Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாரிசில் 04.05.2008 'ஜனநாயகத்தின்" பெயரில் தேர்ந்தெடுத்த சில சமூகவிரோதிகள் கூடினர். இந்த கூட்டத்துக்கான அழைப்பு முதல் அவர்கள் பேசிக்கொண்ட விடையங்கள், இந்த 'ஜனநாயகத்தை" தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. யாரெல்லாம் இலங்கை - இந்திய அரசை 'ஜனநாயகத்தின்" பெயரில் நக்குகின்றனரோ, யாரெல்லாம் 'ஜனநாயகத்தின்" பெயரில் ஏகாதிபத்தியத்துக்கு வாலை ஆட்டுகின்றனரோ, அவர்கள் தான் 'ஜனநாயகத்தின்" பெயரில் கூடினர். இப்படி அப்பட்டமாக இலங்கை - இந்திய கைக்கூலிகள் எல்லாம் ஒன்றாக கூடினர்.

 

இது முந்தைய புலியெதிர்ப்பு கூட்டத்திலும் இருந்து மாறுபட்டது. புலியெதிர்ப்பு பேசும், இலங்கை - இந்திய கைக்கூலிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு, இந்த 'ஜனநாயக" கூலிகள் கூட்டப்பட்டனர்.

 

இவர்கள் அங்கு கூடிய நோக்கம் மிகத் தெளிவானது. புலியை ஒழிப்பதாக கூறிக் கொண்டு, பேரினவாத அரசு தமிழ் மக்கள் மேல் நடத்தும் பாசிச வெறியாட்டத்தை 'ஜனநாயகமாக" காட்டுவது தான். இதை தாம் அம்பலப்படாது எப்படி நியாயப்படுத்துவது என்பதையே, இவர்கள் எல்லாம் கூடி ஆராய்ந்தார்கள். அதையே அவர்கள் தமது 'ஜனநாயகத்தின்' பெயரில் வெட்கமானமின்றி பறைசாற்றினர். இவர்களின் 'ஜனநாயகம்" இதைத் தாண்டி, மக்களுக்காக ஒப்புக்கு கூட ஒப்பாரி வைக்கவில்லை.

 

இந்த புலியெதிர்ப்பு 'ஜனநாயக" கைக்கூலிகளின் 'ஜனநாயக" கூத்துக்கு சிலரை ஏமாற்றி அழைத்தனர். தாம் யார்?, எந்த நோக்கத்துக்காக கூடுகின்றோம்? என்று தமது சொந்த கைக்கூலி அரசியல் வெளிப்படா வண்ணம், சிலரை அழைத்தனர். இப்படி இடம் வலம் தெரியாது அங்குமிங்கும் திரிகின்றவர்களையும், முகம் பார்த்து சிரிக்கின்ற அப்பாவிகளையும், புலியுடன் ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்தினால் முரண்பட்டவர்களையும், அரசியல் விலாங்குகளையும் ஏமாற்றி, தமது மக்கள் விரோத கூட்டத்துக்கு அழைத்தனர்.

 

சமூகத்தில் மாற்றுக் கருத்துள்ளவர்களை, மக்கள் அரசியலை வைக்கின்றவர்களை, இலங்கை இந்திய அரசை எதிர்க்கின்றவர்களை, மக்களை நேசிப்பவர்களை, இவர்கள் தமது புலியெதிர்ப்பு அரசு ஆதரவு 'ஜனநாயக" கைக்கூலி கூத்துக்கு அழைக்கவில்லை. இப்படி கூட்டத்தின் நோக்கம் தெளிவாகவே மக்கள் விரோத அடிவருடிகளால் கூட்டப்பட்டது.

