9_2006.jpg

ஏகாதிபத்தியத்தை வீழ்த்த பாட்டாளி வர்க்க சோசலிசமே ஒரே தீர்வு என்ற சிந்தனைக்கு மக்கள் சென்றுவிடக்கூடாது என்று தடுப்பதற்காகவும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைச் சீர்குலைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள கைக்கூலி அமைப்புதான் உலக சமூக மன்றம் (ஙிகுஊ). ஃபோர்டு பவுண்டேசன், ராக்பெல்லர் புவுண்டேசன் போன்ற ஏகாதிபத்திய முதலாளிகள்,

 பன்னாட்டு நிறுவனங்கள், ஐரோப்பிய அரசுகள் ஆகியன அளிக்கும் எச்சில் காசில் வயிறு வளர்க்கும் தன்னார்வக் குழுக்களின் தலைமைப் பீடம்தான் உ.ச.ம. இதன் தமிழகக் கிளையான தமிழ்நாடு சமூக மன்றத்தின் 3வது மாநில மாநாடு கடந்த ஆகஸ்ட் 12,13 தேதிகளில் மதுரை லேடி டோக் கல்லூரியில் நடந்தது.


""இன்னொரு உலகம் சாத்தியமே!'' என்ற முழக்கத்துடன் இந்த மாநாட்டை நடத்த, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களைவிட சி.பி.எம். கட்சியின் மக்கள்திரள் அமைப்புகள்தாம் அதிக முயற்சியும் அக்கறையும் காட்டின. இந்த அமைப்புகளின் அரங்குகளில்தான் கலந்தாலோசனைக் கூட்டங்களும் ஏற்பாடுகளும் நடந்தன.

 

இந்த மாநாட்டையும் அதன் கைக்கூலித்தனத்தையும், சி.பி.எம். கட்சியின் பித்தலாட்டத்தையும் அம்பலப்படுத்தி, மதுரை மாவட்ட ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகள் முழக்க சுவரொட்டிகள், கேலிச் சித்திர சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்ததோடு, உலக சமூக மன்றத்தை அம்பலப்படுத்தி துண்டறிக்கை வெளியிட்டு அவற்றை மாநாட்டிலும் விநியோகித்தன. இதைக் கண்டு பீதியடைந்த "சிவப்பு செக்யுரிட்டி'களான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலா, சி.பி.எம். செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் ஆகியோர் பிரசுரம் விநியோகிக்க கூடாது என்று அருள் வந்து இறங்கியவர்கள் போல ஆவேசமாக சாமியாடினர். அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துவிட்டு மாநாட்டிலும், சுற்றியுள்ள கடைவீதி குடியிருப்புகளிலும் தோழர்கள் பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்தனர்.

 

இம்மாநாட்டுக்கு கூட்டம் திரட்டுவதற்காக மதுரை உசிலம்பட்டி வட்டாரங்களிலுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் லாரிகளில் ஏற்றி வரப்பட்டனர். தன்னார்வக் குழுக்களின் நிறுவனர்களோ, ""ஸ்கார்பியோ'' ஏசி காரில் டாம்பீகமாக வந்திறங்கினர். மான்சாண்டோவின் பி.டி. கத்திரியின் பயங்கரத்தைப் பற்றி விளக்கிய நம்மாழ்வாரின் உரையையோ, கோக்பெப்சியை விரட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றி விளக்கிய வெள்ளையனின் உரையையோ கேட்டவர்களைவிட, சுயஉதவிக் குழுக்களின் கோல்டு கவரிங், முகப்பூச்சு கிரீம், புடவைக் கடைகளில்தான் கூட்டம் அதிகமாக இருந்தது.

 

மாநாடு நடந்த விதமே அதன் யோக்கியதையைக் காட்டிவிட்ட நிலையில், ஏகாதிபத்திய கைக்கூலிகளின் உலக சமூக மன்றத்தையும் அதனுடன் கூட்டணி கட்டிக் கொண்டுள்ள சி.பி.எம். கட்சியையும் அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் நடத்திய இப்பிரச்சாரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளிடமும் புரட்சியை நேசிக்கும் மக்களிடமும் விழிப்புணர்வையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

பு.ஜ. செய்தியாளர்கள், மதுரை.