Language Selection

கோவா என்றாலே கடற்கரை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், கொண்டாட்டங்கள் என்றுதான் நமக்கு அடையாளம் காட்டப்படுகிறது. இந்த முதலாளித்துவச் சித்தரிப்புக்கு மாறாக, இனிமேல் கோவா என்றால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரட்டியடித்த மாநிலம் என்றுதான் நாம் அடையாளம் காண வேண்டும்.


நமது நாடு முழுவதும் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கெதிராக (சிபொம) இங்கொன்றும் அங்கொன்றுமாகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், கிராம மக்கள், படித்த நடுத்தர வர்க்கம், பொறியாளர்கள், கிறித்துவ சபை, ஊடகங்கள் என அனைவரும் ஓரணியில் இணைந்து போராடி இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை அனுமதியளிக்கப்பட்ட அனைத்து சி.பொ.ம.க்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அங்கீகரிக்கப்பட்ட 7 சி.பொ.ம.க்களின் அங்கீகாரமும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இனிமேல் சி.பொ.ம.வைப் பற்றிப் பேசவேமாட்டோம் என மாநில அரசை உறுதியளிக்க வைத்திருக்கிறது, இம்மக்கள் எழுச்சி.


உள்ளூர் மக்கள் அனைவரும் சி.பொ.ம. விரோதி மஞ்ச் என்னும் அமைப்பின் கீழும், படித்த நடுத்தர வர்க்கத்தினரும் தொழில் வல்லுநர்களும் கோவா பச்சாவ் அபியான் (கோவாவைக் காப்போம் இயக்கம்) எனும் அமைப்பின் கீழும் திரண்டு போராடினார்கள்.


இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் வெர்னா என்னும் கிராமத்தைச் சேர்ந்த சார்லஸ் பெர்னாண்டஸ், மாண்டிரோ மற்றும் லுத்தோலிம் எனும் கிராமத்தைச் சேர்ந்த ஆலன் ஃபல்லேரியா ஆகிய மூவரும் பொறியாளர்கள். இவர்களுடன் பீட்டர் காமா எனும் ஒப்பந்தக்காரரும் இணைந்து சி.பொ.ம.வை எதிர்த்து இயக்கத்தை நடத்தியுள்ளனர்.


கோவா சட்டசபைக்குக் கடந்த முறை நடந்த தேர்தலின்போது, அப்பகுதி எம்.எல்.ஏ.வால் ஏழைகளுக்கு இலவச வீட்டுவசதித் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தின் விவரங்களைக் கேட்டு இவர்களில் மாண்டிரோ என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுப் போட்டார். அப்போதுதான் வெர்னா ஊரிலுள்ள தொழிற்பேட்டைப் பகுதியில் ரஹேஜா கார்ப்பரேசன் எனும் தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சி.பொ.ம.விற்காக 106 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியிருந்த விசயம் தெரிய வந்தது. அதுவரை சி.பொ.ம. என்றால் என்ன என்றே தெரியாத இவர்கள், தொடர்ச்சியாகத் தகவல் அறியும் மனுக்களைப் போட்டு சி.பொ.ம. குறித்தும், அரசின் சட்டங்கள் குறித்தும் படித்துள்ளனர்.


மனுக்களுக்கு மட்டும் 18,000 ரூபாய் வரை செலவிட்ட இவர்கள், சி.பொ.ம. வானது எவ்வாறு வெளிநாட்டினரின் நேரடி ஆதிக்கத்தின் கீழ் குட்டி அரசாக இந்திய நிலப்பரப்புக்கு உள்ளேயே இயங்கப் போகிறது என்பதை அறிந்ததும் மனம் குமுறினர். இதுபற்றிக் கூறும்போது ""இந்த மாநிலத்தின் பூர்வகுடிகளான நாங்கள், எங்களது சொந்த நாட்டுக்குள்ளேயே திடீரென அந்நியர்களாக வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவதை அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது'' என்கிறார் மாண்டிரோ.


முதலில் இவர்கள் இனம் கண்ட ரஹேஜா கார்ப்பரேசனின் சி.பொ.ம. விற்கான விண்ணப்பம், சரிவர நிரப்பப்படாமலும் கம்பெனியின் முத்திரை கூட இல்லாமலும் இருந்த போதிலும், முதலமைச்சரின் சிபாரிசின் பேரில் அரசு உடனடியாக சி.பொ.ம.வுக்கு அனுமதி அளித்திருந்தது.


உடனடியாக தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் பலவற்றை மாநிலம் முழுவதிலும் நடத்தி சி.பொ.ம.வின் அபாயங்களை விளக்கி மாண்டிரோவும், "கோவா பச்சாவ் அபியான்' அமைப்பினரும் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினர்.


இவர்களது பிரச்சாரம் சி.பொ.ம. வால் பாதிக்கப்பட்ட மக்களிடையே மட்டுமின்றி, அதனால் பாதிக்கப்படாத கிராமங்களிலும் நல்ல பலனைத் தந்தது. முதல்கட்டமாக, சி.பொ.ம. விரோதி மஞ்ச் இயக்கத்தினர் 200 பேர்களைத் திரட்டிக் கொண்டு வெர்னாவில் ரஹேஜா நிறுவனத்தின் சி.பொ.ம.விற்குள் பேனர்களுடன் முழக்கமிட்டபடி நவம்பர் 3, 2007 அன்று நுழைந்தனர். அரசு முறைப்படி அனுமதி வழங்கும் முன்னரே கட்டுமானப் பணிகளைத் தொடங்கி இருந்தது அந்த மண்டலம். 4 மாதக் கட்டுமானப் பணிகள் ஏற்கெனவே முடிந்து இருந்ததும், பல இடங்களில் பூமியைத் துளைத்து ஆழ்துளைக் கிணறுகளை அமைத்திருந்ததும் தெரிய வந்தது. இவை அனைத்தையும் சி.பொ.ம. விரோதி மஞ்ச் இயக்கத்தினர் வீடியோவில் பதிவு செய்ததுடன் கட்டுமானப் பணிகளைத் தொடர வேண்டாம் என அங்கிருந்தவர்களை எச்சரித்துவிட்டு வந்துவிட்டனர்.


