பெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றிற்கு நகர நிர்வாகங்கள் முகம் கொடுக்க தயாரற்ற நிலையில் அந்த நகரங்கள் சிதைந்து விடுகின்றன. பிற்காலத்தில் அப்படியான இடங்களில் இருந்து மக்கள் வெளியேறுவார்கள்.
16 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் மூன்று பெரும் நகரங்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்ந்தமை பற்றி அறிந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. அவை பீக்கிங், கெய்ரோ மற்றையது மெக்சிகோவில் அஸ்ரெக் மக்களது நகரம். பிற்காலத்தில் ஸ்பானியர்களால் அழிக்கப்பட்டு தற்பொழுது அதன்மீது புதிய மெக்சிக்கோ நகரம் உருவாகியுள்ளது.
தற்போதைய ஐரோப்பிய பெரிய நகரங்களான பாரிஸ், இலண்டன் ஆகியன 17 -18 ஆம் நூற்றாண்டில் உருவாகியவை. முடிக்குரிய நிலங்களில் விவசாயம் செய்த மக்கள் அந்த நிலங்களை பிரபுக்களிடமும், முதலாளிகளிடமும் இழந்ததால் தொழிற்புரட்சி நடந்த பெரிய நகரங்களை நோக்கி மக்கள் குவிந்தார்கள். அப்படியான மக்கள் தொகையால் தொடர்ச்சியாக நகரங்கள் வளர்ந்தன. தற்போது இந்தியாவில் இப்படியான நிலையைப் பார்க்க முடிகிறது 18 நூற்றாண்டு இலண்டனின் நிலக்கரியைப் பாவித்ததால் ஏற்பட்ட அழுக்கையும், தூசியையும் சார்ள்ஸ் டிக்கன்ஸனின் நாவல்களில் பார்க்கமுடியும்.
இப்படியான நகரமயமாக்கத்தில் உணவு, தண்ணீர் என்பவற்றை மக்களுக்கு அளித்து கழிவுப்பொருட்களை சுத்திகரித்தல் நகர நிர்வாகத்தின் முக்கிய கடமையாகும். இதற்கு ஒழுங்கான நகர நிர்வாக அமைப்புத்தேவை. இதில் உணவு, தண்ணீர் என்பவற்றுக்கு பணத்தை கொடுத்தால் தனிப்பட நிறுவனங்களால் வழங்க முடியும். ஆனால், மக்களது கழிவை வெளியேற்ற நிச்சயமாக நகர நிர்வாகம் வேண்டும். இந்தியாவின் பெரிய செல்வந்தராகிய அம்பானி கூட பம்பாய் நகராட்சியை இதற்காக நம்பவேண்டும்.
நகரமயமாக்கம் கழிவு வெளியேற்றம் என்பதில் எந்த அடிப்படை அறிவுமற்ற எனக்கு மெக்சிக்கோவில் உள்ள யோகரான் குடாப்பகுதியில் (Yucatan Peninsula) மாயா இன மக்களின் கலாச்சார எச்சங்களை பார்க்கப் போனபோது என்னையறியாது போதி தரிசனம் கிடைத்தது.
யோகரான் குடாப்பகுதி இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு கடலின்கீழ் இருந்தது. கடலில் வாழும் தாவரங்களான கோரல் போன்றவற்றால் உருவாகிய சுண்ணாம்பு பாறையாலான நிலப்பிரதேசம். பிற்காலத்தில் சூழல் மாற்றத்தால் இந்தச் சுண்ணாம்புப் பாறைகள் மேலே வந்து நிலமாகியது. ஆனாலும் அந்த நிலத்தில் பெய்யும் மழை சுண்ணாம்புப் பாறைகளை ஊடுருவி நிலத்தின்கீழ் ஆறாக ஓடும். அந்த ஆறுகள் வழியே உல்லாசப்பிரயாணிகள் நடப்பார்கள். அப்படி நான் நடந்தபோது எப்படி நீர், ஆறுகளாகி பல கிலோ மீட்டர் தூரம் ஓடுகின்றன எனப் பார்க்க முடிந்தது. அவைகளை சினோட் (Cenote) என்பார்கள். இரசாயன பொருட்கள் சுண்ணாம்பு நிலத்தை ஊடுறுவுவதைப் பார்த்தேன். அவை ஊசிகளாக நிலத்தின் கீழ் அமைந்திருந்தது. யாழ்ப்பாணம் கூட பெரும்பகுதி சுண்ணாம்புக்கற்களால் ஆனதுதானே என்று அப்பொழுது நினைத்தேன் . நிச்சயமாக குடாநாட்டின பெரும்பகுதி கடலின் கீழ் இருந்திருக்கவேண்டும். அப்படியான சினோட்தான் நாங்கள் காணும் நிலாவரைக் கிணறு .
