாற்காலியிலமர்ந்து மக்கள் தொண்டாற்றிய நிலையிலேதான் தனது உயிர் பிரிய வேண்டும் என்ற "கொள்கை வெறி'யுடன் களத்திலிறங்கியிருக்கும் கருணாநிதி, எந்தப் பாதாளத்திலும் பாய்ந்து பதவி நாற்காலியில் அமர்ந்துவிடத் துடிக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ஜெயலலிதா கும்பலைத் தனிமைப்படுத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டணி அமைப்பதிலும் தமிழகம் புதுவை இரண்டிலுமாக 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவதிலும் சாதனைபடைத்தார், கருணாநிதி. ஆனால் தமிழக சட்டபேரவைக்கான இந்தத் தேர்தலில் கடுமையாக முயற்சித்தும் கூட தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. உளவுத்துறையும், களவுத்துறையும், துதிபாடிகளும் வழங்கிய ""ஆலோசனை'' களைக் கேட்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்ற போதையில் ஜெயா கும்பல் மிதந்து கொண்டிருந்த அதேசமயம், கள நிலைமையைச் சரியாகக் கணித்த கருணாநிதி, கூட்டணிக் கட்சிகளின் தயவோடாவது ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்ற உறுதியோடு செயல்பட்டு, அதில் வெற்றியும் பெற்றார்.
எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் வெற்றிக் கனியைக் கைப்பற்றியபோதும் கீழே விழுந்து கால் முறிந்து போனது போலாகிவிட்டது. குழுச்சண்டையும் பதவி வெறியும் நிறைந்த காங்கிரசு மற்றும் காலை வாரி விடுவதிலும் அணிமாறுவதிலும் பெயரெடுத்துள்ள பா.ம.க. இராமதாசையும் நம்பி, சிறுபான்மை ஆட்சி அமைத்திருக்கிறார், கருணாநிதி.
ஜெயலலிதா, வைகோ, சோ போன்ற தனது அரசியல் எதிரிகள் குற்றஞ்சாட்டுவதுபோல தனது குடும்ப அரசியல் ஆதிக்கம் ஒன்றையே குறியாக வைத்துச் செயல்படும் ""சுயநலமிக்க தீயசக்தி'' தான் கருணாநிதி என்ற முத்திரையைப் பொய்ப்பித்து, தனது அரசியல் வாரிசான ஸ்டாலினை அரியணையேற்றுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளார். குடும்பசுயநல அரசியலுக்கு அப்பாற்பட்ட பழுத்த அனுபவமும் நிர்வாகத் திறமையும் மிக்க ஜனநாயக அரசுத் தலைவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், கருணாநிதி.
இதனால்தான், இதுவரை மக்கள் கண்டிராதவாறு போலி வாக்குறுதிகளை வீசி, ஓட்டுப் பொறுக்கிக் கொண்டு போய் பதவியேற்றதும், ஏய்த்துவிடும் அரசியல் தலைவர்கள் போன்றவர் தானல்ல என்று காட்டும்விதமாக பதவியேற்ற நாளன்றே, 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கூட்டுறவுக் கடன்கள் ரத்து, பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவில் வாரம் இரண்டு முட்டை ஆகிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார்.
அடுத்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றியது. வேலை நிறுத்தத் தடைச் சட்டம் (டெஸ்மா), மதமாற்றத் தடைச்சட்டம் ஆகியவற்றை நீக்குவது, சாதனை மாணவர்களுக்கு கல்வியைத் தொடர உதவி, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி, உழவர் சந்தைகள் திறப்பு, கல்லூரிக் கட்டணங்கள் குறைப்பு என்று ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் மொழி கற்பதைக் கட்டாயமாக்குவது, கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவது, சிவாஜிக்குச் சிலை வைப்பது, இலவச கலர் டி.வி, ஏழை விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம், இலவச காஸ் அடுப்பு எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்வதாக, தேதி குறிப்பிட்டு ஆளுநர் அறிக்கை வாசிக்கச் செய்தார், கருணாநிதி. மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் நல்லதே செய்யும் பண்பான அரசு தலைவர் என்று பெயரெடுப்பதற்கு எத்தணிக்கிறார். இப்படிப்பட்டவரின் வாரிசு அரியணையேற்றப்படுவதில் தவறொன்றும் இல்லை என்ற எண்ணத்தை விதைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார், கருணாநிதி.