அதற்குப் பின் இம்மண்டலத்தை விரட்டி அடிக்கும் போராட்டம் தீவிரமானது. முன்னாள் எம்.எல்.ஏ. மஹந்தி சல்தானாவும் கோவா பச்சாவ் அபியானும் இதில் இணைந்தவுடன் கோவா முழுக்க போராட்டங்கள் பற்றி எரியத் தொடங்கின. மக்கள் திரள் போராட்டம் தீவிரமடையவே, கோவா முதல்வரான திகம்பர காமத், மாநிலம் முழுவதிலும் உள்ள இம்மண்டலங்களின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பு வந்தவுடேனேயே கோவா பச்சாவ் அபியான், சி.பொ.ம. விரோதி மஞ்ச் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 250 தொண்டர்கள் வெர்னா சி.பொ.ம.வுக்குள் நுழைந்து அங்கிருந்த பொறியாளர்கள், காவலாளிகள் அனைவரையும் வேலையை நிறுத்தச் சொல்லி வற்புறுத்தினர். கட்டுமானத் தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்து அப்பகுதியில் இருந்து வெளியேறச் செய்தனர். வெர்னாவில் இருந்து சி.பொ.ம. விரட்டப்பட்டு விட்டது.


இதே நேரத்தில், சிப்லா எனும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் சி.பொ.ம., கோவாவின் பொந்தா வட்டத்தில் உள்ள கெரீம் எனும் ஊரில் உருவாக்கப்பட இருந்தது. அடர்த்தியான காடுகளும் வற்றாத ஓடைகளும் நிறைந்த புத்ஹாம் குன்றுப்பகுதியில் அமைந்திருக்கும் அவ்வூரில், மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கென்றே தனி சி.பொ.ம., இந்தியாவிலேயே முதல்முறையாக உருவாக்கிடத் திட்டமிடப்பட்டது. காடுகளை அழித்து நிறுவப்பட இருந்த இம்மண்டலத்தின் வேலைகள் மிகவும் ரகசியமாக நடந்து வந்தன. கடந்த டிசம்பர் 7 தேதி இரவு, கட்டுமானப் பொருட்களைக் கொண்டுவந்த வாகனம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதோடு, மின் தடையையும் ஏற்படுத்தியதால், மக்கள் மத்தியில் சி.பொ.ம.வுக்காக நடைபெற்றுவந்த பணிகள் தெரிய வந்தன. உடனே வெர்னா, பாஞ்சிம் கிராம மக்கள் இதற்கெதிரான போராட்டத்தைத் தொடங்கினர். டிசம்பர் 8, 2007 அதிகாலையிலேயே 600க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சி.பொ.ம.வுக்குள் நுழைந்தனர். கட்டுமானப் பணிகள் முழுவதும் நிறுத்தப்பட்டு, தொழிலாளர்கள் முழுவதும் வெளியேறும்வரை அப்பகுதியைவிட்டு நகர முடியாது எனப் போராடிய மக்களை, அங்கு காவலுக்குப் போடப்பட்டிருந்த போலீசுப் படையால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இறுதியில் அரசு பணிந்தது. கட்டுமானப் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டதுடன் தொழிலாளர்கள் தங்களது உபகரணங்களுடன் வெளியேற்றப்பட்டார்கள்.


இவ்விரண்டு போராட்டங்களும் ஓட்டுக் கட்சிகளால் நடத்தப்படவில்லை. சுற்றுச் சூழலைக் காப்போம் எனும் முழக்கத்தின் கீழ் திரட்டப்பட்ட மக்களுடன், நடுத்தர வர்க்கம்கூடத் தன்னை இணைத்துக் கொண்டு போராடி இருக்கின்றது. இவர்களின் போராட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது இல்லை. எனினும் ஏகாதிபத்திய, தரகு முதலாளிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கோவாவிலும், மேற்குவங்கம் நந்திகிராமிலும் மக்கள் திரண்டெழுந்து தம்மை நாசமாக்க வரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தி அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.


ஆனால், தமிழ்நாட்டிலோ நான்குநேரி, தேன்கனிக்கோட்டை, செய்யாறு, எண்ணூர் என அடுத்தடுத்து சி.பொ.ம.ங்களை உருவாக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே பல மண்டலங்கள் செயல்படத் தொடங்கி விட்டன. ஆனால், இங்கு இதை எதிர்த்து எந்த ஓட்டுக்கட்சியும் வாயைத் திறப்பதில்லை. மக்களோ இவை எல்லாம் வளர்ச்சித் திட்டங்கள் என மாயையில் மூழ்கிக் கிடக்கின்றனர். சி.பொ.ம.க்களின் பின்னுள்ள அரசியலையும் அவை உருவாக்க இருக்கும் எண்ணற்ற கொடிய விளைவுகளையும் மக்களிடம் விளக்கி அவர்களை அணிதிரட்டிப் போராடினால், இத்தகைய சி.பொ.ம.க்களை நாட்டைவிட்டே விரட்டி முடியும் என்பதை கோவா மற்றும் நந்திகிராம மக்களின் போராட்டங்கள் நிரூபிக்கின்றன.


· அன்பு