9_2006.jpg

ஏழை நாடுகளின் விவசாயத்திலும், தொழில்துறையிலும் தனியார்மயம் தாராளமயத்தை எவ்விதத் தடையுமின்றி, இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்காக உலக வர்த்தகக் கழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. ""தோஹா வளர்ச்சித் திட்டம்'' என்று அழைக்கப்படும் இப்பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டும் பொருட்டு கடந்த ஜூலை மாதம்

 சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவா நகரில் உலக வர்த்தகக் கழகத்தின் கூட்டம் நடைபெற்றது. 149 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு இருக்கும் உலக வர்த்தகக் கழகம், ஜெனீவா நகரில் நடத்திய இந்தக் கூட்டத்திற்கு, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய ஏகாதிபத்திய / பணக்கார நாடுகளும்; ஏழை நாடுகளுள் இந்தியாவும், பிரேசிலும் மட்டுமே கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தன.

 

உலக வர்த்தகக் கழகத்தின் ஜெனீவா கூட்டத்தில் ""தோஹா வளர்ச்சித் திட்டம்'' குறித்து ஒரு முடிவு எட்டப்பட்டால், அந்த முடிவை உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பிற ஏழை நாடுகளின் மீது திணித்து விடுவது; அதற்கு "ஏழை நாடுகளின் பிரதிநிதி'களாகக் கலந்து கொண்ட இந்தியாவும், பிரேசிலும் பொறுப்பேற்றுக் கொள்வது என்பது இந்தக் கூட்டத்தின் இன்னொரு நோக்கம். எனினும், ஜெனீவா கூட்டம், உலக வர்த்தகக் கழகத்தின் எதிர்பார்ப்புக்கு மாறாக, எவ்விதமான முடிவுக்கும் வர முடியாமல் தோல்வியில் முடிந்து போனது.

 

இத்தோல்விக்கு அமெரிக்காதான் காரணம் என இந்தியா குற்றஞ் சுமத்தியுள்ளது. ""தனது நாட்டு விவசாயத்திற்கு வழங்கும் மானியத்தை குறைத்துக் கொள்ள மறுக்கும் அமெரிக்கா, இந்தியா போன்ற ஏழை நாடுகளின் விவசாயத்தையும், தொழில் துறையையும் அமெரிக்காவின் விருப்பத்துக்கு ஏற்பத் தாராளமயமாக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால்'', இந்தியாவின் வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத், இக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில், இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக மாற்றிவிட்ட மன்மோகன் சிங் அரசு, உலக வர்த்தகக் கழகக் கூட்டத்தில் அமெரிக்காவை எதிர்த்து வெளிநடப்பு செய்திருப்பதை நாமெல்லாம் கையைக் கிள்ளிப் பார்த்துவிட்டுத் தான் நம்ப வேண்டியிருக்கும்.

 

இது மட்டுமின்றி, ""நமது நாட்டு விவசாயிகளின் வாழ்க்கையோடு அமெரிக்கா விளையாடுவதை அனுமதிக்க முடியாது'' என பேட்டியும் கொடுத்திருக்கிறார், கமல்நாத். மகாராட்டிர மாநில பருத்தி விவசாயிகள் கொத்துகொத்தாகத் தற்கொலை செய்து கொண்டதை வேடிக்கைப் பார்த்தவர் பிரதமர் மன்மோகன் சிங். அவரின் சக அமைச்சர் ஒருவரின் வாயில் இருந்து வந்துவிழுந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, பத்திரிகையாளர்களுக்கு மாரடைப்பு வராதது, அவர்கள் செய்த அதிருஷ்டம்தான்!

 

****

 

