Language Selection

புதிய ஜனநாயகம் 2008

வரலாறு காணாத அளவுக்கு விவசாய உற்பத்தியில் பின்னடைவு; மிரள வைக்கும் அளவுக்கு உணவு உற்பத்தியில் தேக்கம்; புவிசூடேற்றத்தின் விளைவாக நிச்சயமற்ற பருவகாலங்கள்; விவசாயத்தையே விட்டு விரட்டப்படும் விவசாயிகள். இதன் ஊடாகவே விவசாயத்திற்கு மானிய வெட்டு; இடு பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு; மண் வளம் இழப்பு; நீர் பற்றாக்குறை என்று தொடர்தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது ஒட்டு மொத்த விவசாயம்.

தொடரும் இந்தத் தீராத சிக்கலிலிருந்து மீள, ஒப்பந்த (காண்டிராக்ட்) விவசாயம் செய்யுமாறு விவசாயிக ளுக்கு வழிகாட்டுகிறது, இந்திய அரசு. ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவிப்பதை 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கொள்கையாகவே அறிவித்திருக்கிறது, மன்மோகன் சிங் அரசு. ""விதையும் உரமும் பன்னாட்டு முதலாளிகள் கொடுப்பார்கள்; விளைபொருளுக்கான விலையையும் முன்கூட்டியே அவர்கள் தீர்மானித்து விடுவார்கள்; நிலமும் உழைப்பும் மட்டுமே விவசாயிக்குச் சொந்தம்'' இதுதான் ஒப்பந்த விவசாயம்.


இதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் பெப்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு பாசுமதி நெல்லைப் பயிரிட்டார்கள் விவசாயிகள். பன்னாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கடுகும் உருளைக்கிழங்கும் பயிரிட்டார்கள். ஆனால், விளைந்த நெல்லும் கடுகும் கிழங்கும் தரமில்லை என்று கூறி ஒப்பந்தப்படி விலைதர மறுத்து ஏய்த்தன பன்னாட்டு நிறுவனங்கள். ஒப்பந்த விவசாயிகளோ போண்டியாகிப் போனார்கள். விவசாயிகளின் அதிருப்தியும் குமுறலும் போராட்டமாக வெடிக்கத் தொடங்கியதும், இப்போது இந்திய ஆட்சியாளர்கள் இன்னுமொரு மோசடி உத்தியுடன் களத்தில் இறங்கியுள்ளார்கள். அதுதான் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை(Agricultural Technology Management Agency - ATMA)  என்கிற திட்டம்.


இத்திட்டத்தின்படி, பன்னாட்டு நிறுவனங்களின் ஒப்பந்த விவசாயத்துக்கான தரகனாக இந்திய அரசின் விவசாயத் துறை செயல்படும்; இடைத்தரகர்களை ஒழித்து, மோசடிகள் ஏதுமின்றி ஒப்பந்த விவசாயிகளைப் பாதுகாக்கும்; விளைபொருளுக்கு நியாயவிலை கிடைப்பதை உத்தரவாதம் செய்யும். தோற்றத்தில் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஏற்பாடாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும், இதன் பின்னே விவசாயிகளைக் கொத்தடிமைகளாக்கி விவசாயத்தை நாசமாக்கும் மிகப் பெரிய சதி அரங்கேறி வருகிறது.


கடந்த நிதியாண்டு (2007 ஏப்ரல்) முதற்கொண்டு தமிழகத்தில் ""வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை'' (Agricultural Technology Management Agency - ATMA  என்ற திட்டம், பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஏப்ரல் 2008 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டமானது, நவம்பர் 1998ஆம் ஆண்டு முதல் உலக வங்கி நிதியுடன் செயல்பட்டு வரும் தேசிய விவசாய தொழிற்நுட்ப திட்டத்தின் ஒரு அங்கமாகும். ""வேளாண் தொழிற்நுட்ப மேலாண்மை முகமை'' திட்டம் ஆரம்பத்தில் ஏழு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஏழு மாநிலங்களில் கிடைத்த படிப்பினைகளையும் அனுபவங்களையும் கணக்கில் கொண்டு, அனைத்து மாநிலங்களுக்கும் நிதியுதவியுடன் உலகவங்கி பரிந்துரை செய்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.


வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் அரசின் விவசாயம், தோட்டப்பயிர், கால்நடை பராமரிப்பு, பட்டு வளர்ப்பு, வேளாண் பொறியியல், மீன் வளர்ப்பு மற்றும் விவசாய பொருட்கள் விற்பனை துறைகளின் பணிகள் திருத்தியமைக்கப்படுகின்றன. இதன் ஊடாகவே மாநில மற்றும் மைய அரசின் விவசாய ஆய்வு நிறுவனங்களின் பணியும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.


அண்மைக் காலம் வரை விவசாயம் சார்ந்த அரசு துறைகளின் பணி விவசாய இடுபொருட்கள் / சேவை அளித்தல், விவசாய உற்பத்தியை கணக்கிடுதல், விவசாய விரிவாக்க பணிகள் (ஆலோசனைகள் வழங்குதல், புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் பரப்புதல்) மேற்கொள்ளுதல், அரசின் திட்டங்களைச் செயல்படுத்தல், மையமாநில அரசுகளின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப விவசாய உற்பத்தியை நடைமுறைப்படுத்தல் ஆகியவைகளே ஆகும். இனிமேல் இந்த அரசுத் துறைகள் ""வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை'' திட்டத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட புதிய பணிகளை மேற்கொள்ளும். அவை:


1. சந்தையின் தேவையைப் புரிந்து அதற்கான அல்லது அதற்கு ஒத்த விரிவாக்க பணிகளை திட்டமிட வேண்டும். ((Market led extension services) (சந்தையின் தேவை என்பது உள்ளூர் சந்தையை அல்ல; மாறாக பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள், நகர்புற மேட்டுக்குடியினர், மேலைநாடுகளின் தேவை).


2. சந்தை தேவை அடிப்படையில் விவசாய பொருட்கள் வாரியாக 10 முதல் 20 விவசாயிகள் கொண்ட குழுக்களை அமைத்தல். உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்திற்கு கத்தரிக்காய் தேவைப்படுகிறது. இதை கணக்கில் கொண்டு குறிப்பிட்ட புவியமைப்புப் பகுதியில் கத்தரிக்காய் உற்பத்தி செய்ய விவசாயிகளை அணிதிரட்டி கத்தரிக்காய் உற்பத்தியாளர் சங்கம் உருவாக்க வேண்டும்.


3. உற்பத்தி பொருள் வரியாக உருவாக்கப்படும் குழுக்களை அந்த குறிப்பிட்ட விவசாய பொருள் உற்பத்தியில் களப்பயிற்சி, விழிப்புணர்வு முகாம், கண்டு உணர் சுற்றுலா, செயல் விளக்கப் பண்ணைகள், கையேடுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகத் தேர்ச்சியடையச் செய்ய வேண்டும்.


4. பயிற்றுவிக்கப்பட்ட விவசாயி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருளை, பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக, விவசாயி குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தங்களை உருவாக்குதல்.


5. ஒப்பந்த விவசாயம் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஏதுவாக விவசாயிகளை அணிதிரட்டி பங்கேற்க வைத்தல்.


6. எங்கெல்லாம் அரசின் விவசாயம் சார்ந்த துறைகள் பலவீனமாக உள்ளதோ, அங்கெல்லாம் மேற்குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்க வழி வகை செய்வது.


7. இத்திட்டத்திற்காக மாவட்டந்தோறும் ஒதுக்கப்படும் ஒட்டுமொத்த நிதியில் குறைந்தபட்சம் 10 சதவீதமாவது தனியார் நிறுவனங்கள் / தன்னார்வ குழுக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்றது போல், விவசாய அலுவலர்கள் மாவட்டத் திட்டத்தை வரையறுக்க வேண்டும்.


மேற்குறிப்பிட்ட விசயத்தை இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்ள, கடந்த ஆண்டு முதல் ""வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை'' திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வேலூர் மாவட்டத்தைப் பார்ப்போம். இத்திட்டம் செயல்பட ஆரம்பித்தவுடன் விவசாய துறையின் பணிகள் தலைகீழாக மாற ஆரம்பித்துவிட்டன. பல ஆயிரக்கணக்கான கோழிப் பண்ணைகளை வைத்திருக்கும் ""சாந்தி பார்சூன்'' என்ற ஒப்பந்த விவசாய நிறுவனத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டனர் விவசாய அலுவலர்கள்.


இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக கோழிப்பண்ணைகள் பரவலாக தமிழகத்தில் உள்ளன. இக்கோழிபண்ணைகளுக்குத் தீவனமாகத் தேவைப்படும் மக்காசோளத்தை ஆந்திராவில் கொள்முதல் செய்து பண்ணைகளுக்கு விநியோகித்து வந்தனர். இதனால் கூடுதல் செலவு ஆகியது. இந்தப் பிரச்சினையை சாந்தி பார்சூன் நிறுவனம் விவசாய துறையின் பார்வைக்குக் கொண்டு வந்து, மக்காசோளத்தை உள்ளூரில் உற்பத்தி செய்து கொடுக்க ஏற்பாடு செய்தால், கொள்முதல் செய்து கொள்கிறோம் என்றது.


சந்தையின் தேவையை உணர்ந்த வேலூர் மாவட்ட விவசாயத் துறை, மக்காசோளம் உற்பத்தி செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகளை அடையாளம் கண்டது. இந்த விவசாயிகளை (10 முதல் 20 நபர்கள் உள்ளடக்கிய) பகுதிவாரியாக மக்காசோள உற்பத்தியாளர்கள் குழுவாகத் திரட்டியது. இப்படி பல குழுக்கள் அமைக்கப்பட்டன. விவசாய துறை, இந்த மக்காசோள உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு மக்காசோள உற்பத்தி பற்றி களப்பயிற்சி, விழிப்புணர்வு முகாம், கண்டு உணர் சுற்றுலா, கையேடு மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பயிற்சி அளித்தது. இப்படி தயார் செய்யப்பட்ட குழுக்களை சாந்தி பார்சூன் நிறுவனத்தின் ""ஒப்பந்த மக்காசோள உற்பத்தி'' திட்டத்துடன் விவசாயத்துறை இணைத்துள்ளது. இதன் மூலம் சாந்தி பார்சூன் நிறுவனம் தனது கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான மக்காசோளத்தை ஒரே வட்டாரத்தில் குவிமையமாகக் கொள்முதல் செய்து கொள்கிறது.


ஒப்பந்த விவசாயத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் உற்பத்திக்குத் தேவையான விவசாயிகளைக் கண்டறிதல், அவர்களைப் பயிற்றுவிப்பது, மற்றும் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் கண்காணித்தல் பணிகளை ஒப்பந்த விவசாயத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் செய்ய வேண்டும். ஆனால், இங்கு இப்பணிகள் அனைத்தையும் வேளாண்துறை மேற்கொள்கிறது. மேலும், உற்பத்தியை ஒரே வட்டாரத்தில் குவிமையமாக்கித் தருகிறது. இதனால் சாந்தி பார்சூன் நிறுவனத்திற்கு கொழுத்த இலாபம். இதைத்தவிர, வேலூர் மாவட்ட விவசாயத் துறை, வாழை உற்பத்தியாளர்களைச் சங்கமாக்கி நேரடி இணைய தள

(on line spot trading)

 

வர்த்தக நிறுவனத்துடன் விவசாயிகளை இணைக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாக, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்தேறி வருகின்றன.


இப்படிப் பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளின் தேவையை உணர்வுபூர்வமாக புரிந்து கொண்டு, அவர்களின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது வேலூர் மாவட்ட விவசாயத் துறை. இந்தச் செயற்பாட்டை வேளாண் அறிவியல் நிபுணர்கள் பாராட்டுகின்றனர்; வேலூர் ""மாதிரி''யை அனைத்து மாவட்டத்தினரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தவும் செய்கின்றனர்.


கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த போக்கே முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் ""வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை'' திட்டத்தின் கீழ் விவசாயத் துறையானது தரகு முதலாளிகளின் சங்கமான சி.ஐ.ஐ. கூட்டமைப்பு, வைத்தியநாத் ஆயுர்வேத பவன், ஆயுர்வேத்கிரி ஹெர்பல்ஸ், அமர்பள்ளி புட்ஸ், பமீர் அக்ரோ வென்சர்ஸ், டீசன்ட் எண்டர்பிரைசஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யக் களப்பணிகளைச் செய்து வருகிறது. மேலும், பீகார் அரசின் விவசாயத் துறை எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் களப்பணிகளை மேற்கொள்ள பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.


ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு உதவியாக ஆந்திரா, சட்டீஸ்கர், ஒரிசா மற்றும் அரியானா மாநிலங்களில் கால்நடைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை மாநிலங்களின் கால்நடை பராமரிப்புத் துறை நடைமுறைப்படுத்திக் கொடுக்கிறது. மாவட்டந்தோறும் மைய அரசு நிதியுதவியுடன் செயற்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையங்கள், தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இந்நிலையங்கள் மான்சாண்டோமஹிகோவின் பி.டி. இரக பருத்தியை விவசாயிகள் மத்தியில் பிரபலமாக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்துள்ளன. இதற்கான களப்பணிகள் நடந்தேறிய வண்ணம் உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் விவசாயப் பல்கலைக்கழகம் மற்றும் விவசாயத் தொழில்நிறுவன சங்கத்தின் உதவியுடன் பெப்சி குளிர்பான நிறுவனம், ஒப்பந்த தக்காளி விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது.


இப்படி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ""வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை'' திட்டம், தரகு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இத்திட்டத்தில் இணைக்கப்படும் விவசாயிகளோ சுதந்திரத்தை இழந்து ஒப்பந்த விவசாயக் கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர். என்ன விளைவிக்க வேண்டும்; எவ்வளவு விளைவிக்க வேண்டும்; எப்படி விளைவிக்க வேண்டும்; என்ன விலைக்கு விற்கலாம்; எங்கு விற்கலாம் என அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசின் விவசாயத் துறை ""கமிசன் வாங்காத ஏஜெண்டு''களாகச் செயல்படுகிறது.


இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க, மைய, மாநில வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வுப் பணிகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. நம் நாட்டு ஆய்வு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் உலக வங்கி, அமெரிக்க நிதி உதவி (USAID), போர்டு மற்றும் ராக்பெல்லர் பவுண்டேசன்கள், பன்னாட்டு வளர்ச்சித் துறை மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களே வேளாண் ஆய்வைத் தீர்மானிக்கின்றன. மேலும், பன்னாட்டு நிதியுதவியுடன் நடத்தப்படும் ஆய்வில் பங்கேற்று, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புடன் நெருங்கிய உறவை உருவாக்கிக் கொள்வதை பெருமைக்குரிய செயலாகக் கருதுகிறார்கள், நம் நாட்டு விஞ்ஞானிகள். இதன் அடிப்படையில்தான், சிறு சலனம் கூட இல்லாமல் தமிழ்நாடு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகமானது, மாண்சான்டோ மற்றும் அமெரிக்க நிதி உதவி (USAID)  ஆகியவற்றுடன் கூட்டு வைத்து பி.டி. கத்தரிக்காய்க்கான கள ஆய்வை மேற்கொண்டு வருகிறது.


இந்தப் பின்னணியில், ""வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை'' திட்டம் அனைத்து ஆய்வு நிறுவனங்களின் பணிகள் ""சந்தையின் தேவை''யைப் பூர்த்தி செய்வதை நோக்கி இருக்க வேண்டும் என்று வரையறுக்கிறது. தற்சமயம் ஆய்வு நிறுவனங்களின் பணி என்பது ஏகாதிபத்தியங்களுக்கான சேவையாகத்தான் உள்ளது. ""வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை'' திட்டத்தின் வழியாக ஏகாதிபத்தியங்களுக்கான சேவையை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக அரசு ஆய்வு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.


அன்று, இதே ஒப்பந்த விவசாயத் திட்டப்படி ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் வங்காளத்து விவசாயிகளையும் சந்தால் பழங்குடியினரையும் அவுரிச் செடி பயிரிடுமாறு கட்டாயப்படுத்தினார்கள். அது, காலனியாதிக்கம். இன்று, ஒப்பந்த விவசாயத் திட்டத்தின்படி, பன்னாட்டுக் கம்பெனிகளின் தேவைக்கேற்ப பயிரிடுமாறு இந்திய விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது, மறுகாலனியாதிக்கம்.


இத்திட்டத்தின் விளைவாக, நாட்டின் விவசாயமே பன்னாட்டு முதலாளிகளின் இரும்புப் பிடிக்குள் சிக்கிவிடும். சுயசார்பு முற்றாக அழிந்து, நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் ஒற்றைப் பயிரை விளைவிக்கும் மாவட்டமாக மாற்றப்பட்டு விடும். கால்நடை வளர்ப்பு அழியும். நிலம் மலடாகும். எதைப் பயிரிடுவது என்பதைப் பன்னாட்டு முதலாளிகளே தீர்மானிப்பதால், நாட்டின் உணவுத் தன்னிறைவு அடியோடு அழியும்.


· சுடர்