டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற தன்னார்வ நிறுவனம், அமெரிக்க கோக்பெப்சி முதலான குளிர்பானங்களில் அளவுக்கதிகமாக நஞ்சு கலந்துள்ளதை ஆதாரங்களோடு மீண்டும் நிரூபித்துள்ளதையடுத்து, நாடெங்கும் கோக்பெப்சி எதிர்ப்புணர்வும் போராட்டங்களும் பெருகத் தொடங்கியுள்ளன. கேரள மாநில அரசு கோக் உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை விதித்துள்ளது. குஜராத், கர்நாடக அரசுகள் தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள், தாமிரவருணியை உறிஞ்சவரும் அமெரிக்க கோக்கை எதிர்த்து மிக விரிவாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டதோடு, கடந்த ஆண்டு செப்.12ஆம் நாளன்று நெல்லையில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தையும், கோக் ஆலை அமைந்துள்ள நெல்லை கங்கை கொண்டானில் மறியல் போராட்டத்தையும் நடத்தின. புரட்சிகர அமைப்புகள் மூட்டிய இப்போராட்ட நெருப்பானது, இன்று தமிழகமெங்கும் பெருந்தீயாகப் பற்றிப் பரவத் தொடங்கியுள்ளது. புரட்சிகர அமைப்புகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும், வணிகர் சங்கங்களும் பள்ளிக் குழந்தைகளும் அமெரிக்க உயிர்க்கொல்லி கோக்பெப்சியை உடனே தடை செய்யக் கோரி தன்னெழுச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
கோக்கும் பெப்சியும் வெறும் நச்சுப் பானங்களல்ல; அவை, அமெரிக்க மூத்திரம்; அமெரிக்க மேலாதிக்கத்தின் சின்னம்; ஏகாதிபத்தியக் கொள்ளையின் அடையாளம். கோக் எதிர்ப்புப் போராட்டம் என்பது மறுகாலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் அங்கம் என்பதை விளக்கி மக்களிடம் பிரச்சாரம் செய்து வரும் புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் கோக் எதிர்ப்புப் போராட்டத்தை வீச்சாக நடத்தி வருகின்றன.
மு தஞ்சையில், 8.8.06 அன்று மாலை கீழவாசல் காமராசர் சிலை அருகே ம.க.இ.க., பு.மா.இ.மு அமைப்புகள் இணைந்து கோக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் கோக் பாட்டில்களைத் தெருவில் போட்டு உடைக்கும் போராட்டத்தையும் நடத்தின. அமெரிக்க மூத்திரமாகிய கோக்பெப்சியைத் தடை செய்து, அதன் சொத்துக்களை நட்ட ஈடின்றிப் பறிமுதல் செய்ய வேண்டும்; இளநீர், மோர் போன்ற குளிர்பானங்களைப் பருகி, இளைஞர்கள் நாட்டுப்பற்றைச் சுவைக்க முன்வரவேண்டும் என்பதை விளக்கி எழுச்சியுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டமும் கோக் பாட்டில்களை உடைக்கும் போராட்டமும் இளைஞர்களிடமும் உழைக்கும் மக்களிடமும் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.
மு ஓசூரில் 9.8.06 அன்று காலை முதல் மாலை வரை பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து ""கோக்பெப்சி உள்ளிட்ட 16 வகையான பன்னாட்டு நச்சுக் குளிர்பானங்களைத் தடைசெய்! அவற்றின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!'' என்ற முழக்கத்துடன் தெருமுனைக் கூட்டங்களையும் விளக்கக் காட்சிகளையும் மக்கள் மத்தியில் நடத்தின. அரசுப் பள்ளிகள், நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், கடைவீதிகள் எனப் பல்வேறு இடங்களில் நடந்த இத்தெருமுனைக் கூட்டங்களை உழைக்கும் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று ஆதரவளித்தனர். பள்ளி மாணவர்கள் கோக் எதிர்ப்புப் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, ""அமெரிக்க மூத்திரத்தை நாங்கள் குடிக்க மாட்டோம்!'' என்று கோக்பெப்சியைக் கீழே கொட்டித் தங்களது எதிர்ப்பைக் காட்டினர். இதைக் கண்டு உணர்வும் உற்சாகமும் அடைந்த தாய்மார்கள், ""எங்கள் குழந்தைகளை உங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய அனுப்புகிறோம்; அடுத்ததாக இதுபோல கோக் எதிர்ப்புப் பிரச்சாரம் நடக்கும்போது எங்களுக்குத் தெரிவியுங்கள்'' என்று அக்கறையோடு தமது முகவரிகளைக் கொடுத்தனர்.
