Language Selection

07_2006.jpg

டந்த 58 ஆண்டுகளாக தமது சொந்த மண்ணை இழந்து கொடுந்துயரங்களை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்கள் இன்று பேரழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். உண்ண உணவில்லை; குழந்தைகளுக்குப் பால் இல்லை; மருத்துவமனைகளில் மருந்து இல்லை; ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லை; தாங்கள் உழுது

 

 பயிரிட்டு விளைவித்த காய்கறிகளையும் கனிகளையும் சந்தைக்குக் கொண்டு செல்ல அனுமதியுமில்லை. திறந்தவெளிச் சிறைச்சாலையில் பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் பாலஸ்தீன மக்கள்.

 

            இது ஏதோ இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட கோரமல்ல; ஜனநாயகம் பேசும் நாகரிக உலகின் ஏகாதிபத்தியவாதிகள் பாலஸ்தீன மக்களுக்கு விதித்துள்ள தண்டனைதான் இது!

 

            ஏன் இப்படி ஏகாதிபத்தியவாதிகள் பாலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும்? பாலஸ்தீன மக்கள் அப்படி என்ன குற்றத்தைச் செய்து விட்டார்கள்?

 

            கடந்த ஜனவரி மாதத்தில் பாலஸ்தீன அதிகார அமைப்புக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாலஸ்தீன மக்கள் ""ஹமாஸ்'' இயக்கத்தின் வேட்பாளர்களுக்குப் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்துவிட்டார்கள். ஹமாஸ் இயக்கம் பாலஸ்தீன அதிகார அமைப்புக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. இதுதான் பாலஸ்தீன மக்கள் செய்த "குற்றம்'! தாங்கள் விரும்பும் கட்சியைப் பாலஸ்தீன மக்கள் ஆட்சியில் அமர்த்துவது எப்படி குற்றமாகும் என்று உங்களுக்குச் சந்தேகம் எழலாம். ""ஆம்! குற்றம்தான்! ஏனெனில் ஹமாஸ், இசுலாமிய அடிப்படைவாத பயங்கரவாத இயக்கம்'' என்று குற்றம் சாட்டுகின்றனர் ஏகாதிபத்தியவாதிகள்.

 

            பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்ற மறுநிமிடமே இனவெறி பிடித்த பயங்கரவாத இஸ்ரேலிய அரசு பாலஸ்தீன அதிகார அமைப்புடனான அரசியல்  பொருளாதாரத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டது. இஸ்ரேலின் கூட்டாளியும் உலக மேலாதிக்கப் பயங்கரவாதியுமான அமெரிக்கா, ஹமாஸ் தலைமையிலான பாலஸ்தீன ஆட்சியைப் புறக்கணிக்குமாறு உலக நாடுகளுக்குப் பகிரங்கமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவை அடியொற்றிச் செல்லும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஹமாஸ் ஆட்சியைப் புறக்கணிப்பதாக அறிவித்து பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன.

 

            பாலஸ்தீன மக்களிடமிருந்து இஸ்ரேலிய அரசு சுங்கவரிகளையும் இதர வரிகளையும் வசூலித்து வருகிறது. பாலஸ்தீன அரசு நிர்வாகத்தை நடத்துவதற்கு இந்த வரிகளால் கிடைக்கும் நிதிதான் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதோடு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகளைக் கொண்டுதான் பாலஸ்தீன அரசு தனது பொருளாதாரத் தேவைகளை அரைகுறையாக ஈடு செய்து வந்தது.

 

            இப்போது பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியதும், பாலஸ்தீன மக்களின் சொந்த வரிப்பணத்தையே பாலஸ்தீன அரசுக்குத் தர முடியாது என்று அடாவடித்தனம் செய்கிறது இஸ்ரேலிய அரசு. இதுதவிர, பாலஸ்தீன அதிகார அமைப்புக்குச் சேரவேண்டிய வெளிநாட்டு நிதியுதவிகளும் அமெரிக்கஇசுரேலிய அரசுகளால் முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இன்னும் ஒருபடி மேலே சென்று, பாலஸ்தீன அதிகார அமைப்பின் அமெரிக்க வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

            இதன் விளைவாக, வறுமையிலும் பட்டினியிலும் பாலஸ்தீனம் பரிதவிக்கிறது. இன்று பாலஸ்தீன மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் கூட இல்லை. ஏறத்தாழ 1,60,000 அரசு ஊழியர்களுக்குப் பல மாதங்களாக சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஏறத்தாழ 12 லட்சம் பாலஸ்தீன மக்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்பதாக .நா. மன்றமே ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் பாலஸ்தீன அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வண்டிகளைத் தடுத்து இஸ்ரேலிய அரசு தொடர்ந்து அடாவடித்தனம் செய்து வருகிறது. இப்போது எரிபொருள், குடிநீர் விநியோகத்தையும் நிறுத்தப் போவதாக அச்சுறுத்துகிறது.

