Language Selection

9_2006.jpg

இயற்கை வளமும் இலக்கியச் செழுமையும் கொண்ட, கனவுகளின் தேசமாகச் சித்தரிக்கப்பட்ட லெபனான் இன்று நொறுங்கிக் கிடக்கிறது. ""முறிந்த சிறகுகள்'' வழங்கிய உலகப் புகழ் பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரானின் லெபனான், இப்போது மீண்டும் சிறகுகள் முறிக்கப்பட்டு துடிதுடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை 13ஆம் தேதியிலிருந்து இஸ்ரேலிய பயங்கரவாதிகள் லெபனான் மீது தொடுத்த

 ஆக்கிரமிப்புப் போரினால் மத்திய தரைக்கடலோரம் அமைந்துள்ள அச்சின்னஞ்சிறு நாடு உருக்குலைந்து வேதனையில் தத்தளிக்கிறது. தரைவழி, வான்வழி, கடல் வழி என இஸ்ரேலிய காட்டுமிராண்டிகள் நடத்திய மும்முனைத் தாக்குதலால் இதுவரை 1000க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பத்தாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடு வாசல்களை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

தலைக்கு மேலே சீறிப்பாயும் இஸ்ரேலிய போர் விமானங்கள் எப்போது தங்கள் மீது குண்டு வீசுமோ என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு லெபனான் மக்கள் தப்பியோடினார்கள். வாகன நெரிசலால் தெற்கு லெபனானிலுள்ள டயர் நகரம் திக்குமுக்காடிக் கொண்டிருந்தது. எங்கே தப்பியோடுவது, எங்கே தஞ்சமடைவது என்று புரியாமல் அலைபாயும் லெபனான் மக்கள் அண்டை நாடான சிரியாவுக்கு ஓடத் துடித்தார்கள். திடீரென குண்டு வீச்சுத் தாக்குதல். சிரியா நோக்கிச் செல்லும் சாலைகள் அனைத்தும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் நாசமாக்கப்பட்டுக் கிடக்கிறது.

 

தலைநகர் பெய்ரூத்தின் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டு இதர விமான நிலையங்களும் விமான எரிபொருள் கிடங்குகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. அறுபதுக்கும் மேற்பட்ட பெரிய பாலங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின்விநியோக நிலையங்கள், தொலைக்காட்சி கோபுரங்கள், தொழிற்சாலைகள், பால்பண்ணைகள், மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள், ஆம்புலன்சு வாகனங்கள் என அனைத்துமே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் குண்டு வீசித் தகர்க்கப்பட்டுள்ளன. வெளி உலகிடமிருந்து லெபனான் முற்றாகத் துண்டிக்கப்பட்டு பசியும் பயமும் அவலமும் அந்நாட்டு மக்களைக் கவ்வியுள்ளது.

 

இனி எங்கே செல்வது, எப்படி உயிர் வாழ்வது என்று தெரியாமல் லெபனான் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். காயமுற்றவர்களை ஆம்புலன்சு வண்டியில் ஏற்றிச் செல்லும்போதுகூட இஸ்ரேலிய கிரிமினல்கள் குண்டுவீசி தாக்கியுள்ளனர். இனி எங்கு சென்றாலும் ஆபத்து என்று குவானா மலை கிராமத்திலுள்ள ஐ.நா. மன்ற அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த லெபனான் மக்கள் அனைவரும் இஸ்ரேலிய போர் விமானங்களின் கொத்துக்குண்டு தாக்குதலால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். குண்டு வீச்சினாலும் நொறுங்கி விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளிலும் சிக்கி மாண்டு போன 106 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் இளங்குழந்தைகள்! அதிலே, பிறந்து 10 நாளான கைக்குழந்தையுடன் தாயும் கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டு உலகமே அதிர்ச்சியடைந்தது.

 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறைத்தூதரான ஏசு, தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றி இக்கிராம மக்களுக்குப் பருகக் கொடுத்தாராம். இன்று அதே குவானா கிராமத்தில் இஸ்ரேலியக் காட்டுமிராண்டிகள் பச்சிளம் குழந்தைகளைக் கொன்று இரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். குண்டு வீச்சுத் தாக்குதலால் துறைமுகங்களின் எண்ணெய் கிடங்குகள் வெடித்துச் சிதறி கடலெங்கும் எண்ணெய் மிதக்கிறது. மீன்களும் பறவைகளும் செத்து மிதக்கின்றன. ""லெபனான் நாடு இதுவரை கண்டிராத மிகக் கொடிய சுற்றுச்சூழல் பேரழிவு இது'' என்று பசுமை அமைதி இயக்கம் குற்றம் சாட்டுகிறது.

 

இத்தகையதொரு கொடூரமான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதப் போரை லெபனான் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டதற்குக் காரணம் என்ன? லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள ஷியா முஸ்லிம்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள ஹிஸ்புல்லா எனும் தீவிரவாத இயக்கத்தினர், கடந்த ஜூலை மாத மத்தியில், தமது பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்கிய இஸ்ரேலிய டாங்கிப் படையைத் தகர்த்து, இரண்டு இஸ்ரேலிய சிப்பாய்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். அவர்களை விடுவிக்க வேண்டுமானால், இஸ்ரேலிய சிறைகளில் எவ்வித விசாரணையுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஹிஸ்புல்லா குழுவினர் நிபந்தனை விதித்தனர். ""தீவிரவாதிகளின் இத்தகைய கோழைத்தனமான மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம்; ஹிஸ்புல்லா குழுவினரை நசுக்கி அழிப்போம்'' என்று எச்சரித்து லெபனான் மீது ஜூலை 12ஆம் தேதி முதல் 5 வார காலத்திற்கு பயங்கரவாத ஆக்கிரமிப்புப் போரை இஸ்ரேல் நடத்தியது.

 

போராளி குழுக்களும் தீவிரவாதக் குழுக்களும் பிணைக் கைதிகளாகச் சிலரைப் பிடித்துச் செல்வதும், தமது கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே அவர்களை விடுவிக்க முடியும் என்று நிபந்தனை விதிப்பதும் புதிய விவகாரமல்ல. உலகெங்கும் பல்வேறு நாடுகளில் அடிக்கடி நடப்பவைதான். தமிழகத்தில் வீரப்பன் குழு கூட அத்தகைய நடவடிக்கையில் இறங்கியதை யாவரும் அறிவர். இதற்காக எந்த நாடும் மற்றொரு நாட்டின் மீது இஸ்ரேலைப் போல பேரழிவுப் போரைக் கட்டவிழ்த்து விட்டதாக வரலாறில்லை. இத்தகைய பயங்கரவாததீவிரவாதக் குழுக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பது நியாயம்தான் என்றால், அப்பயங்கரவாதக் குழு செயல்படும் நாட்டின் மீதும் அந்நாட்டு மக்கள் மீதும் போர் தொடுப்பதும் பேரழிவை விளைவிப்பதும் எந்த வகையில் நியாயமாகும்?

 

""ஆம்! நியாயமானதுதான்! பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடும் மக்களும் அதற்கான விலையைத் தந்துதான் தீரவேண்டும்'' என்று கொக்கரிக்கிறது பயங்கரவாத இஸ்ரேல். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் மக்களையும் பயங்கரவாதிகளாகவே கருத வேண்டும் என்கிறார் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர். அல் கொய்தா என்ற பயங்கரவாதக் குழுவை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆப்கானை ஆக்கிரமித்தது அமெரிக்கா. பேரழிவை விளைவிக்கும் கொடிய ஆயுதங்களை வைத்திருக்கும் பயங்கரவாத நாடு என்று கூறி ஈராக்கை ஆக்கிரமித்தது அமெரிக்கா. பயங்கரவாதக் குழு, பயங்கரவாத நாடு என்பதிலிருந்து இன்னும் ஒருபடி முன்னேறி ""பயங்கரவாத மக்கள்'' என்று கூறி தனது ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்துகிறது, அமெரிக்காவின் மேற்காசியப் பேட்டை ரௌடியான இஸ்ரேல்.

 

ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இரு இஸ்ரேலிய சிப்பாய்களைக் கடத்திச் சென்றதை பயங்கரவாத நடவடிக்கையாகவே கருதமுடியாது. இஸ்ரேலியச் சிறைகளிலும் சித்திரவதைக் கூட்டங்களிலும் 9000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 300 பேர் 18 வயதுக்கும் குறைவான இளஞ்சிறுவர்கள்; 100 பேர் பெண்கள். ஆண்டுக்கணக்கில் வதைபடும் இவர்கள் மீது வழக்கோ விசாரணையோ நடத்தப்படுவதில்லை. இவர்களை விடுவிப்பதற்கான பேச்சு வார்த்தை என்ற நிகழ்ச்சிநிரலைக் கூட ஏற்க மறுக்கிறது இஸ்ரேல். இந்நிலையில் மனிதஉரிமை ஜனநாயக உரிமைகளை முற்றாக மறுத்து, பயங்கரவாத அடக்குமுறையையே தீர்வாகக் கொண்டுள்ள இஸ்ரேலின் சிப்பாய்களை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதை எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கையாகச் சித்தரிக்க முடியும்?


