Language Selection

புதிய ஜனநாயகம் 2006

08_2006.jpg

நிலப்பிரபுத்துவ எதிர்ப்புஏகாதிபத்திய எதிர்ப்பு புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதுதான் நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலட்சியம்; என்றாலும், நேபாள மக்கள் ஜனநாயகப் புரட்சி தற்போது ஒரு புதிய இடைக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. நேபாளத்தில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவது

 என்பதை இந்த இடைக்கட்டத்தின் உடனடி நோக்கமாகக் கொண்டு, போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த செயல் தந்திரத்தை வகுத்து மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது. அடிப்படையில் அதன் அணுகுமுறையும், அரசியல் தீர்வும் சரியானது, அவசியமானது என்று வரவேற்கிறோம். அதேசமயம், இந்தியப் புரட்சிகர இயக்கத்திற்கு நேபாள மாவோயிசக் கட்சித் தலைவர் முன்வைத்துள்ள ஆலோசனைகள் ஏற்கத்தக்கன அல்ல. அது குறித்து நமக்கு விமர்சனங்கள் உள்ளன. இவை குறித்து எமது கருத்துக்களை தனிப் பிரசுரமாக விரிவாக பின்னர் வெளியிடுவோம். நேபாள மாவோயிஸ்டுகள் ஏழு கட்சிகளுடன் அமைத்துள்ள கூட்டணி, ஒப்பந்தங்கள் மற்றும் இந்திய அரசுடனான அவர்களின் பேச்சு வார்த்தைகள் ஆகியவை பற்றிய முழுவிவரமும் இன்னமும் கிடைக்கவில்லை; செய்தி ஊடகங்கள் மூலம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. புரட்சி அலை ஓங்கி வீசும் நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டு, ஜூன் 2ஆம் நாளன்று மக்கள் திரள் பெருவெள்ளத்தால் திணறியது. பஞ்சைப் பராரிகளாக்கப்பட்ட கிராமப்புற விவசாயிகளும் உழைக்கும் மக்களும் தமது குடும்பத்தோடு திரண்டு, செங்கொடிகள் விண்ணில் உயர, பேருற்சாகத்துடன் அணிவகுத்து ஆர்ப்பரித்தனர். ""மன்னராட்சி முறை ஒழிக! அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்து! உழுபவனுக்கே நிலம் சொந்தம்!'' என்ற முழக்கங்கள் இமயமலையில் மோதி எங்கும் எதிரொலித்தன.

 

நேபாள மக்கள் யுத்தத்தின் பத்தாண்டு நிறைவையொட்டி, கம்யூனிசப் புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகள், மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிரான மாபெரும் மக்கள் பேரெழுச்சிக்குப் பிறகு, முதன்முதலாக நடத்திய அந்தப் பேரணி பொதுக் கூட்டத்தில் திரண்ட உழைக்கும் மக்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்திற்கும் மேல்! இப்பொதுக்கூட்டம் நடந்த டுண்டிகேல் சதுக்கத்திலிருந்து அரை கி.மீ தூரத்தில்தான் கொடுங்கோல் மன்னன் ஞானேந்திராவின் அரண்மனை. நெஞ்சிலே வெஞ்சினம் பொங்கத் திரண்டுள்ள இந்த மக்கள் வெள்ளம், சீறியெழுந்து அரண்மனையைத் தாக்கி அழித்து விடுமோ என்று பீதியில் நடுங்கியது, அதிகாரம் பறிக்கப்பட்ட ஞானேந்திரா கும்பல். என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தன, மன்னரால் உயிர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் கட்சிகள்.

 

""இந்த அரண்மனை நேபாள ஜனநாயகக் குடியரசின் தலைமைச் செயலகமாக மாறப் போகிறது. அதற்காகத்தான் இதை இன்னும் விட்டு வைத்திருக்கிறோம். அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்தி, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவுவதே எங்கள் லட்சியம். அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை தாமதப்படுத்த முயற்சிக்கும் கட்சிகளை நேபாள மக்கள் விரட்டியடிப்பார்கள். நேபாள மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்'' என்று இப்பொதுக் கூட்டத்தில் மாவோயிஸ்டு தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தார்கள்.

 

மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தில் எக்காலத்திலும் திரண்டிராத அளவுக்கு மாவோயிஸ்டுகளின் இப்பேரணி பொதுக்கூட்டத்தில் மக்கள் திரண்டு, மாவோயிஸ்டுகளின் நோக்கத்தை எதிரொலித்ததைக் கண்டு பீதியடைந்த தற்காலிக நாடாளுமன்றத்தின் கட்சிகள், மக்கள் சக்திக்கு அடிபணிந்து, விரைவில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்துவதாக அறிவித்தன. பயங்கரவாத பொய்க்குற்றம் சாட்டி மன்னராட்சி காலத்தில் சிறையிடப்பட்ட மாவோயிஸ்டு அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்துள்ளன. மாவோயிஸ்டுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த ஜூன் 16ஆம் நாளன்று இக்கட்சிகள் புதியதொரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளன.

 

இப்புதிய ஒப்பந்தப்படி, தற்போதைய தற்காலிக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய இடைக்கால அரசு நிறுவப்படும்; புதியதொரு இடைக்கால சட்டம் இயற்றப்படும்; அதனடிப்படையில் அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடத்தப்படும்; அச்சபை, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும்; அதைத் தொடர்ந்து நேபாள ஜனநாயகக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டு, புதிய அரசியலமைப்புச் சட்டப்படி பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் நிறுவப்படும். இதற்கான கால வரையறை தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, 31 பேர் கொண்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவையும் இருதரப்பும் நிறுவியுள்ளன. 8 அம்சங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் இரு தரப்புகளின் பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிட்டு வழிநடத்தவும் நீதிபதிகள், மனிதஉரிமை இயக்கத்தினர், முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட 5 பேர் அடங்கிய குழுவையும் நிறுவியுள்ளனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய இடைக்கால அரசும், இடைக்கால சட்டமும் உருவான பிறகு, தமது கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் அரசாங்கத்தைக் கலைப்பதாகவும், சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தலோ நிர்பந்தமோ இன்றி அரசியல் நிர்ண சபைக்கான தேர்தலை நடத்தவும் புதிய குடியரசை நிறுவவும் தாம் முழுமையாக அர்ப்பணிப்பதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.

 

மேலாதிக்கவாதிகள் முகத்தில் கரிபூசிய புதிய ஒப்பந்தம்

நேபாளத்தில் மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக கடந்த ஏப்ரல் இறுதியில் நடந்த மக்கள் பேரெழுச்சியின் பயனை அம்மக்கள் அனுபவிக்காமல் தடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் மும்முரமாக இருந்தன. அமெரிக்கா வெளிப்படையாகவே மன்னராட்சியை ஆதரித்து ஆயுத உதவிகளைச் செய்தது. மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்தது. மன்னராட்சியுடன் கூடிய நாடாளுமன்ற ஜனநாயகம் எனும் ""இரட்டைத் தூண்கள்'' கொள்கையுடன் இந்தியா மன்னராட்சியை முட்டுக் கொடுத்து ஆதரித்து நின்றது. உலகின் ஒரே இந்து நாட்டைக் காக்க வேண்டும் என்று இந்துவெறி பயங்கரவாத பரிவாரங்கள் மன்னராட்சியை ஆதரித்தன. அண்டை நாடான முதலாளித்துவ சீனா, மாவோயிஸ்டுகளைப் பயங்கரவாதக் கும்பலாகக் காட்டி மன்னராட்சியுடன் கூடிக் குலாவியது. மாவோயிஸ்டுகளின் பத்தாண்டு கால மக்கள் யுத்தமும், மக்களின் பேரெழுச்சியும், கடந்த ஜூன் 16ஆம் நாளன்று நேபாளத்தின் ஏழு கட்சி கூட்டணிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தமும் இந்தப் பிற்போக்குவாதிகள் அனைவரது முகத்திலும் கரியைப் பூசி, மாவோயிஸ்டுகளின் அரசியல் வலிமையை மீண்டும் உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.

 

இதுமட்டுமல்ல் கொடுங்கோலன் ஞானேந்திராவை எதிர்த்து நின்று முறியடிக்கும் வலிமையும் நேபாள நாடாளுமன்றக் கட்சிகளிடம் இல்லை. கடந்த ஆண்டின் இறுதியில் ஏழு கட்சிகள் கூட்டணி அமைத்து மன்னராட்சிக்கு எதிராகப் போராடிய போதிலும், அவர்களால் போராட்டத்தில் முன்னேற முடியவில்லை. கடந்த நவம்பர் மாதத்தில் மாவோயிஸ்டுகளுடன் இந்தக் கட்சிகள் உடன்படிக்கை செய்து கொண்ட பின்னரே, மன்னராட்சிக்கு எதிராகத் துணிவாகப் போராட முடிந்தது; மாவோயிஸ்டுகளுடன் இணைந்து மக்கள் பேரெழுச்சியில் மன்னனைத் தனிமைப்படுத்தி முடமாக்க முடிந்தது.

 

