12_2006.jpg

இந்தியாவின் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் அடுக்கடுக்கான பல சமூக நீதிச் சலுகைகளும், சமூக நலத் திட்டங்களும், மக்கள் உரிமைச் சட்டங்களும் கொண்டு வந்து நிறைவேற்றுவதாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் எதனால் கொண்டு

 வரப்படுகின்றன, இவை எந்த அளவு நிறைவேற்றப்படுகின்றன, இவற்றால் என்னென்ன பயன்கள் விளைந்திருக்கின்றன என்று அலசும் தொடரின் மூன்றாம் பகுதி.

 

முதல் இந்தியப் பிரதமர் ""சாச்சா'' ஜவகர்லால் நேரு முதல் இப்போதைய இந்திய அரசுத் தலைவர் வரை — இவர்கள் அனைவரும் குழந்தைகளை மிகவும் நேசிப்பவர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள். அவர்கள் எந்தக் குழந்தைகள் மீது நேசம் வைத்தார்கள் என்பது மட்டும் சொல்லப்படவில்லை.

 

ஆனால், உலகிலேயே மிக அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்ற உண்மை அவர்கள் எந்தக் குழந்தைகளை நேசித்தார்கள் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டி விடுகிறது. புதிய ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்றவுடனேயே மாவோவின் செஞ்சீனத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை அடியோடு ஒழிக்கப்பட்டது; பள்ளிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், காந்தியின் தலைமையில் ""சுதந்திரம்'' பெற்றதாகக் கூறப்படும் இந்த நாட்டில் 59 ஆண்டுகளாகியும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிக்கும் சட்ட நடைமுறையோ இன்னும் வரவே இல்லை.

 

1933 ஆண்டு ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்குவதைத் தடை செய்து சட்டம் கொண்டு வந்தார்கள். இப்போது கடந்த 2006, அக்டோபர் 10ந் தேதி முதல் வீடுகள் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் (உணவு தங்கும் விடுதிகள் போன்றவை) குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதைத் தடை செய்து இந்திய அரசு ஆணைப் பிறப்பித்திருக்கிறது. இதற்கிடையே குழந்தைத் தொழிலாளர் முறையை பல தவணைகளில், இனங்களில், வகைகளில் தடை செய்யும் சட்டங்கள் பலவும் வந்திருக்கின்றன; அதேபோன்று பல உச்சநீதி மன்ற உத்திரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.

 

இருந்தும் இந்த நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அரசுப் பதிவேடுகள் புள்ளி விவரங்களில்தான் குறைந்திருக்கிறது. இதற்கு மாறாக, வெளியிலே அதிகரித்துக் கொண்டே போகிறது. காரணம் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான அரசின் சட்டங்களும், நடைமுறைகளும் அரைக்கிணறு தாண்டுவதாகவும் ஏனோதானோவென்றுதான் இருந்திருக்கின்றன.

 

1933க்குப் பிறகு 1938ஆம் ஆண்டு குழந்தைகளைப் பணியமர்த்தும் சட்டம் என்றொரு சட்டத்தைக் காலனியவாதிகள் கொண்டு வந்தார்கள். இது குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடை செய்யவில்லை. அவர்களை வயதின் அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரித்து ஒரு பகுதியைத் தடைசெய்தும், மற்றொரு பகுதியினருக்கான நடைமுறையை நெறிப்படுத்துவதாக இருந்தது.

 

1948ஆம் ஆண்டில் தொழிற்சாலைகள் சட்டம் 14 வயதுக்குக் குறைவானர்களைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தது. 1951ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர் சட்டம், 12 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதற்குத் தடைவிதித்தது. 1951ஆம் ஆண்டு சரக்குக் கப்பல்கள் சட்டம், 15 வயதுக்குட்பட்டவர்களை பணியமர்த்துவதைத் தடைச் செய்தது. 1952ஆம் ஆண்டு சுரங்கங்கள் சட்டம் சிறுவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதை மட்டுமல்ல; சுரங்கங்களில் சிறுவர்கள் இருப்பதற்கும் தடை விதிக்கிறது.

