பல ஆண்டுகளாகவே சீமைச் சாராய விற்பனையில் கொடிகட்டிப் பறந்து வரும் தமிழகம், ""இப்பொழுது'' போதைப் பொருள் புழக்கத்திலும், விற்பனையிலும் சாதனை படைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத் தலைநகர் சென்னை, பிற ஆசிய நாடுகளுக்குப் போதைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமாக மாறியிருக்கிறது.

 

மேலே பயன்படுத்தப்பட்டுள்ள இப்பொழுது என்ற வார்த்தைக்குப் பதி லாக, தாராளமயத்திற்கு பின்பு எனப் பயன்படுத்துவதுதான் துலக்கமானதாக இருக்கும். தாராளமயத்திற்கு முன்பு, போதைப் பொருட்களை பிற நாடுகளுக்கு கடத்திச் செல்லும் வழியாகத்தான் சென்னை பயன்படுத்தப்பட்டது. தாராளமயத்திற்குப் பின்பு, சென்னை விற்பனை மையமாக ""வளர்ச்சி'' அடைந்திருக்கிறது. உலகமயம் வாரி வழங்கியுள்ள முன்னேற்றம் இது.


சென்னையின் உள்ளூர் சந்தையின் மதிப்பு ரூ. 100/ கோடி என்றும்; ""ஏற்றுமதி'' வர்த்தக மதிப்பு ரூ.20/ கோடி முதல் ரூ. 40/ கோடி வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. தமிழகத்தில் இருந்து ஈழத்திற்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் ""கடத்தப்படுவதை''ப் பற்றி அலறி எழுதும் பத்திரிகைகள், இந்தப் போதை மருந்து கடத்தல் பற்றி அடக்கியே வாசிக்கின்றன.


பணக்கார மேட்டுக்குடி கும்பல் பயன்படுத்தும் ஹெராயின் தொடங்கி சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்படுத்தும் கீட்டமைன் வரை, அனைத்துப் போதைப் பொருட்களும் சென்னையில் ""தட்டுப்பாடு'' இன்றிக் கிடைக்கிறதாம். போதை மருந்துகளுக்குப் பெயர்போன கோவாவில் கிடைக்கும் சரக்கைவிட, சென்னையில் கிடைக்கும் சரக்கு தரமானதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ""தரம்'' இல்லாவிட்டால், சந்தைப் பொருளாதாரத்தில் தாக்குப் பிடிக்க முடியாதே!


கீட்டமைன் ஒரு இரண்டுங்கெட்டான் சரக்கு. நாய்களுக்கு வலி நிவாரண மருந்தாகக் கொடுக்கப்படும் இதனைப் போதையேற்றிக் கொள்ளவும் பயன்படுத்தலாம். தலைவலி மாத்திரையை வாங்குவது போல, ஆங்கில மருந்துக் கடைகளிலேயே இதனை எளிதாக வாங்கிக் கொள்ள முடியும். கீட்டமைன், மற்ற போதைப் பொருட்களைவிட விலை மலிவானது என்பதோடு, இது தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பட்டியலில் கொண்டு வரப்படவில்லை; மருந்தாக மட்டுமே பட்டியல் இடப்பட்டுள்ளது. எனவே, இதனை பயன்படுத்தும்பொழுதோ / கடத்தும் பொழுதோ பிடிபட்டால் தண்டனை குறைவாகத்தான் கிடைக்கும். இந்தச் சட்டபூர்வ சலுகையால் கீட்டமைன் உள்ளூர் புழக்கத்திலும், கடத்தலிலும் முன்னணியில் உள்ளது.


அந்தக் காலம் போல, போதைப் பொருளை வாங்க அதனை விற்பவரைத் தேடி இருளடைந்த சந்து பொந்துகளுக்குள் அலைய வேண்டிய அவசியம் இன்று இல்லை. செல்ஃபோனும், ஆன் லைன் வர்த்தக முறையும் போதைப் பொருள் விற்பனையையும் / கடத்தலையும் மிகவும் ""ஹைடெக்'' ஆக மாற்றிவிட்டதாகச் சுங்கத்துறை அதிகாரிகள் புலம்புகிறார்கள். இந்த ""முன்னேற்றம்'' காரணமாக, சென்னையில் போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும்; நாளொன்றுக்கு 20 பேரை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிப்பதாகவும் சென்னை டி.டி.கே. புனர்வாழ்வு மருத்துவமனையைச் சேர்ந்த அனிதா ராவ் குறிப்பிடுகிறார்.


முன்பெல்லாம் தறிகெட்டுப் போன சில பணக்கார வீட்டு இளைஞர்கள்தான் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிக் கிடப்பார்கள். இன்றோ, கால்சென்டரும், பி.பி.ஓ.வும் பெருகிய பிறகு, ""ஆச்சாரமான'', கட்டுப்பாடான நடுத்தர வர்க்கத்து குடும்பங்களைச் சேர்ந்த ஆண்/பெண் இரு பாலரிடமும் கூட போதை பழக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது.


பி.பி.ஓ., மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வேலை களைப்பைப் போக்கி, அவர்களின் மனநிலையை உற்சாகமாக வைப்பதற்காக நடத்தப்படும் ""பார்ட்டி''களில், போதைப் பொருட்களுக்குத்தான் முதலிடம். இந்தியா டுடேயின் மொழியில் சொன்னால், ஐ.டி.துறை சென்னையில் போதை புரட்சியை ஏற்படுத்தி விட்டது. இந்தக் கொண்டாட்டங்கள் தனிப்பட்ட முறையில் நடப்பதால், இங்கு யார் வருகிறார்கள், பார்ட்டிகளில் என்ன செய்கிறார்கள், போதை மருந்துகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பது வெளியில் தெரியாது எனப் புலம்புகிறது, இந்தியாடுடே.


ஐ.டி. துறை தனது ஊழியர்களிடம் தொழிற்சங்க உணர்வு வளர்வதைக் காயடித்தது; சமூகத்தில் இருந்து அவர்களைக் கலாச்சார ரீதியாக அந்நியப்படுத்தியது; குடும்ப உறவுகளைக் கூடச் சிதைத்துச் சின்னாபின்னாபடுத்தியது; வேலைச் சுமையின் காரணமாக ஊழியர்களை இளம் வயதிலேயே தீராத நோயாளிகளாக்கியது.


முன்னேற்றம் என்ற போர்வையில், இதனையெல்லாம் நியாயப்படுத்தி வரும் தாராளமயத்தின் ஆதரவாளர்கள், அத்தொழில் இளைஞர்களிடம் திணிக்கும் வரைமுறையற்ற பாலுறவு, போதைப் பழக்கம் போன்ற கலாச்சார சீரழிவுகளைக் கண்டு மட்டும் அலறுகிறார்கள். கடப்பாரையை முழுங்கிவிட்டு, குத்துதே குடையுதே எனக் கதறுவதால் என்ன பயன்!


· குப்பன்