கடந்த ஏப்ரலில் நடந்த மக்கள் பேரெழுச்சியைத் தொடர்ந்து ஞானேந்திரா கும்பல் பின்வாங்கிக் கொண்டு, முடக்கப்பட்ட பழைய நாடாளுமன்றத்தை உயிர்பிப்பதாக அறிவித்தவுடன், அதை ஏற்குமாறு இந்தியா ஏழுகட்சி கூட்டணியை வற்புறுத்தியது. ஏழு கட்சி கூட்டணியினர் இதற்கு உடன்பட்டதும், அதையே இறுதித் தீர்வாக்கி மன்னராட்சிக்குக் கீழ்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிறுவுவதற்கு இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமர் கொய்ராலா ஒத்தூதினார். இத்தகைய சதிகள் சூழ்ச்சிகள் துரோகங்களை அம்பலப்படுத்தி, மாவோயிஸ்டுகள் இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி பேரணி பொதுக்கூட்டம் வாயிலாக எச்சரித்த பின்னர், இந்த ஏழு கட்சி கூட்டணியினர் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்த முன்வந்துள்ளனர். மாவோயிஸ்டுகள் தீர்மானகரமான அரசியல் சக்தியாக உயர்ந்துள்ளதையும், ""அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்து!'' என்ற மாவோயிஸ்டுகளின் முழக்கம், நேபாள மக்களின் முழக்கமாக மாறியுள்ளதையும் கண்டு பீதியடைந்துள்ள இந்திய மேலாதிக்கவாதிகள், இவற்றை வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் புதிய சூழ்ச்சிகளில் இறங்கியுள்ளனர். மாவோயிஸ்டுகளை "ஜனநாயக' நீரோட்டத்தில் சங்கமிக்கச் செய்து, பின்னர் அவர்களை வளைத்துப்போட்டு ஓரங்கட்டி முடக்கிவிடலாம் என்று ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய மேலாதிக்கவாதிகளும் தப்புக் கணக்கு போட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.

 

மாவோயிஸ்டுகளின் அரசியல் மேலாண்மை

என்னதான் சூழ்ச்சிகள் சதிகளில் இறங்கினாலும், மாவோயிஸ்டுகள் முன்வைத்துப் போராடிவரும் அரசியல் திட்டத்துக்கு மாற்றாக வேறு எந்த திட்டத்தையும் முன்வைக்க முடியாமல் ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய மேலாதிக்கவாதிகளும் நேபாள ஓட்டுக் கட்சிகளும் திணறுகின்றன. மாவோயிஸ்டுகள் முன்வைத்துள்ள அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், புதிய அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகக் குடியரசு முதலானவற்றுக்குக் குறைவான எந்தவொரு அரசியல் திட்டத்தையும் நேபாள மக்கள் ஏற்கத் தயாராகவும் இல்லை. அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தலை தாமதப்படுத்தி நீர்த்துப் போக வைக்கும் முயற்சிகள் அனைத்தும் அம்பலப்பட்டு பெருந்தோல்வியில் போய் முடிந்துள்ளன. மாவோயிஸ்டுகள் முன்வைத்துள்ள திட்டப்படியே இன்று நேபாளத்தின் அரசியல் செல்கிறது. இவையனைத்தும் மாவோயிஸ்டுகளின் புரட்சிகர அரசியல் தலைமையையும் வலிமையையும் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

 

நேபாளத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றங்களையும் புரட்சியின் நெளிவு சுழிவான போக்குகளையும் புரிந்து கொள்ள முடியாத சில திண்ணைப் பேச்சு புரட்சியாளர்கள், "மாவோயிஸ்டுகள் நாடாளுமன்றப் பாதைக்குப் போய் விட்டார்கள்; முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்; புரட்சிக்குத் துரோகமிழைத்து விட்டார்கள்; ஆயுதங்களைக் கையளித்துவிட்டுச் செம்படையைக் கலைக்கப் போகிறார்களாம்' என்றெல்லாம் வதந்திகளையும் ஊகங்களையும் கொண்ட கிசுகிசுக்களைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், நேபாளத்தில் நடந்து வரும் மாற்றங்களை பல்வேறு நாடுகளின் புரட்சிகர வரலாற்று அனுபவங்களிலிருந்து பார்க்கும் எவரும், மாவோயிஸ்டுகளின் அரசியல் முன்முயற்சியையும் பருண்மையான நிலைமைக்கேற்ற அவர்களின் வழிமுறைகளையும் புரிந்து கொள்ள முடியும்.

 

அரசியல் பலம்தான் ஆயுதபலத்தைத் தரும்! சீனப் புரட்சியின் படிப்பினை

இரண்டாம் உலகப் போரின் இறுதியில், சீனாவை ஆக்கிரமித்திருந்த ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் 1945இல் சரணடைந்து வெளியேறியபோது, ""இனி சீனாவை ஆள்வது யார்?'' என்ற மையமான கேள்வி எழுந்தது. செம்படையைக் கட்டியமைத்து விடுதலைப் பிரதேசங்களை நிறுவி மக்கள் பேராதரவுடன் புதிய ஜனநாயகப் புரட்சிப் போரில் முன்னேறிக் கொண்டிருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியா, அல்லது கோமிண்டாங் பிற்போக்காளர்களா என்பதே நாட்டின் மையமான கேள்வியாக இருந்தது. போரினால் பெரும் துயரங்களை அனுபவித்த மக்கள் சமாதானம், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமுதாய விடுதலைக்கான தமது விருப்பத்தை எதிரொலித்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி போர் நிறுத்தத்தை அறிவித்து, சமாதானம், ஜனநாயகம், நாட்டை மீண்டும் புனரமைப்பது என்ற கொள்கையுடன் தனது தேசியத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தைச் செயல்படுத்த நாட்டின்மீதும் மக்களின் மீதும் அக்கறை கொண்ட அனைவரையும் அறைகூவியழைத்துப் பிரச்சாரம் கிளர்ச்சிகளை மேற்கொண்டது. இச்சரியான திட்டத்தை ஆதரித்து நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் பெருகத் தொடங்கியதும், கோமிண்டாங் அரசு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து, அதன் தேசியத் திட்டத்தை ஏற்பதாக அறிவித்தது.