கடந்த 2000வது ஆண்டு அக்டோபர் மாதத்தில் மூன்று சிப்பாய்களைப் பிடித்துச் சென்ற ஹிஸ்புல்லா இயக்கத்தினர், அவர்களது விடுதலைக்குப் பணயமாக இஸ்ரேலிய சிறையிலுள்ள பாலஸ்தீன அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரினர். அதை ஏற்று அப்போது ஏறத்தாழ 500 கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது. அதே போன்றதொரு பாலஸ்தீன கைதிகளின் விடுதலைக்காகத் திட்டமிட்டுத்தான் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இப்போது இரு இஸ்ரேலிய சிப்பாய்களைப் பிடித்துச் சென்றனர்.

 

எனவே, இரு இஸ்ரேலிய சிப்பாய்களை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பிடித்துச் சென்றதுதான் லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கக் காரணம் என்பதை முட்டாள்கள் கூட ஏற்க மாட்டார்கள். லெபனான் மீது இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்புப் போரைத் தொடுப்பதற்கு வேறு காரணம் இருக்கிறது. இரு இஸ்ரேலிய சிப்பாய்கள் பிடித்துச் செல்லப்பட்ட விவகாரம் அதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

 

லெபனானின் தெற்கு பகுதியில் செல்வாக்கு பெற்றுள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தைத் தாக்கி அழித்து முடமாக்குவது; ஹிஸ்புல்லா போன்ற தீவிரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி லெபனானை ஒடுக்கி தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது; தம்மிடம் முரண்பட்டு நிற்கும் ஈரானையும் சிரியாவையும் தாக்குவதற்கான முன்னோட்டமாகவும் எச்சரிக்கை விடுப்பதாகவும் இப்போரை நீட்டிப்பது; மேற்காசியா எனப்படும் தற்போதைய மத்தியக் கிழக்கு நாடுகளை புதிய எல்லைகளுடன் மறுஒழுங்கமைப்பது என்ற அமெரிக்க எஜமானர்களின் போர்த்தந்திர திட்டப்படியே அதன் அடியாளான இஸ்ரேல் இப்போரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ""புதிய மத்தியக் கிழக்கை நிறுவும் நேரமிது; புதிய மத்தியக் கிழக்கு திட்டத்தை யார் ஏற்கவில்லையானாலும் அவர்களை நிர்பந்தித்துப் பணியச் செய்வோம்'' என்று அமெரிக்காவின் நோக்கத்தை வெளிப்படையாகவே கூறியுள்ளார், அமெரிக்க வெளியுறவுச் செயலரான கண்டலீசா ரைஸ். அதாவது, இஸ்ரேலிலிருந்து பாலஸ்தீன மக்களை முற்றாக வெளியேற்றுவது, லெபனான் உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகளை ஷியா, சன்னி, அரபு கிறித்தவர் என மதப்பிரிவுகளின் அடிப்படையிலும் தேசிய இனச் சிறுபான்மையினர் அடிப்படையிலும் கூறுபோடுவது, எண்ணெய் வளமிக்க வளைகுடா பிராந்தியத்தை விழுங்கி கேள்விக்கிடமற்ற மேலாதிக்கத்தை நிறுவுவது என்ற அமெரிக்காவின் திட்டப்படியே அதன் வேட்டை நாயான இஸ்ரேல் இக்கொலை வெறியாட்ட பேரழிவுப் போரை நடத்தியுள்ளது.

 

இப்பேரழிவுப் போரை உடனடியாக நிறுத்தக் கோரி உலகின் பல நாடுகள் ஐ.நா. மன்றத்திடம் வலியுறுத்திய போதிலும், அமெரிக்காவின் கைப்பாவையாகிவிட்ட ஐ.நா. மன்றம் உடனடியாகத் தலையிடவோ, நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை. அமெரிக்க இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் ""புதிய மத்திய கிழக்குத் திட்டம்'' நிறைவேறுவதற்காக காலத்தை நீட்டித்து இழுத்தடித்தது. பின்னர் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நிர்பந்தம் காரணமாக, ஒரு மாத காலத்திற்குப் பிறகு போரை உடனடியாக நிறுத்துமாறும், ஐ.நா. மன்றத்தின் 1701வது தீர்மானத்தின்படி பன்னாட்டுப் படைகளைக் கொண்டு லெபனானின் தென்பகுதியைக் கண்காணித்து அமைதியை நிலைநாட்டப் போவதாகவும் அறிவித்துள்ளது.

