Language Selection

10_2006.jpg

"வாங்கண்ணா, வாங்க! அதிருஷ்டம் உங்களை அழைக்கிறது!'' இது, சிறிது காலத்திற்கு முன்பு தடைசெய்யப்படும்வரை எங்கெங்கும் ஒலித்த லாட்டரி சீட்டு வியாபாரிகளின் குரல் அல்ல. மைய அரசின் வர்த்தகத் துறை அமைச்சரான கமல் நாத், லாட்டரி சீட்டு வியாபாரிகளையே விஞ்சும் வகையில் இப்படி அறைகூவி அழைக்கிறார். உழைக்கும் மக்களாகிய நம்மை அவர் அழைக்கவில்லை.

 தரகுப் பெருமுதலாளிகளையும், நிலமுதலைகளையும் பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளையும்தான் அவர் இப்படி அறைகூவி அழைக்கிறார்.

 

""தலைவா, இது உங்களோட சமஸ்தானம்; இங்க நீங்க உங்க இஷ்டப்படி ராஜ்ஜியம் நடத்தலாம்; நாங்க எந்தக் கேள்வியும் கேட்கமாட்டோம்; வாங்க தலைவா, வந்து உங்க தொழில நடத்துங்க!'' என்று காலில் விழாத குறையாக தனது எஜமானர்களை உபசரித்து அழைக்கிறார் கமல்நாத். தமது பகற்கொள்ளைக்கும் ஆக்கிரமிப்புக்கும் ஆதிக்கத்துக்கும் காங்கிரசு கூட்டணி அரசு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பதைக் கண்டு பூரித்துப் போகும் ஏகாதிபத்தியவாதிகள், ""எங்க காட்டுல மழை பெய்யுது; எங்க கோட்டையில் கொடி ஏறுது'' என்று மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கும்மாளமடிக்கின்றனர். நாட்டை ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கூறுபோட்டுக் கொடுக்கும் இந்தத் திட்டத்தையே காங்கிரசு கூட்டணி அரசு, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) என்றழைக்கிறது.

 

""செஸ்'' என்று ஆங்கிலத்தில் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones - SEZs) எனும் திட்டம், கடந்த 2000வது ஆண்டில் ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகு கடந்த ஜூன் 23, 2005இல் அரசுத் தலைவரின் அங்கீகாரத்துடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நான்குநேரியிலும் குஜராத்தில் பாசிட்ராவிலும் முதன்முதலாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க அரசு அனுமதி வழங்கியது. தற்போது சென்னை எண்ணூரில் 2,500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு டிட்கோ, சிப்காட் ஆகிய அரசுத் துறை நிறுவனங்களோடு அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டுச் சேர்ந்து தொழில் தொடங்க முன்வந்துள்ளது. இது தவிர, மும்பையில் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மாண்டமாகவும், அரியானா மாநிலத்தில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் இத்தகைய மண்டலங்கள் நிறுவப்படவுள்ளன.

 

சென்னையில் ஏற்கெனவே மெட்ராஸ் ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலம் (""மெப்ஸ்''), மகிந்திரா சிட்டி ஆகிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவை தவிர, சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூர், ஓசூர், கோவை, மதுரை ஆகிய இடங்களிலும் இத்தகைய மண்டலங்களை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரால் போலி கம்யூனிஸ்டுகள் முதல் அனைத்து மாநில முதல்வர்களும் வேகவேகமாக இத்தகைய மண்டலங்களை நிறுவ முயற்சித்து வருகின்றனர். ஏறத்தாழ ஒரு நாளைக்கு ஒன்று என்ற வேகத்தில் நாடெங்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாக ""பிசினஸ் அண்டு எக்கானமி'' என்ற ஆங்கில வாரப் பத்திரிகை குறிப்பிடுகிறது. அந்நிய முதலீடுகள் வெள்ளமெனப் பாய்ந்து, தொழிலும் வர்த்தகமும் வேலைவாய்ப்பும் பெருகி, நாட்டை வல்லரசாக மாற்றுவதற்கான ஏற்பாடுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்பதாக ஆட்சியாளர்கள் சித்தரிக்கின்றனர்.