 

பேச்சு வார்த்தைகளின்போது, சமாதான ஒப்பந்தத்தை நேர்மையாகச் செயல்படுத்தவும், நாட்டைப் புனரமைக்க எல்லையற்ற அர்ப்பணிப்பை வழங்கவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வந்தது. கோமிண்டாங் அரசு நீக்கப்பட்டு, ஒரு ஜனநாயகக் கூட்டு அரசின் கீழ் கோமிண்டாங் படைகளையும் செம்படையையும் மறுஒழுங்கமைப்பு செய்யவும் முன்வந்தது. சமாதானம், ஜனநாயகம், சுதந்திரம், தேசிய ஜனநாயக சட்டப்பேரவை, நகல் அரசியல் சட்டம் ஆகியவற்றை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களில் கோமிண்டாங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் கையெழுத்திட்டன. 1946 ஜனவரி 10ஆம் நாளில் நிறைவேற்றப்பட்ட இந்த ஒப்பந்தம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் முன்முயற்சியையும் அரசியல் வலிமையையும் நிரூபித்துக் காட்டியது.

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் நேர்மையாகவும் முழுமையான அர்ப்பணிப்புடனும் நடந்து கொண்டதையும், செம்படை வீரர்கள் மராமத்துப் பணிகளிலும் விவசாய உற்பத்தியிலும் ஈடுபட்டதையும் உலகமே வியந்து பார்த்தது. ஐ.நா. மன்றத்தின் புனர்வாழ்வு நிர்வாகத்தின் மூலம் சீனாவுக்கு அனுப்பப்பட்ட டிராக்டர்களை இயக்கப் பயிற்சியளிக்கும் குழுவின் ஊழியராக வந்த வில்லியம் ஹிண்டன் என்ற அமெரிக்கர், கோமிண்டாங் அரசின் துரோகத்தையும் ஊழல் மோசடிகளையும் கண்டு வெறுப்புற்று, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்குள்ள ஹ_பெய் மாகாணத்துக்குச் சென்று பணியாற்றினார். எதையும் நடைமுறை கொண்டு உரசிப் பார்த்த அவர், கம்யூனிஸ்டுகளின் நேர்மையை உளமார வாழ்த்தினார்.

 

அதே நேரத்தில் கோமிண்டாங் பிற்போக்கு அரசோ ஒப்பந்தத்தைச் சீர்குலைப்பதிலும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரைத் தொடுப்பதிலும் இறங்கியது. அமெரிக்காவின் கைப்பாவையாகிவிட்ட கோமிண்டாங் பிற்போக்கு அரசின் அதிபர் சியாங்கை ஷேக், சதிகள் சூழ்ச்சிகள் துரோகங்களில் இறங்கி நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டுத் தனிமைப்பட்டுப் போனான். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சமாதானம், ஜனநாயகம், கூட்டு அரசாங்கத்திற்கான முயற்சிகளை அதன் பயம், பலவீனம், கையாலாகாத்தனத்தின் அறிகுறிகளாகக் கருதிக் கொண்டான். ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்துவிட்டு, அமெரிக்காவின் துணையுடன் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரைக் கட்டவிழ்த்து விட்டான். ஆனால், கோமிண்டாங் பிற்போக்கு ஆட்சியாளர்களின் எத்தணிப்புகள் பெருந்தோல்வியில் போய் முடிந்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக முன்பைவிட பெருமளவில் மக்கள் திரண்டார்கள். செம்படையில் சேர மேலும் பல்லாயிரக்கணக்கில் முன்வந்தனர். சிவப்பு விடுதலைப் பிரதேசங்கள் மேலும் விரிவடைந்தன. கோமிண்டாங் பிற்போக்கு பாசிசக் கும்பலுக்கு எதிராக, புரட்சிகர வர்க்கங்கள் ஜனநாயக சக்திகளுடன் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்து, உக்கிரமான உள்நாட்டுப் போரில் வென்று, சீன கம்யூனிஸ்ட் கட்சி சீன மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவியது.

 

சீன கம்யூனிஸ்ட் கட்சி வெறும் ஆயுத பலத்தை மட்டுமே நம்பியிருந்ததில்லை. அரசியல் முன்முயற்சியை என்றுமே கைவிட்டதுமில்லை. இத்தகைய அரசியல் முன்முயற்சியும் அரசியல் போராட்டங்களும் அரசியல் வலிமையும்தான் மக்களை எழுச்சி கொள்ளச் செய்து, அமைப்பு பலத்தையும் ஆயுத பலத்தையும் தரும் என்பதில் அது தெளிவாகவே இருந்தது. பல்வேறு வரலாற்றுக் கட்டங்களிலும் முன்முயற்சியோடு தனது புரட்சிகர அரசியலை முன்வைத்து, போராட்டங்களின் மூலம் மக்களை அரசியல்படுத்துவதில் அது முன்னணிப் படையாக விளங்கியதை சீனப் புரட்சியின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

