Language Selection

07_2006.jpg

"இந்தியா ஒரு பொருளாதார மேல்நிலை வல்லரசாக உருவாகி வருகிறது'' என்ற செய்தி, ஊடகங்களில் நிரம்பி வழிகின்றது. குலுக்கித் திறக்கப்பட்ட ""பீர்'' பாட்டிலைப் போல இந்தியப் பொருளாதாரத்தின் ""வளர்ச்சி'' குறித்த மகிழ்ச்சியில் பத்திரிகைகள் புள்ளி விவரங்களால் பொங்கி வழிகின்றன.

 

 தொடர்ந்து நான்காண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதம். அடுத்தடுத்த மூன்றாண்டுகளாக ஏற்றுமதியின் அதிகரிப்பு 20 சதவீதம். கூட்டுப் பங்கு நிறுவனங்களின் கடன்கள் 30 சதவீதத்திற்கும் மேலாகும்.

 

முதலீடுகளின் அதிகரிப்பு 40 சதவீதம்; புதிய திட்டங்கள் பல்வேறு முக்கிய துறைகளையும் கடந்து பரவுகின்றன. 2006ஆம் ஆண்டுக்கான அடிப்படைக் கட்டுமானச் செலவுகள் 95,000 கோடி ரூபாய்கள்  அதாவது இரண்டு மடங்கு.

 

கடந்த ஐந்தாண்டுகளில் உச்சபட்சமாக 2005இல் மட்டும் சம்பள உயர்வு 14 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 20052006 ஆம் ஆண்டில் மிகப் பெரும் அளவிலான வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, நகர்ப்புறக் குடும்பங்களுக்கான வேலை மற்றும் நிதி உத்திரவாதங்களை அளித்துள்ளன.

 

           வீட்டு வசதிக் கடன்களின் அதிகரிப்பு 56 சதவீதம்; நுகர்வோர் கடன் அதிகரிப்பு 40 சதவீதம்; பங்குச் சந்தையிலும் வீடு  வீட்டுமனைத் தொழிலிலும் ஏற்பட்டுள்ள செழிப்பு, விருப்பம் போல செலவிடச் செய்துள்ளது.

 

           உலகிலேயே இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியாவை மாறச் செய்யுமளவு செல்பேசிகளின் அதிகரிப்பு 53% சதவீதம். விமானச் சேவை மற்றும் மோட்டார் வாகன தொழில்களின் செழிப்பு, உலகிலேயே மிகவும் இளம்பிரிவு உழைப்புச் சக்தியும் இந்த முன்னேற்றத்தை சாதித்துள்ளன.

 

             இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பத்திரிகையாளர்கள் மேற்கண்டவாறு தொகுத்துள்ளனர்.

 

            உலகின் முன்னணிப் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் தலைவர்கள் அனைவரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பிரமித்துப் போயிருக்கிறார்களாம்.

 

            ""கடந்த 15 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியா காட்டிய வேகம் அசாதாரணமானது'' என்கிறார் உலக வங்கியின் தலைவர் பால் வுல்போ விட்ஜ்.

 

            ""உலகமயமாக்கத்தின் குவி மையமாக இந்தியமாறுவதற்குத் தகுந்தவாறு அதன் நட்சத்திர பலன்கள் கூடி வருகின்றன'' என்கிறார் சர்வதேச நிதி நிறுவனத்தின் பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன்.

 

            ""மென்பொருள் தொழில் வித்தகர்களின் பிரமிக்கதக்க மையத்தை இந்தியா கொண்டிருக்கிறது. இதிலிருந்து உலகம் ஆதாயம் பெற வேண்டும்'' என்கிறார், உலக மென்பொருள் ஏகபோக முதலாளி பில்கேட்ஸ்.

 

            ""இந்தியா ஒருநாள் உலகிலேயே அதிவேக வளர்ச்சியுடைய நாடாக இருக்கும்'' என்கிறார்  வெர்ஜின் அட்லாண்டிக் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் சர் ரிச்சர்டு பிரான்சன்.

 

            ""இந்தியா மிக வேகமாகப் பொருளாதார வளர்ச்சியுடைய டுகளில் ஒன்று; ஆசியாவின் வளர்ச்சியை உந்திச் செல்லக் கூடியது'' என்கிறார், ஜெர்மனியின் சீமன்ஸ் நிறுவனத் தலைவர் லாஸ் லெயின்ஃபீல்டு.

 

            ""உலகின் முன்னணி தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது'' என்கிறார் கணினித் தொழிலில் முன்னணி நிறுவனமான இண்டெல் தலைவர் கிரைக் பேரட்.

 

            ""ஏழை தேசங்களின் வளர்ச்சித் தீர்வுகளின் சோதனைச் சாலையாக இந்தியா விளங்க முடியும்'' என்கிறார் பிலிஃப்சு நிறுவனத் தலைவர் ஜிரார்டு லெய்ஸ்டர்லீ.

 

            — பன்னாட்டுத் தொழில் கழகங்கள் இந்தியப் பொருளாதாரம் குறித்து இவ்வாறான கருத்துக்கள் வைத்திருப்பதால் அந்நிய நேரடி முதலீடும், அந்நியத் தொழில் முதலீடும் ஏராளமாக வந்து குவிகின்றன. இதனால் பங்குச் சந்தைக் குறியீடு எண் 12,000 அளவைத் தாண்டிவிட்டது.

 

            இதோடு அந்நியச் செலாவணிக் கையிருப்பு பல ஆயிரம் கோடி ரூபாயாகக் குவிந்திருக்கிறது. இதுவரை வெளிநாட்டிலவாழும் இந்தியர் அனுப்பி வைக்கும் தொகையே அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கியமாக இருந்தது. இப்போது மொத்தக் கையிருப்பில் இது மிகச் சிறிய அளவாகி விட்டது; ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால் முக்கியமாக அந்நியச் செலாவணி கையிருப்பு மலையளவு உயர்ந்துவிட்டது.

 

            இந்த ஆண்டு மட்டும் மென்பொருள் ஏற்றுமதியால் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் ஒரு இலட்சம் கோடி ரூபாய் இலாபமீட்டக் கூடும். தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் 60 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கக் கூடும்.

 

            இவையெல்லாம் உலகில் மிக வேகமாக வளரும் பத்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதைக் காட்டுகின்றன.

 

            இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மைதான் என்றாலும், இந்தியா உடனடியாக இல்லாவிட்டாலும், வளரும் நாடுகளில் முதலிடத்தைப் பிடிக்காவிட்டாலும், சீனாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்துக்கு உயர்ந்துவிடும் என்றாலும் —  இந்தியப் பொருளாதார வளர்ச்சி எத்தகையது? அதன் பலன்களை எந்தப் பிரிவினர் அறுவடை செய்து கொள்கின்றனர்? யாருடைய நலன்களுக்காக இந்தியப் பொருளாதாரம் திட்டமிடப்படுகிறது? என்பது முக்கியமானதாகும்.

 

            கடந்த 2005ஆம் ஆண்டின் நவம்பருக்குள் 2.341 கோடி பேர் புதிதாக செல்பேசி வாடிக்கையாளர்களாகி இருக்கிறார்கள். இணையத் தளங்களில் மேயும் ஏழு இலட்சம் பேர் அகன்ற அலைவரிசை கணினி இணைப்புகள் பெற்றார்கள். 45 இலட்சம் கணினிகள் விற்கப்பட்டன. 53,982 கோடி ரூபாய் அளவு சேமிப்பு உயர்ந்திருக்கிறது. 9,000 பேர் புதிய கோடீசுவரர்களாகியிருக்கிறார்கள். கார்கள், இரண்டு சக்கர வாகனங்களின் உற்பத்தியும் விற்பனையும் பல்கிப் பெருகியுள்ளது.

 

            தங்க நாற்கரச் சாலைகளால் இந்தியாவின் பெருநகரங்களை இணைப்பதும், விமான நிலையங்கள் நவீனப்படுத்தப்படுவதும், துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படுவதும் நிறைவுறும் நிலையை எட்டி விட்டன. சுற்றுலா, பொழுதுபோக்கு, ஃபாசன் பொருட்கள், கல்வி, மருத்துவம் எல்லாவற்றிலும் உலகத்தரம் வந்துவிட்டது.

 

            எல்லாம் சரி; ஆனால் இவையாவும் நடுத்தர மேட்டுக்குடி மக்களுக்குச் சாதகமானவை, நாட்டின் மிகப்பெரும் தரகு அதிகார முதலாளிகள், பெரும் பண்ணையார்கள் ஆகியவர்களோடு, அந்நிய பன்னாட்டுத் தொழில், வர்த்தக மற்றும் நிதிக் கழகங்களின் கொள்ளையை விரிவுபடுத்தும் வகையிலானவைதாம்.

