முதலாளித்துவத்தில் ஜனநாயகம் என்பது சிறுபான்மையினருக்கே ஒழிய பெரும்பான்மைக்கல்ல. அதாவது சுரண்டும் வர்க்கத்தின் (ஜனநாயகமாகும்) நலன்களாகும். சுரண்டப்படும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகமல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஜனநாயகமுமல்ல.
முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகம் மூலம் ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி.யானது, ஏகாதிபத்திய நலன்களுடன் இயங்குகின்ற முதலாளித்துவக் கட்சியே. அந்தவொரு காரணமே, ஆட்சியில் தேர்ந்தெடுக்க முதலாளித்துவம் மக்களை அனுமதித்தது.
முதலாளித்துவத்தால் சுரண்டப்படும் மக்களின் நலனை முன்னிறுத்தும் வர்க்கக் கட்சியல்ல ஜே.வி.பி.. ஆட்சிக்கு வரமுன் வர்க்கக் கட்சியாக தன்னை முன்னிறுத்தி, உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்டிய கட்சியல்ல.
இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய கட்சியல்ல. அதாவது இனம், மதம், சாதி, பால், பிரதேச .. ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி, மக்களை அணிதிரட்டிய கட்சியல்ல.
இனம், மதம், சாதி, பால், பிரதேச.. ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடாமல், அதேநேரம் ஜே.வி.பி.யானது இனம், மதம், சாதி, பால், பிரதேச.. பற்றி முன்வைப்பதில்லை என்று கூறிக்கொண்டு இயங்கிய, சந்தர்ப்பவாத அரசியலைச் செய்தவர்கள். அதாவது இனம், மதம், சாதி, பால், பிரதேச.. ஒடுக்குமுறைகளை அரசியல்ரீதியாக, நடைமுறை ரீதியாக எதிர்த்துப் போராடாமல் இருப்பதன் மூலம், இனம், மதம், சாதி, பால், பிரதேச.. ஒடுக்குமுறைக்கு ஆதரவான வாக்குகளையும் பெற்றவர்கள்.
ஜே.வி.பி. தன்னை கம்யூனிஸ்ட் கட்சி என்றே காட்டிக் கொள்ளும் பொது மாயையை, தொடர்ந்து தக்கவைப்பது தொடங்கி, இடதுசாரியத்தின் பெயரில் முதலாளித்துவ பிழைப்புவாதிகள் ஜே.வி.பி.யை கம்யூனிஸ்ட் கட்சியாக காட்டுகின்ற மோசடிகள் அனைத்தும், முதலாளித்துவத்தால் சுரண்டப்படும் ஒடுக்கப்படும் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் பித்தலாட்டமாகும். இதுவே அரசியல் ஊழல்.
முதலாளித்துவத்தின் ஒரு துரும்பைப் கூட ஜே.வி.பி. அசைக்காது. மாறாக அதைப் பாதுகாக்கும். தன்னை புரட்சிகரமானதாகக் காட்டிக் கொள்ள, பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவப் போவதில்லை. இது வெளிப்படையான உண்மையாகும்.
முரணற்ற முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கூட ஜே.வி.பி. நிறுவப்போவதில்லை. உதாரணத்துக்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள், மதத்தைக் குறித்த தனிப்பட்ட ஒருவரின் நம்பிக்கையிலான வழிபாட்டைப் பொதுவெளியில் முன்னிறுத்தியதன் மூலம் தங்கள் அரசியலை அம்மணமாக்கி இருக்கின்றனர். புதிய ஜனாதிபதி தனது தனிப்பட்ட மத நம்பிக்கையை வெளியுலகுக்கு காட்டியது முதல், தனது அரசின் செயற்பாட்டை மதத்தை முன்னிறுத்தி தொடங்கியது வரை, இவை அனைத்தும் மக்களைப் பிளக்கும் அரசியல்ரீதியான ஊழலாகும். முதலாளித்துவ ஜனநாயகத்துக்க் கூட முரணானது.
இடதுசாரிய அரசாக காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி.யானது மதத்தை முன்னிறுத்திக் கொள்ளும் அதேநேரம், இலங்கையில் தேசிய இனங்கள் இருப்பதை அங்கீகரிக்க மறுப்பதைக் காணமுடியும். அரசியல் மோசடிகள் மூலம் அரங்கேறும் இந்த ஊழல், பொருளாதார ஊழலை ஒழிப்பதன் மூலம் ஒளித்து விளையாட முனைகின்றனர்.
