9_2006.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை சிங்கள இனவெறி பாசிச அரசுக்கும் இடையிலான போர் நிறுத்தம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நான்காண்டுகளுக்குப் பிறகு எவ்வித சடங்கும் முன்னறிவிப்பும் இல்லாமல் முடிவுக்கு வந்துவிட்டது. எந்தத் தரப்பும் கிரமமாகப் பிரகடனம் செய்யாத உக்கிரமான போர் ஈழத்தில் நான்காவது

 முறையாக மூண்டிருக்கிறது. சிங்கள இராணுவம் போர்க்களத்தில் படுதோல்வியையும், இழப்பையும் சந்திப்பதும், ஆத்திரத்தில் பதிலடியாக ஈழத் தமிழ் மக்களை மிருகத்தனமாகக் கொன்று குவிப்பதும், சொந்த மண்ணையும் வீடு வாசலையும் உற்றார் உறவினர்களையும் இழந்து இலட்சக்கணக்கில் அகதிகளாக அலைவதும், அகதி முகாம்களில் வதைபடுவதும் தஞ்சம் புகுந்த இடங்களையும் சிங்கள விமானப் படை குண்டுவீசி அழிப்பதும் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது.

 

போர் நிறுத்தமும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏகாதிபத்தியங்களால் மேலிருந்து திணிக்கப்பட்டவைதாம் என்றபோதும் தொடர்ந்து சுமார் 20 ஆண்டு போர்களால் ஏற்பட்ட துயரத்தை தணித்துக் கொள்ள ஈழத் தமிழர்களும், அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்த சிங்கள மக்களும் அதை வரவேற்றனர். ஆனால், அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முன்னின்று கொண்டு வந்த போர் நிறுத்தமும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கு நாடுகளுக்கு இலங்கையின் இறையாண்மையை அடகு வைப்பதாகவும், சிங்கள நலன்களை புலிகளிடம் இழப்பதாகவும் உள்ளதென்று சந்திரிகா ராஜபக்சே தலைமையில் அணிதிரண்ட ஜே.வி.பி. மற்றும் உறுமய ஆகிய சிங்கள இனவெறி கட்சிகள் எதிர்த்தன. ரணிலும் தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை முன்னிறுத்தி அமைதி முயற்சிகளைக் கிடப்பில் போட்டு புலிகளின் எதிர்ப்பைப் பெற்றார். இதனால் புலிகள் மேற்கொண்ட ""தேர்தல் புறக்கணிப்பு'' என்ற அரசியல் முடிவைப் பயன்படுத்திக் கொண்டு ராஜபக்சே தலைமையிலான அப்பட்டமான சிங்கள பாசிச கும்பல் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

 

ஈழப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வை மட்டுமே எப்போதும் நம்பியிருக்கும் சிங்கள இனவெறி பாசிஸ்டுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தளபதி கருணா வைத்துப் பிளவுபடுத்தி, ஒரு கைக்கூலிப் படையை ஏற்படுத்தி நிழல் சண்டையை, இரகசியப் படுகொலைகளைத் தொடங்கி நடத்தியது. ஈழத்தின் மறுநிர்மாண மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், சுனாமி நிவாரணத்துக்காகவும் அமைக்கப்படும் கூட்டு அமைப்புகளில் புலிகள் இடம் பெறுவதை ஜே.வி.பி., உறுமய முதலிய சிங்கள இனவெறி அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. புலிகளும் தமது இராணுவ வலிமையைக் காட்டி சிங்கள அரசை நிர்பந்திக்கவும் துரோகிகளைப் பலிவாங்கவும் பல தற்கொலைப் படைத் தாக்குதல்கள், இரகசிய அழித்தொழிப்புகளை நடத்தினர்.