 

இவர்கள் தமது இந்த 'ஜனநாயகத்தின்" பெயரில், எந்த வெளி ஆட்சேபனையுமின்றி மிகப் பொருத்தமாக கூறுவதைப் பாருங்கள். 'இரு தசாப்தங்களிற்கு பின் அரசியல்கட்சிகள் இணைந்து பிரான்சில் இவ்வாறான கருத்தரங்கை நிகழ்த்துவது வரலாற்று நிகழ்வு என்றும், இந்த நிலமை உருவாகுவதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்த தோழர்கள் நண்பர்கள் குறிப்பாக சமகாலத்தில் எம்மோடு அரசியல் இலக்கிய பணியாற்றி மறைந்த தோழர்கள் சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஜா பராமாஸ்ரர் போன்றோரை"க் குறிப்பிடுகின்றனர். புலம்பெயர் அரசியல் களத்தில் பச்சோந்திகள் கூடியிருக்க, 'சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஜா பராமாஸ்ரர்" போன்றோரை இலங்கை இந்திய அரசியல் ஏஜண்டுகளாக, இலங்கை-இந்திய கைக் கூலிகள் கூறுகின்றனர். இது எத்தரப்பாலும் மறுதலிக்கப்படவில்லை.

 

'சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஜா பராமாஸ்ரர்" அரசியலுக்கு உரிமை கோருபவர்கள் எல்லாம், சந்தர்ப்பவாத பச்சோந்திகள் என்பதையே, இந்நிகழ்வும் மறுபடியும் நிறுவுகின்றது.

 

இலங்கை - இந்திய கைக்கூலிகள் தமிழ் மக்களின் பெயரில் ஜனநாயகம், புலியெதிர்ப்பு என்று எத்தனை வித்தைகள் காட்டினாலும், இவர்களால் மக்களை ஏமாற்றாமல் ஒரு அடியைத்தன்னும் வைக்க முடியாது. இது இந்த சந்திப்புகளிலேயே தொடங்குகின்றது. தெரிவு செய்யப்பட்ட அழைப்பும், தெரிவின் எல்லையும், மக்களின் ஜனநாயகத்துக்கே விரோதமானது. 'சபாலிங்கம், உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராஜா, பராமாஸ்ரர்" நம்பிய, அவர்களின் 'ஜனநாயக" நடைமுறைக்கும் மாறானது. ஆனால் அவர்களின் பெயரிலும், இலங்கை-இந்திய புலியெதிர்ப்புக் கூலிக்கும்பல் நக்குகின்றது.

 

இதன் பின்னணியில் இருந்த பலர் தேர்ந்த சமூக விரோதிகள். முன்னாள் புலியல்லாத இயக்கத்தைச் சேர்ந்த கொலைகாரகள். அதை இன்றும் ஆதரித்து நின்றவர்கள். இன்றும் அதை செய்பவர்களை ஆதரிப்பவர்கள். இன்றும் அன்றைய-இன்றைய கொலைகார இயக்கத்தை ஆதரிப்பவர்கள், தமது கடந்த கால கொலைக்காக மனம் வருந்தாத வக்கிரமான உணர்வு கொண்டவர்கள், அதை அரசியல் ரீதியாக சரியென்று கருதி இன்று அதை அரசியல் ரீதியாக ஆதரிப்பவர்கள். இப்படி மொத்தத்தில் அந்த இயக்கங்களின் மக்கள் விரோத அரசியலை ஆதாரிக்கின்ற சமூக விரோதிகள்.

 

இவர்களின் அரசியல் என்பது, இலங்கை - இந்திய அரசின் ஊடாக நக்கிபிழைப்பது தான். மக்களை புலிகளிடமிருந்து மீட்பதற்கான பாதை, இது மட்டும் தான் என்கின்றனர். தம்மைப் போல், மக்களும் இலங்கை - இந்திய அரசின் கூலிக் கும்பலாக மாற வேண்டும் என்கின்றனர். இவர்கள் கோரும் வக்கிரமான புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" இதுதான். இதைத் தாண்டி எதுவுமல்ல.

 

பி.இரயாகரன்
10.05.2008