08_2006.jpg

ஆண்டிப்பட்டி வட்டார மக்களைத் துன்புறுத்தி வந்த பால்சாமி என்ற கிரிமினலின் கொலையோடு தொடர்புபடுத்தி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தோழர் செல்வராசு உள்ளிட்ட வி.வி.மு. தோழர்கள் பத்து பேரை 3.7.06 அன்று மதுரை உயர்நீதி மன்றம் விடுதலை செய்திருக்கிறது. சாட்சியங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை வழக்குரைஞர்கள் நிரூபித்த போதிலும், அதனைக் கணக்கில் கொள்ளாமல் 27.2.03

 அன்று பெரியகுளம் விரைவு நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையால் தோழர்கள் செல்வராசு, பரமன், சீனி, ஏழுமலை, ஈஸ்வரன், சுப்பையா, விஜயன், கருப்பையா, அன்னக்கொடி, காமராஜ் ஆகியோர் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்திருக்கின்றனர்.

 

கொலையுண்ட பால்சாமியோ ஒரு மக்கள் விரோதி. இவன் திருட்டு, கொலை, கொள்ளை, கட்டைப் பஞ்சாயத்து, விவசாயிகளின் நிலத்தை அபகரித்தல் என எல்லா கிரிமினல் குற்றங்களிலும் கைதேர்ந்தவன் என்பதோடு, தன்னை மந்திரவாதி என்றும் கூறிக்கொண்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்திப் பணிய வைத்திருந்தவன். பொய்ப் புகார்கள் மற்றும் பொய் வழக்குகள் மூலம் போலீசையும் நீதிமன்றத்தையும் பயன்படுத்தி, தன்னை எதிர்ப்பவர்களைத் துன்புறுத்தும் கலையிலும் கைதேர்ந்தவன். தன்னுடைய அண்ணனின் மனைவியையே அபகரித்துக் கொண்டு, அண்ணனைத் தற்கொலைக்குத் தள்ளினான் பால்சாமி. மூத்த மகனை வழிப்பறிக் கொள்ளைக்குப் பயிற்றுவித்து, தேனி வட்டாரம் முழுதும் மக்களைக் கொள்ளையடித்தான். வழக்குகள் அனைத்திலும் விடுதலை வாங்கினான். பெண்களின் சங்கிலியை அறுத்து போலீசிடம் சிக்கி, வழக்கே இல்லாமல் வெளியே வந்தான்.

 

இவனுடைய ரவுடித்தனங்களை ஒடுக்க வி.வி.மு. களத்தில் இறங்கியபின் நிலைமை மாறத் தொடங்கியது. பால்சாமியின் தம்பி மகன் ஒரு பெண்ணை ஏமாற்றிக் கெடுத்துவிட்டு தப்பிக்க முயன்றபோது, அந்தப் பெண்ணையே திருமணம் செய்ய வைத்தனர் வி.வி.மு. தோழர்கள். அடுத்தடுத்து இரண்டு நிலப்பிரச்சினைகளில் தலையிட்டு பாலுச்சாமியின் சதியையும் முறியடித்தனர். வி.வி.மு.வுடன் நேரடியாக மோதமுடியாததால் ஆத்திரம் கொண்ட இந்தக் கிரிமினல், தன்னுடைய வழக்கமான நரித்தனத்தில் இறங்கினான். வி.வி.மு. தோழர்கள் 7 பேர் தங்களைக் கொலை செய்ய முயன்றதாக பொய்ப்புகார் கொடுத்தான். கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யக் கோரி ஊரே போலீசு நிலையத்தின் முன் திரளவே, தோழர்கள் விடுவிக்கப்பட்டனர். உடனே, உயர் போலீசு அதிகாரிகளைச் சந்தித்து தோழர்களைக் கொலைமுயற்சி வழக்கில் கைது செய்ய வைத்தான். இந்த சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சாமல் பால்சாமிக்கு எதிராக மக்களைத் திரட்டும் பணியை வி.வி.மு. தீவிரப்படுத்தியது.

