""ஐயோ, பயங்கரவாதம்!'' தமிழகமே தீவி ரவாத பயங்கரவாதிகளின் பாசறையாக மாறிவிட்டதைப் போலவும் தமிழகத்துக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளதைப் போலவும் கடந்த இரு மாதங்களாக போலீசும் பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் தொடர்ந்து பீதியூட்டி வருகின்றன. ஆகஸ்ட் 15ஆம் நாளன்று
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக பீதியூட்டப்பட்டு, எங்கெங்கும் போலீசும் சிறப்பு அதிரடிப் படைகளும் குவிக்கப்பட்டன. ஒரு வாரம் முன்பிருந்தே கல்பாக்கம் அணுமின் நிலையப் பகுதியில் மக்கள் சுதந்திரமாக நடமாடக் கூட முடியாதபடி அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, கெடுபிடிகளும் சோதனைகளும் தொடர்ந்தன.
அதன்பிறகு, புலிகள் ஊடுருவல், ஆந்திராவிலிருந்து நக்சலைட் தீவிரவாதிகள் ஊடுருவல், பெருநகரங்களில் தொழில்நுட்ப மையங்களைத் தகர்க்க சதி, நக்சலைட்டுகள் ஏவுகணை தயாரிப்பு, ""ராக்கெட்'' ரகு தலைமறைவு, தமிழகத்துக்கு ஆபத்து ""ரெட் அலர்ட்'' என்றெல்லாம் பார்ப்பன தினமலரிலிருந்து "சூத்திர' தினகரன் வரை எல்லா நாளேடுகளும் கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டு அலறின. தமிழக எல்லைப் பகுதிகளில் போலீசு அதிரடிப் படைகள் குவிக்கப்பட்டு வாகனச் சோதனையும் காடுகளில் தேடுதல் வேட்டையும் பேருந்து ரயில் பயணிகளிடம் சோதனையும் விசாரணைகளும் நடந்தன. தீவிரவாத பீதியைச் சாக்கிட்டு, கடந்த செப்டம்பர் 12ஆம் நாளன்று நக்சல்பாரி புரட்சியாளர் தியாகத் தோழர் பாலனுக்கு தருமபுரியில் ஆண்டுதோறும் வழமையாக நடந்துவரும் வீரவணக்க அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கூட போலீசு தடை விதித்து அச்சுறுத்தியது.
இந்தப் பீதியூட்டல்களும் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் வெறுமனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அல்ல. பயங்கரவாதத்தை முளையிலேயே கிள்ளியெறிவது என்ற பெயரால், மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தைக் கூட தடை செய்து, பாசிச கருப்புச் சட்டங்களை ஏவி, அரசு பயங்கரவாதத்தை நிரந்தரமாக்குவதற்கு முகாந்திரம் தேடும் வகையிலேயே இந்தக் கெடுபிடிகளும் பீதியூட்டல்களும் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன.
உண்மையில், வேறொரு கொடிய பயங்கரவாதம் நாட்டையும் மக்களையும் பிடித்தாட்டி பேரழிவை விளைவித்துக் கொண்டிருக்கிறது. ஓராயிரம், ஈராயிரம் பேர்களல்ல; தாராளமயம் தோற்றுவித்த இந்தப் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேலாகும். இவர்கள் அத்தனை பேரும் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள். தனியார்மயம் தாராளமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கை நடைமுறைக்கு வந்த 1993இலிருந்து 2003 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் 1,00,248 விவசாயிகள் இப்பயங்கரவாதத் தாக்குதலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இது, மைய அரசின் விவசாய அமைச்சரான சரத்பவார், கடந்த மே 18ஆம் நாளன்று நாடாளுமன்றத்திலேயே ஒப்புக்கொண்ட கணக்கு.
இந்தப் பயங்கரவாதம் இன்னமும் தொடர்ந்து வேர்விட்டுப் பரவிக் கொண்டிருக்கிறது. இவ்வாண்டு "சுதந்திர' தினத்திற்குப் பிறகு, மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் 15 நாட்களில் 60 விவசாயிகளை இப்பயங்கரவாதம் காவு கொண்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ""வெள்ளைத்தங்கம்'' எனப்படும் பருத்தி சாகுபடி செய்யும் சிறு விவசாயிகள். தாராளமயத்தால் ஏற்பட்ட விலை வீழ்ச்சியாலும் கந்துவட்டிக் கொடுமையாலும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இவ்வாண்டு செப்.10ஆம் தேதி முடிய மொத்தம் 852 விவசாயிகள் விதர்பா பிராந்தியத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். மகாராஷ்டிரா மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா என அடுத்தடுத்து பல மாநிலங்களில் இப்பயங்கரவாதம் விவசாயிகளைக் காவு கொண்டு வருகிறது.
தாராளமயம் எனும் மிகக் கொடிய இம்மறுகாலனிய பயங்கரவாதத்தை மூடி மறைத்து திசைதிருப்பவும், இப்பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் மக்களை ஒடுக்குவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்தான் ""ஐயோ பயங்கரவாதம்!'' என்ற பீதியை ஆளும் கும்பலும் பத்திரிகைகளும் திட்டமிட்டே ஊதிப் பெருக்குகின்றன; பெருங்கூச்சல் போட்டு வருகின்றன.