 

ஆனால், இது நாட்டை வல்லரசாக்க ஆட்சியாளர்கள் மூளையைக் கசக்கிக் கண்டுபிடித்துள்ள புதிய திட்டம் அல்ல. பழைய கள்ளைப் புதிய மொந்தையில் ஊற்றிக் கவர்ச்சிகரமாக வியாபாரம் செய்வதற்கான ஏற்பாடுதான். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலங்களின் (Export Processing Zones) புதிய பரிமாணம்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்!

 

1980களில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல ஏழை நாடுகளில் இத்தகைய மண்டலங்கள் உருவாகி, இன்று 116 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலங்கள் பெருகி விட்டன. இப்படி எல்லா நாடுகளும் ஏற்றுமதி மண்டலங்களைப் பெருக்கத் தொடங்கியதும், ஒவ்வொரு நாடும் ஏகாதிபத்திய முதலீட்டாளர்களுக்குச் சலுகை மேல் சலுகைகளை வாரியிறைத்து முதலீட்டைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றன. இவ்வாறு வளர்ந்துவரும் போட்டியைச் சமாளிக்கவும், அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்தி அதைத் தக்க வைத்துக் கொள்ளவும் சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்களால் 1980களின் இறுதியில் உருவாக்கப்பட்டவைதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். மற்ற நாடுகள் சில சலுகைகளைத் தருவார்கள்; நாங்கள் ஒரு சமஸ்தானத்தையே அமைத்துத் தருகிறோம் என்று சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் உருவாக்கிய இம்மண்டலங்கள்தான், உலகமயச் சூழலில் வளர்ச்சிக்கான ஒரே வழி என்பதாக முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் காட்டுகின்றனர். ஒரு காலத்தில் சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த சென்ஷென், இன்று பல்லாயிரம் கோடி அமெரிக்க டாலர் முதலீட்டைப் பெற்றுள்ள மாபெரும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக வளர்ந்துள்ளது. இதேபோல சீனாவின் ஷாங்காய், காண்டன், ஹாங்காங் ஆகிய நகரங்களின் வளர்ச்சியைக் காட்டி, சீனாவைப் போல அன்னிய முதலீட்டைப் பெருமளவில் குவித்து, சீனாவைப் போலவே இந்தியாவையும் "வல்லரசாக' மாற்ற, அதேபாணியில் உருவாக்கப்பட்டவைதான் இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

 

இந்தியாவில் உருவாக்கப்படும் இத்தகைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அன்னிய நிறுவனங்களும் அமைத்துக் கொள்ளலாம் என்று தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. அம்பானியின் ரிலையன்ஸ், டாடா, மஹிந்திரா, ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம், சஹாரா, யுனிடெக், அடானிஸ், டி.எல்.எஃப் ஆகிய பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி பெற்றுள்ளன. நாடெங்கும் 94 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அடுத்த 18 மாதங்களில் செயல்பட ஆரம்பித்து விடும் என்றும்; நாடெங்கும் மொத்தமாக 300 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க வேண்டும் என்றும் மைய அரசு கூறி வருகிறது.

 

முந்தைய ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலங்களிலிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வேறுபட்டவை; இதன் பெயரிலேயே இப்போது பொருளுற்பத்தி என்ற வார்த்தை நீக்கப்பட்டு விட்டது. அதாவது, பொருளுற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் மட்டுமின்றி, வர்த்தக நிறுவனங்களும் சேவை நிறுவனங்களும் இங்கு தொழில் நடத்தலாம். எல்லா சலுகைகளும் இந்நிறுவனங்களுக்குத் தரப்படும். இதனாலேயே வீட்டுமனைத் தொழில், அடுக்குமாடி கட்டிடத் தொழில், மருத்துவமனைகள், பேரங்காடிகள் (""ஷாப்பிங் மால்'') முதலான தொழில்களில் ஈடுபட்டு வரும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களும் அன்னிய ஏகபோக நிறுவனங்களும் இத்தகைய மண்டலங்களை அமைக்கப் படையெடுக்கின்றன. இவற்றுக்காகவே விவசாய நிலங்கள் அடிமாட்டு விலைக்குக் கையகப்படுத்தப்படுகின்றன. டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 4.20 லட்சம் ஏக்கர் நிலங்கள், ஒரு சதுர மீட்டர் ரூ. 50 வீதம் விவசாயிகளிடமிருந்து அரசால் பறிக்கப்பட்டுள்ளன; ஆனால், சந்தை விலையோ இதைவிட பலமடங்கு அதிகமானதாகும்.


இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழில் நடத்தும் தரகுப் பெருமுதலாளித்துவ அன்னிய ஏகபோக நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்; அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 50% வரி விலக்குத் தரப்படும். கச்சாப் பொருட்கள், மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள முழுமையான சுங்க வரி விலக்கு, சிறுதொழில்களுக்கென ஒதுக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை இங்கு தயாரித்துக் கொள்ள தாராள அனுமதி, உள்நாட்டுச் சந்தையிலிருந்தே வாங்கப்படும் உதிரி பாகங்களுக்கு மத்திய கலால் வரியிலிருந்து முழுமையான விலக்கு, மத்திய விற்பனை வரி ரத்து, உற்பத்திப் பொருட்களை மற்ற நிறுவனங்களிடம் துணை ஒப்பந்த முறையில் தயாரித்துக் கொள்ளவும், ஒப்பந்த மறையில் தொழிலாளர்களைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளவும், பெண்களை இரவு நேர வேலைகளில் பணியமர்த்திக் கொள்ளவும் தாராள அனுமதி எனக் கணக்கற்ற சலுகைகள் வாரியிறைக்கப்பட்டுள்ளன.

 

ஆட்சியாளர்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால், அதன் மூலம் 1,00,000 கோடி ரூபாய் அந்நிய முதலீடு நாட்டுக்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் முதலீடு செய்யப் போகும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இறக்குமதி வரிச் சலுகையின் மூலம் மட்டும் மைய அரசுக்கு 90,000 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்படுகிறது. அதாவது, முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி விற்பனையைத் தொடங்கு முன்பே, தங்களின் முதலீட்டில் ஏறத்தாழ 90 சதவீதத்தை வரிச் சலுகையாகத் திரும்ப எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். உமியைக் கொண்டு வந்தவன் அவலைத் தின்னப் போகும் அநியாயத்தைத்தான் நாடு சந்திக்கப் போகிறது.

 

இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இந்தியத் தொழிற்சங்க சட்டங்கள் எதுவும் செல்லாது; தொழிற்சங்கங்களும் இங்கு நுழைய முடியாது; தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரளவோ போராட முடியாது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் "அன்னியர்கள்' நுழையவும் முடியாது. உதாரணமாக, ஓசூர் தொழிற்பேட்டையிலுள்ள ஒரு சிறுதொழில் நிறுவனத்துக்குள் நுழைய ஒருவர் அனுமதி பெறவேண்டும்; ஆனால், தொழிற்பேட்டைக்குள் நுழையவே அனுமதி பெற வேண்டும் என்றால், அது இந்திய நாட்டைச் சேர்ந்த பகுதியா அல்லது வேறு நாடா என்று சந்தேகம் வந்துவிடும். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டாலும், அவை அன்னிய பிரதேசங்கள்; தனி சமஸ்தானங்கள் என்கிறது அரசு. இந்தியக் குடிமகனாக இருந்தாலும், இந்த சமஸ்தானத்துக்குள் நுழைய அனுமதி அதாவது, ""விசா'' வாங்க வேண்டும்!

 

"அன்னிய' குறுக்கீடுகளற்ற இந்த சமஸ்தானத்திற்கு 1000 ஏக்கருக்கும் குறையாமல் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் எனும் விதியின் நோக்கமே, அது நிலக்கொள்ளைக்கான ஏற்பாடுதான் என்பதைக் காட்டுகிறது. ஏற்கெனவே மும்பை சாண்டாகுரூசில் 93 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 2002ஆம் ஆண்டில் இயங்கிய ஏறத்தாழ 197 நிறுவனங்கள் இப்போது ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் இல்லாமல், படிப்படியாகக் குறைந்துவிட்டன. 93 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்ட இத்தகைய மண்டலங்களே தொழில் வளர்ச்சியின்றி முடங்கிக் கிடக்கும்போது, 1000 ஏக்கருக்கு மேல் நிலத்தைக் கொடுப்பது ஏன்? பிலிப்பைன்ஸ், மலேசியா, பிரேசில், மெக்சிகோ, கொலம்பியா, சிறீலங்கா, வங்கதேசம் என உலகின் பல நாடுகளில் இத்தகைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டு படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அதை இந்தியாவில் நிறுவுவது ஏன்? விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் திட்டங்கள் மூலம் தரகுப் பெருமுதலாளிகளும் அன்னிய ஏகபோக நிறுவனங்களும் கொள்ளையடிப்பதற்காகவே இத்தகைய மண்டலங்களை நிறுவுவதில் ஆட்சியாளர்கள் போட்டி போடுகின்றனர்.

 

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கச் சுற்றுச்சூழல் பசுமையானதாகவும், தொழிற்சாலைகளுக்கும் அடிக்கட்டுமான சேவைகளுக்கும் தண்ணீர் வசதி நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று ஏகாதிபத்தியவாதிகள் விதித்துள்ள நிபந்தனையை ஆட்சியாளர்கள் விசுவாசமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்பகுதியில் நிலத்தடிநீரை வரைமுறையின்றி உறிஞ்சவும், மூல வளங்களைக் கட்டுப்பாடின்றி அள்ளிச் செல்லவும் தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இம்மண்டலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் போகும்; பின்னர் அந்த நிலங்களும் மானாவாரி நிலங்களாக அறிவிக்கப்பட்டு அவையும் இக்கொள்ளையர்களால் சூறையாடப்படும்.

 

மேலும், இம்மண்டலங்களில் விவசாயத்தை வர்த்தகமாக்கும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. தனி சமஸ்தானத்தில் இயங்குவதாலும், கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாததாலும், இந்நிறுவனங்கள் செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டை உருவாக்கி நாட்டையும் மக்களையும் கொள்ளையடிக்க முடியும். ஏற்கெனவே அர்ஜெண்டினாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இத்தகைய நிறுவனங்கள் செயற்கையான உணவுப் பஞ்சத்தை உருவாக்கிச் சூறையாடியுள்ளன.

ஏற்கெனவே தனியார்மய தாராளமயத் தாக்குதலால் விவசாயம் நாசமாக்கப்பட்டு, விவசாயிகள் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளைக் கிராமப்புறங்களிலிருந்து முற்றாக வெளியேற்றும் ஆக்கிரமிப்புப் போரை சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஆளுங் கும்பல் தொடுத்துள்ளது. நாட்டின் அரைகுறை சுயாதிபத்திய உரிமையையும் ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்துவிட்டு மறுகாலனிய சுருக்கை வேகமாக இறுக்கி வருகிறது காங்கிரசு கூட்டணி அரசு. அன்று ஒரு கிழக்கிந்திய கம்பெனி வந்து நாட்டைக் காலனியாக்கியது என்றால், இன்று நூற்றுக்கணக்கான அன்னிய ஏகபோகக் கம்பெனிகள் படையெடுத்து வருகின்றன. இந்தக் காலனிய ஆக்கிரமிப்பை எதிர்த்து, ஒரிசாவின் பழங்குடியின மக்கள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகிறார்கள். இன்று, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக நாடெங்கும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

 

பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமிக்கும் யூதக் குடியேற்றம், ஈழத்தை ஆக்கிரமிக்கும் சிங்களக் குடியேற்றம் ஆகியவற்றுக்கும், விவசாய நிலங்களையும் புறநகர் சேரிப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் வேறுபாடில்லை. மறுகாலனிய ஆக்கிரமிப்பு எனும் உள்நாட்டுப் போரை நம்மீது பிரகடனம் செய்திருக்கிறார்கள் எதிரிகள். போரை, போரினால் எதிர்கொள்வதைத் தவிர வேறென்ன வழி இருக்கிறது?

 

கவி