Language Selection

10_2006.jpg

அண்மைக் காலமாக உணவு தானியங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய மக்களின் கழுத்தை நெறித்து வருகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 வரை உயர்ந்துள்ளன. ரூ. 2830 ஆக இருந்த உளுத்தம் பருப்பின் விலை இன்று ரூ. 5055 ஆக உயர்ந்து விட்டது. இதர பருப்பு வகைகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது.

திடீரென ஏற்பட்ட இந்த விலையேற்றத்துக்குக் காரணம் என்ன? பெட்ரோல் டீசல் விலையேற்றம் ஒரு முக்கிய காரணம் என்றாலும், ""இணையதள விற்பனை'' எனும் உலகளாவிய ஊக வணிகமே இந்த விலையேற்றத்துக்கு அடிப்படையாக உள்ளது.

 

ஆங்கிலத்தில் ""ஆன்லைன் டிரேடிங்'' (Online Commodity Trading; Futures Trading) என்றழைக்கப்படும் இணைய தள விற்பனை என்பது, இரு நபர்களுக்கிடையே அல்லது இரு நிறுவனங்களுக்கிடையே ஒரு பொருளை ஊக விலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் வாங்கவும் விற்கவும் இணையதளம் மூலம் செய்து கொள்ளப்படுகின்ற ஓர் ஒப்பந்தமாகும். அதாவது, ஒரு விற்பனையாளர் 3,4 மாதங்களுக்குப் பிறகு தோராயமான ஊக விலைக்கு உணவு தானியங்களை வாங்குவதாக, வாங்குபவரிடம் இணையதளம் மூலம் ஒப்புக் கொள்ளும் முறையாகும். அரிசி, பருப்பு, காய்கறிகள் முதல் தங்கம் வரை 150க்கும் மேற்பட்ட பொருள்கள் தற்போது ""ஆன்லைன் வர்த்தகம்'' எனப்படும் இணையதள விற்பனைக்கு வந்துள்ளன. இத்தகைய இணையதள விற்பனையை எளிதாக்கும் பொருட்டு பல்வேறு தொடர்பக நிறுவனங்கள் (எக்ஸ்சேஞ்சுகள்) இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் ஒருநாளைக்கு ஏறத்தாழ ரூ. 5,000 கோடி அளவுக்கு விற்பனைப் பரிமாற்றங்கள் நடந்து வருகின்றன.

 

மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது ஒரு எளிய பரிமாற்றமுறை போலத் தோன்றினாலும், இது ஊக வணிகர்களின் கொள்ளைக்கும், பதுக்கலுக்கும், கள்ளச் சந்தைக்கும், விலையேற்றத்துக்குமான ஒரு ஏற்பாடேயாகும். உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும், உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு தொழில்களின் அழிவுக்கும், ரூபõயின் மதிப்பு செல்லாக்காசாகிப் போவதற்குமான இன்னுமொரு ஏகாதிபத்திய சதியே ஆகும்.

 

ஒரு பருப்பு வியாபாரியிடம் 5 டன் பருப்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவரிடம் ஒரு நிறுவனம் இணையதளம் மூலம் கிலோ ரூ. 30க்கு உளுத்தம் பருப்பு வாங்க ஒப்பந்தம் செய்து கொள்கிறது. பிறகு, வேறொரு நிறுவனம் அதே வியாபாரியிடம் ஒரு கிலோ பருப்பை ரூ. 50க்கு வாங்குவதாகவும், தமக்கு 10 டன் பருப்பு தேவை என்றும் கேட்கிறது. அவர் ரூ. 30க்கு பருப்பை விற்பதாக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனத்திடமிருந்து, அதே பருப்பை ரூ. 40க்கு வாங்கிக் கொள்வதாக புதிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, அந்தப் பருப்பை ரூ. 50க்கு வாங்குவதாகக் கூறிய நிறுவனத்திடம் விற்க ஒப்புக் கொள்கிறார். இப்படி பல நிறுவனங்கள் அதிக விலைக்கு வாங்குவதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்கின்றன. நாட்டின் ஒட்டு மொத்த பருப்பு விளைச்சலும் இந்த நிறுவனங்களின் இரும்புப் பிடியில் சிக்கிக் கொண்டு விடுகிறது.

 

பிறகு இந்த நிறுவனங்கள், அவற்றைப் பதுக்கி வைத்துக் கொண்டு தட்டுப்பாட்டை உருவாக்கி, மீண்டும் விலையை உயர்த்தி அதே பருப்பு வியாபாரியிடம் கிலோ ரூ. 60க்கு விற்கின்றன. கடைசியில் ரூ. 30க்கு விற்ற பருப்பு இந்த இணையதள ஊக வணிக சூதாட்டத்துக்குப் பிறகு ஒருமடங்கு விலை ஏறிவிடுகிறது. இதனால் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிக்கோ, விற்பனை செய்யும் வியாபாரிக்கோ ஒரு பலனுமில்லை; மாறாக, விலையேற்றத்தின் பாரத்தை அவர்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. உற்பத்தியிலோ விற்பனையிலோ எவ்வித பங்களிப்பையும் செய்யாத நிழல் தரகர்களான இந்த நிறுவனங்கள், ஊக வணிகத்தின் மூலம் கோடிகோடியாய் கொள்ளையடிக்கின்றன.