 

1961ஆம் ஆண்டு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சட்டம் சிறுவர்களை எந்த வகையிலும் வேலைக்கு வைத்துக் கொள்வதையும் தடை செய்தது. 1961ஆம் ஆண்டு பயிற்சியாளர்கள் சட்டம் கல்வி மற்றும் உடல் தகுதி கொண்ட 14 வயதுக்கு மேலானவர்களை மட்டுமே தொழில் பயிற்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது. 1966ஆம் ஆண்டு பீடி மற்றும் சுருட்டுத் தொழிலாளர்கள் (வேலை நிலைமை) சட்டம் இந்தத் தொழிலகங்களில் எந்த வேலையிலும் குழந்தை உழைப்பைத் தடை செய்கிறது. 1970ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டம், சிலவகைத் தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்களை அமர்த்துவதை நெறிப்படுத்தும் அதேசமயம், மேலும் சிலவற்றில் அதற்குத் தடை விதிக்கிறது. 1976ஆம் ஆண்டு கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம், கொத்தடிமை முறையில் இருந்து பொதுவில் உழைப்பாளர்களை விடுவிப்பதோடு, அவர்களின் கடன்களையும் ரத்து செய்கிறது; என்றாலும் கொத்தடிமைத்தனத்தில் இருந்து குழந்தைத் தொழிலாளர்களை விடுவிப்பது மற்றும் அவர்களின் மறுவாழ்வு பற்றி எதுவும் கூறவில்லை. 2000ஆம் ஆண்டு, சிறார்கள் (கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) நீதிச் சட்டம், விடுவிக்கப்பட்ட சிறுவர்களைப் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவதை பற்றி மட்டும் பேசுகிறது; வீடு திரும்பிய பிறகு அவர்களின் மறுவாழ்வு குறித்து எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

 

இப்படி வரிசையாகப் பல சட்டங்கள் குழந்தைத் தொழிலாளர் சம்பந்தமாகப் போடப்பட்டிருந்தாலும் எதுவுமே ஒட்டு மொத்தமாக அதைத் தடை செய்திடவில்லை. 1986இல் கொண்டு வரப்பட்ட (குழந்தை உழைப்பு தடை மற்றும் நெறிப்படுத்தும்) சட்டம்தான் மிகவும் குறிப்பிடத்தக்கதென்று கூறப்பட்டாலும், இதுவும் கூட சில துறைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான வேலை நேரம் மற்றும் வேலை நிலைமைகளை நெறிப்படுத்துவதிலும்; பட்டாசு மற்றும் இரசாயன ஆலைகள் போன்ற ஆபத்து விளைவிக்கக் கூடிய சிலவற்றில் தடை செய்வதைப் பற்றி மட்டுமே பேசுகிறது.

 

ஆக, குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய இந்தச் சட்டங்கள் எல்லாம் மேம்போக்கானவை, பயனற்றவை, ஓட்டைகள் நிறைந்தவை. வேண்டுமென்றேதான் இப்படிச் செய்கிறார்கள். இச்சட்டங்கள் அமலாவதைக் கண்காணிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆய்வுகள் மேற்கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்தச் சட்டங்கள் வழக்கமாக மீறப்படுவதாகவும் அதற்கான குற்றமிழைப்பவர்கள் தண்டனைகள் எதுவுமின்றி தப்பித்துக் கொள்வதாகவும் பல ஆய்வறிக்கை களில் குற்றம் சாட்டுகிறது.

 

5 முதல் 14 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அரசின் புள்ளி விவரக் கணக்குப்படியே 1.3 கோடியாகும். இதன்படி, நாடு முழுவதுமுள்ள தொழிலாளர்களில் 3.6 சதவீதமானவர்கள் குழந்தைத் தொழிலாளர்கள்; அவர்களில் 85 சதவீதமானவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். முறைசாராத் தொழில்களில்தான் அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆகவே, அரசுப் புள்ளி விவரம் என்பது வெறும் மோசடிதான். நாட்டின் மொத்த ""தேசிய'' உற்பத்தியில் (ஜி.என்.பி.) குழந்தைத் தொழிலாளர்களின் பங்களிப்பு 20 சதவீதமாகும். இதிலிருந்தே குழந்தைத் தொழிலாளர்கள் ""தேசிய'' உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிப்பதும்; இந்த அரசு குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பதில் உண்மையான அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.

 

கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும் பழக்கம் குறிப்பாக, உத்திரப்பிரதேசத்திலும் பீகாரிலும் அதிகரித்திருக்கிறது என்று வேறொரு புள்ளிவிவரம் காட்டுகிறது. 72 சதவீதமான குழந்தைத் தொழிலாளர்கள் உ.பி., ம.பி., மே.வங்கம், ஒரிசா, ஆந்திரா, அசாம், ராஜஸ்தானில் இருக்கிறார்கள். ஆனால் வறுமை பின்தங்கிய நிலைமை மட்டுமல்ல; மலிவான உழைப்பு என்பதாலும், சமூகக் காரணங்களாலும் கூட குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். குழந்தைத் தொழிலாளர்களில் 40 சதவீதத்தினர் பணக்கார மாநிலங்களாகக் கருதப்படும் மகாராட்டிரம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் உள்ளனர்.

 

குழந்தைத் தொழிலாளர் முறையிலேயே மிகவும் மோசமானது கொத்தடிமைகளாக அவர்களை வைப்பதுதான். கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பே முழுக்கவும் சட்டவிரோதமானதாக்கப்பட்டிருந்த போதும் குழந்தைத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக வைப்பது இன்னமும் நீடிக்கிறது. சில குறிப்பிட்ட தொழில்துறைகள் கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்களை ஆதாரமாகக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழில்கள் குழந்தைத் தொழிலாளர்களின் மலிவான உழைப்பைச் சார்ந்துதான் இருக்கின்றன. அதேபோன்று உத்திரப்பிரதேசத்தின் தரைவிரிப்பு மற்றும் வெண்கலத் தொழில்கள், ராஜஸ்தானின் கண்ணாடி வளையல் தொழில், மும்பையின் நகைக் கற்கள் தொழில் ஆகியவை குழந்தைத் தொழிலாளர்களை வைத்துத்தான் இயங்குகின்றன. மேலும் உள்ளாடை பின்னலாடைத் தொழில்கள், பீடித் தொழில், காபிதேயிலைத் தோட்டத் தொழில்கள் மற்றும் விவசாயத்தில் கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவு உள்ளனர்.

 

பத்து லட்சம் பேருக்கும் அதிகமான குழந்தை உழைப்பாளர்கள் வீட்டு வேலை செய்யும் வேலையாட்களாக உள்ளனர். மேலும், ஒரு பத்து லட்சம் குழந்தை உழைப்பாளர்கள் சாலையோர உணவகங்கள், ஓட்டல்கள், துரித உணவகங்கள், டீக்கடைகள், ""ரிசார்ட்கள்'' எனப்படும் விருந்தினர் மாளிகைகளில் வேலை செய்கின்றனர்.

 

கடனுக்கு ஈடாக கொத்தடிமைகளாக அடகு வைக்கப்பட்டுள்ள குழந்தைத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான துன்ப துயரங்களுக்கு ஆளாகிறார்கள். நாள் ஒன்றுக்கு சராசரி 10 முதல் 12 மணிநேரம் உழைக்கும் இவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தப்படும் இவர்கள் உடற்சிதைவும், மூச்சு தொற்று திணறல், காசநோய், கண்பார்வை இழப்பு முதல் பல கொடிய நோய்களுக்கு பலியாகின்றனர். பட்டாசுதீப்பெட்டித் தொழில்களில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் தீ மற்றும் வெடி விபத்துகளில் சிக்கிக் கொல்லப்படுவதையும் அடிக்கடி காண்கிறோம்.

 

இன்னும் முக்கியமாக கொத்தடிமைகளாகவும், அடகு வைக்கப்பட்டும், ஒப்பந்தக்காரர்களால் கடத்தப்பட்டு விற்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் நிலைமைதான் மிகமிக மோசமானது. இவர்களுக்கு வயிற்றுக்கு போதிய உணவும் கிடையாது; நாளொன்றுக்கு சில மணி நேரமே தூங்க அனுமதிக்கப்படுகிறார்கள். கொட்டடிகளில் அடைக்கப்படுவது மட்டுமல்ல, பெரு நகரங்களில் நிலவறைகளில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள் வேறு மாநிலங்களிலிருந்தும், இரயில் நிலையங்களிலிருந்தும் மீட்கப்படும் செய்திகள் அடிக்கடி வருகின்றன. குழந்தைத் தொழிலாளர் பெருமளவு உருவாவதற்கான சமூகப் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் வெறுமனே சட்டங்களும், திட்டங்களும் போடுவதையே சடங்குத்தனமாக ஆட்சியாளர்கள் செய்கின்றனர்.