 

            இதுமட்டுமின்றி, கடந்த 4 மாதங்களில் பாலஸ்தீன பகுதிகளின் மீது இஸ்ரேலிய இராணுவம் 38 முறை திடீர் தாக்குதல்களை நடத்தி 9 பேரைக் கொன்று பலரைப் படுகாயப்படுத்தியுள்ளது. 70க்கும் மேற்பட்டோரைப் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி சிறையில் அடைத்துள்ளது. பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலஸ்தீன பகுதியில் சுதந்திரமாக நடமாடக் கூட முடியவில்லை. பலமுறை அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இஸ்ரேலிய இனவெறி பயங்கரவாத அரசு தனது கொலைப் பட்டியலில் பாலஸ்தீன பிரதமர் இசுமாயில் ஹனியேவையும் சில ஹமாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துள்ளதோடு, அதனைப் பகிரங்கமாகவும் அறிவித்துள்ளது.

 

            ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாகப் பீற்றிக் கொள்ளும் பயங்கரவாத அமெரிக்க வல்லரசு, பாலஸ்தீனத்தில் நேர்மையாக நடந்த ஒரு ஜனநாயகத் தேர்தலையே ஏற்க மறுத்து, ""ஐயோ, பயங்கரவாதிகள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள்'' என்று ஊளையிடுகிறது. .நா. மன்றத்தின் மேற்பார்வையில் நடந்த பாலஸ்தீன தேர்தலைக் கண்காணித்தவர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரும் ஒருவர். ""நேர்மையான முறையில் நியாயமாகவும் அமைதியாகவும் பாலஸ்தீன தேர்தல் நடைபெற்றது'' என்று அவர் நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆனாலும் இத்தேர்தல் முடிவை ஏற்க மறுக்கின்றனர், அமெரிக்கஇஸ்ரேலிய பயங்கரவாதிகள். ஒரு பயங்கரவாத இயக்கம் ஆட்சிக்கு வந்திருப்பதை ஜனநாயக உலகம் எப்படி அங்கீகரிக்க முடியும் என்று இப்பயங்கரவாதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

            ஹமாஸ் இயக்கம் இசுலாமிய அடிப்படைவாத சித்தாந்தமும் பயங்கரவாத வழிமுறையும் கொண்ட அமைப்புதான். அதற்காக பாலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டு தண்டிப்பது எந்த வகையில் நியாயமாகும்? மௌனமாக நடக்கும் இப்படுகொலைக்கு எதிராக வாய்திறக்காமல் இருப்பது எப்படி ஜனநாயகமாகும்? ஏகாதிபத்திய காட்டுமிராண்டி உலகம் கிடக்கட்டும்; இசுலாமிய நாடுகள் கூட தமது பாலஸ்தீன இசுலாமிய சகோதரர்கள் பட்டினி போட்டுக் கொல்லப்படும் போது வாய்மூடிக் கிடக்கின்றன. வளைகுடா கூட்டுறவுக்கு (எஇஇ) நாடுகளான பல அரபு நாடுகள் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து பாலஸ்தீன ஹமாஸ் அரசாங்கத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. உதவி கோரி வந்த பாலஸ்தீன வெளியுறவு அமைச்சரை எகிப்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் சந்திக்க மறுத்துள்ளார். பாலஸ்தீன குழந்தைகளைக் காப்பாற்றக் கோரி ஜோர்டான் சென்ற பாலஸ்தீன அமைச்சருடன் ஜோர்டான் மன்னர் பேச மறுத்துவிட்டார்.

 

            நாமெல்லோரும் அல்லாவின் குழந்தைகள்; உலகெங்குமுள்ள இசுலாமியர்கள் அனைவரும் நமது சகோதரர்கள் என்றெல்லாம் மதவெறியர்கள் உபதேசம் செய்யலாம். ஆனால், பாலஸ்தீன இசுலாமிய சகோதரர்கள் பட்டினியால் வதைபட்டுக் கொண்டிருக்கும்போது எந்தவொரு இசுலாமிய அரசும் உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லை. இந்நாடுகளின் ஆளும் கும்பல்களுக்கு இசுலாமிய சகோதரத்துவ நலன் என்று எதுவும் கிடையாது. வர்க்க நலன் மட்டும்தான் உள்ளது. அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்பதுதான் தமது வர்க்க நலனுக்குப் பாதுகாப்பானது என்பதாலேயே, இந்நாடுகளின் ஆட்சியாளர்கள் பட்டினியால் பரிதவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவ முன்வரவில்லை. இருப்பினும், தமது மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இத்துரோகிகளை அம்பலப்படுத்தி எதிர்க்கக் கூட முன்வராமல், இசுலாமிய இயக்கங்களும் மக்களும் வாய்மூடிக் கிடக்கின்றனர்.

 

            உண்ண உணவின்றி பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கும் பாலஸ்தீன மக்களுக்கு கட்டார், ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே உதவ முன்வந்துள்ளன. இஸ்ரேலிய இனவெறி பயங்கரவாத அரசுடன் கூடிக் குலாவும் இந்திய அரசு தன்னை முற்போக்கு மனிதாபிமானியாகக் காட்டிக் கொள்ள அற்ப நிவாரணத் தொகை அளிக்க முன்வந்துள்ளது. உலகெங்குமுள்ள இசுலாமிய உழைக்கும் மக்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் பாலஸ்தீன மக்களுக்கு தம்மால் இயன்ற உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் திரட்டிக் கொடுத்து வருகின்றன. இம்மனிதாபிமான உதவியில் பங்கேற்பதும் அமெரிக்க  இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதும் உழைக்கும் மக்களின் கடமை; நம் அனைவரது சர்வதேசியக் கடமை.

 

            பட்டினிச் சாவின் விளிம்பில் பாலஸ்தீன மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, அதிபராக உள்ள முகமது அப்பாஸின் அல்ஃபதா குழுவும் அரசாங்கத்தை அமைத்துள்ள ஹமாஸ் குழுவும் அதிகாரப் போட்டிக்கான நாய்ச் சண்டையில் இறங்கி வெளிப்படையாகவே மோதிக் கொள்கின்றன. கைகலப்புகள், துப்பாக்கிச் சூடுகள், கொலைகள, நாடாளுமன்றத்துக்குத் தீ வைப்பது என்பதாக குழுச் சண்டைகள் முற்றி பாலஸ்தீனத்தில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயத்தில் உள்ளது. இந்த மோதலுக்கான காரணத்தை அறிய பாலஸ்தீன வரலாறை சற்றுப் பின்னோக்கிப் பார்ப்பது அவசியம்.

 

            1948 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து தமது மண்ணை மீட்க பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையே இணக்கமாக உறவை ஏற்படுத்துவதாகவும், சுயாட்சிக்கான பாலஸ்தீன அதிகார அமைப்பைத் தோற்றவிப்பதாகவும் கூறிக் கொண்டு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ""ஆஸ்லோ ஒப்பந்தம்'' எனப்படும் துரோக ஒப்பந்தத்தைத் திணித்தன. அதை ஏற்றுக் கொண்டு தற்காலிகத் தீர்வைத் தேடியது, அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கம். ஒப்பந்தப்படி, பாலஸ்தீன அதிகார அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், அது ஒரு பஞ்சாயத்துக்கு உள்ள அதிகாரம் கூட இல்லாமல் வெறும் கொலு பொம்மையாகவே இருந்தது. மறுபுறம், ஆஸ்லோ ஒப்பந்தத்தைக் கழிப்பறைக் காகிதமாக்கி விட்டு எல்லா வகையான பயங்கரவாத அட்டூழியங்களிலும் இஸ்ரேல் இறங்கியது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் வீடிழந்து வாழ்விழந்து உற்றார்  உறவினர்களை இழந்து பரிதவித்தனர். ஏகாதிபத்திய உலகமோ வாய்மூடிக் கிடந்தது.

 

            இஸ்ரேலிய பயங்கரவாத அடக்குமுறைகளை அதிபர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன அதிகார அமைப்பினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவரது வீட்டை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டு அவரை வீட்டுக் கைதியாக்கிக் கொக்கரித்தன. ஆஸ்லோ ஒப்பந்தம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. பாலஸ்தீன அதிகார அமைப்போ, அவலத்தின் நடுவே ஊழலிலும் உல்லாசத்திலும் மூழ்கிக் கிடந்தது. இவற்றுக்கெதிராக எதுவும் செய்ய முடியாமல் உடல்நலம் குன்றி அராபத் மாண்டு போனார். அவரது மறைவுக்குப் பின், அவரது அல்ஃபதா குழுவைச் சேர்ந்த முகமது அப்பாஸ், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பாலஸ்தீன அதிகார அமைப்பின் அதிபராக நீடித்து வருகிறார். மிதவாதியாகச் சித்தரிக்கப்படும் அப்பாஸ், இன்னமும் பயங்கரவாத இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாலஸ்தீன சுயாட்சி அதிகாரத்தை நிலைநாட்டிவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.

 

            அல்ஃபதா குழுவின் சமரசங்கள், துரோகங்கள், ஊழல் மோசடிகளால் அதிருப்தியுற்று இருந்த பாலஸ்தீன மக்கள், பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதும் அதற்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்து அல்ஃபதா குழுவினரைத் தோற்கடித்துள்ளனர். அல்ஃபதா குழுவின் ஊழல்  துரோகத்தின் எதிர்விளைவுதான் ஹமாஸ் இயக்கத்தின் வெற்றியே தவிர, ஹமாஸ் இயக்கத்தின் இசுலாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தையும் பயங்கரவாத வழிமுறையையும் பாலஸ்தீன மக்கள் அங்கீகரித்து ஆதரிப்பதாகக் கருத முடியாது.

 

            யாசின் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணையாமல் அதற்கு வெளியே தனித்து இயங்கி வந்தது. இசுலாமிய அடிப்படைவாத பள்ளிகள் நடத்துவது, மருத்துவமனைகளைக் கட்டுவது, நிவாரண உதவிகள் செய்வது ஆகியவற்றோடு இஸ்ரேல் மீது பலமுறை தற்கொலைப் படைத்தாக்குதல்களையும் நடத்தி வந்தது. ஈராண்டுகளுக்கு முன்பு ஹமாஸ் தலைவர் யாசினை விமானத் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் கொன்றுவிட்டது. அதன்பிறகு போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட ஹமாஸ் குழு, அரசியல் நீரோட்டத்தில் கலந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. இருப்பினும், ஹமாஸ் குழுவின் படைகளை பாலஸ்தீன அதிகார அமைப்பினது படைகளுடன் இணைக்க அப்பாஸ் மறுக்கிறார். பயங்கரவாதிகளை பாலஸ்தீன இராணுவத்தில் சேர்க்க முடியாது என்கிறார்.

 

            ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருப்பதையே ஏற்க முடியாது என்றும், அவர்களோடு பேச்சு வார்த்தையே கூடாது என்றும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் இஸ்ரேலை விரட்டியடித்துவிட்டு பாலஸ்தீன விடுதலையைச் சாதிக்க வேண்டும் என்றும் தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. இதைச் சாதிக்க மக்களைச் சார்ந்து நின்று அரசியல்  ஆயுதப் போராட்டங்களை நடத்துவதற்குப் பதிலாக, பயங்கரவாத  குழு சாகச நடவடிக்கைகளையே அது தனது வழிமுறையாகக் கொண்டுள்ளது.

 

            ஆனால், அதிபரான அப்பாஸ், இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்றுக் கொண்டு ஆஸ்லோ ஒப்பந்தத்தை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறார். இதற்காக, இஸ்ரேல் என்ற நாடு இருப்பதை ஏற்று, இருநாடுகளும் பரஸ்பர தாக்குதலை நிறுத்திவிட்டு, அமைதித் தீர்வு காண்பதற்கு விழைய வேண்டும் என்ற திட்டத்துடன் வரும் ஜூலை 26ஆம் தேதியன்று பாலஸ்தீன மக்களிடம் கருத்துக் கணிப்புத் தேர்தல் நடத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இஸ்ரேல் என்ற நாடு இருப்பதையே ஏற்றுக் கொள்ளாத ஹமாஸ், இக்கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று மக்களிடம் எதிர்ப் பிரச்சாரம் செய்கிறது. இதுதவிர நிதி, நிர்வாகம், நிவாரணப் பொருட்களை விநியோகித்தல் முதலான பல்வேறு விவகாரங்களில் இருதரப்பும் தீராத மோதலில் இறங்கியுள்ளன. பாலஸ்தீனத்தில் தீவிரமாகிவிட்ட இக்குழுச் சண்டைகளைக் கண்டு இனவெறி பிடித்த பயங்கரவாத இஸ்ரேலும் அதன் பங்காளியான ஏகாதிபத்திய உலகமும் கைகொட்டிச் சிரிக்கிறது.

 

            ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் செய்து கொண்டு போடப்படும் துரோக ஒப்பந்தத்தாலும் இடைக்காலத் தீர்வினாலும் தேசிய இன விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது. பாட்டாளி வர்க்க சித்தாந்த தலைமையற்ற குட்டிமுதலாளிய போராளிக் குழுக்களாலோ, மத அடிப்படைவாத  பயங்கரவாத இயக்கங்களாலோ தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முடியாது என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திவிட்டு பாலஸ்தீனம் பேரழிவில் புதைந்து கொண்டிருக்கிறது.

 

மு மனோகரன்