 

நெளிவு சுழிவான பாதையும் போராட்ட முறையும்

இதை வெறும் வரலாற்று அனுபவமாகக் குறுக்கி சுருக்கிப் பார்க்கக் கூடாது. தற்காலிக புரட்சி அரசாங்கம் எனும் அமைப்பு முறையையும், மேலிருந்து செயலாற்றுவது என்ற போராட்ட முறையையும் பருண்மையான நிலைமைகளுக்கு ஏற்ப, தேவையான நிபந்தனைகளுடன் செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிய லெனினியம் போதிக்கிறது. அதாவது, புரட்சியின் வளர்ச்சிப் போக்கில் புதிய ஜனநாயகப் பொதுத் திட்டத்தைவிடக் குறைவானதொரு குறித்த திட்டத்தை (குணீழூஞிடிழூடிஞி கணூணிஞ்ணூச்ட்) நிறைவேற்றுவதற்காக, நிறுவப்படும் தற்காலிகமானதொரு அரசாங்கத்தில் பங்கேற்று, அதிலிருந்து செயல்படுவது போராடுவதன் மூலம் போர்த்தந்திர (மூலஉத்தி) வெற்றிக்கான தயாரிப்பில் ஈடுபடுவதாகும். கீழிருந்து மட்டும் போராடி, வெற்றியைச் சாதிக்க வேண்டும் என்று எண்ணுவது புரட்சியின் நெளிவுசுழிவுகளையும் திருப்பங்களையும் புரிந்து கொள்ளாமல், ஒரே நேர்கோட்டுப் பாதையில் முன்செல்ல முனையும் இயக்கமறுப்பில் கண்ணோட்டமாகும்.

 

மேலிருந்து செயல்புரியும் போராட்ட வடிவமும் தற்காலிக புரட்சி அரசாங்கம் எனும் அமைப்பு வடிவமும் ரஷ்ய புரட்சியின் 190506 காலகட்டத்திலும், சீனப் புரட்சியின் 192427 மற்றும் 194547 காலகட்டங்களிலும் கம்யூனிசப் புரட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இது எவ்வாறு சரியானது அவசியமானது என்பதை ""ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு போர்த்தந்திரங்கள்'' என்ற நூலில் லெனினும், ""கூட்டரசாங்கம் பற்றி'' என்ற நூலில் மாவோவும் விளக்கிப் பருண்மையாகச் செயல்படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையிலேதான் நேபாள மாவோயிசப் புரட்சியாளர்களும் தமது நாட்டுப் புதிய ஜனநாயகப் புரட்சியின் பருண்மையான நிலைமைக்கேற்ப, நிலப்பிரபுத்துவ மன்னராட்சியையும் அதன் கொலு பொம்மையான போலி ஜனநாயக நாடாளுமன்ற முறையையும் ஒழிப்பது; அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்துவது; ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் கொண்ட ஜனநாயகக் குடியரசை நிறுவுவது, புதிய அரசமைப்பின் கீழ் நாடாளுமன்றத்தில் பங்கேற்று மேலிருந்து செயல்படுவது, புதிய ஜனநாயகப் புரட்சியின் இறுதி வெற்றிக்கான தயாரிப்பிலும் போராட்டத்திலும் ஈடுபடுவது என்ற குறித்த திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

 

""நேபாள மக்களின் தற்போதைய அரசியல் புரட்சியில் எங்களது பங்கு மிகப் பெரியது; எங்களது அர்ப்பணிப்பு எல்லையற்றது. இதை நாட்டு மக்கள் நன்கறிவர். ஏழு கட்சி கூட்டணியின் தலைவர்கள் புதிய அரசியலைமைப்பை நிறுவுவதில் தவறினால், மக்கள் அவர்களது பலவீனங்களை மதிப்பிட்டு, அவர்களை உரிய இடத்தில் வைப்பார்கள். எங்களைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அவர்கள் முடிவெடுத்துச் செயல்பட்டால், உடன்பாடு முறிந்து, நிலைமைகள் பின்னர் தீராத சிக்கலுக்குள் சென்று விடும். அவர்கள் மட்டுமின்றி, நாடும் மக்களும் அதிலிருந்து மீள்வது கடினமாகிவிடும். அத்தகையதொரு நிலைமை ஏற்பட்டால், நாங்கள் முன் கை எடுத்து, மக்களுக்குத் தலைமை தாங்கி, மக்கள் தீர்ப்பைச் செயல்படுத்துவோம்!'' என்று தமது கட்சியின் நிலையைத் தெளிவாக்கியுள்ளார், மாவோயிஸ்டுகளின் பேச்சு வார்த்தைக் குழு தலைவரான தோழர் கிருஷ்ணபகதூர் மெஹரா.

