புலித்தேசியமோ தனது சொந்த புதைகுழியை தானே வெட்டிவைத்துக் கொண்டு, தானே வலிந்து தேர்ந்தெடுத்த ஒரு பாதையில் மடிகின்றது. இந்த புலியை உறிஞ்சிக் கொண்டு வாழ்ந்த பிழைப்புவாத உண்ணிக் கூட்டமோ, புலி பிணமாக முன்னமே மெதுவாக களன்று தப்பித்தோடுகின்றது. மறுபக்கத்திலோ புதியரக உண்ணிகள், பழைய உண்ணிகள் விட்டுச்செல்லும் வெற்றிடத்தில் மொய்க்கத் தொடங்கியுள்ளது.

 

இந்த புதியரக உண்ணிகள் யார்? இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதை நாம் தெரிந்து கொள்ள முன்னம், புலிகளோ எப்படிப்பட்ட ஒரு அமைப்பாக இழிந்து கிடந்து என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

தமிழ் தேசம், தமிழ் தேசியம் என்று பேசிய புலிகள், புலித் தேசியத்தையே தமிழ் தேசியமாக காட்டியது. அது தனிமனிதனை முதன்மைப்படுத்தி, தேசியத்தையே குழுவாதமாகியது. இதன் மூலம் மொத்த தமிழ்மக்களின் தேசியத்தை முழுமையாக நிராகரித்தது. மாறாக புலித்தேசியத்தை தேசியமாக காட்டியது. இந்த புலித் தேசியத்தின் பெயரில், போராட்டம் தியாகம் என்பன கட்டமைக்கப்பட்டது. சுயசிந்தனையும், மனித அறிவும் மழுங்கடிக்கப்பட்ட புலித் தேசியத்தில், இளைஞர் இளைஞிகள் புலித்தேசியத்துக்காக பலியிடப்பட்டனர்.

இருந்த போதும், இதனால் புலிகள் தம்மைத் தாம் நியாயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தமிழ் தேசியத்துக்கும், புலித் தேசியத்துக்கும் இடையிலான இடைவெளியையும் பிளவையும் மூடிமறைக்க, தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறையையே அவர்கள் தேர்ந்தெடுத்தனர். அது புலிப் பாசிசமாக, மாபியாத்தனமாக வளர்ச்சியுற்றது.

இப்படித் புலித்தேசியம் வீங்கி வெம்பியதுடன், தானாக புளுத்துப் போகின்றது. இந்த புலித்தேசியத்தில் நேர்மை, அறிவு, உண்மை, தியாகம், மனித நேயம், மனிதப் பண்பு, அறிவு ஒழுக்கம் என்று எதையும், யாரும் காண முடியாது. மாறாக பொய்மையும் புரட்டும், கொடுமையும் கொடூரமும், துரோகமும் காட்டிக்கொடுப்பும், மனித விரோதமும் பண்பற்ற நடத்தைகளும், அறிவு இழந்த ஒழுக்கமும் காட்டுமிராண்டித் தனமும், பிற்போக்கான அடிமைத்தனம் கொண்ட பழமைவாதமுமே, புலித்தேசியத்தின் விழுமியமாகியது.

இதற்கு ஏற்ற பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் தானாக வந்து வலிந்து ஓட்டிக்கொண்டு, தமிழ் இனத்தின் இரத்தத்தையே உறிஞ்சி வாழத் தொடங்கியது. தமிழினமோ மொத்தத்தில் அழிந்து கொண்டிருந்தது. அது தனது சமூக விழுமியங்களை எல்லாம் இழந்து, பட்டுப்போனது.

பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் மூலம் தனது சொந்தப் பிழைப்பை நடத்தவே, தனக்கு ஏற்ப புலி அரசியலை குதர்க்கமாக நியாயப்படுத்தியது. சிங்களப் பேரினவாதத்தின் இராணுவத்தை கொல்லும் எண்ணிக்கைக்கு ஏற்ப, புலி அரசியலை அவர்கள் விளங்கி விளக்கினர். கொன்ற இராணுவத்தின் எண்ணிக்கை புலித்தேசியமாக, அதை குளிர்மைப்படுத்தி கொழுவேற்றியபடி தம் பங்குக்கு குழிபறித்தனர்.

இப்படி வட்டிக்கு பணம் கொடுப்பவன், புலிப் பணத்தைக் கொண்டு தனது பணச் சுற்றை (றோல்) செய்பவன், வர்த்தகர்கள், அதிகாரத்துக்கு ஆசைப்பட்டவர்கள், அடக்கியாள விரும்பியவர்கள், புகழுக்கு ஆசைப்பட்டவர்கள், சட்டவிரோத தொழில் செய்தவர்கள், உழைத்து வாழ விரும்பாதவர்கள், புலிக்கு பணம் கொடுத்தவர்கள், பணம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்று ஒரு கூட்டம், புலியை வாழ வைத்து தானும் வாழ்ந்தது. இதற்கான தகுதி என்பது புலிக்கு பணத்தை வாரிவழங்கியே, அந்த இடத்தைப் பெறுகின்றனர். இப்படி பணத்தைக் கொடுத்து வாழும் சமூகத் தகுதி தான், புலியின் அரசியல் அறமாக இருந்தது. இதுவே தமிழ் தேசியமாகிப் போனது. யாரெல்லாம் பணத்தைக் கொடுக்க முடியுமோ, அவர்கள் புலியின் முக்கிய பிரமுகரானார்கள்.

யுத்த முனையில் போராடுகின்ற புலிக்கு வெளியில், புலியை அலங்கரித்து ஆதரித்து நின்ற கூட்டம் இது தான். இது தான் புலியின் கால்களாகி, கைகளாகி, புலியின் ஆண்மையையே செயலிழக்கப் பண்ணியது.

புலிகள் தான் எல்லாம் என்ற நிலையில், எல்லா சமூக விரோதிகளும் புலிக்குள் இருந்தபடி பிழைத்துக்கொள்ளத் தொடங்கினர். இந்த சமூக விரோதிகள், தம்மை கொழுக்கவைத்துக் கொண்டனர். புலியின் பெயரில் நடந்த தியாகத்தை, தனக்கு அமைவாக பயன்படுத்திக்கொண்டு அது தானாக வாழத் தொடங்கியது.

இப்படி வாழ்ந்த கும்பல் தான் இன்று புலியில் இருந்து கழரத் தொடங்குகின்றது. புலிகளின் அழிவுக்குரிய இன்றைய காலகட்டத்தில், இந்த சமூகவிரோதக் கும்பல் புலியை அம்போ என்று, கையை விடுகின்றது.

இலங்கை முதல் புலம்பெயர் நாடுகள் வரை, புலிகளுக்கு எதிரான கடுமையான ஒடுக்குமுறை கையாளப்படுகின்றது. ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிழைப்புவாத சந்தர்ப்பவாத கூட்டம், உண்ணி கழருவது போல் கழன்று வருகின்றது. பலர் புலியின் பின் திடீரென்று காணாமல் போகின்றனர். பலர் புலிக்கு எதிராக வேஷம் போட்டுக் கொண்டு, திடீரென்று தூற்றுகின்றனர்.

இப்படி ஒருபுறம் நடக்க, புதிய உண்ணிக் கூட்டம் ஒன்று திடீரென்று பினாமிகளாக வலம் வரத் தொடங்குகின்றது. முன்பு எந்த வாய்ப்பும் கிடைக்காத அறிவுசார் பிழைப்புவாதிகள் தான் இவர்கள். முன்பு பொருள் சார் சமூக விரோதிகளால் புறந்தள்ளப்பட்ட அரசியல் பேசும் புலுடாவாதிகள், இன்று புலிக்கு அரசியல் சாயமடிக்கின்றனர்.

இவர்கள் யார்? முன்னாள் மாற்று இயக்கங்களில் அரசியல் பேசியவர்கள். பெருமளவுக்கு புளட்டில் அரசியல் பேசியவர்கள். அன்று கொலைகார புளட்டுக்கு அரசியல் பேசியது போல, இன்று புலிக்காக அரசியல் பேசுகின்றனர். பொருள் சார்ந்த உண்ணிகள் களறுகின்ற வெற்றிடத்தில், இந்த உண்ணிகள் ஓட்டிக்கொள்கின்றது.

கொலைகார கும்பலுக்கு அன்று அரசியல் சாயமடித்து நியாயப்படுத்திய கும்பல்கள், அவர்களின் அழிவில் அரசியல் வாழ்விழந்தவர்கள். மக்கள், மக்கள் விடுதலை என கூறிக் கொணடவர்கள், மக்களுக்காக என்றும் போராடியது கிடையாது.

மக்களுக்காக என்றும் மக்கள் அரசியலை முன்வைத்தது கிடையாது. மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடியது கிடையாது. அதிகாரத்தில் உள்ளவர்களுடன் ஓட்டிக்கொண்டு, அதற்கு அரசியல் சாயமடிக்கின்றனர். இதையே அவர்கள் மக்கள் அரசியல் என்று, அரசியல் பேச முனைகின்றனர். பச்சைப் பாசிசத்தையே, மக்கள் விடுதலை எனக் காட்டத் தலைகீழாக முனைகின்றனர். இதே கதைதான், இலங்கை இந்திய அரசின் பின்னுள்ள கும்பலுக்கு ஜனநாயக முகமூடி போட்டு அழகு பார்க்கின்றனர்.

ஆனால் புலிகளில் இவர்கள் பேசும் சாய அரசியலுக்கு இடமில்லை. புலிகளின் நடத்தையால் சாயம் வெளுத்துப் போகின்றது.

புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் அண்மையில் கூறியது போல், 'தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக எமது மாணவர்கள் அறிவியல்துறையில் வளர வேண்டும்" என்பதற்கு, அமைவாக, இங்கு மக்கள் அரசியலுக்கு இடமில்லை. மக்கள் எல்லாம் தலைவரின் இந்த வரட்டு சிந்தனையைப் பெற்றால், தமிழ் மண்ணே பிணக்காடாகிப் போகும்.

இப்படி இருக்க பிண உண்ணிகள், புலிப் பாசித்தை உச்சிமுகர்ந்து தனக்கு ஏற்ப வாரியிழுக்கின்றது. தாம் உண்ணும் பிணத்தை, உயிருள்ளதாக காட்ட முனைகின்றது. கூலிக்கு மாரடிக்கும் இந்த அரசியல் ஒப்பாரி மூலம், பிணத்தைக் கட்டி வைத்துக்கொண்டு அழுகின்றது. அதுவும் தனித்து நின்று, தனது சொந்த வெறுமையில் அழுகின்றது. இப்படியும் புலித்தேசியம், அரசியல் விபச்சாரிகளால் விபச்சாரம் செய்யப்படுகின்றது.

பி.இரயாகரன்
09.05.2008