ஆனால், ""மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்'' என்று தேர்தல் முடிவு குறித்து அறிவித்த ஜெயலலிதா, தோல்வியை ஜீரணிக்க முடியாமல் முடிவு தெரிவதற்கு முன்பிருந்தே படுத்துப் புரளத் தொடங்கிவிட்டார். இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பலமணி நேரம் சென்ற பிறகும் கூட, பெரும்பான்மையான இடங்களில் ஜெயலலிதா கட்சிதான் வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் இருப்பதாக ஜெயா டி.வி. ரபி பெர்ணார்ட் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவைச் சுற்றி நெருக்கமாக உள்ள துதிபாடிகளே கூட தோல்வியடைந்துவிட்ட உண்மையைச் சொல்ல முடியாது பயந்து புளுகி வந்தனர் என்றால் பாருங்கள்!
வாக்குப் பதிவுக்கு முந்தின நாளிலிருந்து தி.மு.க.வின் ""சன்'' தொலைக்காட்சி ""ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!'' என்ற தலைப்பில் கருணாநிதி கைது, ஜெயலலிதா ஆட்சியில் மாணவர்கள்போக்குவரத்துத் தொழிலாளர்கள்அரசு ஊழியர்கள் மீதான போலீசு தாக்குதல்கள், தர்மபுரியில் மாணவிகளை எரித்துக் கொன்றது மற்றும் எலிக்கறிகஞ்சித் தொட்டி ஆகிய காட்சிகளை தொகுத்து ஒளிபரப்பியது.
அதேபோல தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கைது, நீலகிரி தேயிலைத் தோட்டத்து இளைஞர்கள் நிர்வாணமாக்கித் தாக்கப்பட்டது, தாமிரவருணிப் படுகொலைகள் போன்ற சம்பவங்களை ஜெயா டி.வி.யும் தொகுத்துக் கொடுத்திருக்க முடியும். ஆனால் அதை விடுத்து, செய்தித் தொகுப்பு என்ற பெயரில் ""கலைஞர் கைமாறு'' என்ற ஒன்றை வாக்குப்பதிவுக்கு முன்பிருந்து ஆட்சி மாற்றத்துக்குப் பின்பும் பல நாட்கள் திரும்பத் திரும்ப ஜெயா டி.வி. ஒளிபரப்பியது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நளினியின் தங்கை கணவருக்கும் மாமனாருக்கும் ""கைமாறு'' செய்யும் வகையில் கருணாநிதி, ""கண்ணம்மா'' திரைப்படம் எடுத்து கொடுத்ததாகச் சொல்லுகிறது அந்த செய்தித் தொகுப்பு. ராஜீவ் கொலை வழக்கில் நளினி தண்டனை பெற்றார் என்பதற்காக அவரது குடும்பத்தையே கொலைகாரக் குடும்பமாகச் சித்தரிப்பதும், அக்குடும்பத்துடன் எந்தவித உறவும்தொடர்பும் வைப்பதே உள்நோக்கம் கொண்டதாகச் சித்தரிப்பதும் ஜெயலலிதாவின் பாசிசவக்கிரத்தையே காட்டுகிறது. சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் மாநகராட்சி அரங்கில் நளினியின் சகோதரர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததற்காகவே தான் ஆட்சிக்கு வந்ததும் அந்த அரங்கை மூடிவிடும்படி உத்திரவு போட்டவர்தான் இந்த ஜெயலலிதா. விடுதலைப் புலிகளின் உறுதியான ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளும் வைகோவும், திருமாவும் இதற்கெல்லாம் என்ன சொல்லப் போகிறார்களோ!
