ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, விவசாய கூட்டுறவுக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவு போட்டார் முதல்வர் கருணாநிதி. ஆனால், அது இன்னுமொரு வாய்ப்பந்தல் என்று அம்பலமாகிவிட்டது.
புதிய பயிர்க்கடன் வாங்கக் கூட்டுறவு வங்கிக்குச் சென்று கேட்டால், முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தி, வங்கியிடம் வரவுசெலவு வைத்துக் கொள்பவர்களுக்கு மட்டுமே புதிய கடன் வழங்கப்படும் என்று அரசு சுற்றறிக்கை (எண்: 69003) அனுப்பியுள்ளதாகக் கூறுகிறார்கள். கடன் தள்ளுபடி காரணமாக, வழக்கத்தைவிட மிகக் குறைவான நிதியையே வங்கித் தலைமை ஒதுக்கீடு செய்துள்ளதால், புதிதாகக் கடன் கொடுக்க சாத்தியமில்லை என்கிறார்கள். விவசாயிகள் ஏற்கெனவே வாங்கிய கடன்கள், அரசு அறிவிப்புக்குப் பிறகும் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. கூட்டுறவு வங்கியிலிருந்து சான்றிதழ் பெற்று வந்தால்தான் இதர தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்க முடியும். ஆனால் கூட்டுறவு வங்கிகளோ, அரசாங்கத்திடமிருந்து தொகை வரவாகாமல், சான்றிதழ் தர இயலாது என்று இழுத்தடிக்கின்றன.
மறுபுறம், விவசாயம் என்ற பெயரில் டிராக்டர் வாங்க, நிலத்தை அடமானம் வைத்து வேறு தொழில் தொடங்க எனக் கடன் வாங்கிய பணக்கார விவசாயிகளின் கடன்கள்தான் பெருமளவு தள்ளுபடியாகியுள்ளது. அவர்கள்தான் ஓரளவுக்குத் தவணையை முறையாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். கடன் தள்ளுபடியால் ஆதாயமடைந்த அவர்களுக்குத்தான், அரசு சுற்றறிக்கை விதித்துள்ள நிபந்தனைப்படி புதிய கடன்களும் ஆதாயமும் கிடைக்கும்.
ஆனால், ரூ.5,000, ரூ.10,000 என பயிர்க்கடன் வாங்கி, உழவுக்கும் விதைப்புக்கும் பணமில்லாமல், வெளியில் கந்துவட்டிக்குக் கடன் வாங்கி விவசாயம் செய்து, விலை வீழ்ச்சியால் போண்டியாகி, கடனைக் கட்ட முடியாமலும் விவசாயம் செய்ய முடியாமலும் தத்தளிக்கும் விவசாயிகளுக்குக் கூட்டுறவு கடன் தள்ளுபடியால் எந்தப் பயனுமில்லை; புதிய கடன் வாங்கவும் வழியில்லை.
இவை ஒருபுறமிருக்க, குறுவை நெல் சாகுபடி முடிந்த பின்னரும் இன்னமும் பல இடங்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. 30,000 ஏக்கருக்கு மேல் திருச்சி மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி நடந்து அறுவடை முடிந்த பின்னரும்கூட, 10 இடங்களில்தான் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சம்பா நெல்லைப் போல, 17%க்கு மிகாமல் ஈரப்பதம் இருந்தால்தான் குறுவை நெல் கொள்முதல் செய்யப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறுவை நெல் மழையில் நனையாவிட்டாலும் 20 முதல் 24% வரை ஈரப்பதம் கொண்டதாக இருக்கும். இதனால் எந்த விவசாயியும் அறுவை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்க முடிவதில்லை. வேறுவழியின்றி, தனியார் மண்டிகளில் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். தனியார் வியாபாரிகளிடம் அற்ப விலைக்கு விவசாயிகள் குறுவை நெல்லை விற்று முடித்துவிட்ட பிறகு, 11.10.06 அன்று 19% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு அறிவிக்கிறது. செத்தவன் கையில் வெத்திலை வைத்த கதையாக இந்த அறிவிப்பால் சிறு விவசாயிகளுக்கு எந்தப் பயனுமில்லை.
வங்கிக் கடன் தரமுடியாது; அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை வாங்க முடியாது; இது உலக வங்கி நிபந்தனை என்று நேரடியாகவே கழுத்தில் கத்தியைச் செருகினார் "புரட்சித் தலைவி அம்மா'. இன்று, அதே கொள்கையை ஜனரஞ்சகக் கவர்ச்சித் திட்டங்களுடன் நயவஞ்சகமாகச் செய்கிறது, தி.மு.க. அரசு. சிறு விவசாயிகளை விவசாயத்தைவிட்டே விரட்டும் இச்சதியை அம்பலப்படுத்தியும், நேரடிக் கொள்முதல் நிலையங்களைப் பரவலாகத் திறந்து குவிண்டால் ரூ. 800 என குறுவை நெல்லைக் கொள்முதல் செய்யக் கோரியும், புதிய பயிர்க்கடன் வழங்க நிபந்தனை விதிப்பதை ரத்து செய்யக் கோரியும், சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்கக் கோரியும் இலால்குடி வட்ட வி.வி.மு. விரிவாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக 28.9.06 அன்று இலால்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகளை அணிதிரட்டி விண்ணதிரும் முழக்கங்களுடன் வி.வி.மு. ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தோழர் பிச்சை தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னணித் தோழர்கள் கண்டன உரையாற்ற, தோழர் இரவி சிறப்புரையாற்றினார். உலக வங்கி கைக்கூலி ஆட்சியாளர்களின் மோசடிகளை அம்பலப்படுத்தியும், விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடிக்கும் மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், விவசாயிகளுக்குப் புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.
விவசாயிகள் விடுதலை முன்னணி,
இலால்குடி வட்டம்.