07_2006.jpg

மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து மூலிகைகளில் குளித்துவரும் பவானி ஆறு இன்று சாக்கடைக் கழிவாக மாறிவிட்டது. திருப்பூர் சாயப்பட்டறை முதலாளிகளால் நொய்யல் ஆறு நாசமாக்கப்பட்டதைப் போலவே, பவானி ஆறும் துணி ஆலை காகித ஆலை முதலாளிகளால் நச்சுக் கழிவுச் சாக்கடையாக மாறியுள்ளது.

 

ஆலைக் கழிவுகளை பவானி ஆற்றில் கொட்டி நஞ்சாக்கி வருவதன் விளைவாக, இப்பகுதியில் விளைநிலங்கள் உவராக மாறி வருகின்றன. நிலமும் நிலத்தடி நீரும் நஞ்சாகி இனம்புரியாத நோய்கள் பரவுகின்றன. கால்நடைகள் மலடாகிப் போகின்றன. மரங்களும் செடிகளும் பட்டுப்போய், விவசாயம் பொய்த்துப்போய் விவசாயிகள் தத்தளிக்கின்றனர்.

 

கடந்த ஓராண்டு காலமாக கீழ்பவானி வட்டார விவசாயிகள், துணிஆலை காகித ஆலை முதலாளிகளின் இப்பயங்கரவாத அட்டூழியங்களுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ""பவானி ஆறு குடிநீர் நிலத்தடி நீர் பாதுகாப்புக் குழு'' என்ற அமைப்பின் வாயிலாக, பவானி ஆறு நஞ்சாக்கப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்தக் கோரி விழிப்புணர்வு பிரச்சார நடைபயணத்தை கடந்த ஜூன் 1819 தேதிகளில் நடத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க, சத்தியமங்கலம் கோம்பு பள்ளத்தில் 18.6.06 அன்று இந்நடைபயணத்தை சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்குரைஞர் பொ.ரத்தினம் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

 

இப்பிரச்சார நடைபயணத்தில் பங்கேற்று உதவுமாறு அனைத்து கட்சிகள் அமைப்புகளுக்கும் விவசாயிகள் விடுத்த அறைகூவலை ஏற்று, ம.க.இ.க. தோழர்கள் இதில் ஊக்கமுடன் பங்கேற்றனர். ம.க.இ.க. ஒலிப்பேழை பாடல்கள் எங்கும் எதிரொலிக்க, கோபி, கவுந்தப்பாடி, சித்தோடு வழியாகச் சென்ற இவ்விழிப்புணர்வு நடைபயணத்தை வழியெங்கும் விவசாயிகளும் உழைக்கும் மக்களும் உற்சாகத்துடன் வரவேற்று ஆதரித்தனர். திருப்பூர் சாயப்பட்டறை முதலாளிகள் நொய்யல் ஆற்றை நஞ்சாக்கியதால் ஏற்பட்ட கோரமான விளைவைச் சித்தரிக்கும் ""புதிய ஜனநாயகம்'' இதழின் அட்டைப்படத்தைக் கையிலேந்தி விவசாய முன்னணியாளர்களும் ம.க.இ.க. தோழர்களும் வழியெங்கும் விளக்கக் கூட்டங்களை நடத்தினர். பவானி, தாமிரவருணி, பாலாறு உள்ளிட்டு நீர் ஆதாரங்கள் மீது சமூக உரிமையை நிலைநாட்டுவதற்காக தமிழக மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் இணைக்கப்பட்டு, இவற்றை மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டமாக வளர்க்க வேண்டிய அவசியத்தை இக்கூட்டங்களில் வலியுறுத்தினர். ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் 19ஆம் தேதியன்று மனு கொடுத்து இப்பிரச்சார நடை பயணத்தை நிறைவு செய்த விவசாயிகள், அடுத்தகட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

 

பு.ஜ. செய்தியாளர்கள்.