தன்னைப் புரட்சிகரமானதாகக் காட்டிக் கொள்ள, முதலாளித்துவம் வரையறுக்கும் சட்டத்தின் ஆட்சியை கொண்டு, முதலாளித்துவத்துக்குள் புரையோடியுள்ள ஊழலை, லஞ்சத்தை, அதிகார துஸ்பிரயோகத்தை .. ஒழிக்கப்போவதாகக் கூறுகின்றது.
சமூகத்தில் நிலவும் ஊழல், லஞ்சம், அதிகார முறைகேடுகள்.., சட்ட ஆட்சி அமைப்பை தகர்த்து வருகின்றது. இந்த உண்மை முதலாளித்துவ அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கைகளை தகர்த்து வருகின்றது. இதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் தான், மக்கள் முதலாளித்துவதற்கு எதிராக வர்க்க ரீதியாக அணிதிரள்வதை தடுக்கமுடியும். முதலாளித்துவம் தொடர்ந்தும் உயிர் வாழ முடியும். எனவே முதலாளித்துவத்தின் சட்ட அமைப்பையும், நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டிய இடத்தில் ஜே.வி.பி. இருக்கின்றது. இதனால் தான் உலக முதலாளித்துவம் ஜே.வி.பி.யை தேர்ந்தெடுத்திருக்கின்றது.
ஊழல், லஞ்சம், அதிகாரமுறைகேடுகள்.. சமூக நிதி ஆதாரங்களை சூறையாடுவதால், மக்களின் வாழ்வாதாரங்கள் சிதைவதுடன், உலக நிதி மூலதனங்கள் தங்கள் சுரண்டலை நடத்த முடியாத அளவுக்கு நாட்டில் பொது நிதி நெருக்கடி உருவாகின்றது. இந்த வகையில் ஊழல், லஞ்சம், அதிகாரமுறைகேடுகள்.. ஒழிக்க வேண்டுமென்பது ஏகாதிபத்தியங்களின் அடிப்படைக் கொள்கையாக மாறியிருக்கின்றது.
நாட்டின் பொது நிதி நெருக்கடி என்பது ஊழல், லஞ்சம், அதிகாரமுறைகேடுகள்.. மூலமாக இருக்கின்றதென்ற பரந்துபட்ட மக்களின் பொதுக் கருத்தியலே, ஜே.வி.பி. என்ற தேர்வாகும். பாராளுமன்ற தேர்தலில் புதிய அலையாக மாறுகின்றளவுக்கு, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அச்சாணியிட்டிருக்கின்றது.
ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் குவிந்துள்ள சொத்துகள்… ஊழலின் மொத்த வடிவம். அரச நிறுவனங்களின் அசமந்தப் போக்குகள் தொடங்கி அதிகார வர்க்கத்தினது வக்கிரங்கள் வரை, காணப்படும் துஸ்பிரயோகங்கள் வரைமுறையற்றவை. பாலியல் லஞ்சம், பாலியல் சுரண்டல் வரை இதிலடங்கும்.
நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட மதங்களின் அதிகாரம் தொடங்கி, அவர்களை முதன்மைப்படுத்தி நடக்கும் அரச செயற்பாடுகள் ஊழலின் மய்யம். மதங்களின் செல்வக் குவிப்பு தொடங்கி அரசுடன் அது கொண்டிருக்கும் அதிகார உறவு ஊழலின் பொது வெட்டு முகம். இந்த அதிகார ஊழலே, மதவாதிகள் தொடங்கி ஆசிரியர்கள் வரையான மனிதர்களின் காலில் இன்னொரு மனிதனை விழவைக்கின்றது. அடிமைத்தனத்தின் பொது வெட்டு முகம். புதிய ஜனாதிபதிக்கும் இது பொருந்தும்.
ஜே.வி.பி. முதலாளித்துவத்தின் முரணற்ற ஜனநாயகத்தையாவது முன்னிறுத்தி, மக்களைச் சூறையாடும் இந்த வகையான கூறுகளையாவது ஒழித்துக்கட்டுமா என்பது கூட கேள்விக்குள்ளாகின்றது.
24.09.2024
பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode