Language Selection

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைத் தமிழர்கள் எழுதியுள்ள நூல்களில் "நினைவழியா வடுக்கள்" என்ற சிவா சின்னப்பொடியின் நூல் தனித்துவமிக்கது. ஈழத்து சாதிய அனுபவத்தை பதிவாக்கியுள்ள முதல் நூல். 1960களில் நிலவிய சாதியக் கொடூரத்தின் சுய அனுபவத்தையும், பிற மனிதர்கள் சந்தித்த அவலங்களையும் இந்த நூல் தன்னுள் உள்ளடக்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் சாதிய வாழ்க்கையையும், அதன் போராட்டத்தையும் தத்ரூபமாக இந்த நூலில் தரிசிக்க முடியும்.

இந்த நூலை சாதிய சமூகமான தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தனதும், தனது தாய் தந்தையரின் சாதிய கொடூரங்களையும் மூடிமறைக்க இந்த நூலை இருட்டடிப்பு செய்யும். மறுபக்கத்தில் கடந்தகாலத்தில் சாதியத்தைக் கட்டிப்பாதுகாத்த தமிழ் தேசிய இயக்கங்களின் அரசியலுடன் பயணித்த சிவா சின்னப்பொடியின் கடந்தகாலம், இந்த நூலின் முக்கியத்துவத்தை மறுதலித்துவிடுவதற்கான புறநிலையான மற்றொரு சூழலும் காணப்படுகின்றது. "தமிழ் தேசியம்" சார்ந்து சாதிய இயக்கங்களுடன் இணைந்துகொண்ட சிவா சின்னப்பொடியின் பயணம் மீதான விமர்சனத்தைக் கடந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதமாக இந்த நூல் மிளிர்கின்றது என்பது மிகையல்ல.

புலிகளின் மகளிர் அணித் தலைவி தமிழினியின் நூலான "ஒரு கூர்வாளின் நிழலின்" போலவே, சிவா சின்னப்பொடியும் சாதியரீதியாக பிரான்சில் புலிகளால் தான் சந்தித்த சுய அனுபவத்தை என்னுரையில் முன்வைத்திருக்கின்றார். "1996 இல் இங்கிருந்து (பிரான்ஸ்சில்;) வெளியாகிய ஈழமுரசு பத்திரிகையின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்ட போது மிகப் பெரிய சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர் கொண்டேன்…. நான் சிறுவயதில் எனது பிரதேசத்தில் எதிர்கொண்ட சாதிய ஒடுக்குமுறைக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத அளவுக்கு.." சாதிய ஒடுக்குமுறையை சந்தித்ததை குறிப்பிடுகின்றார். இதேபோல் 2000ம் ஆண்டு ரி.ரி.என் தொலைக்காட்சியில் செய்திப்பிரிவுப் பொறுப்பாளராக இருந்தபோது, சந்தித்த சாதிரீதியான ஒடுக்குமுறையையும் குறிப்பிட்டு இருக்கின்றார். இந்த வகையில் புலிகளின்  தமிழ் தேசிய பினாமி ஊடகங்கள் சாதிய சமூக ஒடுக்குமுறையை தக்கவைக்கும் ஊடகமாக இருந்ததுடன், தமிழ் தேசிய சாதிய சமூக அமைப்புமுறையை  பாதுகாக்க ஒடுக்கப்பட்ட சாதிய சமூகத்தில் பிறந்த சிவா சின்னப்பொடியையும் தன்வசப்படுத்த முனைந்தது. சாதி ஒடுக்குமுறையுடன் சமரசம் செய்ய மறுக்கின்ற முரண்பாட்டை, இந்த நூலின் மூலம் தரிசிக்க முடியும். இந்த சம்பவங்கள் அக்காலத்தில் தனிப்பட்ட ரீதியில் நான் அறிந்தவைதான், இன்று அதை இந்த நூல் பதிவாக்கி இருக்கின்றது.

2019 தை மாதம் தமிழகத்தில் நடந்த நூல் கண்காட்சியில் "நினைவழியா வடுக்கள்" நூல், விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு,  முழுப்பிரதியும் விற்றுவிட்ட நிலையில், இரண்டாவது பதிப்பு வெளிவர இருக்கின்றதை அறிய முடிகின்றது. இந்த நூல் குறித்து இரண்டு வருடத்துக்கு முன்பு டென்மார்க்கில் எமது தோழர் ஒருவரின் மரணச்சடங்குக்கு சென்று திரும்பிய போது, கடந்தகால சாதிய ஒடுக்குமுறையின் வரலாறு குறித்து சிவா சின்னப்பொடியுடன் விமான நிலையத்தில் நீண்ட நேரம் உரையாட முடிந்தது. நூலாக கொண்டு வருமாறு வேண்டினேன். நூல் வெளிவந்தவுடன், எனக்கு அதைக் கொண்டு வந்து தந்திருந்தார். நூலை வாசிக்க தொடங்கியவுடன், வாசிப்பை நிறுத்த முடியாத அளவுக்கு, நூல் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலுடன் இணைந்;துவிடுகின்றது.

"தமிழர்கள்" என்ற கூறிக் கொண்டவர்கள், தங்கள் தந்தையுடன் - தாயுடன் இணைந்து எமது இளமைக் காலத்தில் பிற மனிதர்களுக்கு இழைத்த கொடூரங்களையும், கொடுமைகளையும் இந்த நூல் பதிவாக்கி இருக்கின்றது. மறுக்க முடியாத ஆதாரங்களை, சாதிய சமூக அடிப்படையில் முன்வைத்து இருப்பதுடன், மனித மனச்சாட்சிக்கு முன் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது. இன்றைய சாதிய சமூகம், அன்றைய சாதியத்தின் நீட்சியாக இருப்பதை புரிந்துகொள்ள, இந்த நூல் முக்கியமான வரலாற்று நூலாகும்.

நீ யார் எனின், நீயொரு மனிதன், ஆனால் மனித வரலாறு என்பது, மனித வரலாறாக இல்லை. மாறாக மனிதனை மனிதன் ஒடுக்கும் வரலாறாக இருக்கின்றது. இந்த வகையில் சிவா சின்னப்பொடியின் "நினைவழியா வடுக்கள்" நூல், தமிழ் சமூகத்தினால் வெறுக்கப்படும் என்பது உண்மை. தமிழ் சமூகத்தின் அக ஒடுக்குமுறைகளை வரலாற்றுரீதியான அதன் பன்முகத்தன்மையை பற்றிப் பேசும், நூலாக இருப்பதே இதற்கான காரணமாகும்.

இந்த நூல் சாதிய ஒடுக்குமுறையையொட்டிய பல புதிய தரவுகளைக் கொண்டு இருப்பதுடன், அவை வரலாற்றுக்கு புதியவை. இதன் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்க யாராலும் முடியாது. 

இலங்கை வாழும் தமிழ் மக்களும், இலங்கை வாழ் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டமின்றி, இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டமும் சரி, இலங்கையில் வர்க்கப் போராட்டமும் வெற்றி பெற முடியாது. இதை "நினைவழியா வடுக்கள்" நூலின்  உள்ளடக்கம் எம்முன் பறைசாற்றி நிற்கின்றது.