தமிழகமெங்கும் எல்லா அரசுப் பள்ளிகளிலும் நன்கொடை என்ற பெயரில் பெற்றோர்ஆசிரியர் கழகம், கட்டாய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இச்சட்ட விரோதப் பகற்கொள்ளைக்கு எதிராக தருமபுரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரம், தட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் வீச்சான பிரச்சாரத்தை நடத்தி வந்தது.
இந்நிலையில் தருமபுரி அருகே நடுப்பட்டியை அடுத்துள்ள சோளக்கொட்டாய் கிராம மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பிலும் +1 வகுப்பிலும் சேரும் மாணவர்கள் ரூ. 500 தரவேண்டும் என்றும் இதர மாணவர்கள் ரூ. 300 செலுத்த வேண்டும் என்று பெற்றோர்ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இக்கட்டாய நன்கொடைக் கொள்ளையை எதிர்த்து இப்பகுதியெங்கும் சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்ட வி.வி.மு. தோழர்கள், பெற்றோர்ஆசிரியர் கழக கூட்டத்தில் கலந்து கொண்டு இச்சட்டவிரோத கட்டாய நன்கொடைக்கு எதிராகக் கேள்வி எழுப்பினர்.
தலைமையாசிரியரோ, பள்ளிக்கூடத்திற்கு பென்ச்சுகள், கரும்பலகைகள் வாங்குவதற்காகவே இவ்வாறு நன்கொடை கேட்கிறோம் என்று நியாயப்படுத்தினார். பென்ச்சு வாங்க ஏழை மாணவர்களிடம் கட்டாய நன்கொடை கேட்கும் நீங்கள், சம்பளம் பென்ஷனுக்கு அரசாங்கத்திடம் போராடுகிறீர்களே, ஏன்? உலக வங்கி உத்தரவால் கல்விக்கான மானியம் வெட்டப்பட்டதாலேயே பென்ச்சுகளும் கரும்பலகைகளும் பற்றாக்குறையாக உள்ளன. இதற்கெதிராகப் போராடுவதை விடுத்து, ஏழைகளிடம் பகற்கொள்ளையடிப்பது என்ன நியாயம்? என்று தோழர்கள் கேள்வி எழுப்பியதை பெற்றோர்ஆசிரியர் கழக கூட்டத்தில் பங்கேற்ற உழைக்கும் மக்கள் உற்சாகமாக வரவேற்று ஆதரித்தனர். பெற்றோர்ஆசிரியர் கழகம் என்ற பெயரில் பொறுக்கித் தின்னும் சர்வகட்சி கும்பல் இதனால் பீதியடைந்து, இங்கு அரசியல் பேசக்கூடாது என்று கூச்சலிட்டு கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, பின்னர் நன்கொடை வசூலிக்க ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தன்னிச்சையாக அறிவித்தது.
இதை அம்பலப்படுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்த தோழர்கள், ""இலவசக் கல்வி நமது அடிப்படை உரிமை; யாரும் நன்கொடை கொடுக்காதீர்கள்'' என்று எச்சரித்தனர். அதன் விளைவாக, இக்கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கட்டாய நன்கொடை தர முடியாது என்று உறுதியாக பள்ளி நிர்வாகத்திடம் அறிவித்து விட்டனர். பெற்றோர்ஆசிரியர் கழகம் என்ற கொள்ளைக் கூட்டத்தின் அச்சுறுத்தல் அரட்டல்மிரட்டல்களைத் துச்சமாக மதித்துக் கட்டாய நன்கொடை ஏதுமின்றி மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்பட்ட செய்தி, சுற்றுப்புற கிராமங்களுக்குப் பரவி அக்கிராம மக்கள் தங்கள் பகுதியிலும் வி.வி.மு கிளை தொடங்க ஆர்வத்தோடு கோரி வருகின்றனர்.
இதேபோல், பென்னாகரம் வட்டத்திலுள்ள பி.அக்ரஹாரம் கிராமத்தின் மேல்நிலைப் பள்ளியில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுவதை எதிர்த்து வி.வி.மு. சுவரொட்டி பிரச்சாரம் செய்ததோடு, மாணவர்களை நேரிலும் சந்தித்து விளக்கியது. பீதியடைந்த தலைமையாசிரியரோ இது கட்டாய நன்கொடை அல்ல் விருப்ப நன்கொடைதான் என்று மாணவர்களிடம் பூசி மெழுகினார். மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கினர். சில ஆசிரியர்களும் நியாயமான இப்போராட்டத்தை ஆதரித்து வகுப்புகளைப் புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். நன்கொடை என்ற பெயரில் பெற்றோர்ஆசிரியர் கழகம் நடத்திவரும் பகற்கொள்ளைக்கு எதிரான பிரச்சாரமும் போராட்டமும் இப்பகுதிவாழ் உழைக்கும் மக்களிடம் வி.வி.மு. மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு மற்றும் +1 வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் பெற்றோர்ஆசிரியர் கழகம் என்ற பெயரில் சர்வகட்சி பொறுக்கிக் கும்பல் கட்டாய வசூல்வேட்டை நடத்துவதை எதிர்த்தும் இலவசக் கல்வி மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் ஈரோடு மாவட்ட புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி பள்ளிபாளையம் ஆவரங்காட்டில் 4.6.06 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. திரளாக பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் பகுதிவாழ் மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.
பு.ஜ. செய்தியாளர்கள்.