இனவாத மதவாத.. அரசியல் மூலம் கடந்தகாலங்களில் ஆட்சியதிகாரங்களுக்கு வந்த கும்பல்கள், மீண்டும் தங்கள் இருப்பைத் தக்கவைக்க மறுபடியும் பித்தலாட்டங்களுடன் அரசியலில் களமிறங்கியுள்ளனர்.
மாற்றம் வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தொடர்ந்து களமிறங்கியவர்கள், தங்கள் இனவாதத்தை, மதவாதத்தைக் கைவிடவில்லை. இளைஞர்கள், படித்ததவர்கள், பெண்கள் … என்று புதிய கோசத்தைப் போட்டுக்கொண்டு, புதிய வேசத்தை மாற்றிக் கொண்டு, பழைய அதே அரசியலில் படுத்துப் புரளுகின்றனர்.
உதய கம்மன்பில, ஈஸ்ரர் தாக்குதல் பற்றிய புதிய விசாரணை நாட்டுக்கு எதிரான சதியென்றும், "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்ற தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் பக்கம் 230 இல் மதச்சார்பற்ற நாடு என்று இருப்பதாகக் கூறி, இது பவுத்தத்துக்கு எதிரானது என்று கூறி பழைய மதவாத அரசியலை முன்வைக்கின்றனர்.
மறுபக்கம் தமிழ்த் தேசியமானது தனது வங்குரோத்து பிழைப்புவாத சொகுசு வாழ்க்கையை மறுபடியும் நிறுவிக்கொள்ள, பல பத்து இனவாதக் குழுக்களாக மாறி – தங்கள் இனவாதத் தூய்மை பற்றிப் பிதற்றிக் கொள்கின்றனர். டொக்டர் அருச்சுனாவோ கொள்கையற்ற தனக்கு வேண்டப்பட்டவர்களை முன்னிறுத்திக் கொண்டு, முன்னாள் தமிழ்த்தேசிய பிராடுகளுக்கு சவால் விடுவதுடன், தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மறுத்து அவர்களின் ஆன்மாவையே புதைத்த பிரபாகரனின்; வாரிசு என்கின்றார்.
இப்படி உதய கம்மன்பிலவுக்கு நிகராகவே பலர் தமிழ், முஸ்லிம், மலையகம். என்று தனித்தனியாக இனவாதங்கள், மதவாதங்கள் மூலம் வாக்குகளைக் கோருகின்றனர்.
இந்தகைய சூழலில் உதய கம்மன்பிலவின் இனமத வாதமானது, தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுகின்றது. அடிப்படைவாத இஸ்லாமியப் பயங்கரவாதம் மூலம் 2019 இல் நடந்த ஈஸ்ரர் தாக்குதலானது, அன்று நடக்கவிருந்த தேர்தல் அரசியல் வெற்றிக்காக நடத்தப்பட்டது. 2019 இல் கோத்தபாயவின் வெற்றி, இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் மூலமே உறுதி செய்யப்பட்டது.
இதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பயன்படுத்திய சம்பவம் தான், ஈஸ்ரர் தாக்குதல். இந்தப் பயங்கரவாத தாக்குதலுடன் இணைந்து செயற்பட்ட அரச பயங்கரவாதத்தின் பிரதிநிதிகளான அதிகார வர்க்கமும், அவர்களை முன்னின்று வழிநடத்திய அரசியல் வாதிகளும், தங்களது பங்கை மூடிமறைக்க எடுக்கும் முயற்சியே, தாங்கள் நடத்திய விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளர். இதன் மூலம் தங்களின் இந்த விசாரணையே உண்மையென்று கூற முற்படுகின்றனர்.
இதன் மூலம் 2019 இல் இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலை வழிநடத்திய கும்பல், மீண்டும் உதய கம்மன்பில மூலம் உயிர்தெழும்பியிருக்கின்றது. 2019 இல் நடந்தது இஸ்லாமியப் பயங்கரவாதமே ஒழிய, அரசுடனிருந்த சிங்களப் பவுத்த பேரினவாத அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நிறுவ முற்படுகின்றனர்.
இதன் மூலம் புதிதாக நடக்கவுள்ள விசாரணைகளைத் தடுத்து நிறுத்தவும், புதிய விசாரணைகளை தொடங்கியுள்ளவர்களையே குற்றவாளியாக்கவும் முனைந்துள்ளனர்.
2009 இல் புலிகளை அழித்த பெருமையைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், 2015 இல் தோற்றுப் போனார்கள். 2019 இல் மீண்டும் வெற்றிபெற நடத்திய தாக்குதலே, ஈஸ்ரர் தாக்குதல். இதில் சம்மந்தப்பட்டவர்கள், இன்று தம்மை பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகளும், திசை திருப்பல்களுமே உதய கம்மன்பில வெளியிட்ட அறிக்கையின் பொது சாரமாகும். இதன் ஒரு அங்கமாகவே, பிள்ளையான் வெளியிட்ட புத்தகமும் அடங்கும்.
அடிப்படைவாத இஸ்லாமியமானது விடுதலைக்கானது, கடவுளுக்கானது, உண்மையானது.. என்ற எல்லா மதப் பொய்களும் இந்த தாக்குதல் மூலம் அம்பலமாகியது. இனவாதம், மதவாதத்தினை அடிப்படையாகக் கொண்ட அரசியல் என்பது, பரஸ்பரம் கூட்டு களவாணிகளின் பயங்கரவாதமாக அம்மணமானது. அப்பாவிகளைப் பலிக்கடாவாக்கி அதைத் தியாகமாகக் காட்டி விளம்பரம் மூலம் வியாபாரம் செய்யும் மதம், இனம் தொடங்கி, இவை முன்வைக்கும் அரசியல் வரை அனைத்தும் அம்மணமாகி இ;ருக்கின்றது.
இனவாதத் தமிழ் தேசியமானது தமிழ் மக்களின் அடிப்படை மனிதவுரிமைகளை எல்லாம் மறுத்து நடத்திய வன்முறை, அதையொட்டிய தியாகங்கள் அனைத்தும் வியாபாரமாகி, பண்டமான வரலாறு பொய்யானதல்ல. இதையே டொக்டர் அருச்சுனாவும் தன்பங்குக்கு தொடங்கியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கப்பட்ட அரசியல் மூலம் அணிதிரட்டத் தவறுகின்ற, எல்லா அரசியலும் மக்களின் முதுகில் சவாரி செய்யவே முனைகின்றது. இதுதான் கடந்த வரலாறுகள்.
30.10.2024
- தேசிய மக்கள் சக்தியின் அரசு மதச்சார்பற்றதா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி -6
- 1.யார் செழுமையடைய போகின்றார்கள்? மக்களா!?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 5
2.டொலர் பொருளாதாரமா? தேசியப் பொருளாதாரமா?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 4
3.சமூக மாற்றத்தை மறுதலிக்கும் தேசிய மக்கள் சக்தி-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 3
4.கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு" தெரிவிக்க வேண்டுமா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும்-பகுதி - 2
5.மக்களின் குரலாக யார் இருக்கின்றனர்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் பகுதி - 1
6.ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
7.பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்.
8.ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
9.தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்
10.யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? ஏன்!? எதற்காக!?
உதய கம்மன்பில தொடங்கி டொக்டர் அருச்சுனா வரை, மீண்டும் இனவாதம் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 7
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode