Language Selection

புதிய ஜனநாயகம் 2006

11_2006.jpg

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் முடிவுப்படி, சென்னை பெரம்பூர் வியாபாரிகள் நல சங்கத்தில் கடந்த 6.10.06 அன்று கோக்பெப்சி எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது. பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தின் முன்பாக, அன்று மாலை 6 மணியளவில் திரண்ட வணிகர்கள், ""கோக் பெப்சியை

 விற்பனை செய்ய மாட்டோம்! கோக்பெப்சியின் கொடிய விளைவுகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வோம்!'' என்று உறுதிமொழி எடுத்ததோடு, கோக்பெப்சி உருவப் பொம்மைகளைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

 

அதைத் தொடர்ந்து இச்சங்கத்தின் சார்பில் ""கோக்பெப்சியை விரட்டியடிப்போம்'' என்ற தலைப்பில் 8.10.06 அன்று பள்ளி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. பெரம்பூரிலுள்ள கலிகி ரங்கநாதன் மான்ட்போர்ட் மேல்நிலைப் பள்ளியில், முதல் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை 3 பிரிவாக நடத்தப்பட்ட இந்தப் பேச்சுப் போட்டியில், பெரம்பூரைச் சுற்றியுள்ள 35 பகுதிகளிலிருந்து 850 மாணவ மாணவியர் ஊக்கமுடன் பங்கேற்று கோக் பெப்சியை விரட்டியடிக்க சூளுரைத்தனர். பெற்றோரும் ஆசிரியர்களும் திரளாகப் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு.வெள்ளையன் அவர்கள் முன்னிலையில், வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசுகளும் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

 

கொலைகார கோக் பெப்சிக்கு எதிராக இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வையும் நாட்டுப்பற்றையும் ஊட்டும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, கோக் பெப்சிக்கு எதிராகப் போராடி வரும் தமிழக மக்களுக்கு இன்னுமொரு உந்துசக்தியாக அமைந்துள்ளது. கோக் பெப்சியின் அடியாட்களாக ஆட்சியாளர்கள் செயல்பட்டாலும், கோக் பெப்சிக்கு எதிராகத் திரண்டு வரும் பொதுக் கருத்தும், அந்தக் கருத்திற்குச் செயல்வடிவம் தரவிருக்கும் மக்கள் போராட்டங்களும் காட்டுத் தீயாகப் பரவவே செய்யும் என்பதற்கான முன்னறிவிப்பாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

 

பு.ஜ. செய்தியாளர்கள்.