ரேஹான் அகமது ஷேக், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் (என்.ஆர்.ஐ.). அவர், தனது மனைவியோடும் இரண்டு குழந்தைகளோடும் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இந்தியாவிற்கு வந்தார். அவர் மும்பய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய மறுநிமிடமே, மைய அரசின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளாலும்; மகாராஷ்டிர போலீசு அதிகாரிகளாலும் சுற்றி வளைக்கப்பட்டு, மும்பய் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச்
செல்லப்பட்டார். அவர், அதிகாரிகளால் தொடர்ந்து பதினைந்து மணி நேரம் விசாரிக்கப்பட்டார். அவர் வேலை பார்க்கும் ருசிய நிறுவனம், ரேஹானைப் பற்றிய தகவல்களைத் தொலைவரி (Fax) மூலம் மும்பய் போலீசு அதிகாரிகளுக்கு அனுப்பிய பிறகும் விசாரணை நீடித்தது.
ரேஹான் முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர்; அதோடு அவர் தாடியும் வைத்திருந்ததுதான், அதிகாரிகளுக்கு அவர் தீவிரவாதியோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதாம். விசாரணையின்பொழுது, ""நீங்கள் ஏன் தாடி வளர்க்கிறீர்கள்?'' என்பது அவரிடம் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி. இதில் வேதனை கலந்த வேடிக்கை என்னவென்றால், ரேஹான், மும்பய்த் தொடர்வண்டி குண்டு வெடிப்பில் இறந்து போன தனது சகோதரர் அய்ஜாஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்குத்தான் இந்தியாவிற்கு வந்தார்.
இது விதிவிலக்காக நடந்துவிட்ட சம்பவம் அல்ல. கடந்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற, அல்லது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பிய 1,500 முஸ்லீம்கள் தனியாக வடிகட்டப்பட்டு, தீவிரவாத எதிர்ப்பு போலீசு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ளனர். அந்த 1,500 முஸ்லீம்களுள் ரேஹானும் ஒருவர்.
"".... உள்ளூர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுவது ஒன்றே மும்பய் ஜூலை 11 போன்று, அதிகரித்துவரும் பயங்கரவாதத்தை முறியடிக்கக் கூடியது என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் நம்புகின்றன...'' என கடந்த இதழில் (பு.ஜ. ஆகஸ்டு'06) மும்பய் குண்டு வெடிப்பு பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அந்த அரசு பயங்கரவாதம்தான் இப்பொழுது மகாராஷ்டிராவைச் சேர்ந்த முசுலீம் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
மும்பய்க்கு வேலை தேடி வரும் வங்காள தேச முஸ்லீம் அகதிகள் வசிக்கும் மாஹிம் பகுதியில், குண்டு வெடிப்பு நடந்த நான்காவது நாளே தேடுதல் வேட்டை நடந்தது. ஜூலை 15ஆம் தேதி நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்தத் தேடுதல் வேட்டையில் 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு குடிசைக் கதவையும் இடித்துத் தள்ளிக் கொண்டு நுழைந்த போலீசார், 250க்கும் மேற்பட்ட ஏழை முஸ்லீம்களை, உள்ளாடைகளோடு போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர். இதேபோல நௌபடா பகுதியில் 75 முஸ்லீம்களும்; பெஹ்ரம்படா பகுதியில் இருந்து 100 முஸ்லீம்களும் விசாரைணக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். மும்பய் மட்டுமின்றி, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதிலும், பீகாரிலும், மத்தியப் பிரதேசத்திலும் இது போன்ற தேடுதல் வேட்டையும், திடீர்க் கைதுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்திய முஸ்லீம் மாணவர் இயக்கம் (சிமி) தடை செய்யப்படுவதற்கு முன்பு அவ்வமைப்போடு தொடர்பில் இருந்த இளைஞர்கள்; மேற்காசியாவில் வேலை பார்த்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் முஸ்லீம்கள்; பாகிஸ்தானில் உறவினர் உள்ள முஸ்லீம்கள்; குஜராத் முஸ்லீம் படுகொலைக்குப் பிறகு அங்கிருந்து மும்பய்க்கு அகதிகளாக ஓடி வந்துள்ள முஸ்லீம்கள் என ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு அதில் சிக்கும் அனைவரையும் போலீசார் விசாரணைக்குத் தூக்கிக் கொண்டு வந்து விடுகின்றனர். ""இப்படி விசாரணைக்கு அழைத்துச் செல்லும்பொழுது பின்பற்ற வேண்டிய சட்ட வரையறைகள் எதனையும் நாங்கள் பின்பற்றுவதில்லை'' என மும்பய் போலீசார் வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளனர்.