டெல்லியிலும், பாண்டியிலும் கூட்டணி ஆட்சி நடத்தும் கட்சிகளின் ஆதரவோடுதான் இங்கே கருணாநிதி அரசு அமைந்துள்ளது. ஆனாலும் தி.மு.க.வின் சிறுபான்மை அரசு இன்னும் ஓராண்டு கூட நீடிக்காது என்றும் நடந்து முடிந்த தேர்தலில் தன் கட்சி தோற்கவே இல்லை; தி.மு.க.தான் சரிவைச் சந்தித்துள்ளது என்றும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார், ஜெயலலிதா. தன் கட்சிக் கூட்டத்திலேயே தானிருக்கும் மேடையில் வேறொருவர் அமர்வதைக் கூட சகிக்க முடியாத ஜெயலலிதா, தானே தனது பரம்பரை எதிரியென அறிவித்த ஒருவர் தனது எதிரிலேயே முதலமைச்சராக அமர்ந்திருப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
மேலும், தனது ""பரம்பரை எதிரி'' ஆட்சியில் நீடித்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எந்த நேரத்தில் எந்தக் குற்றச்சாட்டின் கீழ் சிறையிலடைக்கப்படுவோமோ என்ற பீதியில் வேறு தவித்துக் கொண்டிருக்கிறார், ஜெயலலிதா. எனவே, இந்த ஆட்சியைக் கலைப்பதற்கு பஞ்சமாபாதகங்களை மட்டுமல்ல, அதற்கு மேலும் போகவும் தயாராக உள்ளார். அதற்கான ""திறமை''யும் அவரிடம் நிறையவே உள்ளது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோதே, அவர் செயலிழந்து போய்விட்டார், அவரது ஆட்சியைக் கலைத்துவிட்டு தன்னை முதலமைச்சராக்கும்படி ஆளுநரிடம் மனுக் கொடுத்தவர்தான் ஜெயா. ஜானகி எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, தமிழக சட்டமன்றத்தையே தனது விசுவாசிகளை வைத்து ரணகளமாக்கி அராஜக வெறியாட்டம் போட்டு ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்திக் காட்டினார். அப்போதைய ஆளும் அ.தி.மு.க. கட்சியில் தனது அணி சிறுபான்மையாக இருந்தும் கூட ஆர்.வெங்கட்ராமன், ராஜீவ் காந்தி போன்றவர்களிடம் தனக்கிருந்த செல்வாக்கை வைத்தே இதைச் சாதித்தார்.
அடுத்து அமைந்த கருணாநிதியின் பெரும்பான்மை ஆட்சியை அடாவடியாகக் கலைக்கும்படி செய்தார். சந்திரசேகர், ராஜீவ் காந்தியிடம் தனக்கிருந்த தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் வெங்கட்ராமன், டி.என். சேஷன் , சுப்ரமணிய சுவாமி போன்ற பார்ப்பன கும்பலின் ஆதரவுடன் இதைச் சாதித்தார். 1996 தேர்தலுக்குப் பிறகு அமைந்த கருணாநிதி ஆட்சியைக் கலைக்கும்படியும் தன் மீதான கிரிமினல் வழக்குகளை இரத்து செய்து விடும்படியும், பா.ஜ.க.வுடன் மத்தியில் கூட்டணி அரசில் பங்கேற்றபோது நிர்பந்தித்தார். அதுமுடியாதபோது மத்தியக் கூட்டணி ஆட்சியையே சு.சாமி துணையோடு கவிழ்த்தார். தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தானும் பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்தார், கருணாநிதி.
தனது சொந்த ஆதாயத்துக்காக யாருடனும் கூட்டுச் சேருவதில் நாட்டிலேயே முன்னோடியாக விளங்குபவர்தான் ஜெயலலிதா. ஒருபுறம் பா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, அத்வானி, நரேந்திர மோடி ஆகிய பார்ப்பன கும்பலோடும் மறுபுறம் தேவகவுடா, முலயம், லல்லு ஆகிய பிழைப்புவாத சமூக நீதிக் கும்பலுடனும் உறவு வைத்துக் கொண்டிருக்கிறார். அதேபோல, தனது சொந்த ஆதாயத்துக்காக பச்சையாகப் புளுகக் கூடியவர்தான் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரை நஞ்சு வைத்து ஜானகி கொன்றுவிட்டார், கோவில் பிரசாதத்தில் நஞ்சு வைத்தும், தனது கார் மீது லாரி ஏற்றியும் கருணாநிதி கொல்ல முயன்றார், ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார், தனது ஆட்சியில் நடக்கும் கொள்ளைகளெல்லாம் தி.மு.க.வினரே திட்டமிட்டுச் செய்பவை, போலீசு நிலையக் கற்பழிப்புப் புகார்களெல்லாம் நட்ட ஈடுபெறுவதற் காக சில பெண்கள் கூறும் பொய்கள், எம்.ஜி.ஆர். நகரில் நடந்த வெள்ள நிவாரண நெரிசல் சாவுகள் தி.மு.க. வதந்தியால் ஏற்பட்டவை, "டான்சி' நிலத்தை வாங்கிய பத்திரத்தில் உள்ளது தனது கையெழுத்தே கிடையாது என்று அடுக்கடுக்காகப் புளுகினார். பயங்கரவாத, பிளவுவாத பீதியூட்டி, போலீசு பார்ப்பன அதிகாரிகளை வைத்து அரசியல்நிர்வாகம் நடத்தி ஆதாயம் தேடுவதையே தனது ஒரே கொள்கையாகக் கொண்டிருப்பவர், ஜெயலலிதா.
மேற்படி அணுகுமுறைகளைக் கொண்டு அடாவடி, அராஜக, தாக்குதல் அரசியல் நடத்தாவிட்டால், கிரிமினல் குற்றவழக்குகளில் இருந்து தான் தப்பிக்க முடியாது என்று தொடர்ந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார், ஜெயலலிதா. 1989இல் தமிழக சட்டமன்றத்துக்குள், கருணாநிதி ஒரு கிரிமினல் என்று ஏசி, பட்ஜெட் உரையைக் கிழித்து அவர்மீது விசிறியடித்து விட்டு, தானே தனது ஆடையைக் கிழித்துக் கொண்டு, மயிரைப் பிய்த்துப் போட்டுக் கொண்டு அனுதாப அரசியல் நாடகமாடினார். ராஜீவ் கொலைக்குக் காரணம் கருணாநிதிதான் என்று அவதூறு பரப்பி, அனுதாப அரசியல் நடத்தி ஆதாயம் தேடினார். அதே நாடகங்களை மீண்டும் அரங்கேற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு இப்போதும் ஜெயலலிதா எத்தணிக்கிறார். ஜெயலலிதா கட்சியின் சமீபத்திய சட்டமன்ற அராஜகமும், ""கலைஞரின் கைமாறு'' என்ற ஜெயா டி.வி.யின் ஒளிபரப்பும் இதை உறுதி செய்கின்றன.
ஜெயலலிதாவின் இந்த பார்ப்பன பாசிச வக்கிரமும் பயங்கரவாதமும் வெற்றி பெறுவதற்கு அவரது துதிபாடிகள் கூறுவதைப் போன்று அவரது துணிச்சல் தைரியம் அறிவுத்திறமை தெளிவு காரணமல்ல. நிலவிவரும் நாடாளுமன்ற சட்டமன்ற ஜனநாயகத்தின் தன்மையே இதுதான். ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவதற்குப் பதில் கண்டன அறிக்கைகள் விடுவது, ஆளுநரிடமும் நீதிமன்றங்களிலும் மனுப் போடுவது என்ற கருணாநிதியின் கோழைத்தனமும், வைகோ, திருமா, ராமதாசு மட்டுமல்ல; போலி கம்யூனிஸ்டுகள் உட்பட அரசியல் பிழைப்புவாத, சந்தர்ப்பவாத சக்திகள் மாறி மாறி விலை போய் விடுவதும் அவருக்கு முக்கிய பலமாக இருக்கிறது. ஆகவேதான், பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலை போலவே, ஜெயலலிதாவும் விரைவில் தற்போதைய ஆட்சி கவிழும், அடுத்த சுற்றில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கின்றார்.
மு ஆர்.கே.