 

ஏறத்தாழ 35 நாட்கள் காட்டுமிராண்டித்தனமாகப் போர் தொடுத்த போதிலும், இஸ்ரேலிய பயங்கரவாதிகள் எந்த நோக்கத்திற்காக இப்போரை நடத்தினார்களோ அதிலே வெற்றி பெற முடியவில்லை. 23 டன் அளவுக்கு குண்டுகளும் ஏவுகணைத் தாக்குதல்களும் நடத்தி லெபனானின் தெற்குப் பகுதியையும் தலைநகர் பெய்ரூத்தையும் தரைமட்டமாக்கிய போதிலும், ஹிஸ்புல்லா இயக்கத்தினரை அழிக்கவோ முடக்கவோ முடியவில்லை. இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் முகத்தில் கரிபூசும் விதமாக, ஹிஸ்புல்லா இயக்கத் தலைவரான ஹசன் நஸ்ரல்லா, ""அல் ஜெசிரா'' தொலைக்காட்சிக்கு போர் நடந்து கொண்டிருந்தபோது கம்பீரமாகப் பேட்டியளித்தார்.

 

1982இலிருந்து தொடர்ந்து 18 ஆண்டுகள் லெபனானை ஆக்கிரமித்து, ஹிஸ்புல்லா இயக்கத்தின் தொடர்ச்சியான தாக்குதலுக்குப் பிறகு 2000வது ஆண்டில் வெளியேறிய இஸ்ரேல், தற்போதைய போரின் மூலம் ஹிஸ்புல்லா இயக்கத்தை முற்றாக அழித்தொழித்து தனது மேலாதிக்கத்தை நிறுவி விட முடியும் என்று கனவு கண்டது. அந்த ஆதிக்கக் கனவைத் தகர்த்தெறிந்து, ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வீரதீரமாகப் போரிட்டு, இஸ்ரேலிய பயங்கரவாதிகளைத் தடுத்து பின்வாங்கச் செய்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட ""கத்யுஷா'' ஏவுகணைக் கொண்டு இஸ்ரேல் மீது எதிர்த்தாக்குதல் நடத்தியதோடு மட்டுமின்றி, தரைப்படை மூலம் மூர்க்கமாகத் தாக்கும் போர்த்திறனிலும் அவர்கள் முன்னேறி இஸ்ரேலைக் கதிகலங்க வைத்துள்ளனர். ஒரு மாதத்துக்கும் மேலாகப் போரிட்டும் கூட இஸ்ரேலிய மேலாதிக்கத்தை நிறுவ முடியாத ஆத்திரத்தில் இஸ்ரேலிய அமைச்சர்கள், இராணுவத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர். இஸ்ரேலிய இராணுவத் தளபதிகளோ, ஆட்சியாளர்களின் அடிமுட்டாள்தனமான போர் நடவடிக்கையைச் சாடுகின்றனர். போரில் ஏற்பட்ட பின்னடைவானது இஸ்ரேலிய ஆளும் கும்பலிடையே பிளவையும் மோதலையும் கிளறிவிட்டுள்ளது.

 

இஸ்ரேலின் இராணுவம் பிரம்மாண்டமானது; ஆற்றல் மிக்கது; அதை யாராலும் வெல்ல முடியாது என்ற மாயையை, ஏறத்தாழ 10,000 பேர் கொண்ட ஹிஸ்புல்லாவின் சிறிய படை தகர்த்தெறிந்துள்ளது. 1982இல் நடந்த லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின்போது உருவான ஹிஸ்புல்லா இயக்கம், ஈரான், சிரியா நாடுகளின் ஆதரவோடு லெபனானின் தென்பகுதியில் வலுவான சக்தியாக வேரூன்றியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரானதொரு போரிடும் குழுவாக மட்டுமின்றி, பள்ளிகள், மருத்துவமனைகள் சுகாதாரப் பணிகள், கிராம நிர்வாகம் முதலானவற்றை தமது பொறுப்பில் இயக்கி வருவதோடு, இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் போர்ப் பயிற்சியும் அளித்து மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளது. 128 பேர் கொண்ட லெபனான் நாடாளுமன்றத்தில் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர், லெபனான் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும் வலுவான சக்தியாக வளர்ந்துள்ளனர். ஷியா, சன்னி முஸ்லிம் பிரிவினரிடையேயும், அரபு கிறித்துவர்களிடமும் அமெரிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான ஐக்கியத்தையும் சாதித்துள்ளனர்.

 

அமெரிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான வெறுப்பும் ஆத்திரமும் பொங்கி வழிவதாலும், ஹிஸ்புல்லா இயக்கம் மக்களிடம் ஆதரவு பெற்றுள்ளதாலும் தரைமட்டமாகிக் கிடக்கும் லெபனான் நகர வீதிகளில், மக்கள் தமது துயரத்தைத் துடைத்துக் கொண்டு ஹிஸ்புல்லாவின் போர்வெற்றியை பேருற்சாகத்தோடு கொண்டாடுகின்றனர். ஈரானிலும் சிரியாவிலும் உள்ள மக்கள் வெற்றி விழாக்களை வீதிகளில் நடத்துகின்றனர். சிரியாவின் அதிபர் மக்களுடன் வீதிக்கு வந்து ஹிஸ்புல்லாவின் வெற்றியை வாழ்த்தியுள்ளார். எகிப்து, ஜோர்டான், சௌதி அரேபியா ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலையும் மீறி வீதிகளில் திரண்ட மக்கள், வெற்றி ஊர்வலங்களை நடத்துகின்றனர். ஹிஸ்புல்லாவை ஆதரிக்க மறுத்த எகிப்து அதிபர் முபாரக், மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு தனது சகோதரரையும் அமைச்சரையும் லெபனானுக்கு அனுப்பி ஹிஸ்புல்லாவுக்குத் தமது அரசின் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அரபு மக்கள் இனியும் அமெரிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களையும் அரபு ஆட்சியாளர்களின் துரோகத்தையும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதையே இந்த வெற்றி ஊர்வலங்கள் உணர்த்துகின்றன.

 

மறுபுறம், பயங்கரவாத இஸ்ரேலைப் பின்வாங்கச் செய்து இப்போரிலே ஹிஸ்புல்லாக்கள் முதற்கட்ட வெற்றியை ஈட்டியுள்ள போதிலும், அதைத் தக்கவைக்கவோ உறுதிப்படுத்தவோ முடியாதபடி ஏகாதிபத்தியவாதிகள் புதிய சூழ்ச்சிகள் சதிகளில் இறங்கியுள்ளனர். போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பது என்ற ஐ.நா. மன்றத் தீர்மானத்தின் பெயரால் பன்னாட்டுப் படைகளை அங்கு குவிக்கத் தீர்மானித்துள்ளனர். ஆப்கான், சோமாலியாவைத் தொடர்ந்து இப்போது லெபனானிலும் பன்னாட்டுப் படைகள் மேலாதிக்கம் செய்யக் கிளம்பியுள்ளன.

 

ஐ.நா மன்றத்தின் பெயரால் 15,000 பேர் கொண்ட பன்னாட்டுப் படைகளை அங்கு குவிப்பதும், போர் மூளாமல் கண்காணிப்பதும், ஈரான் மற்றும் சிரியாவிலிருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கு ஆயுத உதவி கிடைப்பதைத் தடுப்பதும் ஹிஸ்புல்லாவையும் லெபனான் மக்களையும் முடமாக்கும் மேலாதிக்க சதி நடவடிக்கையே ஆகும். போர் நிறுத்தம் அமைதியின் பெயரால் மீண்டும் அங்கே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் ""புதிய மத்திய கிழக்கு திட்டத்தை'' சுற்றி வளைத்து செயல்படுத்துவதற்குமான ஏற்பாடுகளே நடக்கின்றன. இனவெறி பயங்கரவாத இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் கூடிக் குலாவும் இந்திய அரசோ இப்பன்னாட்டு ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கு விசுவாசமாக இந்தியப் படைகளை அனுப்பத் துடித்துக் கொண்டிருக்கிறது. இதே வழியில் இன்னும் பல ஏழை நாடுகள் இத்தகைய கைக்கூலி சேவை செய்யக் காத்து நிற்கின்றன.

 

ஏகாதிபத்தியவாதிகளின் இம்மேலாதிக்க சதிகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், இனியும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அரபு மக்களும் வெற்றி பெருமிதத்தில் திளைத்திருக்க முடியாது. அரபு மக்களின் ஒற்றுமை, மதச்சார்பின்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இதர ஏழை நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுடன் கூட்டிணைவு என்ற திசையில் முன்னேறினால் மட்டுமே, இப்போதைய முதற்கட்ட வெற்றியை தக்கவைத்துக் கொண்டு இறுதி வெற்றியைச் சாதிக்க முடியும். இதன்மூலம் மட்டுமே அரபு நாடுகளும் மக்களும் சுதந்திரத்தையும் அமைதியையும் சுவாசிக்க முடியும்.

 

மனோகரன்