தீவிரவாத எதிர்ப்பு போலீசின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் இருக்கும் நௌபடா பகுதியைச் சேர்ந்த சலீம் குரேஷி, ""குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தலை சிதறி, கைகால்கள் சிதறி இறந்தவர்களின் சடலங்களை போலீசார் தூக்கிப் போட முன்வரவில்லை. அதை நாங்கள் செய்தோம். காயம்பட்டவர்கள் இந்துவா, முசுலீமா என நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், மறுநாளே, காயம்பட்டவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பதற்கு உதவிய எங்கள் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைச் சந்தேகத்தின் பேரில் போலீசார் இழுத்துச் சென்றுவிட்டனர். இப்பொழுது அவர்கள் மனம் படும்பாட்டினை நீங்கள் நினைத்துப் பார்க்க முடியுமா?'' எனக் குமுறுகிறார்.
""நாங்கள் அனைவரும் குற்றவாளிகள் போலவும்; எங்கள் கைகள் அனைத்திலும் இரத்தக் கறை படிந்திருப்பது போலவும் இவர்கள் நடந்து கொள்கிறார்கள்'' என மனம் சோர்ந்து போய்க் கூறுகிறார், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தனது உறவினரின் விடுதலைக்காகக் காத்திருக்கும் முதியவர் ஒருவர்.
இந்த விடுதலை எப்பொழுது கிடைக்கும்? ரேஹானுக்குக் கிடைத்தது போல 15 மணி நேரத்திலும் கிடைக்கலாம்; இல்லை ஐந்தாறு நாட்கள் கூட ஆகலாம். ""சிமி''யோடு தொடர்பு கொண்டவர்கள் எனப் போலீசார் சந்தேகங்கொண்டால் விசாரணையில் இருந்து விடுதலையே கிடைக்காமலும் போகலாம்.
தற்பொழுது ஒரு ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் தையல் கலைஞராக வேலை பார்த்துவரும் சஜித் அகமது, முன்பு ""சிமி'' அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறார். அவ்வமைப்பு தடை செய்யப்படுவதற்கு முன்பாகவே அதிலிருந்து விலகிவிட்ட சஜித் அகமது, தான் விலகிவிட்டதற்கான அனைத்து ஆதாரங்களையும் போலீசிடம் காட்டிய பிறகும், மும்பய் போலீசார் நம்ப மறுக்கின்றனர். எப்பொழுதெல்லாம் மகாராஷ்டிராவிலோ, நாட்டின் பிற பகுதியிலோ ""விரும்பத்தகாத'' சம்பவங்கள் நடந்தால், உடனே சஜித் அகமதுவை மும்பய் போலீசார் விசாரணைக்கு இழுத்து வந்து விடுகின்றனர். இப்பொழுதோ அவர் தீவிரக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
""சிமி அமைப்பில் இருந்து நான் விலகிவிட்டதை போலீசார் நம்ப மறுப்பதால், எனக்கு யாருமே வேலை கொடுக்கத் தயங்குகின்றனர். நான் வசிக்கும் பகுதியில் இருந்து ரொம்ப தூரம் தள்ளி வந்து, 3,000 ரூபாய் சம்பளத்தில் வேலை தேடிக் கொண்டேன். ரயில்களில் குண்டு வெடித்த பிறகு, போலீசார் அங்கும் வந்துவிட்டதால் அந்த வேலையும் பறிபோய் விட்டது'' என்கிறார், மற்றொரு இளைஞர்.