 

மார்க்சிய லெனினிய போர்த்தந்திரங்களின் விதிகளையும் வழிகாட்டும் நெறிமுறைகளையும் பற்றிய தெளிவில்லாமல், பருண்மையான நிலைமைக்கேற்ப அரசியல் செயல்திட்டத்தை வகுத்துச் செயல்படுத்த முற்படாமல், வெறும் ஆயுத சாகசங்களைக் கண்டு பரவசமடையும் திண்ணைப் பேச்சு புரட்சியாளர்களால் நேபாள நிலைமைகளைப் புரிந்து கொள்ளவோ, அதிலிருந்து படிப்பனைகளைப் பெற்று இந்தியப் புரட்சியைச் சாதிக்கவோ ஒருக்காலும் முடியாது. இவர்கள் ஒருபுறமிருக்க, நாடாளுமன்ற செக்குமாட்டுப் பாதையில் செல்லும் போலி கம்யூனிசப் புரட்டல்வாதிகளும் இனவாத பித்தலாட்டக்காரர்களும் நேபாளப் புரட்சியின் புதிய நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல், ""ஆகா, மாவோயிஸ்டுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குத் திரும்பிவிட்டார்கள்!'' என்று குதியாட்டம் போடுகிறார்கள். மாவோயிஸ்டுகளின் பத்தாண்டு கால ஆயுதப் போராட்டம் சாதித்துள்ள சமூக விடுதலையைக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.

 

புரட்சியாளர்களைக் கொச்சைப்படுத்தும் வாலறுந்த நரிகள்!

மாவோயிஸ்டுகள் நாடாளுமன்றப் பாதைக்கு வந்துவிட்டதாகவும், அதேபாதையை இந்திய மாவோயிஸ்டுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் உபதேசிக்கிறார், வலது கம்யூனிஸ்டுக் கட்சி பொதுச் செயலாளரான பரதன். துப்பாக்கிக் குழாயிலிருந்து அதிகாரம் பிறக்கிறது என்ற மாவோவின் கூற்று பொய்த்துப் போய்விட்டது என்று மனநோயாளிபோல் அவர் உளறுகிறார். ""இந்திய கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இணைந்து செயல்படுவதிலும் தேர்தல்கள் மூலம் அதிகாரத்துக்கு வருவதிலும் நீண்ட அனுபவம் பெற்றுள்ளார்கள். நேபாள மாவோயிஸ்டுகள் எங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளவும் அமைதிவழிப் பாதையில் செல்லவும் விரும்புகிறார்கள்'' என்று புளுகுவதோடு, மாவோயிஸ்டுகளைக் கொச்சைப்படுத்துகிறார் சி.பி.எம். கட்சியின் தலைவர்களில் ஒருவரான எச்சூரி. இதோடு, மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கையளித்துவிட வேண்டும் என்றும் வழிகாட்டுகிறார்.

 

ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் ""இந்து'' நாளேட்டிற்கு அளித்த பேட்டியில், நேபாள மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித் தலைவரான தோழர் பிரசந்தா இவற்றுக்கெல்லாம் தெளிவாகவே பதிலளித்துள்ளார். ""நாங்கள் பல கட்சி ஜனநாயகம் பற்றிப் பேசுவது, குறிப்பான அரசியலமைப்புச் சட்டத்திற்குள்ளேதான். அதாவது, ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்குள்ளேதான். எனவேதான், ஆயுதப் போராட்டமும் தேவை; முடியாட்சிக்கு எதிராக பிற அரசியல் கட்சிகளுடன் செயலொற்றுமையும் தேவை. ஏகாதிபத்தியத்துக்கும் நிலப்பிரபுத்துவத்துக்கும் எதிரான சமூகப் பொருளாதார மாற்றத்துக்காகவே நாங்கள் போராடுகிறோம். அந்தப் போராட்டத்தின் பொருளில்தான் நாங்கள் பல கட்சி ஜனநாயகம் பற்றிப் பேசுகிறோம்'' என்று கூறுகிறார் தோழர் பிரசந்தா.

 

தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, இடைக்கால அரசை நிறுவுதல்; புதிய அரசியலமைப்புப் பேரவைக்கான தேர்தலை ஐ.நா. மன்றம் அல்லது அனைத்துலக அமைதிக் குழுவின் மேற்பார்வையில் நடத்துதல்; ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவுதல், அப்புதிய குடியரசின் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்றல் பற்றி அந்தப் பேட்டியில் விரிவாகவே விளக்கமளித்துள்ளார் தோழர் பிரசந்தா. ஆனால் போலி கம்யூனிஸ்டுகளோ, எத்தகைய அரசமைப்பின் கீழுள்ள பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதை மூடிமறைத்துவிட்டு, நேபாள மாவோயிஸ்டு புரட்சியாளர்களும் தங்களைப் போலவே போலி ஜனநாயக நாடாளுமன்ற செக்குமாட்டுப் பாதைக்குத் திரும்பி விட்டதாகக் காட்டி தமது அணிகளை ஏய்த்து வருகிறார்கள்.

