9_2006.jpg

கரூர் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களை மலத்தில் மொய்க்கும் ஈக்களைப் போல் கந்துவட்டிக் கொள்ளைக் கும்பல் மொய்த்து உறிஞ்சும் கொடுமை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏறக்குறைய எல்லாத் துப்புரவு தொழிலாளர்களுமே இந்தக் கும்பலிடம் சிக்கியுள்ளனர். அத்தகைய கும்பல்களில் ஒன்றுதான் கரூர்

 கோட்டையண்ணன் தோப்பைச் சேர்ந்த கோவிந்தம்மாள் முனியப்பன் கும்பலாகும். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இந்தக் கும்பல் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் முறைகளே கொடூரமானது. சம்பளவங்கி பாஸ் புத்தகங்களைப் பிடுங்கித் தன்வசம் வைத்துக் கொள்வதோடு, வெற்றுப் பாண்டுகளில் மிரட்டிக் கையொப்பம் வாங்கிக் கொண்டுதான் துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தாராளமாகக் கடன் கொடுக்கிறது.

 

சம்பள நாளன்று வங்கி வாசலிலேயே காத்திருந்து பிட்பாக்கெட் திருடனைப் போல மொத்தச் சம்பளத் தொகையையும் இந்தக் கும்பல் அபகரித்துச் சென்று விடும். கந்துவட்டி முனியப்பன் வந்தால்தான் துப்புரவு தொழிலாளர்கள் சம்பளமே வங்கியிலிருந்து பெறமுடியும். ஏனென்றால்; ஏற்கெனவே வங்கி பாஸ் புத்தகத்தை அந்த கந்துவட்டிக் கும்பல் தன்வசம் வைத்துள்ளது. மாதம் முழுக்க பீ, மூத்திரங்களில் குளித்து நனைந்து நகரத்தைச் சுத்தப்படுத்தும் துப்புரவுத் தொழிலாளர்கள், அற்பமான சம்பளத் தொகையைக் கூடத் தானும் தனது குடும்பத்தாரும் அனுபவிக்க முடியாத அவலத்தை என்னவென்று சொல்வது?

 

கிருஷ்ணம்மாள் என்ற துப்புரவுத் தொழிலாளி ஆறு வருடங்களுக்கு முன்பு ரூ. 10,000 கடனாகப் பெற்றதற்கு அவரிடமிருந்து இதுவரை ரூ. 86,000ஐ வட்டியாக மட்டுமே அபரித்துச் சென்றுள்ளது முனியப்பன் கும்பல். பல துப்புரவுத் தொழிலாளர்களின் ஓய்வூதியத்தையும் விட்டு வைப்பதில்லை இந்தக் கும்பல். கந்துவட்டி கொடுக்கச் சற்று காலதாமதமோ கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ ஏற்கெனவே கையெழுத்து வாங்கி வைத்துள்ள வெற்றுப் பாண்டுகளில் தன் விருப்பப்படி தொகையை எழுதி, அதைக் கூலிக்கு மாரடிக்கும் சில வக்கீல்களை வைத்துப் பொய் வழக்குப் போட்டு, அதில் தனக்குச் சாதகமான தீர்ப்பையும் பெற்றுச் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களையே விஞ்சும் விதத்தில் கொள்ளையடிக்கின்றனர். இதனால் பல குடும்பங்கள் தற்கொலை முயற்சிக்குத் தள்ளப்பட்டும், வாழ வழியிழந்தும் நடுத்தெருவில் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

 

மேலும் முனியப்பன் கும்பல் கீழ்த்தரமான காட்டுமிராண்டி கும்பல் என்பதற்கு, தன்னிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கிய கன்னியம்மாளின் தலைமுடியை இழுத்து, அவர் கட்டியிருந்த சேலை முழுவதையும் உருவிப் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியிருப்பதே சான்ற கூறப்போதுமானது.

 

இவ்வாறு ஒருபுறம் கந்துவட்டிக்காரர்களின் கொடுமைகளை அனுபவிக்கும் அதேவேளையில், மறுபுறம் துப்புரவு பணியாளர்களை மிரட்டி வேலை வாங்கும் மேஸ்திரிகளின் கொடுமையும் தொடர்கிறது. பணி நேரம் முடிந்தும் விடுவிக்காமல் தொடர்ந்து கூடுதல் நேரமாக வேலை வாங்கிச் சுரண்டுவதும், மறுத்தால் வேலையே இல்லாமல் செய்து விடுவதாக மிரட்டுவதும், எஸ்.ஆர். பதிவேட்டில் பதிவு செய்யமாட்டேன் என்று பயமுறுத்துவதும் தினசரிக் கொடுமையாக நடந்து வருகிறது.

 

இத்தகைய கொடுமைகளையெல்லாம் தெரிந்திருந்தும் மௌனம் சாதித்து வருகின்றன இங்குள்ள ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள். இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும்விதமாக பு.மா.இ.மு. அமைப்பினர் நகரம் முழுக்க சுவரொட்டி ஒட்டி, போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தங்களுக்கு ஏற்பட்டு வரும் கொடுமைகளுக்கு யாரேனும் குரல் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கித் தவித்த துப்புரவுத் தொழிலாளர் மத்தியில் இச்சுவரொட்டி பிரச்சாரம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

 

பு.ஜ. செய்தியாளர், கரூர்.