 

""வேலைபார்க்கும் குழந்தைகள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்போர்களின் பிழைப்புக்கு மாற்று வழியை அளித்தாலொழிய சட்டங்கள் உதவாது'' என்கிறார், தேசிய பொதுமக்கள் ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் ஏ.கே.கோபால். தொழிற்சாலைகள் அல்லது வீடுகளிலிருந்து மீட்கப்படும் குழந்தைகள் அதன்பின் எங்கே போவார்கள்? என்று கேட்கிறார், குழந்தைத் தொழிலாளருக்கான அக்கறை மையத்தின் இயக்குநர் ஜோசப் காட்டியா.


புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாக ஏராளமான சிறுதொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன; விவசாயம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு விவசாயிகள், கூலி விவசாயிகள் வேலையிழந்து கூட்டம் கூட்டமாக இடம் பெயர்கிறார்கள். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து அவர்களிடத்தில் மேற்கண்ட காரணங்களால் வேலை இழப்போரைப் பொருத்தும் பார்வையோ அக்கறையோ அரசிடம் கிடையாது; உழைப்புச் சந்தையே எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்படி விடப்படுகிறது. உழைப்புச் சந்தையில் மிகவும் மலிவானது குழந்தை உழைப்புத்தான் என்பதால் அவர்களின் தற்போதைய நிலை பராமரிக்கப்படுகிறது.

 

மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவும் அரசிடம் கிடையாது. தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் தொழிற்சங்கங்கள் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை தங்களுடையது அல்லவென்று தட்டிக் கழிக்கின்றன. குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை வறுமையினால் வருகிறது; அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவது தங்கள் திட்டத்தில் இல்லை என்கின்றனர். ""பசியினால் சாகாமல் இருக்கத்தான் குழந்தைகள் வேலை செய்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண்பது என்று அரசுக்குத் தெரியவில்லை'' என்கிறார் சி.ஐ.டி.யு. செயலாளர் தபன்சென்.

 

மீட்கப்படும் தொழிலாளர்கள், சிறார் சீர்திருத்தப்பள்ளி (குற்றத்தண்டனை பெற்ற சிறுவர்களை அடைக்கும் சிறைச்சாலை)யிலும், அரசுக் காப்பகங்களிலும் அடைக்கப்படுகின்றனர். மாதம் எட்டு ரூபாய் கூட அவர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு ஒதுக்கவில்லை. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதும், அவர்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மாநில அரசுகளின் பொறுப்பாகும் என்று மையஅரசு தட்டிக் கழிக்கிறது. மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் அரசு காப்பகங்களில் உள்ள கொடுமை தாளாமல் தப்பி ஓடி மீண்டும் கிடைக்கும் வேலைகளில் சேர்வதுதான் நடக்கிறது.

 

2007ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி வழங்குவதைச் சாதிப்பதற்காக மைய அரசு அனைத்துக் குழந்தைக்கும் கல்வி (சர்வ சிக்சா அபிமன்) திட்டத்தை 2002ஆம் ஆண்டு துவங்கியபோது, கட்டாயக் கல்வியும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது என்று அரசு நிறுவனங்களும், ஆரம்பக் கல்வியாளர்களும் வலியுறுத்தினார்கள். ஆனால், பெரும்பாலான குழந்தைகள் தாமே விரும்பி தொழிலாளர்களாக மாறுவதோ, வேலையில் சேர்ந்து உழைப்பதோ கிடையாது; அவர்களுக்குக் கல்வியும், குழந்தைப் பருவ வாழ்க்கையும் மறுக்கப்பட்டும்தான் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

 

இந்த உண்மையை அங்கீகரிப்பதற்குப் பதில், ஏகாதிபத்திய நிதி உதவியையும் அரசு சாரா நிறுவனங்களையும் வைத்து அரைவேக்காட்டுத்தனமான சட்டங்கள் போட்டு, திட்டங்கள் தீட்டி குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் போவதாக நாடகமாடுகிறது, அரசு, சமூக, அரசியல் பொருளாதாரத்தை முழுக்கவும் சந்தைமயமாக்கிவிட்டு, அதன் பாதிப்புகளில் இருந்து குழந்தைத் தொழிலாளர்களையும், ஆரம்பக் கல்வியையும் மட்டும் காப்பதாக நாடகமாடுகிறது அரசு. ஆகவே, மற்ற பிற மக்கள் உரிமை மற்றும் சமூக நீதிச் சட்டங்களையும், மக்கள் நலத் திட்டங்களையும் போலவே அரசின் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டங்களும் திட்டங்களும் வெறும் கண்துடைப்பு வேலைதான்!


(தொடரும்)