 

இத்தகைய தாக்குதல்களின் வரிசையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமன் கதிர்காமர் கொலை, இலங்கை இராணுவத் தளபதி மீதான தற்கொலைப் படைத் தாக்குதல் துணைத்தளபதி உட்பட இராணுவத்தினர் பலர் கொன்றொழிக்கப்பட்டனர். அந்நிய நாட்டு அமைதிக் கண்காணிப்புக் குழுவினர் உட்பட இலங்கை இராணுவத்தினர் படைமுகாமுக்குத் திரும்பிய கப்பல் மீதான புலிகளின் கடற்படைத் தாக்குதல் முயற்சி ஆகிய நிகழ்ச்சிகளைக் காட்டி புலிகளுக்கு எதிராக ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் சிங்கள இனவெறி அரசு வெற்றி பெற்றது. ஐரோப்பிய ஒன்றியம் (26 நாடுகளின் கூட்டமைப்பு) புலிகளைப் பயங்கரவாத அமைப்பென்று பிரகடனப்படுத்தி, தனிமைப்படுத்துவதிலும் வெற்றி பெற்றது. இந்தச் சாதகமான நிலைமையைப் பயன்படுத்தி இனவெறிப் போர் தொடுத்து ஈழப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு கண்டுவிட முடிவு செய்தது, சிங்கள இனவெறி அரசு. ஆனால், அதன் இராணுவ வெறிச் செயல்கள் தற்போது சிங்கள இனவெறி அரசை அதன் பாரம்பரிய ஆதரவு மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் கூட கண்டிக்கும் அளவுக்குப் போய்விட்டது.

 

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் ஓடும் மாவிலாறு அணையின் மூலம் முத்தார், செருவிலா, இச்சாலம்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள எல்லாச் சமூகத்தையும் சேர்ந்த 15,000 ஏழைஎளிய குடும்பங்கள் விவசாயம் செய்து வந்தன. அந்தப் பகுதியை முற்றுகையிட்டுக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள், நீர்நிலையைப் பணயம் வைத்துப் போர் புரிவதாகக் குற்றஞ்சாட்டி, விமான த் தாக்குதலில் ஈடுபட்டது, இலங்கை அரசு. புலிகளுக்கும் இலங்கை அமைதி கண்காணிப்புக் குழுவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது; அணையின் கதவுகளைத் திறக்க புலிகளின் பகுதித் தளபதிஎழிலனுடன் மாவிலாறு அணைக்கு போன கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த (பிரெஞ்சு நாட்டு அரசு சாரா நிறுவனத் தொண்டர்கள்) 15 பேர் மீது வேண்டுமென்றே குண்டு வீசித் தாக்கிக் கொன்றது சிங்கள இனவெறி அரசு. பிறகு ஈழத் தமிழ் மாணவிகள் தஞ்சம் புகுந்திருந்த செஞ்சோலை பள்ளியின் மீது விமானக் குண்டுவீசி 61 பேரைக் கொன்று குவித்தது. இது போன்ற மிருகத்தனமான தாக்குதல்கள் உலகெங்கும் கடும் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது. இவையெல்லாம் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியென்று புளுகி சிங்கள அரசு எக்காளமிடுகிறது. ஆனால், விடுதலைப் புலிகள் முதன்முறையாக விமானத் தாக்குதல் மூலம் பதிலடி கொடுப்பது சிங்கள இனவெறி அரசை கிலிபிடிக்கச் செய்திருக்கிறது. ஈழ மக்கள் மீது இராணுவ ரீதியான தீர்வு எதையும் திணிக்க முடியாது என்பதையே இன்றைய போர்நிலைமைகள் காட்டுகின்றன.

 

அதேசமயம், சிங்கள இனவெறியில் மூழ்கிப் போயுள்ள இலங்கை ஆளும் கும்பல்கள் ஒன்று மாறி மற்றொன்று இனவெறிக்குத் தூபம் போட்டு ஆதாயம் அடைய எத்தணிக்கின்றனவே தவிர, அரசியல் தீர்வுக்கு எவையும் இடந்தரவில்லை. எத்தரப்புக்கும் இறுதி வெற்றி இல்லாத இழுபறி நிலையே மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்பதையே களநிலைமைகள் உறுதி செய்கின்றன