""சிமி'' அமைப்பில் இருந்த ஒரே காரணத்திற்காக மாதம் இருமுறை போலீசு நிலையத்திற்குச் சென்று முகத்தைக் காட்டிவிட்டுத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் வாழும் பெரோஸ் ஷேக் என்ற இளைஞர், ""சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முகத்தைக் காட்டிவிட்டுத் திரும்புவதற்கு போலீசு நிலையத்தில் மணிகணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கும். அவர்கள் சொன்ன நேரத்திற்குப் பத்துபதினைந்து நிமிடம் கால தாமதமாகப் போனாலோ, அந்தநாள் முழுவதும் அதிகாரியின் அழைப்புக்காகக் காத்துக் கிடப்பதிலேயே போய்விடும்'' என போலீசின் பழிவாங்கும் போக்கை விவரிக்கிறார்.
இவர்களைப் போல நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள், ""சிமி''யில் இருந்த ஒரே காரணத்துக்காக போலீசாரால் விசாரணை என்ற பெயரால் பந்தாடப்படுவதாக, மும்பயில் இருந்து வெளியாகும், ""டைம்ஸ் ஆப் இந்தியா'' நாளிதழ் குறிப்பிடுகிறது. இந்தக் குண்டு வெடிப்புக்குப் பின் ஏறத்தாழ 200 முசுலீம் இளைஞர்கள் ""சிமி''யோடு தொடர்புடையவர்கள் என போலீசார் சந்தேகப்படும் ஒரே காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட விசாரணை கைது தேடுதல் வேட்டைகளால், குண்டு வெடிப்பு பற்றிய விசாரணை ஒரு அங்குலமாவது முன்னேறியிருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. குண்டு வெடிப்பு நடந்த இரண்டொரு நாட்களிலேயே, திரிபுரா மாநிலத்தில் வங்காள தேச எல்லையையொட்டிய பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 11 முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ""குண்டு வைத்துவிட்டுத் தப்பிச் செல்ல முயன்ற பொழுது கைது'' என்பது போல இச்சம்பவம் போலீசாரால் பத்திரிகைகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது. விசாரணையின் முடிவில், இந்த இளைஞர்கள் மதப் பிரச்சாரம் செய்வதற்காக திரிபுராவிற்குச் சென்றது தெரியவந்தது.
பீகார் மாநிலத்தில் உள்ள கயாவில் முகம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். குண்டு வைத்த தீவிரவாதிகளுள் ஒருவன் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் வெளியிட்ட புகைப்படத்தோடு, முகம்மது அக்ரமின் தோற்றம் ஒத்துப் போனதால், அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினர். நான்கு நாட்கள் நடந்த விசாரணையின் முடிவில், அவர் மைசூரில் உள்ள ஒரு மதரசா பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் என்பது தெரிய வந்தது. எனினும், முகம்மது அக்ரம் தினந்தோறும் போலீசு நிலையத்திற்கு வர வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ்தான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுள், 14 பேரைத்தான் முக்கிய குற்றவாளிகளாக மும்பய் போலீசு கருதுகிறது. இந்த 14 பேரும் தடை செய்யப்பட்டுள்ள சிமி அமைப்பின் முன்னாள் ஊழியர்கள் என போலீசார் கருகின்றனர். எனினும், இவர்களை மும்பய் குண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புபடுத்துவதற்கு காவல்துறையிடம் போதுமான ஆதாரம் இல்லை... போபாலில் கைதான 18 வயது ஷாரிக் கான் மீது அவன் சம்பந்தப்படாத ஐந்து வருடப் பழமையான கொலை வழக்கு போடப்பட்டுள்ளது'' என ஆர்.எஸ்.எஸ். சார்பு வார இதழான இந்தியாடுடே போலீசாரின் விசாரணையை அம்பலப்படுத்தியிருக்கிறது. (இந்தியாடுடே, தமிழ் பதிப்பு, ஆக.30, 2006, பக்.27)
""பொடா'' போன்ற வெளிப்படையான கருப்புச் சட்டம் தேவையில்லை. ஏற்கெனவே இருந்து வரும் கிரிமினல் சட்டங்களை வைத்துக் கொண்டே, தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் முசுலீம்கள் மீது அரசு பயங்கரவாதத்தை ஏவிவிட முடியும் என நிரூபித்துக் காட்டி வருகிறது காங்கிரசு கும்பல்.
