06_2006.jpg

தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பதவியேற்றவுடனேயே, தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருந்த 6,866 கோடி ரூபாய் பெறுமான கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தார். இக்கடன் தள்ளுபடியைத் தனது தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. குறிப்பிட்டவுடனேயே, பல பொருளாதார வல்லுநர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைக்க

 ஆரம்பித்து விட்டது. ""இக்கடன் தள்ளுபடியால் தமிழக அரசுக்கு ஏற்படக்கூடிய நட்டத்தை எப்படி ஈடுகட்ட முடியும்? இது போன்ற கவர்ச்சித் திட்டங்களால் தமிழகம் முன்னேற முடியாது?'' என்றெல்லாம் புலம்பி, அவர்கள் தங்களின் எரிச்சலைக் கொட்டித் தீர்த்தனர்.

 

            அவர்களின் புலம்பல்களை எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். இது போன்ற சலுகை முதலாளிகளுக்கு அளிக்கப்படும்பொழுது, அவர்கள் அதனையும் எதிர்ப்பதுதானே நியாயமாக இருக்க முடியும்? ஆனால், உச்சநீதி மன்றமோ இதற்கு வேறு விளக்கம் சொல்கிறது.

 

            ""வளர்ச்சி கடன் வங்கி'' என்ற நிதி நிறுவனம், தன்னிடம் தொழில் தொடங்க கடன் வாங்கிவிட்டு, அதற்கான வட்டியையோ, அசலையோ திரும்பவும் வசூலிக்க முடியாமல் நிலுவையில் இருக்கும் 120 கோடி ரூபாய் பெறுமானமுள்ள வாராக் கடன்களை சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இத்தள்ளுபடியை எதிர்த்து நடந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், ""இதனை வங்கி நிர்வாகத்தின் தவறான நடவடிக்கை எனப் பார்க்கக் கூடாது'' எனக் குறிப்பிட்டு, வாராக் கடன் தள்ளுபடிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.

 

            ""கடன் கொடுத்த வங்கி மற்றும் கடன் வாங்கியவர்களின் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத / வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.''

 

            ""இலாபத்துடன் இயங்கி வரும் வங்கிகள் இது போன்ற வாராக் கடன்களை தள்ளுபடி செய்யலாம். இந்தத் தள்ளுபடி, வங்கியின் ஆண்டு வரவுசெலவு அறிக்கையில் செய்யப்படும் கணக்கியல் நடவடிக்கைதானே தவிர, வங்கிக்குத் தான் கொடுத்த கடனைத் திரும்பப் வசூலிக்கும் உரிமை எப்பொழுதும் உண்டு'' என உச்சநீதி மன்றம் வாராக் கடன் தள்ளுபடிக்கு ஆதரவாகப் பல வாதங்களை எடுத்து வைத்துள்ளது.

 

            தொழில் தொடங்குகிறோம் என்ற பெயரில் தனியார் முதலாளிகள், பொதுத்துறை வங்கிகள் / பொதுத்துறை நிதி நிறுவனங்கள் / தனியார் வர்த்தக வங்கிகளிடமிருந்து பெற்றுள்ள கடன் 31.3.1997இல் 47,300 கோடியாக இருந்தது; இந்த வாராக் கடன் 31.3.2001இல் 81,000 கோடி ரூபாயாக வளர்ந்து, இன்று 1 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. வங்கிகளில் போடப்பட்டுள்ள பொதுமக்களின் சேமிப்பை தனியார் முதலாளிகள் கமுக்கமாக ஏப்பம் விட்டிருப்பது, வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்குப் பிறகுதான் வெளியுலகுக்குத் தெரிந்தது.

 

            ""வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்டுவிட்ட முதலாளிகளின் பெயர்களைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்; அவர்களின் மீது கிரிமினல் வழக்கு தொடருவதற்கு ஏற்றவாறும்; கடனுக்கு ஈடாக அவர்களின் பினாமி சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு ஏற்றவாறும் பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்'' என்று வங்கி ஊழியர்கள் கோரி வருகிறார்கள். அக்கோரிக்கைகளை இன்றுவரை ஏற்க மறுத்து, தனியார் முதலாளிகளைக் காப்பாற்றி வரும் மைய அரசிற்கு இந்தத் தீர்ப்பு, எல்லா வாராக் கடன்களையும் ஒரேயடியாக ரத்து செய்துவிடும் வாய்ப்பினை வாரி வழங்கியிருக்கிறது.

 

            கடனைக் கட்ட முடியாத விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்; அல்லது சிறுநீரகங்களை விற்றாவது கடனைக் கட்ட முயலுகிறார்கள். இப்படி எந்த தொழில் அதிபராவது கடனைக் கட்ட முடியாமல் நொடித்துப் போய் தெருவுக்கு வந்திருக்கிறாரா?

 

            ஜெயாசசி தோழிகள், பொள்ளாச்சி மகாலிங்கம், சாராய உடையார் குடும்பம் போன்ற வங்கிக் கடனைக் கட்ட மறுக்கும் "பெரிய' மனிதர்கள், புதிய புதிய தொழில்களைத் தொடங்கி நடத்தி வருவதை நம் கண்முன்னே பார்க்கிறோம். இப்படிப்பட்ட நிலையில், இவர்கள் வாங்கிய கடனை வங்கிக் கணக்கில் இருந்து தள்ளுபடி செய்யப் பரிந்துரைப்பது மோசடித்தனமாகாதா?

 

                தனியார்மயத்தை ஆதரிக்கும் பொருளாதார வல்லுநர்கள், ""முதலாளிகளுக்கு சலுகை வழங்கினால், பொருளாதாரம் முன்னேறும்; விவசாயிகளுக்கோ, பிற உழைக்கும் மக்களுக்கோ சலுகையோ, மானியமோ வழங்கினால் பொருளாதாரம் நாசமாகப் போய்விடும்'' என்ற இரட்டை அளவுகோலை கையில் வைத்திருக்கிறார்கள்.

 

              இந்த மோசடித்தனமான அளவுகோலின் காரணமாகத்தான், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்தவர்கள், உச்சநீதி மன்றம் மூலமாக முத லாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சலுகையைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள்.

 

                பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்ற பெயரில் தொழிலாளர்களின் சேமநல நிதியையும்; வங்கிகளில் உள்ள பொதுமக்களின் சேமிப்பையும் தனியார் முதலாளிகள் சூறையாடுவதற்கு ஏற்றவாறு ஏற்கெனவே ""சீர்திருத்தங்கள்'' செய்து தரப்பட்டுள்ளன. உச்சநீதி மன்றமோ, கடன் என்ற பெயரிலும் பொதுமக்களின் சேமிப்பைக் கொள்ளையடிப்பதற்கு இத்தீர்ப்பின் மூலம் சட்டபூர்வ தகுதியை வழங்கியிருக்கிறது.

 

மு ரஹீம்