11_2006.jpg

ஓசூர் அருகே பாகலூர் ஊராட்சியைச் சேர்ந்த பௌத்தூரிலுள்ள ஏசியன் பேரிங் லிமிடெட் என்ற ஆலை கடந்த 10 மாதங்களாகச் சட்டவிரோதமாகக் கதவடைப்பு செய்யப்பட்டு, அங்கு வேலை செய்து வந்த 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தோடு பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இச்சட்டவிரோதக் கதவடைப்பை ரத்து செய்து, ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், உள்ளூர் மக்களின் ஆதரவோடு ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தை, ஏற்கெனவே 24.2.06இல் தொழிலாளர்கள் நடத்தினர். ஆனாலும் ஆட்சியாளர்களோ, தொழிலாளர் நலத் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் வந்தது; புதிய ஆட்சி வந்தது. அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. தொழிலாளர்கள், தமது சங்கத்துக்கு வெளியிலுள்ள கே.ஜி. பிரகாஷ் என்ற வழக்குரைஞரைத் தலைவராக்கித் தீர்வு காண முயன்றனர். அவரோ பேச்சுவார்த்தை நாடகமாடிப் பிரச்சினையை இழுத்தடித்தார். இதைக் கண்டு வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், கடந்த 24.9.06 அன்று பொதுக் குழுவைக் கூட்டி, துரோகத் தலைவர் கே.ஜி. பிரகாஷை விரட்டியடித்துவிட்டு, தமக்குள் ஒரு போராட்டக் குழுவை அமைத்து, அதன் தலைமையில் 5.10.06 அன்று சாலை மறியல் போராட்டம் நடத்துவதென முடிவு செய்தனர்.

 

அதன்படி, 5.10.06 அன்று காலை பாகலூர் சர்க்கிள் அருகே தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தோடு திரண்டதோடு, அவர்களுக்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் பல்வேறு சங்கங்களும் திரண்டு ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுச்சிமிகு சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில், ஓசூர் வட்டத்தில் செயல்பட்டு வரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்களும் பங்கேற்றனர். இப்போராட்டத்தின் நியாயத்தை விளக்கி, பு.ஜ.தொ.மு. தோழர் பரசுராமன், போராடும் மக்களிடம் ஆற்றிய உரையும் தோழர்களின் உணர்ச்சிமிகு முழக்கங்களும் போராட்ட உணர்வைத் தட்டியெழுப்புவதாக அமைந்தது. இதைக் கண்டு பீதியடைந்த போலீசு, தோழர் பரசுராமன் உள்ளிட்ட பு.ஜ.தொ.மு. தோழர்களைக் குறிவைத்து கைது செய்யப் பலவந்தமாக இழுத்தபோது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் ஆவேசமடைந்து போலீசின் அராஜகத்துக்கு எதிராக முழக்கமிட்டு, போலீசாரைத் தடுத்து நிறுத்திப் போராடினர். ஆத்திரமடைந்த போலீசு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து பேருந்துகளில் ஏற்ற முற்பட்டது.

 

இதைக் கண்ட தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த, அரசு மேனிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டபடியே அப்பேருந்துகளை மறித்துப் போராட்டத்தில் இறங்கினர். திக்குமுக்காடிப் போன போலீசு, அவர்களையும் கைது செய்து அனைவரையும் உள்ளூரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் சிறைவைத்தது. அதன்பிறகு ஓசூர் வட்டாட்சியர் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகளையும் அரசியல் கட்சிப் பிரமுகர்களையும் வைத்து சமரசப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் மிரட்டிப் பார்த்தது. இதற்கெல்லாம் போராடும் தொழிலாளர்கள் மசிவதாக இல்லை என்று அறிந்ததும், இத்தொகுதி காங்கிரசு எம்.எல்.ஏ.வான கோபிநாத்தை அழைத்து, தொழிலாளர்களிடம் நைச்சியமாகப் பேசி இப்போராட்டத்தைக் கைவிடக் கோரியது.

 

சட்டமன்றத் தேர்தலின்போது, ""நான் வெற்றி பெற்றால் ஏசியன் பேரிங் கம்பெனி பிரச்சினையைத் தீர்ப்பதுதான் முதல் வேலை'' என்று வாக்குறுதியளித்துவிட்டு, வெற்றி பெற்ற பின்னர் இதுவரை எட்டிப் பார்க்காத எம்.எல்.ஏ. கோபிநாத், இப்போது சமரம் பேசவந்ததும் தொழிலாளர் குடும்பப் பெண்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு முற்றுகையிட்டதும், விழிபிதுங்கிய அவர் நழுவி ஓடிவிட்டார். பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிப்பதாக போலீசு அறிவித்தது.

 

தொழிலாளர்கள் குடும்பத்தோடு திரண்டு ஒற்றுமையாகவும் வர்க்க உணர்வோடும் தன்னெழுச்சியாக நடத்திய இப்போராட்டம், ஓசூர் வட்டார மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறை பற்றி தெளிவும் தொலைநோக்குப் பார்வையுமின்றி போராட்டக்குழு உள்ளது. குறுகிய தொழிற்சங்கவாத வட்டத்தை விட்டு வெளியே வருவதும், மறுகாலனிய சூழலுக்கேற்ற புதிய போராட்ட முறைகளை வகுத்து முன்னேறுவதும் இன்றைய தேவையாக உள்ளது.

 

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்.