அக்டோபர் இதழ் படித்தேன். அப்பப்பா! எவ்வளவு அருமையான விஷயங்கள். என்னுடைய நண்பர்களிடம் சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய அட்டைப்படக் கட்டுரையையும் இன்றைய அரசியல் நிலைமையையும் பற்றி விளக்கி அவர்களிடம் 7 பிரதிகளை விற்பனை செய்தேன். புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்த மனநிறைவு எனக்கு ஏற்பட்டது. உழைக்கும் மக்களுக்கு அவசியமான உண்மைச் செய்திகளைத் தொடர்ந்து அளித்துவரும் பு.ஜ.வுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
எஸ்.சிவா, உசிலம்பட்டி.சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய கட்டுரையும் விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியும் மறுகாலனிய சுருக்கு இறுகி வருவதை உணர்த்துகிறது. நெருங்கிவிட்ட பேரபாயத்தை விளக்கிய அட்டைப்படக் கட்டுரை சிறப்பு.
ஜீவா, ஜெயங்கொண்டம்.
சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றியும், இணையதள வர்த்தக சூதாட்டம் பற்றியும் வெளியான பு.ஜ. கட்டுரைகள் விவசாயிகளிடமும் வியாபாரிகளிடமும் பிரச்சாரத்துக்குப் பெரிதும் உதவின. விவசாயிகளை அணிதிரட்டிப் போராடாமல், மறுகாலனியாக்கத்தை வீழ்த்த முடியாது என்பதை பு.ஜ. இதழ் எடுப்பாக உணர்த்தியுள்ளது.
வி.வி.மு., உசிலை வட்டம்.
நாங்கள் குடியிருக்கும் பகுதியில், 30 பேர் கொண்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆளும் கட்சிகள் லஞ்சம் கொடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போடச் செய்தன. நுண்கடன் எனும் கந்துவட்டியால் அடிமையாகிப் போகும் இக்குழுக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையையும் இழந்து நிற்கிறார்கள். பு.ஜ.வில் வெளியான கட்டுரை தன்னார்வக் குழுக்களின் சதியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இராணி, ஓசூர்.
சுய உதவிக் குழுக்களின் மூலம் நடக்கும் கந்துவட்டிக் கொள்ளையை பு.ஜ. மூலம் அறிந்த வாசகர்கள், இப்படித்தான் தங்கள் பகுதியில் நடக்கிறது என்று தங்கள் அனுபவத்தை விளக்கினார்கள். ஒரு புதிய வாசகர், ""வீடு வீடாக வந்து நீங்கள் பு.ஜ. இதழை விற்பனை செய்தபோது வேண்டாம் என்று அலட்சியப்படுத்தினேன்; பின்னர், தற்செயலாக இதழைப் படித்தபோது நான் மிகப் பெரிய தவறு செய்து விட்டதை உணர முடிந்தது'' என்று மனந்திறந்து குறிப்பிட்டார். ஓசூர் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான ஆக்கிரமிப்புகள் நடந்துவரும் வேளையில், இதையொட்டி பு.ஜ.வில் வெளிவந்துள்ள கட்டுரை பிரச்சாரத்துக்கு உதவியாக அமைந்துள்ளது.
வாசகர் வட்டம், ஓசூர்.
மறுகாலனிய பயங்கரவாதத்தைத் தீவிரமாக்கும் நோக்கில், அரசு பயங்கரவாதத்தை நிரந்தரமாக்கும் ஏற்பாடுதான் ஆளும் கும்பலின், ""ஐயா! பயங்கரவாதம்'' என்ற பீதியூட்டும் ஒப்பாரி என்பதைத் தோலுரித்துக் காட்டியது சிறப்பு. புதிய பொருளாதாரக் கொள்கையால் தலைப்பாகைக்கு ஆபத்து என்றால், சிறப்புப் பொருளாதார மண்டலத்தால் தலைக்கே ஆபத்து என்பதை அட்டைப்படக் கட்டுரை மூலம் உணர முடிகிறது. பார்ப்பன பாசிசமும் ஏகாதிபத்திய øக்கூலித்தனமும்தான் இந்துவெறி எட்டப்பர்களின் தேசபக்தி என்பதற்கு வந்தேமாதரம் பஜனையே சான்று கூறப் போதுமானது.
இரா. மணிகண்டன், சூசுவாடி.
சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் அபாயத்தை விளக்கும் வகையில் அட்டைப்படம் எடுப்பாக அமைந்துள்ளது. அட்டைப்படக் கட்டுரையை, நாட்டையும் மக்களையும் சிறப்புப் பொருளாதார மண்டலம் எவ்வாறு பாதிக்கும் என்பதை விரிவாக விளக்கும் வகையில் தொடர் கட்டுரையாக எழுதியிருக்கலாம். வந்தேமாதரம் பாடலின் வரலாற்றையும் எட்டப்பர்களின் தேசபக்த பஜனையையும் அம்பலப்படுத்திய கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது. 14.10.06 அன்று நடந்த வாசகர் வட்டக் கூட்டத்தில், வழக்குரைஞர் இராமலிங்கம் அவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி சிறப்புரையாற்றினார். இந்தச் சட்டம் இன்னுமொரு காகிதச் சட்டம்தான் என்பதையும், தகவல் தருவதும் மறுப்பதும் சம்பந்தப்பட்ட துறையின் விருப்பப்படிதான் இருக்கும் என்பதையும், இதற்கெதிராக எந்த நீதிமன்றத்திலும் முறையிட முடியாது என்பதையும் வாசகர்களுக்கு உணர்த்துவதாக அவரது விளக்கவுரை அமைந்தது.
வாசகர் வட்டம், தஞ்சை.
வந்தே மாதரம் பாடலின் பின்னே மறைந்துள்ள இந்துவெறியையும் கைக்கூலித்தனத்தையும் திரைகிழித்துக் காட்டியது, இளந்தலைமுறையினருக்குப் பெரிதும் பயனளிப்பதாக அமைந்தது. தன்னார்வக் குழுக்களின் கந்துவட்டிக் கொள்ளை பற்றி இதுவரை யாரும் வெளிக்கொணராத உண்மைகளை பு.ஜ. மட்டுமே காட்டியுள்ளது.
வாசகர்வட்டம், திருச்சி.