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மலசல கூடங்கள், வீட்டுக் கிணறுகள் மிகவும் அருகில் உள்ளன. மலசல கூடக் குழிகளில் இருந்து பக்டீரியா, வைரஸ் போன்றவை கிணறுகளுக்குள் பரவும் . இந்த நிலையில் நகருக்கு பொதுவான கழிவுப்பொருட்களை அகற்றுவதும் தேவைப்படுகிறது. தற்போதைய வெப்பமாகும் சூழலில் நுண்ணுயிர்கள் வேகமாகப் பெருகுவதால் சூழல் மேலும் அசுத்தமாவது தவிர்க்கமுடியாதது. குடிதண்ணீர் யாழ்ப்பாணத்திற்குத்தேவை, ஆனால் அதைவிட இந்த விடயத்தை நிவர்த்திசெய்வது முக்கியமாகிறது.
இம்முறை யாழ்ப்பாணத்தில் நான் பார்த்தவிடயங்கள் கவலையை அளித்தன.பொலித்தீன் பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் பத்திரிகைக் கழிவுகளை மக்கள் எரித்தார்கள். அங்கு எந்தவிதமான ரீசைக்கிள் முறையையும் அங்குள்ள நகர நிர்வாகம் கடைப்பிடிப்பாகத் தெரியவில்லை. உணவு விடுதிகளில் பொலித்தின் பேப்பர்களில் சூடான உணவைப் பரிமாறுகிறார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி பஸ்சில் பணித்தபோது 100 மில்லி லீட்டர் வெத்திலைத்துப்பலை அந்த இலங்கைப்போக்குவரத்து சபை சாரதி வெளியே துப்பினார். இலாவகமாக துப்பியதால் அவருக்கு பின்பாக இருந்த எனக்கு கண்ணுக்குத் தெரிய என்முகத்தில் துவானமாக அவரது வாய்ச்சென்னீர் படவில்லை . கண்ணுக்குத் தெரியாத கடவுளை போல் நுண்ணுயிர்கள் காற்றில் கலந்திருக்கலாம். காசநோய் மற்றும் பல burning plasticsசுவாச நோய்க்கிருமிகள் துப்பலால் பரவும். நல்லவேளையாக துப்புவதை இலங்கை அரசாங்கம் தடை செய்திருப்பதை அறிந்தேன்.விரைவில் அமுல் படுத்தப்படும் என ஒரு அரசாங்க அதிகாரி சொன்னார்.
கொழும்பில் குப்பைமேடு சரிந்து மரணங்கள் சம்பவித்ததை பற்றி பேசியபோது மிகவும் முக்கியமான ஒருவர் கூறியது “ஜேர்மன் கம்பனி ஒன்று கொழும்பில் குப்பைகளை ரீசைக்கிளிங் செய்ய வந்தபோது, அங்குள்ளவர்கள் அதற்குக் கேட்ட இலஞ்சத்தால் அவர்கள் பின்வாங்கினார்கள் ”.இலங்கை அரசியல்நிருவாக இயந்திரம் தெற்கிலும் வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் தைலம்போட்டால்தான் நகர்கிறது.plastics-polymerisation-7-638
வடக்கில் அரசியல் அதிகாரமானது காலம் காலமாக கண்ணாம்பூச்சி விளையாடும் அரசியல்வாதிகளிடத்தில் தைலம் போட்டாலும் விடயம் நடக்காது. மக்கள் அவர்களினது அத்தியாவசிய தேவைகளை மீட்டெடுக்கவேண்டும். அதிலும் சூழல் பாதுகாப்பு விடயங்களை செய்வதற்கான அறிவோ உற்சாகமோ தற்போதைய அரசியல்வாதிகளுக்கு இல்லை. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு சூழல்பாதுகாப்பு இயக்கங்கள் தோன்றுவது முக்கியமானது. இல்லாவிடில் ஏற்கனவே போரால் ஒரு சந்ததியை அழிந்துவிட்டதுபோன்று அடுத்த தலைமுறையை நச்சுச்சூழலில் திக்குமுக்காடவைத்துவிடுவார்கள்.
கிளிநொச்சியில் நைல் நதிக்கரையோரம் என்ற எனது புத்தகவெளியீட்டில் பேசியது.
- நடேசன்
நன்றி தேனீ