 

இதேபோல, நேபாள மாவோயிஸ்டுகள் தமது செம்படையைக் கலைத்துவிட்டு, ஆயுதங்களைக் கையளித்துவிட்டு, அமைதி வழிக்குத் திரும்ப தீர்மானித்துள்ளார்கள் என்று இப்போலி கம்யூனிஸ்டுகள் இன்னுமொரு அண்டப் புளுகை அவிழ்த்து விடுகிறார்கள். ஆனால், தோழர் பிரசந்தா தனது பேட்டியில், ""எம்மிடம் ஒரு படை இருப்பதால் இன்னமும் எம்மைப் பற்றி சந்தேகப்படுகிறார்கள். புதிய அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்ட பிறகு, நாங்கள் ஆயுதங்களை கைவிடுவோமா என்று கேட்கிறார்கள். நாங்கள் எங்கள் படையைத் திருத்தியமைக்கத் தயாராக உள்ளோம். புதியதொரு நேபாளப் படையைக் கட்டியமைக்கவும் தயாராகவும் உள்ளோம்'' என்று நேபாள ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்ட பிறகு செம்படை எவ்வாறு மாற்றியமைக்கப்படும் என்பதைத் தெளிவாகவே விளக்குகிறார். அவர் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாகவோ, செம்படையைக் கலைத்து விடுவதாகவோ எங்குமே கூறவில்லை. ""இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ஆயுதங்களைக் கையளிப்பது பற்றிய பேச்சுக்கே இடமில்லை'' என்று கடந்த ஜூன் மாதத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போதுகூட மாவோயிஸ்டுகள் உறுதியாக அறிவித்துள்ளனர். இதனாலேயே தற்போதைய 8 அம்ச ஒப்பந்தத்திலும் ஆயுதங்களைக் கையளிப்பது பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. வாலறுந்த நரி மற்ற நரிகளைப் பார்த்து நீங்களும் வாலை அறுத்துக் கொண்டால் அழகாக இருக்கும் என்று கூறிய கதையாக, இப்போலி கம்யூனிசப் புளுகர்கள். நேபாள புரட்சியாளர்களும் தங்களைப் போல மாறிவிட்டதாக கயிறு திரிக்கிறார்கள்.

 

மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு அவர்களிடமுள்ள துப்பாக்கியால் கிடைப்பதைப் போலச் சித்தரிப்பது இப்போலி கம்யூனிஸ்டுகள் செய்யும் இன்னுமொரு அவதூறு. மாவோயிஸ்டுகளை வன்முறை நோக்கம் கொண்ட பயங்கரவாதக் கும்பலாகக் காட்டி, அந்தப் பாதை தோற்றுப் போனதால் அமைதி வழிக்குத் திரும்பிவிட்டதைப் போன்ற தோற்றத்தை இப்புரட்டல்வாதிகள் உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

 

ஆனால், மாவோயிஸ்டுகள் கடந்த பத்தாண்டு காலமாக வெறுமனே ஆயுதப் போராட்டம் மட்டும் நடத்திக் கொண்டிருக்கவில்லை. நிலச்சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கல்வி, மருத்துவ சுகாதாரம் முதலான பல்வேறு புரட்சிகர சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, நேபாளத்தின் மேற்கு மாவட்டப் பகுதியில் மக்களின் கூட்டு முயற்சியால் போக்குவரத்துக்கான நெடுஞ்சாலையையும் நிர்மாணித்துள்ளனர். போலி கம்யூனிஸ்டுகள் அறுபதாண்டு காலமாக நாடாளுமன்ற செக்குமாட்டுப் பாதையில் சாதிக்க முடியாத மாபெரும் சமூக விடுதலையை மாவோயிஸ்டுகளின் பத்தாண்டு கால ஆயுதப் போராட்டம் சாதித்துக் காட்டி, ஒடுக்கப்பட்ட மக்களை தலைநிமிரச் செய்துள்ளது. இப்போலி கம்யூனிஸ்டுகள் பெரிதும் அஞ்சுவது, மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட பாதையைக் கண்டல்ல. மாவோயிஸ்டுகளின் போராட்ட வெற்றியானது இப்புரட்டல்வாதிகளை மறுதலித்து, இந்திய உழைக்கும் மக்களை ஒரு மாபெரும் போராட்ட சக்தியாக மாற்றிவிடும் என்பதைக் கண்டே அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனாலேயே பொய்கள், அவதூறுகளை வாரியிறைத்து மாவோயிஸ்டுகளின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்து வருகிறார்கள்.

 

இனவாத கோயபல்சுகளின் வக்கிர வியாக்கியானம்

வாலறுந்த போலி கம்யூனிஸ்டு நரிகளைப் போலவே, இனவாத மணியரசன் கும்பலும் "பார்த்தீர்களா, எங்களைப் போலவே நேபாள மாவோயிஸ்டுகளும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டைக் கைவிட்டு விட்டார்கள்' என்று குதியாட்டம் போடுகிறது. ""மன்னராட்சி முறையை ஒழித்த பிறகு நிறுவப்படும் நேபாள ஜனநாயகக் குடியரசின் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாங்கள் பங்கேற்போம்'' என்று தமது கட்சியின் முடிவை நேபாள மாவோயிஸ்டு தலைவர் தோழர் பிரசந்தா விளக்குகிறார். உடனே மணியரசன் கும்பல் துள்ளிக் குதித்து, "பார்த்தீர்களா, பல கட்சி ஜனநாயகம் என்கிறார் பிரசந்தர் அப்படியானால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை கைவிட்டார்கள் என்று இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்' என்று புது விளக்கவுரை எழுதுகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிட்டு விட்டதாக "இந்து' நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் தோழர் பிரசந்தா எங்குமே குறிப்பிடவில்லை. அப்படிச் சொல்லாததற்கு, தானே வலிந்து இட்டுக்கட்டி புது வியாக்கியானம் தந்து அவதூறு செய்வதுதான் மணியரசன் கும்பலின் கோயபல்சு வழிமுறை.

 

ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு தன்மை கொண்ட புதிய நேபாள ஜனநாயக குடியரசு பற்றியும், அப்புதிய அரசமைப்பின் பல கட்சி நாடாளுமன்றத்தில் பங்கேற்பது பற்றியும் தோழர் பிரசந்தா விளக்குகிறார். ஆனால், மணியரசன் கும்பலுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தையும் இதர புரட்சிகர ஜனநாயக வர்க்கங்களையும் கொண்ட ஒரு ஐக்கிய முன்னணி என்று கூடத் தெரியவில்லை. சீனத்தில் ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகு, ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு புரட்சிகர வர்க்கங்களின் சர்வாதிகாரம்தான் நீடித்ததே தவிர, முதலாளித்துவ சர்வாதிகாரமல்ல. இப்புரட்சிகர வர்க்கங்களின் சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஓர் அங்கமாகவே நீடித்தது. அங்கு பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவிய போதிலும், அது முதலாளித்துவ வகைப்பட்ட நாடாளுமன்ற போலி ஜனநாயகமல்ல் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, அதற்கு முற்றிலும் எதிரான, சோசலிசத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட, பாட்டாளி வர்க்கத் தலைமையிலான மக்கள் ஜனநாயக சர்வாதிகார அரசுதான் அங்கு நிலவியது. இத்தகைய பாட்டாளி வர்க்கத் தலைமையிலான சீன மக்கள் ஜனநாயகக் குடியரசில், தேசிய மக்கள் பேரவை எனும் பல கட்சி நாடாளுமன்றத்தில் சீன தேசிய முதலாளித்துவ கட்சிகளும் பங்கேற்றன என்பது வரலாறு. இத்தகைய கண்ணோட்டத்தில்தான் தோழர் பிரசந்தா, ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு புரட்சிகர வர்க்கங்களின் புதிய நேபாள குடியரசின் நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றிக் குறிப்பிடுகிறார். மணியரசன் கும்பல் கருதுவது போல, அவர் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குறிப்பிடவில்லை; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிட்டு விட்டதாக அறிவிக்கவுமில்லை.

 

நேபாள கம்யூனிசப் புரட்சியாளர்கள், மணியரசன் கும்பலைப் பார்த்து, ""15 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி தொலைநோக்குப் பார்வையுடன் பாட்டாளி வர்க்க சர்வாதிகார கோட்பாட்டைக் கைவிட்டுள்ளீர்களே! நீங்கள்தான் எங்களுக்கு வழிகாட்டி!'' என்று கூறியதைப் போல கற்பனை செய்து கொண்டு, ""மெய் நடப்பில் ஆயுதப் புரட்சி நடத்திக் கொண்டிருக்கும் நேபாள மாவோவியக் கட்சி, பல கட்சி ஜனநாயகத்தை ஏற்பதாக முடிவு செய்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிட்டிருப்பது த.தே.பொ.க. 1990களில் எடுத்த நிலைப்பாடு எவ்வளவு சரியானது என்பதற்கு ஓர் உரைகல்லாகும்'' என்று மணியரசன் கும்பல் பிதற்றுகிறது. ""அன்றே நக்கீரன் சொன்னது!'', ""அன்றே ஜூ.வி. சொன்னது!'' என்றெல்லாம் முதலாளித்துவ கிசுகிசு பத்திரிகைகள் அற்பத்தனமாக பெருமைப்பட்டுக் கொண்டு சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதற்கும், மணியரசன் கும்பலின் பித்தலாட்ட சுயவிளம்பரத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

 

நேபாளப் புரட்சியையும் புரட்சியாளர்களையும் கொச்சைப்படுத்தும் இந்தக் கிணற்றுத் தவளைகளையும் வாலறுந்த நரிகளையும் ஏளனப் புன்னகையுடன் பார்க்கும் நேபாள மக்கள், புதிய வரலாற்றைப் படைக்க மாவோயிஸ்டுகளின் தலைமையில் அணிவகுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றியை நோக்கிய நேபாள மக்களின் புரட்சிப் போரை உற்சாகத்துடன் ஆதரித்து நம் நாட்டிலும் அத்தகையதொரு புரட்சியைச் சாதிக்கப் போராடுவதும், போலி கம்யூனிச பித்தலாட்டப் பேர்வழிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதும்தான், இமயத்தின் உச்சியில் செங்கொடி உயர்வதற்கு நாம் செலுத்தும் உண்மையான பங்களிப்பாக இருக்க முடியும்.

 

மு மனோகரன்