ஜெனீவா பேச்சு வார்த்தையின் தோல்விக்கு, விவசாயத்தில் தாராளமயத்தைப் புகுத்துவதில் அமெரிக்காவுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையேயுள்ள இழுபறி மட்டும் காரணம் இல்லை. தமது நாடுகளின் விவசாயத் துறையில் தாராளமயத்தைப் புகுத்துவதில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இடையேயும் பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக, மானியக் குறைப்பு, விவசாயப் பொருள் ஏற்றுமதி, மரபீணி மாற்றம் செய்யப்பட்ட விவசாய விளைபொருட்களின் மீது ஐரோப்பா விதித்துள்ள தடை ஆகிய விவகாரங்களில் ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவுக்குச் சில சலுகைகளை வழங்கியிருந்தால், ஜெனீவா பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்திருக்கும்; ஆகையால், கமல்நாத்தின் வெளிநடப்பை அளவுக்கு மீறி ஊதிப் பெருக்கக் கூடாது என வர்த்தகத் துறையின் முன்னாள் செயலாளர் எஸ்.பி. சுக்லா அம்பலப்படுத்தி இருக்கிறார். ஆனால், மன்மோகன் சிங் அரசோ, ஜெனீவா பேச்சுவார்த்தை தோல்வியை, ""அமெரிக்கா எது சொன்னாலும் தலையாட்டும் மந்தையல்ல இந்தியா'' எனக் காட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறது.

 

உலக வர்த்தகக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை நாடுகள் தங்கள் நாட்டின் விவசாயத்திற்கு ஓர் ஆண்டிற்குக் கொடுக்கும் மொத்த மானியம் 16,65,200 கோடி ரூபாய்தான். ஆனால், அமெரிக்காவோ, 2005ஆம் ஆண்டில் மட்டும் தனது நாட்டு விவசாயத்திற்குக் கொடுத்துள்ள மானியம் ஏறத்தாழ 88,000 கோடி ரூபாய். இதில் கடுகளவுகூடக் குறைக்க மறுத்துவரும் அமெரிக்கா, ஜெனீவா பேச்சு வார்த்தையின் பொழுது, தனது விவசாய மானியத்தை ஒரு இலட்சத்து மூவாயிரத்து ஐநூறு கோடி ரூபாயாக உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறது.


ஐரோப்பிய யூனியன், விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்காகக் கொடுத்து வரும் மானியத்தை 2013ஆம் ஆண்டோடு நிறுத்திவிடப் போவதாக அறிவித்திருக்கிறது. அந்த ஏற்றுமதி மானியத்தை தற்பொழுதே நிறுத்தி விட்டால்கூட, ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஆண்டொன்றுக்கு வழங்கும் விவசாய மானியம் ஏறத்தாழ மூன்று இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விடும்.

 

ஒரு ஜப்பான் விவசாயி ஆண்டொன்றுக்குச் சராசரியாகப் பெறும் மானியம் 15.18 இலட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. ஆனால், கோடி கணக்கில் விவசாயிகள் வாழும் இந்தியாவிலோ, 2006ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ள உர மானியம் வெறும் 985 கோடி ரூபாய்தான். இது, 2005ஆம் ஆண்டு மானியத்தை ஒப்பிடும் பொழுது 32 கோடி ரூபாய் குறைவு. உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து 40 இலட்சம் டன் கோதுமை குறைவா கக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 

தாராளமயத்தை ஆதரிக்கும் பொருளாதார நிபுணர்கள் கூட, அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் வழங்கப்படும் விவசாய மானியத்தில், 60,000 கோடி ரூபாயை உடனடியாக நிறுத்திவிடலாம் என ஆலோசனை கூறுகிறார்கள். இந்த ஆலோனையை அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ஏற்று நடைமுறைப்படுத்தினால், ஏழை நாட்டு விவசாயிகளின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் வந்துவிடுமா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

 

""ஏகாதிபத்திய நாடுகள், விவசாய மானியத்தில் 36 சதவீதத்தை வெட்டினால், அதன் மூலம், அந்நாடுகளுக்கு 24,750 கோடி ரூபாய் அதிக வருமானம் கிடைக்கும். தென் அமெரிக்கா மற்றும் கிழக்காசியாவைச் சேர்ந்த சில ஏழை நாடுகளைத் தவிர, பிற கண்டத்து ஏழை நாடுகளின் விவசாயம் பாதிக்கப்பட்டு வருமான இழப்பு ஏற்படும். குறிப்பாக, இந்தியாவிற்கு 1,890 கோடி ரூபாய் அளவிற்கு வருமான இழப்பு ஏற்படும்'' என அமெரிக்காவைச் சேர்ந்த ""சர்வதேச அமைதிக்கான கார்னேகி அறக்கொடை'' நிறுவனம் கணித்திருக்கிறது.