 

            சீனா போன்ற நாடுகளில் பொருளாத வளர்ச்சி என்பது முதலீடு அடிப்படையிலானதாக இருக்கும் அதேசமயம், இந்தியப் பொருளாதார வளர்ச்சி நுகர்வோர் சந்தை சார்ந்ததாகவே இருக்கிறது. அதாவது, இந்தியாவின் 10 கோடி குடும்பங்களின் ஆண்டு வருமானம் இரண்டு முதல் 10 இலட்சம் ரூபாய் அளவுக்கு உள்ளது! இது பல ஐரோப்பிய நாடுகளின் சந்தையைவிடப் பெரியதாகும். இந்தக் குடும்பங்களின் நுகர்வுத் தேவைக்கான பொருளாதாரத் திட்டமிடுதல்கள் தாம் இப்போது நடக்கின்றன.

 

            அதேபோல, கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம்6.5 சதவீதத்திற்கு மேலிருந்தாலும், கிராமப்புற விவசாய வளர்ச்சி 2 சதவீதம் அளவுக்கு மிகக் குறைவாகவே உள்ளது. நாட்டின் 60 சதவீத உழைப்புச் சக்தியைக் கொண்டிருக்கும் கிராமப்புற விவசாய உற்பத்தி நாட்டின் மொத்த வருவாயில் 21 சதவீதம் மட்டுமேயாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீத அளவுள்ள வங்கி, இன்சூரன்ஸ், தொலைபேசி  செல்பேசி, தகவல் தொழில் நுட்பச்சேவை ஆகிய சேவைத்துறையில் 27 சதவீதத்தினரே வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், விவசாயத் துறையில் இருந்து வேலையிழப்பவர்களை ஈர்க்கக் கூடிய ஆலை உற்பத்தியில் 17 சதவீதத்தினரே ஈடுபட்டுள்ளனர்.

 

            இதுமட்டுமல்ல, இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது மக்கள் தொகை அதிகமுள்ள உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் அற்ப அளவுகூட கிடையாது. அவை தொடர்ந்து பின்தங்கிய மாநிலங்களாகவே உள்ளன. ஏற்கெனவே அடிப்படைக் கட்டுமான வசதிமிக்க மாநிலங்களில்தான் முதலீடும், உற்பத்தியும், சந்தையும் உருவாகிக் கொண்டே போகின்றன. குஜராத், மராட்டியம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகா, அரியானா  பஞ்சாப் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியிலேயே ஆளும் வர்க்கங்களும் பன்னாட்டு முதலாளிகளும் குறியாக உள்ளனர். பீகாரின் சராசரி வருமானம் அரியானா, மராட்டியம் போன்ற மாநிலங்களின் சராசரி வருமானத்தோடு ஒப்பிடும்போது கால்பங்கு கூடக் கிடையாது.

 

            தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத்துறையில் வேலைவாய்ப்புகள் பல்கிப் பெருகியுள்ளதாகக் கூறப்படும் அதேவேளையில், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைதேடுபவர்களின் எண்ணிக்கை 4 கோடியாக உள்ளது. அரசு உட்பட அமைப்பு ரீதியிலான துறைகளில் வேலையோ கடந்த பதிமூன்று ஆண்டுகளாக 3 கோடி என்ற நிலையிலேயே தேங்கிப் போயிருக்கிறது. உலகிலுள்ள 177 நாடுகளில் மனித வளமேம்பாட்டில் இந்தியா 127வது இடத்தில் இருக்கிறது. 5 வயதுக்கும் குறைவான இந்தியக் குழந்தைகளிலபாதியளவு போதிய உணவின்றிக் கிடக்கின்றன. இந்தியப் பெண்களில் 46 சதவீதமானவர்கள் படிப்பறிவற்றவர்களாக உள்ளனர். அரசுப் புள்ளிவிவரப்படியே 25 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். அரசு சாரா நிறுவனங்களின் புள்ளி விவரப்படி இதுவே 40 கோடியாகும்.

 

            ஆக, எப்படிப் பார்த்தாலும் இந்தியப் பொருளாதாரம் வட்டார ரீதியாக, வர்க்க ரீதியாக, பாலியல் ரீதியாக, நகர்ப்புறகிராமப்புற வேறுபாடு ரீதியாக ஒரு சார்பாகக் கோணித்துப் போகிறது. அனைத்துத் தரப்புகளின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கானதாகப் பொருளாதாரம் திட்டமிடப்படுவதில்லை கருணாநிதியோ  ஜெயலலிதாவோ, வாஜ்பாயோ  மன்மோகன் சிங்கோ அவர்களது அக்கறையெல்லாம் ஒரு சார்பாகவே உள்ளது. இதற்கு ஈடுகட்டும் வகையில்தான் ஏழ்மைக் குறைப்பு, இலவசத் திட்டங்கள் வருகின்றவே தவிர, மக்களின் நலன்களுக்காக அல்ல.

 

மு ஆர்.கே.