08_2006.jpg

குர்கான்'' இந்தப் பெயரைத் தன்மானமிக்க தொழிலாளர்களால் ஒருக்காலும் மறந்துவிட முடியாது. இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களுக்கு ""ஹோண்டா'' நிறுவனத் தொழிலாளர்கள் மீது அரியானா போலீசார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலும்; அதை எதிர்த்து அத்தொழிலாளர்கள் நடத்திய வீரச்சமரும்தான் நினைவுக்கு வரும். ஹோண்டா தொழிலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஏதோ விதிவிலக்காக நடந்துவிட்ட போலீசின் அத்துமீறல் அல்ல.

 மாறாக, தாராளமயத்தின் பின் இத்தகைய ""போலீசு அத்துமீறல்கள்'' தான் "தொழிலாளர் நலச் சட்டங்களாக' மாறிவிட்டன. ""தொழிலாளர் போராட்டங்கள் நசுக்கப்பட வேண்டும்'' என குர்கான் நகரின் போலீசு ஆணையர், ஹோண்டாவின் அடியாளாக மாறி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார்.

 

அரசும், பத்திரிகைகளும் தாராளமயத்தின் பளபளப்பின் பின்னே இந்தக் கொடூரத்தை மூடி மறைத்துவிட முயன்றாலும், தொழிலாளர்களின் போராட்டத்தால், தியாகத்தால் இந்த உண்மைகள் புதையுண்டு போக மறுக்கின்றன.

 

""லிபர்டி'' என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சுதந்திரம் என்று பொருள். ஆனால், இந்தப் பெயரில் காலணிகளைத் தயாரிக்கும் இந்திய நிறுவனம், தனது தொழிலாளிகள் வாயைத் திறப்பதற்குக் கூட அனுமதிப்பதில்லை. அரியானா மாநிலம் கர்நாலில் உள்ள லிபர்டி காலணி ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே ஒரு சிறு சச்சரவு எழுந்தது. இந்தச் சச்சரவு ஆலை அதிகாரிகளால் திட்டமிடப்பட்டுத் தூண்டிவிடப்பட்டது. இந்தச் சச்சரவைக் காரணம் காட்டி, தொழிற்சங்கத்தில் முன்னணியாகச் செயல்படும் எட்டுத் தொழிலாளர்களை இரவோடு இரவாக, அவர்களின் வீட்டில் இருந்து அள்ளிக் கொண்டு போன போலீசார், அவர்களை அடித்துச் சித்திரவதை செய்ததோடு மட்டுமின்றி, அதிகாரிகளைக் கொலை செய்ய முயற்சித்ததாக அந்த எட்டுத் தொழிலாளர்கள் மீதும் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர்.

 

இந்த அநீதியைக் கேள்விபட்ட தொழிலாளர்கள், தங்களின் தலைவர்களை விடுதலை செய்யக் கோரியும்; சச்சரவு நடந்தபொழுது, தொழிலாளர்கள் மீது ஜீப்பை ஏற்றிக் கொல்ல முயன்ற ஜோஷி என்ற அதிகாரியைக் கைது செய்யக் கோரியும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் படை, பட்டாளத்தோடு வந்து இறங்கிய அரியானா போலீசார், எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் செய்யாமல், மிருகத்தனமாகத் தொழிலாளர்களைத் தாக்கியதோடு, அவர்களை ரப்பர் குண்டுகளால் சுட்டுத் தள்ளினர். இத்தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

 

போலீசின் பயங்கரவாதம் இதோடு முடிந்துவிடவில்லை. தொழிலாளர்களின் வீட்டுக்குப் போய் குடும்பத்தாரை அச்சுறுத்தியதோடு, ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கைது செய்து, அவர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கு தொடுத்தது. போலீசார் நடத்திய தடியடி தாக்குதலில் காயமடைந்து கர்நால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்களும் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டதோடு, போலீசு நிலையத்தில் வைத்து மீண்டும் தாக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டனர்.

 

தொழிற்சாலையில் நடந்த ஒரு சிறிய சச்சரவை, லிபர்டி நிர்வாகமும், அரியானா போலீசும் இப்படி பூதாகரமாக வளர்த்துக் கொண்டு போனதற்குக் காரணம் ஒரு ஒப்பந்தம். ஊதியம் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் குறித்து கடந்த அக்டோபர் மாதம், லிபர்டி நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி ஆறேழு மாதங்கள் கடந்த பின்னும், ஒப்பந்தத்தை அமல்படுத்த நிர்வாகம் முயலவில்லை. தொழிற்சங்கமோ, ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்துமாறு நெருக்கடி கொடுத்து வந்தது. இந்த நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ள நிர்வாகமும், போலீசும் கூட்டுச் சேர்ந்து செய்த சதிதான் இந்தத் தாக்குதல்.

 

ஜப்பானிய நிறுவனமான ""டொயோட்டா'' கார் தயாரிப்பில் மட்டுமல்ல் தொழிலாளர்களை ஒடுக்குவதிலும் உலகப் புகழ் பெற்றது. இந்தியத் தரகு முதலாளியான கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து பெங்களூரில் அமைந்துள்ள ""டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ்'' நிறுவனத்தில் நாளொன்றுக்கு 65 முதல் 70 கார்கள் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தி இலக்கை தினந்தோறும் எட்ட வேண்டும் என்பதற்காக, வேலை நேரத்தில் தொழிலாளர்களைத் தண்ணீர் குடிக்கக் கூட அனுமதிப்பதில்லை அந்த நிர்வாகம். எந்தத் தொழிலாளியாவது அனுமதி பெறாமல் சிறுநீர் கழிக்கப் போனால், கழிவறைக்குப் போய்விட்டுத் திரும்புவதற்குள், அந்தத் தொழிலாளிக்குப் பணி இடை நீக்க ஆணை கிடைத்துவிடும்.

 

இந்தக் கொத்தடிமைத்தனம் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் அமைத்துப் போராட வேண்டிய தேவையை உணர்த்தியது. நிர்வாகத்தின் அச்சுறுத்தலையும் மீறி, அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ""டொயோட்டா கிர்லோஸ்கர் தொழிலாளர் சங்கத்தை'' (டி.கே.எம்.இ.யூ.) அமைத்தனர். சங்கம் அமைத்தவுடனேயே அதன் முன்னணியாளர்களை நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தது. நிர்வாகத்தின் இந்த எதேச்சதிகாரப் போக்கை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். 52 நாட்கள் நடந்த அந்தப் போராட்டம் தோல்வியில் முடியவே, டொயோட்டா நிர்வாகம் மேலும் 3 தொழிலாளர்களை நிரந்தரப் பணி நீக்கமும், 15 தொழிலாளர்களை இடைக்காலப் பணி நீக்கமும் செய்தது.

 

இந்தத் தோல்வி பழி வாங்கும் நடவடிக்கைகளால் துவண்டு போய்விடாத தொழிலாளர்கள், கடந்த சனவரி மாதம் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். நிர்வாகம், தொழிற்சாலைக்குள் குடிநீர் உணவு விநியோகம், கழிவறை வசதி ஆகியவற்றை நிறுத்தி, தொழிலாளர்களைப் பணிய வைக்க நெருக்கடி கொடுத்தது. இன்னொருபுறம் போலீசையும், ரவுடிகளையும் தொழிற்சாலைக்குள் இறக்கிவிட்டுத் தொழிலாளர்களைப் பயபீதியூட்டியது. நிர்வாகத்தின் இந்த முயற்சிகள் தோல்வியடையவே, கதவடைப்புச் செய்து, போலீசைக் கொண்டு பலவந்தமாகத் தொழிலாளர்களை வெளியேற்றியது. நிர்வாகத்தின் தன்னிச்சையான கதவடைப்பைச் சட்ட விரோதமாக அறிவிக்காத கர்நாடக மாநில அரசு, டொயோட்டா நிர்வாகத்தின் கார் உற்பத்தியை அத்தியாவசிய பணி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோதமாக அறிவித்தது.

 

இந்தப் போராட்டத்தின் முடிவில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கதவடைப்பை திரும்பப் பெற்றுக் கொள்ள நிர்வாகம் சம்மதித்தாலும், ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டது; வேலை நிறுத்தம் காரணமாகத் தயாரிக்க முடியாமல் போன 800 கார்களைக் கூடுதல் நேரம் வேலை பார்த்து தயாரித்துக் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்து, அதில் வெற்றியும் பெற்றது. ஏற்கெனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்ட நிர்வாகம், இப்போராட்டத்தின் பொழுது, வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சுமத்தி 27 தொழிலாளர்களைப் பணி இடைநீக்கம் செய்தது.

 

அரியானா மாநிலத்தில் உள்ள ""இந்தியன் சுகர் அண்ட் ஜெனரல் இன்ஜீனியரிங் கார்ப்பரேசன்'' என்ற நிறுவனத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் அமைக்க முற்பட்டதற்காக, முன்னணித் தொழிலாளர்கள் தொலைதூர இடங்களுக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டு, பழி வாங்கப்பட்டனர். இந்தப் பணிமாற்றத்தை எதிர்த்து அந்த ஆலை தொழிலாளர்கள் நடத்திய ஊர்வலத்தில் புகுந்த ரவுடிகள், உருட்டுக் கட்டைகளாலும்,கொடுவாட்களாலும் தொழிலாளர்களைத் தாக்கியுள்ளனர்.

 

அரியானா மாநிலத்தின் பானிபட் நகரில் மே 28 அன்று, ஸ்பிரிங் உற்பத்தி செய்யும் ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், எட்டு மணி நேர வேலை, வாராந்திர விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் ஆகிய கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினார்கள். ஊர்வலம் நடந்த மறுநாளே, அந்நகரத்தில் ஏதோ பயங்கரவாதிகள் புகுந்துவிட்டது போல அதிரடிப் போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தேடி பிடிக்கப்பட்டு, போலீசாராலும், ரவுடிகளாலும் மிரட்டப்பட்டனர். இதைக் கண்டித்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்த பிறகுதான் போலீசின் பீதியூட்டல் நிறுத்தப்பட்டது.

 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1926ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி தொழிலாளியிடம் நன்னடத்தைப் பத்திரம் எழுதி வாங்குவதும்; முதலாளிகள் தொழிலாளர்களைப் பழிவாங்க திடீர் கதவடைப்பு செய்வதும், பணி இடைநீக்கம் செய்வதும் சட்டவிரோதமானவை. ஆனால், இந்தக் காலனியச் சட்டத்தைக் கூட முதலாளிகளும் மதிப்பதில்லை; அரசும் மதிப்பதில்லை. ஏற்றுமதி சார்ந்த உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் முதலாளிகள் வைத்ததுதான் சட்டம். எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்கள் தொழிற்சங்க இயக்கங்களைப் பயங்கரவாத இயக்கங்களைப் போலத் தண்டிக்கின்றன. இந்த நிலைமைகள், வெள்ளைக்காரனுக்கு நாடு அடிமையாக இருந்த காலத்தில் தொழிலாளி வர்க்கம் நசுக்கப்பட்டதைவிடக் கேவலமான நிலைக்குச் செல்வதை எடுத்துக் காட்டுகின்றன.

 

எந்தவொரு ஓட்டுக் கட்சி தொழிற்சங்கமும் இப்பாசிச நிலைமைகளை எதிர்கொண்டு போராடத் தயாராக இல்லை. போராடும் தொழிலாளர்கள் போலீசாராலும், ரவுடிகளாலும் தாக்கப்படும் பொழுது, சி.பி.எம்.இன் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ""கெரோ'' போன்ற போராட்டங்களைத் தொழிற்சங்கங்கள் கைவிட வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

 

தமிழகத்தில் அரசு ஊழியர் போராட்டம் ஒடுக்கப்பட்ட பின், சங்கத்தலைவர் சூரியமூர்த்தி, ""ஜெயாவை விமர்சனம் செய்திருக்கக் கூடாது; அரசியல் பேசியிருக்கக் கூடாது; நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கக் கூடாது'' எனப் பல ""கூடாது''களைப் பட்டியல் இட்டார்.

 

டொயோட்டா தொழிலாளர்கள் நிர்வாகத்தின் பழிவாங்குதலை எதிர்த்துத் தீவிரமாகப் போராடத் தயாராக இருந்தாலும், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத் தலைமை, அவர்களைப் பேச்சுவார்த்தைக்குள் இழுத்துவிட்டு, போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது.

 

லிபர்டி தொழிலாளர்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதலை போலீசு நடத்திக் கொண்டிருந்தபொழுது, சி.ஐ.டி.யு. தலைமையோ, ""நாங்கள் தொழில்துறையில் மூலதனம் பாய்வதற்கு எதிரானவர்களோ, வேலை நிறுத்தத்தை நீட்டித்துக் கொண்டே போக வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களோ கிடையாது'' என அறிவித்துத் தங்களின் கோழைத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டனர்.

 

சி.ஐ.டி.யு. போன்ற ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்களின் சமரசமும், கோழைத்தனமும்தான் பெரும்பாலான தொழிற்சங்கப் போராட்டங்கள் அவமானகரமான தோல்வியில் முடிவதற்கு காரணமாக அமைகின்றன. அதே சமயம், இத்தகைய துரோகத் தொழிற்சங்கங்களைப் புறக்கணிக்காமல், அவர்களுக்கு வால் பிடித்துப் போகும் வண்ணம் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வு பின்தங்கியிருப்பது, போராட்டங்களின் தோல்வியைவிட, அவமானகரமானதாக இருக்கிறது.

 

மு ரஹீம்