 

இத்தகைய சூழ்நிலையில் 5.1.2000 அன்று, அரப்படித்தேவன் பட்டியில் அவனுடைய வீட்டின் வாயிற்புறத்திலேயே பால்சாமி கொல்லப்பட்டான். அவனால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அவனை ஒழித்துக் கட்டியிருக்க வேண்டும் என்று ஊகிப்பதாயிருந்தால், ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான மக்களை போலீசு கைது செய்திருக்க வேண்டும். ஆனால், கியூ பிரிவு போலீசோ, வி.வி.மு.வை ஒடுக்குவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது. அந்த வட்டாரத்தில் போலீசின் லஞ்ச ஊழலையும் கட்டைப் பஞ்சாயத்தையும் தட்டிக் கேட்டது மட்டுமின்றி, போலீசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கும் தொடுத்திருந்தனர், வி.வி.மு. தோழர்கள்.

 

எனவே, வி.வி.மு.வைப் பழிவாங்கத் துடித்த போலீசின் நோக்கமும், பால்சாமி குடும்பத்தின் நோக்கமும் ஒன்று சேர்ந்து பொய்வழக்குப் பிறந்தது. 5.1.2000 அன்று இரவு 9.45 மணிக்கு தோழர் செல்வராசு உள்ளிட்ட 10 பேர் பால்சாமியின் வீட்டுக் கதவைத் தட்டி அவனை வெளியே அழைத்து, வந்தவுடன் இழுத்துச் சென்று வெட்டிக் கொன்றதாகவும், பால்சாமியின் குடும்பத்தினர் மட்டுமின்றி, அண்டை வீட்டுக்காரர்களும் இந்தக் கொலையைக் கண்ணால் கண்டிருப்பதாகவும் தனது குற்றப்பத்திரிகையில் கூறியிருந்தது போலீசு. முதல் சாட்சியான பால்சாமியின் மகனும் குறுக்கு விசாரணையில் இதையே கூறினார். எனினும், அண்டைவீட்டார் ஒருவர் கூட சாட்சியாகச் சேர்க்கப்படவே இல்லை.

 

பால்சாமியின் உடலிலிருந்து செருப்பையும், துண்டையும் கைப்பற்றியதாகக் கூறியது போலீசு. தட்டப்படும் கதவைத் திறப்பதற்கு யாரேனும் காலில் செருப்பும் தோளில் துண்டும் அணிந்து வருவார்களா என்ற கேள்விக்கு விடையில்லை.

மாலை 6.30 மணிக்கு தன் தந்தையுடன் பூசைக்குச் சென்றதாகவும், அங்கே பொங்கல் சாப்பிட்டதாகவும் அதற்குப்பின் எதுவும் சாப்பிடவில்லை என்றும் சாட்சியமளித்திருக்கிறார் பால்சாமியின் மகன். பிரேத பரிசோதனை அறிக்கையோ பால்சாமியின் குடலில் அரை மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டுச் செரிக்காத உணவு இருந்ததாகக் கூறுகிறது.

 

இரவு 9.45க்கு கொலை நடந்ததாக குற்றப்பத்திரிகை கூறுகிறது. 9.15 மணிக்கு பால்சாமியின் மகன் கொலை பற்றிப் புகார் செய்ததாகவும், அந்தப் புகாரில் மொத்தம் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்ததாகவும் கூறினார் சாட்சியமளித்த போலீசு துணை ஆய்வாளர். கொலையுண்ட நேரம் மட்டுமல்ல, வழக்கே பொய் என்பதை நிரூபித்தன இந்த சாட்சியங்கள்.

 

இத்தனை முரண்பாடுகளையும் புறந்தள்ளி விரைவு நீதிமன்றம் அளித்த தவறான தண்டனையை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தோழர்களின் சார்பில் வழக்குரைஞர் கோபிநாத் வாதாடினார். மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள் சொக்கலிங்கம், பத்ருடு ஆகியோர் இந்தப் பொய் வழக்கிலிருந்து தோழர்களை விடுதலை செய்ததுடன் சாட்சிகள் அனைவரும் நீதிமன்றத்தில் பொய் சொல்லியிருக்கின்றனர் என்பதையும் தமது தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். ஒரு மக்கள் விரோதியின் சாவுக்காக 10 தோழர்கள் அநியாயமாகத் தண்டனை அனுபவித்துள்ளனர். வேண்டுமென்றே பொய்வழக்குப் போட்ட போலீசுக்கும், பொய்சாட்சி சொன்ன பால்சாமியின் குடும்பத்தினருக்கும் என்ன தண்டனை?

 

வி.வி.மு., ஆண்டிப்பட்டி.