இந்தியாவின் நுழைவாயில் என சித்தரிக்கப்படும் வர்த்தகப் பெருநகரான மும்பையின் தென்பகுதியில், 12,000 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மாண்டமான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க மைய அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக நவி மும்பை, ராய்காட் பகுதிகளில் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. குறிப்பாக,
கொங்கண் பிராந்தியத்திலுள்ள பென், பன்வெல், ஊரன் பகுதியில் 45 கிராமங்களை ஆக்கிரமித்து 25,000 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை முதற்கட்டமாக நிறுவ அரசு முயற்சித்து வருகிறது.
நில ஆக்கிரமிப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே, இவ்வட்டார விவசாயிகள் விழிப்புற்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ""மகா மும்பை ஷேத்காரி சங்கர்ஷ் சமிதி'' (அகண்ட மும்பை விவசாயிகள் போராட்ட சங்கம்) என்ற அமைப்பின் கீழ் அணிதிரண்டுள்ள விவசாயிகள் கடந்த 21.9.06 அன்று பெலாபூரில் 40,000 பேருக்கும் மேலாகத் திரண்டு பேரணி ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். முன்னாள் பிரதமர் வி.பி.சிங், சி.பி.எம். கட்சியின் எச்சூரி, விவசாயத் தொழிலாளர் கட்சியின் தலைவர்கள் முதலானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை மும்பை மட்டுமின்றி, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அனுமதிக்க மாட்டோம் என்று விவசாயிகள் சூளுரைத்துள்ளனர்.
சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க வந்துள்ள முகேஷ் அம்பாணியின் ரிலையன்ஸ் நிறுவனம், இப்பகுதியில் மருத்துவமனை மற்றும் இதர சேவைகளைச் செய்யப் போவதாகவும், அனைத்து கிராம மக்களுக்கும் வேலைதரப் போவதாகவும் மக்களிடம் ஆசை காட்டி போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய முயற்சித்து வருகிறது. இதை அம்பலப்படுத்தி, பல்வேறு அமைப்புகள் விவசாயிகளிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் வீதி நாடகங்களையும் கிராமந்தோறும் நடத்தி வருகின்றன. போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து வருகின்றன.