****
ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு இளம் பெண் மும்பய் போலீசு நிலையம் ஒன்றில் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதைக் கண்டித்து மும்பய் நகரமே கொதித்து எழுந்தது. ஆனால் இப்பொழுதோ, அப்பாவி ஏழை முஸ்களுக்கு எதிராக ஏவிவிடப்படும் இந்த அடக்குமுறைகளைக் கண்டு அமைதியாக இருக்கிறது. மும்பய் நகரம், மதரீதியாகப் பிளவுபட்டு வருவதுதான் இந்த அமைதிக்குக் காரணம். புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் சக முஸ்லீம் பயணிகளை நக்கலாகக் குத்திப் பேசும் அளவிற்கு; அதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மும்பய் நகரம் பிளவுண்டு கிடப்பதாகச் சில செய்தியாளர்கள் குறிப்பிடுகினற்னர். டாடா சமூகவியல் விஞ்ஞானக் கழகத்தில் இணைப் பேராசிரியராக வேலை பார்க்கும் அப்துல் ஷாபான், ""ஒவ்வொரு கலவரமும்; ஒவ்வொரு குண்டு வெடிப்பும் இந்தப் பிளவை ஆழப்படுத்திக் கொண்டே செல்வதை''த் தனது ஆய்வுக் கட்டுரைகளில் நிறுவியுள்ளார்.
""இது "இந்தக்கள்' வசிக்கும் பகுதி; இது முஸ்லீம்கள் வசிக்கும் பகுதி என வெளிப்படையாக இந்தப் பிளவைக் காண முடியும். புதிது புதுதாக உருவாக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், காலனிகள், புறநகர் பகுதிகள் மதரீதியாகவே உருவாக்கப்படுகின்றன. இப்படி மதரீதியாக உருவாக்கப்படும் காலனிகளை, உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பின் மூலம் புனிதப்படுத்தியிருப்பதாக'' நமீதா தேவிதயாள் என்ற செய்தி கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.
""இந்துமுஸ்லீம் மதங்களைச் சேர்ந்த இருவர் இணை பிரியாத நண்பர்களாகவோ, பள்ளித் தோழர்களாகவோ, விளையாட்டுத் துணையாகவோ இருப்பதை இப்பொழுது மும்பயில் அரிதாகவே பார்க்க முடிகிறது; இரு மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த ""அமர்அக்பர்அந்தோணி'' கலாச்சாரத்தை இப்பொழுது ஊக்குவிப்பதில்லை. ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து செல்வது இரண்டு மதங்களிலும் நடக்கிறது'' எனக் குறிப்பிடுகிறார், அவர்.
1992க்கு முன்பு வரை, குஜராத்திகள், மார்வாடிகள், மராட்டியர்கள், உ.பி.முசுலீம்கள் எனப் பலதரப்பட்ட மதத்தினரும் இனத்தினரும் கலந்து வாழ்ந்து வந்த பகுதியாக நௌபடா இருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த மும்பய்க் கலவரத்திற்குப் பின், நௌபடாவில் வசித்த ""இந்துக்கள்'' வெளியேறிச் சென்று விட்டனர்.
""அப்பொழுதெல்லாம் நௌபடா இவ்வளவு பிற்போக்குத்தனமாக இருந்ததில்லை. இப்பொழுதோ சில இளைஞர்கள் மேற்கத்திய பாணி உடைகளை அணிய மறுக்கின்றனர். இன்னும் சிலர் தாடி வளர்ப்பதையும், மதத்தை அடையாளப்படுத்தும் தொப்பி அணிவதையும் கட்டாயப்படுத்துகின்றனர்.''
""அந்த இளைஞர்கள் என்னிடம் வந்து நான் பர்தா அணிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினார்கள். சாப்பாடு செய்வதற்குக் கூட என்னிடம் பணம் கிடையாது; முன்னூறு ரூபாய் செலவழித்து நான் பர்தா வாங்க வேண்டும் என்றால், அந்த முன்னூறு ரூபாயை நீங்கள் சம்பாதித்துக் கொடுங்கள் எனக் கூறிவிட்டதாக''ச் சொல்கிறார், கதூன் ஷேக் என்ற சமூக சேவகி.
மும்பயின் மேற்கே கோரேகாவ் புறநகர் பகுதியில் உள்ள ஜவஹர் நகர், பழமைவாத ஜைன மதத்தினரும், குஜராத்தி இந்துக்களும் நெருக்கமாக வாழும் இடம். இப்பகுதியைச் சேர்ந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களின் இறுதிச் சடங்கின்பொழுது, ""மோடியின் கீழ்தான் எங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமா?'' என அப்பகுதி மக்கள் பத்திரிகையாளர்களிடம் கேட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பின் பின் மும்பய் அமைதியாக இருந்த நாட்களில், ""முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால், தீவிரவாதி ஒவ்வொருவரும் முசுலீமாக இருப்பது ஏன்?'', ""இன்னும் கொஞ்ச காலத்தில் முசுலீம்களின் எண்ணிக்கை, இந்துக்களை எண்ணிக்கையைத் தாண்டிவிடும்'' போன்ற இந்து மதவெறியைத் தூண்டிவிடும் செய்திகள், செல்போன் மூலமும், இமெயில் மூலமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
""புகார்'' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில், ""மும்பயில் பாதுகாப்பற்ற இடம் எது?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பெரும்பாலான ""இந்துப்'' பெண்கள், ""சிறுபான்மையினர் வசிக்கும் பகுதி'' எனப் பதில் அளித்துள்ளனர். ""அப்படி நீங்கள் கருதக் காரணம் என்ன?'' என்று கேட்டதற்கு, ""அங்குள்ள ஆண்கள் தாடி வைத்துக் கொண்டு, பார்ப்பதற்கு அச்சம் தரக் கூடியவர்களாக இருக்கிறார்கள்'' எனப் பதில் அளித்துள்ளனர். இது மட்டுமின்றி, ஈராக், பாலஸ்தீனம் பகுதிகளில் நடக்கும் போர் தொடங்கி உள்ளூர் பிரச்சினைகள் முடிய ஒவ்வொன்றிலும் மும்பயைச் சேர்ந்த முஸ்லீம்களும், இந்துக்களும் எதிர்எதிரான கருத்துக்களையே கொண்டுள்ளனர்.
1970களில் மில் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டங்களால் சிவந்திருந்த மும்பய் நகரம், இப்பொழுது காவியையும், பச்சையையும் பூசிக் கொண்டு அருவெறுப்பாகக் காட்சி அளிக்கிறது. முஸ்லீம் தீவிரவாதிகளும், இந்துமத பயங்கரவாதிகளும் எது நடக்க வேண்டும் என விரும்பினார்களோ, அந்தப் பிளவு மும்பையில் ஆழமாகப் பரவி வருகிறது.
போலி கம்யூனிஸ்டுகள் தூக்கி பிடிக்கும் நேரு பாணி மதச்சார்பின்மை கொள்கை முற்றிலுமாகத் தோல்வியடைந்து விட்டதற்கு, மும்பய் நகரமே சாட்சி. மதவெறி பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நாடு மறுகாலனியாக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இணைத்து நடத்தும்பொழுதுதான், முஸ்லீம் மதவெறியர்களை தனிமைப்படுத்த முடியும்; இந்து மதவெறி பயங்கரவாதத்தை நேருக்கு நேராகத் தாக்க முடியும். அதுவரை மும்பயில் நிலவும் அமைதியை, வெடிகுண்டின் திரி எரியும் பொழுது ஒருவித அமைதி நிலவுமே, அதோடு மட்டுமே ஒப்பிட முடியும்.
மு செல்வம்