Language Selection

இதழ் 34
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் அரசியல் வரலாறு என்பது அதன் குடிமக்கள் வாழ்வில் ஆழமாக வேரூன்றி நிற்கும் சாதியத்தின் வரலாறாகவே இன்றைய தினம் வரை காணப்படுகிறது. உயிரைக் கொடுத்தேனும் சாதியத்தைக் காப்பாற்றுவோம் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே நாட்டின் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

காலனியவாதிகள் இலங்கைக் கரையோரங்களில் தரையிறங்கி பிரதேசங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது அந்தந்தப் பகுதிகளில் நாட்டாண்மை(ஆதிக்கம்) செலுத்திய சாதிகள் அவர்களுடன் சமரசம் செய்து தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

காலனித்துவ - ஆக்கிரமிப்பு வாதிகள் நல்லெண்ண வருகையாகவோ அன்றி நட்பு ரீதியாகவோ அன்றி மனிதாபிமான நோக்கமாகவோ நமது நாட்டுக்கு வந்திறங்கவில்லை. திரைகடல் ஓடித் திரவியம் தேடியே வந்தார்கள். நாட்டை ஆக்கிரமித்தார்கள். தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டி அவர்கள் மேற்கொண்ட பல்லாயிரக்கணக்கான நடவடிக்கைகளில் ஒன்றாக ஆதிக்க சாதிகளை முன்னிறுத்தி அதிகாரக் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டனர். இந்தக் கட்டமைப்பின் போது சாதியம் முதலாவது இடத்தையும் மதம்; இரண்டாவது இடத்தையும் பிடித்துக் கொண்டது. அவர்களால் வரையப்பட்ட சட்டங்கள் கூட சாதியத்தையும் மதத்தையும் அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டிருப்பதனை இன்றைய இலங்கையின் சட்டமூலங்களை ஆராய்வதன் ஊடாக விளங்கிக் கொள்ள முடியும். உ-ம் வடக்கில் “தேசவழமைச் சட்டம்.” கிழக்கில் “முக்குவர் சட்டம்”. தென்னிலங்கையில் “பௌத்த மத ஆதனக் கட்டளை” போன்றவை ஆகும்.

மேலும் அவர்களின் அதிகாரக் கட்டமைப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் அன்று சமூகங்களை கட்டி ஆட்டிப் படைத்து ஆண்டு கொண்டிருந்த ஆதிக்க சாதியினருக்கே மக்களை நேரடியாக ஆளும் அதிகாரத்தை “முதலியார்” “உடையார்” “மணியகாரன்” “விதானை” என்ற பதவிகள் ஊடாக வழங்கினார்கள்.

1833ல் உருவாக்கப்பட்ட இலங்கைச் சட்டசபை 1912 வரைக்கும் ஆங்கிலேயர்களால் நியமனம் செய்யப்பட்டவர்களையே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. இப்படி ஆங்கிலேயர்களால் நியமனம் செய்யப்பட்ட அனைத்து இலங்கையர்களும் ஆதிக்க சாதியினராகவே இருந்தனர். 1912ல் தேர்தல்(படித்த இலங்கையர்களுக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை) மூலம் ஆதிக்க சாதியினரான சேர்.பொன்னம்பலம்; இராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

1931ல் நடைமுறைக்கு வந்த சட்டசபைக்கான சர்வசன வாக்குரிமைத் தேர்தலை “யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்” பகிஸ்கரிக்க கோரியதால்(டொனமூர் அரசியல் யாப்பு இனவாத அரசியலுக்கு வழி வகுக்கும் என்பதால்) யாழ் மாவட்டத்தில் எவரும் போட்டியிடவில்லை. அதனைத் தொடர்ந்து படித்த பணக்கார ஆதிக்கசாதி அரசியல் பிரமுகர்கள் தங்களைத் தெரிவுசெய்து அனுப்பினால் சட்டசபையில் இருந்து கொண்டு ஆங்கிலேயரின் அரசியல் யாப்பை மாற்றி எழுதுவோம் என்று வாக்குறுதி வழங்கியதன் பேரில் 1934ல் இடம்பெற்ற சட்டசபைக்கான இடைத்தேர்தலில் “யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸின்” ஆதரவுடன் அருணாசலம் மகாதேவா(யாழ்ப்பாணம்) ஜி.ஜி.பொன்னம்பலம்(பருத்தித்துறை) எஸ்.நடேசன்(காங்கேசன்துறை) நெவின் செல்வதுரை(தீவு) ஆகியோர் தெரிவாகினர். இவர்களேதான் சர்வசன வாக்குரிமை அறிவிக்கப்பட்ட போது (1927 – 1931)ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் ஆண் வர்க்கத்தினரால் மிதிக்கப்படும் பெண்களுக்கும் வாக்குரிமை தேவையில்லை என ஆங்கிலேயரிடம் கூறியவர்கள். வாக்களிக்கும் தகைமை அவர்களுக்கு இல்லை என வாதிட்டவர்கள்.

இவர்கள் சட்டசபைக்கு சென்றதும் தாங்கள் கொடுத்த வாக்குறுதியையும், நம்பி வாக்களித்த மக்களையும் மறந்து தாங்கள் சார்ந்த பணக்கார-படித்த-சாதி ஆதிக்க வர்க்கத்தினரின் நலன்களிலேயே அக்கறை செலுத்தி தங்கள் அரசியல் பாதையை வகுத்துக் கொண்டனர். ஆங்கிலேய ஆட்சியதிகாரத்தின் கீழ் தங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்ற போட்டியில் இனத்தின் அடையாளத்தை-இனவாதத்தை அரசியல் கோசமாக பாவித்துக் கொண்டனர்.

அன்று ஆரம்பித்த இந்த தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி செயற்படும் கட்சிகளை இன்று வரை வழிநடத்தும் ஆதிக்கமும் அதிகாரமும் கொண்டவர்கள் அனைவருமே தமிழ் மேட்டுக்குடி ஆதிக்க சாதியினரே. இவர்கள் கடந்த 70 வருடங்களாக முன் வைக்கும் அரசியல் கோசம் தமிழ் தேசியம் மட்டுமே. இவர்களுடைய அரசியலில் தமிழ் பேசும் மக்களைப் பற்றி-அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் பற்றி எதுவும் இருந்தது கிடையாது. இவர்களுடைய அரசியலில் சாதி வாசம் வீசும். தமிழ் பொங்கி வழியும். மதம் தழைத்தோங்கும்.

 

இவர்களின் அரசியல் ஆன்மீக நெறியை இவர்களது கோட்டையாக விளங்கும்-கோட்டையென உலகம் பூராக பறைசாற்றும்-தமிழர்களின் கலாச்சார ஊற்று எனப் பெருமைப்படும் யாழ்நகர்(மாநகர) பற்றிய இன்றைய பார்வை ஊடாக நாம் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

இலங்கையில் யாழ்ப்பாணத்திலேயே முதன் முதலில் ஆங்கில கல்விக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன.  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி(1917) - பரி. யோவான் கல்லூரி(1823) – வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி(1834) – புனித சம்பத்திரிசியார் கல்லூரி(1850) –– சுண்டிக்குளி மகளிர் கல்லூரி(1896) யாவும் அந்நியர்களின் ஆக்கிரமிப்பு ஆட்சியின் போது ஆங்கில மொழியில் கல்வி கற்பிக்க கிறிஸ்தவ மத போதகர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளே.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி(1886) அன்றைய காலத்து யாழ்ப்பாண சைவ(இந்து) சமய ஆதிக்க சாதிப் பிரமுகர்களினால் கிறிஸ்தவ போதக சபையினரின் பாடசாலைகளுக்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில மொழிப் போதனா பாடசாலையாகும். பரமேஸ்வராக் கல்லூரி(திருநெல்வேலி-யாழ்ப்பாணம்); ஆதிக்க சாதிகளுக்கு மட்டும் என சேர்.பொன்னம்பலம் இராமநாதனால் 1921ல் உருவாக்கப்பட்ட பாடசாலையாகும்.

யாழ்ப்பாணத்தில் அன்று கட்டமைக்கப்பட்டிருந்த மிகவும் இறுக்கமான சாதிச் சமூக அமைப்பின் கீழ் ஆதிக்க சாதி மக்களே அக் கல்விக் கூடங்களில் சேர்க்கப்பட்டனர். ஒடுக்கப்பட்ட (சாதி)மக்களுக்கு இக் கல்லூரிகளில் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களினால் பின்னைய காலங்களில் சகல சாதி மக்களுக்கும் இக் கல்லூரிகளின் கதவுகள் திறந்து விட்டிருந்தும் இன்றைய நாள் வரை கல்வித் துறையில் சாதியம் சில நேரங்களில்-சில விடயங்களில் தனது ஆதிக்க சுபாவத்தை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

இக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பதவிகள் பெற்றவர்கள்-அவர்களின் வாரிசுகள் தான் “தமிழ் தேசியம்” என்பதை அரசியல் கோசமாக்கி வந்தவர்கள்-வருபவர்கள். சாதிய அணுகுமுறையுடனே தான் அன்றும்-இன்றும் அவர்களது அரசியற் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

1947 முதல் 1960 வரை யாழ்ப்பாணத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் தெரிவாகி வந்தார். 1960ல் இடம்பெற்ற இரு தேர்தல்களிலும்(மார்ச் யூலை) சுயேட்சையாகப் போட்டியிட்டு தெரிவான திரு.துரையப்பா மறுபடி 1965ம் ஆண்டு தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்ற போது இலங்கைத் தமிழரசுக் கட்சி சி.எக்ஸ். மாட்டீனை தமது வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் வெற்றிக்கான அதிக வாய்ப்பு காணப்பட்ட துரையப்பாவின் மக்கள் ஆதரவுத் தளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பிரித்தெடுத்ததால் திரு பொன்னம்பலம் தெரிவானார். 1965ல் போட்டியிட்டு தோல்வியுற்ற இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் சி.சே.மாட்டீன் 1970ல் தெரிவானார். ஆனால் 1971ல் அன்றைய புதிய குடியரசு அரசியலமைப்புத் திட்டத்தை ஆதரித்தார் என்பதால் மாட்டீன் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.

1970 பெப்ரவரி 15ல் யாழ் மாநகரசபையின் மேயராக திரு.துரையப்பா பதவியேற்றார். அவர் இதற்கு முன்னர் தனது 23வது வயதில் உதவி மேயராக இருந்துள்ளார். அவர் யாழ்நகர் மக்கள் மத்தியில் சகல சமூகத்தினருடனும் நட்புறவு கொண்டிருந்தார். அரசியல் கோசங்கள் எதனையும் முன்வைத்து மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. சாதாரண மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தியே மக்களின் ஆதரவை வேண்டினார். யாழ்நகரின் பின்தங்கிய சமூக மக்களின் அதீத ஆதரவிலேயே மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலத்தில் தான் “மலம் அள்ளுவதற்கே பிறந்தவர்கள்” என தமிழ் தேசியம் (சாதியம்) வரையறை செய்து சாதாரண உரிமைகள் கூட மறுக்கப்பட்டு பயந்து ஒதுங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்த ஒரு சமூகத்தின் அவல வாழ்வை மாற்ற வேண்டி அந்தத் தொழிலையே இல்லாமல் செய்திருந்தார். பின்தங்கிய சமூகங்கள் அவரால் முன்னேற்றம் அடைந்தன. மேயர் துரையப்பா இருந்திருக்காவிட்டால் இன்று நாம் பார்க்கும் நவீன சந்தைக் கட்டிடம் காணமுடியாது. மாறாக ஓலைக்கூரைகள் கொண்ட பழைய சந்தையே இன்றும் நிலைத்து நின்றிருக்கும். தெருக்கள் ஒழுங்கைகளாக இருந்திருக்கும்- அவரின் மரணத்திற்காய் அழுதவர்கள் யாழ்நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த பின்தங்கிய சமூக மக்களே. அவரின் கொலையை ஒட்டி மகிழ்ந்தவர்கள் இந்த மக்களை ஒதுக்கி வைத்திருந்த-வைத்திருக்க விரும்பும் தமிழ் தேசிய(சாதிய)வாதிகளே.

திரு.அல்பிறட் துரையப்பா அரசியல்வாதியாக மேயர் பதவிக்கு வந்தவரல்ல. மேயராக இருந்த போது பின்தங்கிய – சாதிப் பெயரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது செயற்பாடுகளை முன்னெடுத்தார். அப்படி அவர் மேற்கொண்ட பணிகள் காரணமாகவே தேசியத் தோல் அணிந்த சாதியம் அவரைத் துரோகி என்று கூறி கொலை செய்யும் வரைக்கும் சென்றது.

இந்த தமிழ் தேசியம் தங்களிடம் சாதியம் இல்லையென காட்ட போலியாக திரு செல்லன் கந்தையனை ஜனவரி 2002ல் மேயராக தெரிவு செய்தது. ஆனால் அதே தேசியம் ஒரு வருடத்திலேயே தானாகவே பதவியிலிருந்து விலகும் சூழ்நிலைக்கு அவரை உட்படுத்தியது.

70 வருட காலத்தில் யாழ்ப்பாணத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகி வந்த தமிழ் தேசிய(சாதிய)வாதிகள் இந்த யாழ்நகர் மக்களுக்கு செய்த நற்பணிகள் யாவை என்ற கேள்விக்கான பதிலின் ஊடாக நாம் இவர்களின் சாதிய ஆதிக்க செயற்பாடுகளை நன்கு விளங்கிக் கொள்ள முடியும்.

1949 இலிருந்து யாழ்மாநகர சபை இயங்குகிறது. இன்றுவரை ஒரு வசதியான-ஒழுங்குமுறையான போக்குவரத்து நடைமுறை இல்லை. சீரான-சுகாதாரமான கழிவுநீர் வடிகால் அமைப்பும், குப்பை கூழங்கள் அகற்றும் செயற்பாடும் இல்லை. சுற்றுச்சூழல், சுகாதார பாதுகாப்பு நடைமுறை இல்லை. இன்றைக்கும் பின்தங்கிய சமூகங்கள் வாழும் பகுதிகளை அண்டியே நகரின் அனைத்துக் குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. சில வருடங்களுக்கு முன்னர் அப்படிக் கொட்டக் கூடாதென நீதிமன்றம் தடையுத்தரவு போடும் அளவுக்கு மாநகர சபையின் சமூகப் பார்வையும் பணிகளும் அமைந்துள்ளன. அண்மையில் மறுபடியும் ஆஸ்பத்திரிக் கழிவுகளும் மலமும் குறித்த பகுதியில் கொட்டக் கூடாதென தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இங்கே தான் சாதியம் எந்தளவுக்கு வலிமையாக இயங்குகிறது என்பதை நாம் காண்கிறோம். இன்றைய 21ம் நூற்றாண்டு காலத்தில் கூட மாநகர மாகாண சபைகளின் ஊழியர்களோ - ஆட்சியாளர்களோ – யாழ் தமிழ் தேசிய வாதிகளோ - உலகம் பூராவும் கொடிகட்டிப் பறக்க விட்டு தற்பெருமை பேசும் தமிழர்களோ யாழ்நகர் வாழ் மக்களின் ஒரு பெரும்பான்மையினரை அதாவது பின்தங்கிய சமூகங்களை மனிதாபிமானத்துடன் கூட அணுக முடியாமைக்கான காரணம் அவர்களின் சாதியக் கண்ணோட்டமே.

தனிநாட்டுக்கான ஆயுத அரசியல் கலாச்சாரம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் தமிழர்களின் தாயகம் - தமிழ்ப் பேசும் மக்களுக்கான நாடு என்ற இரு பதங்கள் பாவிக்கப்பட்டன. இதில் தமிழர்கள் என்பது சாதியம்-சமயம் என்ற கருவில் இருந்து உருவானது. தமிழ் பேசும் மக்கள் என்பது மனிதர்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டது.

தமிழர்களின் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்ட அகராதியில் சத்தியம் என்பது நீக்கப்பட்டிருந்தது. சாதியம் சாதுரியமாக காய்களை நகர்த்திக் கொண்டிருந்தது. பொய்களும் போலித்தனங்களும் உண்மைகளாக காட்டப்பட்டன. இன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்படும் பெரும்பான்மையான பிரச்சாரங்கள்-ஊடகங்கள்-தொடர்பு சாதனங்கள்-விளம்பரங்கள் யாவும் சாதியத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

சாதியம் உள்ள வரை சத்தியம் தழைக்காது. சத்தியத்தை காப்பாற்ற விரும்பாத ஒரு மக்கள் கூட்டம் வரலாற்றில் சாதனை எதனையும் படைக்கவும் முடியாது.