மு நெய்வேலியில் 17.8.06 அன்று மந்தாரக்குப்பம் பேருந்துநிலையம் அருகே பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள் இணைந்து ""உயிரைக் குடிக்கும் கொலைகார கோக்பெப்சியைத் தடை செய்!'' என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தின. எந்தத் தொழிற்சங்கமும் கோக்பெப்சிக்கு எதிராகப் போராட முன்வராத நிலையில் பு.ஜ.தொ.மு. நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்றது.
மு ""தாமிரவருணி எங்கள் ஆறு! அமெரிக்க "கோக்'கே வெளியேறு! தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்!'' என்ற முழக்கத்தின் கீழ் நெல்லையில் புரட்சிகர அமைப்புகள் கடந்தஆண்டிலிருந்து நடத்திவரும் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள கோக் எதிர்ப்புப் போராட்டக்குழு, 17.8.06 அன்று மாலை நெல்லை சந்திப்பு பேரங்காடி முன்பாக கோக்பெப்சியைத் தடை செய்யக் கோரி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கோக் எதிர்ப்புப் போராட்டக் குழு தலைவரான வழக்குரைஞர் இரா.சி. தங்கசாமி அவர்கள் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மூத்த வழக்குரைஞர் மங்களா எஸ்.ஜவகர்லால், நெல்லை மாவட்ட வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் முருகேசன், பா.ம.க. மாநகரத் தலைவர் மோகன்ராஜ், மானூர் ஒன்றிய கவுன்சிலர் மணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, தாமிரவருணியை உறிஞ்சிப் பேரழிவை விளைவிக்க வந்துள்ள கோக் ஆலையை வெளியேற்ற வேண்டிய அவசியத்தை விளக்கிக் கண்டன உரையாற்றினர். கோக் எதிர்ப்புணர்வு நெல்லை மக்களின் நெஞ்சில் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில், அவர்களது போராட்ட உணர்வுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது. கோக் கம்பெனியின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து நெல்லைகங்கை கொண்டான் வட்டார மக்களிடம் 22ஆம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை கோக் எதிர்ப்புபு போராட்டக் குழுவினர் நடத்தி வருகின்றனர்.
மு கோக் ஆலை அமைந்துள்ள நெல்லைகங்கை கொண்டானில் ஆகஸ்ட் 15 அன்று நடந்த கிராமசபைக் கூட்டத்தில், கோக் ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்து அதை வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோகோ கோலா ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் பகுதிவாழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை விளைவிக்கின்றன; கம்பெனியில் மூட்டை மூட்டையாக வைத்துள்ள மூலப் பொருட்கள் மழைக்காலங்களில் கரைந்து வெளியேறி சுற்றுப்புறக் குளங்களை நஞ்சாக்கியுள்ளன; ஆலையிலிருந்து இரவு 11 மணிக்கு மேல் வெளியேற்றப்படும் நச்சுப் புகையால் மூச்சுத் திணறலும் வாந்தியும் ஏற்படுகிறது என்று ஆவேசமாகக் குற்றம் சாட்டிய உறுப்பினர்களும் பொது மக்களும் கோக் ஆலையை உடனடியாக வெளியேற்றக் கோரினர். கோக்கிற்கு ஆதரவாகப் பேச முற்பட்ட கைக்கூலி மனோகரன் என்பவனை கூட்டத்தினர் ஆத்திரத்தோடு தாக்க முற்பட்டதும் போலீசு தலையிட்டு அவனை மீட்டுச் சென்றது.
கோக்கினால் மனித உயிருக்கு ஏற்படும் பேரழிவுகளைச் சித்தரித்து விளக்கும் சுவரொட்டி பிரச்சாரம், கழுதைக்கு கோக் குடிக்கக் கொடுக்கும் போராட்டம், கோக்கை ஊற்றி கக்கூசு கழுவும் போராட்டம், கோக்கிற்கு வக்காலத்து வாங்கிய இந்தி நடிகன் ஷாருக்கானுக்கு எதிரான போராட்டம் எனப் பல வடிவங்களில் நாடெங்கும் ஆங்காங்கே போராட்டங்கள் தொடர்கின்றன. கோக்கிற்கு எதிரான இப்போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அமெரிக்க நஞ்சை நம்மீது திணிக்கும் அரசியல் அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டமாக, மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டமாக முன்னெடுத்துச் செல்வதே இன்றைய அவசர அவசியத் தேவையாக உள்ளது.
ஓங்கட்டும் கோக் எதிர்ப்புப் போராட்டம்! ஒழியட்டும் மறுகாலனியாதிக்கம்!
பு.ஜ. செய்தியாளர்கள்.