Language Selection

06_2006.jpg

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட முகாசபரூர் என்ற கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் வாந்திபேதி நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்ததால் வாந்திபேதி

 ஏற்பட்டதாக உள்ளூர் பத்திரிகைகள் வாந்தியெடுத்தன. ஆனால், முகாசபரூர் கிராம தாழ்த்தப்பட்ட மக்களோ, தங்களை ஓட்டுப் போட விடாமல் தடுப்பதற்காக வன்னிய சாதி வெறியர்கள் குடிநீரில் விஷம் கலந்திருக்கக் கூடும் எனக் குற்றஞ் சுமத்துகின்றனர்.

 

            இதற்கு ஆதாரமாக, வன்னிய சாதி வெறியர்கள் ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் தங்களை ஓட்டுப் போடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததையும்; 2004இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது, தாழ்த்தப்பட்டோருக்குக் குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியின் மின் மோட்டார் அறையில் உயிருடன் நாகப்பாம்பைக் கட்டித் தொங்கவிட்டதையும் குறிப்பிடுகின்றனர்.

 

            மேலும், ""இதுவரை ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதிகளில் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்றுதான் நாங்கள் ஓட்டுப் போடும் நிலை இருந்து வந்தது. இந்தச் சட்டமன்றத் தேர்தலின் பொழுது, நாங்கள் வசிக்கும் பகுதியிலேயே தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் எனக் கோரி, அதில் அடைவதில் நாங்கள் வெற்றியும் பெற்று விட்டோம். இதனால் கூட, ஆதிக்க சாதி வெறியர்கள் ஆத்திரமடைந்து, குடிநீரில் நஞ்சைக் கலந்திருக்கலாம்'' என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

            இப்பகுதியில் செயல்பட்டு வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு, மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க நேரடி விசாரணைகளை நடத்தினர். முகாசபரூர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்துதான் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்த இடைபட்ட தூரத்தில் மூன்று காற்றழுத்த வால்வுகள் உள்ளன. இதிலொன்று பழுதடைந்துள்ளது. எஞ்சிய இரு வால்வுகள் உள்ள இடத்தில், அவ்வால்வுகள் வழியே பீறிட்டு வரும் தண்ணீர் படும் தரை, அதன் அருகில் உள்ள தழை, செடி, கொடிகளில் வெள்ளை நிறத்தில் மாவு படிந்திருந்தது. இதே போன்ற வெள்ளை நிறப் படிவு, தாழ்த்தப்பட்ட மக்கள் பிடித்து வைத்திருந்த நீரிலும் மிதந்தது. இதற்கு முன் இப்படிப்பட்ட படிவுகள் உருவானதில்லை எனப் பகுதி மக்கள் கூறினர். இந்த சம்பவம் நடந்து முடிந்த பின், இரண்டு, மூன்று நாட்கள் கழித்துப் பிடித்த நீரிலும், இதே போன்ற படிவு ஏற்படவில்லை. கண்ணுக்குப் புலப்பட்ட இந்த ஆதாரத்தை வைத்து, மக்கள் குற்றஞ்சுமத்துவது போல, குடிநீரில் ஏதாவதொரு இரசாயன நஞ்சைச் சமூக விரோதிகள் கலந்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வி.வி.மு.வும், ம.உ.பா. மையமும் வந்தன.

 

            இவ்வமைப்பினர், தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் திரட்டிக் கொண்டு, கோட்டாட்சியர் திரு. ஜான் லூஸைச் சந்தித்து, குடிநீரில் நஞ்சுப் பொருள் கலந்திருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டி, இது பற்றி விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவரோ தாழ்த்தப்பட்டோர் வைத்த கோரிக்கைகளை அதிகாரத் திமிரோடு அலட்சியப்படுத்தியதோடு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதற்குக் கூட மறுத்துவிட்டார். இந்த நிலையில், தங்களுக்கு நீதி கிடைக்காத பொழுது, தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வந்தனர்.

 

            குடிநீரில் நஞ்சு கலக்கப்பட்டிருப்பதை முறையிட்டபொழுது, அது பற்றிஅக்கறை காட்டாமல் அலட்சியமாக நடந்து கொண்ட கோட்டாட்சியர், முகாசபரூர்  தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் ஒரு வாக்குகூடப் பதிவாகவில்லை என்பதைக் கேள்விப்பட்டு பதறிப் போய், மக்களைச் சமாதானப்படுத்தி, ஓட்டுப் போட வைக்க குடிநீர் வடிகால் வாரிய கீழ்நிலை அதிகாரியை அனுப்பி வைத்தார். அந்த அதிகாரியோடு ஒட்டிக் கொண்டு வந்த தி.மு.க.வைச் சேர்ந்த விருத்தாசலம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் தாழ்த்தப்பட்ட மக்களை மூளைச் சலவை செய்ய முயன்றார்.

 

            அதிகார வர்க்கத்தின் இந்த முயற்சியைக் கேள்விபட்ட தோழர்கள், முகாசபரூருக்குச் சென்று, மக்கள் முன்னிலையிலேயே, ""தாழ்த்தப்பட்ட மக்கள் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடியபொழுது வராத நீங்கள்; குடிநீரில் நஞ்சு கலந்த சாதி வெறியர்களைக் கைது செய்யக் கோரிய தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்திய நீங்கள், இப்பொழுது வந்து, அவர்களை ஓட்டுப் போடச் சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?'' என அம்பலப்படுத்தினர். அதுவரை அன்பாகப் பேசிய குழந்தை தமிழரசன், ""ஓட்டுப் போடாவிட்டால், என்னிடமிருந்தோ, அரசிடமிருந்தோ எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது'' என மிரட்டவே, தாழ்த்தப்பட்ட மக்களே அவரை விரட்டியடித்தனர்.

 

            இவர்கள் ஓடிப் போன பிறகு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்தார். ""மக்களை முதலில் ஓட்டுப் போடச் சொல்லுங்கள்; மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்'' என நைச்சியமாகப் பேசினார். பகுதி தோழர்களோ, ""முதலில் குடிநீரில் நஞ்சு கலக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுங்கள்; ஓட்டுப் போடுவதா, வேண்டாமா என்பதை அதன்பிறகு மக்கள் தீர்மானித்துக் கொள்வார்கள்'' என உறுதியாகக் கூறிவிட்டனர். வழக்குப் பதிவு செய்யாமல், மக்களைச் சமாதானப்படுத்த முடியாது எனப் புரிந்து கொண்ட போலீசு கண்காணிப்பாளர், கிராம நிர்வாக அதிகாரியிடம் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்ததோடு, இச்சம்பவம் பற்றி போலீசு துணை கண்காணிப்பாளர் தேர்தல் முடிந்த மறுநாளே விசாரணை நடத்துவார் என்றும் அறிவித்தார்.

 

            இந்தச் சமயத்தில், ஓட்டுப் பொறுக்கி அரசியலில் புதிய வரவான விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் விஜயகாந்த் வந்தார். சம்பவத்தைக் கேட்டுக் கொண்டு அவருக்கு, சினிமாத்தனமான ஆத்திரம் கூட வரவில்லை. மாறாக, மக்களை அமைதியாக இருக்கும்படி ஊமை ஜாடை காட்டிவிட்டுப் பறந்து போனார்.

 

            மற்ற ஓட்டுக் கட்சிகளை விடுங்கள், தாழ்த்தப்பட்டவர்களின் ஒரே பிரதிநிதி என்று தங்களைக் கூறிக் கொள்ளும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கூட, இந்தச் சம்பவம் பற்றிக் கடுகளவும் அக்கறை காட்டவில்லை. எல்லாம் முடிந்தபின், அவர்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ள ""தலித் வரலாற்றாசிரியர்'' ரவிக்குமாரை வைத்து, இச்சம்பவம் பற்றி ""ஆழமாக'' ஆய்வு நடத்தலாம் என விடுதலைச் சிறுத்தைகள் எண்ணியிருக்கலாம். பார்ப்பன  பாசிச ஜெயாவோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஓட்டுப் பொறுக்கி அரசியலில் வளர்ந்துவிட்ட விடுதலைச் சிறுத்தைகளிடம், தாழ்த்தப்பட்டவர்கள் இந்தத் துரோகத்தைத் தவிர வேறெதைப் பெற முடியும்?

 

            சட்டசபைத் தேர்தல்கள் முடிவு வெளியாகி, புதிய அரசு அமைந்து மூன்று வாரங்கள் ஓடிப் போய் விட்டன. எனினும், நஞ்சு கலந்த குடிநீரை எடுத்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தபின் கிடைத்த முடிவுகளைக் கூட அதிகார வர்க்கம் வெளியிட மறுத்து வருகிறார்கள். இதன் மூலம், அவர்கள் உண்மையை மூடி மறைக்க முயலுகிறார்கள். உண்மையை மூடி மறைப்பதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்கள் குற்றஞ்சுமத்துவது போல, அதிகார வர்க்கம் வன்னிய சாதி வெறியர்களைக் காப்பாற்ற முயலுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் எவரும் வரமுடியும். அதேசமயம், முகாசபரூர் தாழ்த்தப்பட்ட மக்களோ, குடிநீரில் நஞ்சைக் கலந்த வன்னிய சாதி வெறியர்களைத் தண்டிக்கக் கோரித் தீவிரமாகப் போராடினால், அது மேலும் தங்களுக்கு ஆபத்தாக முடிந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள்.

 

            நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் ஓட்டுக் கட்சிகள், போலீசு, அதிகாரவர்க்கம் அனைத்தும் உழைக்கும் ஏழை மக்களை, உணர்வும், உரிமையும் கொண்ட மனிதர்களாக, குடிமக்களாகப் பார்ப்பதற்குப் பதில், வெறும் ஓட்டுப் போடும் ஜடங்களாகத் தான் நடத்துவார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னுமொரு சான்று. இந்த உண்மையை உணர்த்தி, தாழ்த்தப்பட்டோரையும், பிற உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி, வன்னிய சாதி வெறியர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும்; அவர்களைச் சட்டப்படி தண்டிக்கவும் கோரும் போராட்டங்களை நடத்துவதற்கு வி.வி.மு. முயன்று வருகிறது.

 

தகவல்:  வி.வி.மு.,  விருத்தாசலம் வட்டம்.