கடந்த சில மாதங்களில், இணைய தள விற்பனையின் விளைவாக, உளுந்துக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு, உளுத்தம்பருப்பின் விலை ஒரு மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் அப்பள உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


இந்தியாவின் பருப்புத் தேவை ஆண்டுக்கு ஏறத்தாழ 300 லட்சம் டன்கள்தான். ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் ஏறத்தாழ 6 கோடி டன்கள் அளவுக்கு ""ஆன்லைன் வர்த்தகம்'' மூலம் சூதாட்டம் நடந்துள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமாக இந்த சூதாட்ட வர்த்தகம் நடந்தபோதிலும், உண்மையில் இந்த இணையதள விற்பனை மூலம் ஏறத்தாழ 6000 டன்கள் அளவுக்குத்தான் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 6000 டன் பருப்பு வாங்கிய ஒருவர் அதை 6 கோடி டன் பருப்பாக மாற்றி விற்க முடியுமா? ஒருக்காலும் சாத்தியமில்லை என்று நீங்கள் அடித்துச் சொல்லலாம். ஆனால், இதுதான் ஊக வணிகச் சூதாட்டம். எவ்வித உரிமமோ, கட்டுப்பாடோ இல்லாமல், உற்பத்திக்கும் வியாபாரத்துக்கும் தொடர்பே இல்லாத கோட்டுசூட்டு போட்ட பேர்வழிகள், குளுகுளு அறையில் கணிப்பொறி முன்னே அமர்ந்து கொண்டு நடத்தும் இந்த சூதாட்டக் கொள்ளைக்குப் பெயர்தான் ""ஆன்லைன் வர்த்தகம்.'' சூடாக நடக்கும் இந்தச் சூதாட்டத்தைத்தான், ""விறுவிறுப்பான வர்த்தகம், பங்குச் சந்தை விலைப் புள்ளிகள் உயர்வு'' என்றெல்லாம் பொருளாதார சூரப்புலிகளும் ஆட்சியாளர்களும் சித்தரித்து, நாடு நால்கால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாக நமது காதில் பூச்சுற்றுகின்றனர்.

 

ஆனால், இணையதள விற்பனை எனப்படும் இந்த ஊக வணிகச் சூதாட்டத்தினால், விலைவாசிகள் தாறுமாறாக உயர்கின்றன. இணைய தள சூதாட்ட வர்த்தகர்கள் செயற்கையான உணவுதானியத் தட்டுப்பாட்டை உருவாக்குவதால் கடத்தலும் பதுக்கலும் கள்ளச் சந்தையும் பெருகுகின்றன. இந்த இணையதள விற்பனையால், நேரடி கொள்முதல் விற்பனைக்காக வாய்ப்புகள் குறைந்து பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளும், மண்டித் தொழிலாளர்களும் சரக்கு போக்குவரத்துத் தொழிலாளர்களும் வாழ்விழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரமே சூதாட்டமாகி திவாலாகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், நாட்டைச் சூறையாடி வரும் ஏகாதிபத்தியங்கள், உணவுதானிய வர்த்தகத்தையும் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்யும் மறுகாலனியத் தாக்குதலின் ஓர் அங்கம்தான் ""ஆன்லைன் வர்த்தகம்''.

 

இணையதள விற்பனை ஏற்பாட்டின் மூலம் தரகுப் பெருமுதலாளித்துவ ஏகாதிபத்திய வர்த்தக சூதாடிகளின் பகற்கொள்ளைக்குப் பட்டுக் கம்பளம் விரித்து விசுவாச சேவை செய்து வரும் காங்கிரசு கூட்டணி அரசு, இதுவும் போதாதென்று பருப்பு இறக்குமதியைத் தாராளமயமாக்கி, இறக்குமதிக்கான சுங்கவரியை 10% குறைத்துள்ளது. மழைவெள்ளம் காரணமாக, கடந்த ஆண்டில் பயறு விளைச்சல் குறைந்துவிட்டதால், தட்டுப்பாட்டைப் போக்க அரசாங்கம் தாராளமாக இறக்குமதி செய்யும் என்பதைத் தெரிந்து கொண்ட அன்னிய வர்த்தக நிறுவனங்கள், பயறு விலையைத் தாறுமாறாக உயர்த்திக் கொண்டு ஆதாயமடைந்தன. தற்போது சுங்கவரிக் குறைப்பினால் இரட்டை ஆதாயமடைந்துள்ளன. அதேநேரத்தில், அந்நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பயறினை உடைத்து பருப்பாக மாற்றும் சிறு தொழில் பருப்பு ஆலை உரிமையாளர்களும் வியாபாரிகளும் இணையதள விற்பனையால் பாதிக்கப்பட்டு நிற்கிறார்கள். சாமானிய மக்களோ விலையேற்றத்தால் திணறுகிறார்கள்.

 

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு அடித்தளம் அமைக்கும் இணையதள விற்பனையின் கொள்ளையையும் பாதிப்பையும் உணரத் தொடங்கியுள்ள உள்ளூர் வர்த்தகர்களும் வியாபாரிகளும் ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்யக் கோரி கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். ""ப.சிதம்பரம் அண்ணாச்சி, பருப்பு விலை என்னாச்சி?'' என்பதோடு இக்கண்டனக் குரல் முடங்கிவிடாமல், போராட்டப் பெருங்குரலாகக் கிளர்ந்தெழ வேண்டும்; ஆன்லைன் வர்த்தகத்துக்குத் தடை செய்யக் கோரும் இப்போராட்டத்தை, நாட்டைச் சூறையாடும் மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டமாக வியாபாரிகளும் உழைக்கும் மக்களுக்கும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

 

மு குமார்