 

உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், ""தோஹா வளர்ச்சி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால், அதனால் ஏழை நாட்டைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு, ஆண்டொன்றுக்கு 90 ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைத்தாலே பேரதிருஷ்டம்தான்'' எனக் குறிப்பிட்டுள்ளது. இதனை வளர்ச்சி என்று கூறுபவர்கள் ஒன்று முட்டாள்களாக இருக்க வேண்டும்; இல்லையென்றால், தந்திரக்காரப் பேர்வழிகளாக இருக்க வேண்டும்.

 

***

 

உலக வர்த்தகக் கழகத்தின் தலைவர் பாஸ்கல் லாமே முன்வைத்துள்ள ஒரு சமரசத் திட்டத்தின்படி, ஏகாதிபத்திய நாடுகள் விவசாய மானியத்தில் 36 சதவீதத்தைக் குறைத்தால், இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் விவசாயப் பொருட்கள் மீது விதிக்கும் இறக்குமதி தீர்வையையும் 36 சதவீதம் குறைக்க வேண்டும்.

 

இந்தியாவில் தற்பொழுது விவசாயப் பொருட்கள் மீது 40 சதவீதம் முதல் 300 சதவீதம் வரை இறக்குமதி தீர்வை விதிக்கப்படுகிறது. உலக வர்த்தகக் கழகம் முன்வைத்துள்ள சமரச ஏற்பாட்டின்படி தோஹா பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தால், சில விவசாயப் பொருட்களின் மீது 10 சதவீதம் இறக்குமதித் தீர்வையைக் கூட இந்திய அரசால் விதிக்க முடியாமல் போகும். சராசரி இறக்குமதி தீர்வை தற்பொழுதுள்ள 115 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாகச் சரிந்து விழுந்துவிடும். இந்தக் குறைப்பு, மேலை நாட்டு விவசாயப் பொருட்களின் குப்பைத் தொட்டியாக இந்தியாவை மாற்றுவதோடு, எதிர்காலத்தில் உணவுக்கே மேலைநாடுகளிடம் கையேந்தி நிற்கக் கூடிய அபாயகரமான நிலையை உருவாக்கி விடும்.

 

ஆனால், வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்தோ, ""அப்படியொரு அபாயம் வந்தால், அதில் இருந்து தற்காத்துக் கொள்ள, உலக வர்த்தக் கழகம் ஏழை நாடுகளுக்குச் சில உரிமைகளைத் தந்திருக்கிறது. இறக்குமதியைத் தடை செய்யலாம்; இறக்குமதி தீர்வையை அதிகப்படுத்தலாம்'' என அடுக்கிக் கொண்டே போகிறார். ஆனால், இந்தப் ""பாதுகாப்பு கவசங்களே'' ஏழை நாடுகளிடம் இருக்கக் கூடாது எனக் கட்டாயப்படுத்துகிறது, அமெரிக்கா.


அமெரிக்காவின் இந்த நிர்பந்தம் ஒருபுறம் இருக்கட்டும்; இந்த பாதுகாப்பு கவசத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் பருத்திக்குத் தடை விதித்து, அதன் மூலம் விதர்பாவைச் சேர்ந்த பருத்தி விவசாயிகளை இந்திய அரசு காப்பாற்றியிருக்கலாமே? அப்படித் தடை போட்டுவிடாமல், மன்மோகன் சிங்கின் கையைக் கட்டிப் போட்டது யார்?

 

உள்நாட்டில் விளைந்த கோதுமையைக் கொள்முதல் செய்யாமல், ஆஸ்திரேலியாவில் இருந்து புழுத்துப் போன கோதுமையை மத்திய அரசு இறக்குமதி செய்ததே, அது ஏன்? அந்த புழுத்துப் போன கோதுமையை இறக்குமதி செய்வதற்காக, உணவுப் பொருள் இறக்குமதி சட்டத்தை மாற்றியமைத்தார்களே, அதற்கு என்ன அவசியம் வந்தது? எந்த விவசாயியைக் காப்பாற்ற இவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள்?

 

இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடினால், அந்தப் பதில் மன்மோகன் சிங் ப.சிதம்பரம் கும்பலின் ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை அம்பலப்படுத்திக் காட்டும். ""வளர்ச்சி'' என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் தொடுக்கும் மறுகாலனியத் தாக்குதலில் இருந்து நமது நாட்டு விவசாயத்தையும், மக்களையும் காப்பாற்ற இந்த அடிவருடி கும்பலையா நம்பியிருக்க முடியும்?

 

ரஹீம்