12_2006.jpg

வாய்ச்சவடால் அடித்துக் கொண்டு தனது வட்டாரத்து மக்களையே அஞ்சி நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் ரவுடிகள், ஒவ்வொரு நொடியும் தனது உயிருக்கு யாராலும் ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பர். அதைப் போல்தான், இன்றைக்கு உலகமெல்லாம் தனது மேலாதிக்கத்திற்கு அடி பணிய

 வேண்டுமென்று கருதிச் செயல்படுகின்ற ஏகாதிபத்தியங்களும் தமது ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பீதியில், எதற்கெடுத்தாலும் தீவிரவாதம், பயங்கரவாதம் எனப் பழி போட்டு, மக்களை நிரந்தர அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன.

 

இப்படித்தான், கடந்த ஆகஸ்ட் 12 அன்று லண்டனில் இருந்து அமெரிக்கா செல்லக்கூடிய ஒன்பது விமானங்களை திரவ வெடிகுண்டு வைத்து பயங்கரவாதிகள் தகர்க்கப் போவதாக ஏகாதிபத்தியவாதிகள் பீதியூட்டினர். கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் அனைத்துப் பயணிகளையும் சல்லடை போட்டுச் சோதித்தனர். பற்பசை, பாட்டில் தண்ணீர், ஷாம்பூ பாக்கெட், குளிர்பானம், அவசியமான மருந்துகள் என அனைத்துவிதமான திரவப் பொருட்களையும் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதித்தனர்.

 

பயங்கரவாதிகள், தண்ணீரில் கூட வெடிகுண்டு செய்து விட்டனர் என்றும் கதை கட்டி விட்டனர். தண்ணீரில் வெடிகுண்டா? விஞ்ஞானிகளே மண்டை குழம்பிப் போய்விட்டனர். தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய பைபிளின் கதையை விட படுசுவாரசியமான கதையாய் அமைந்தது, இங்கிலாந்து உளவுத்துறையின் திரைக்கதை.

 

திரவ வெடிகுண்டு தயாரிக்கச் சதித்திட்டம் தீட்டியதாக இங்கிலாந்தில் வசித்து வரும் பாகிஸ்தானியர் 24 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த 24 பேரில் ஒருவர்கூட விமானப் பயணத்திற்கான பயணச்சீட்டு வாங்கி இருக்கவில்லை என்பதும், சிலரிடம் ""பாஸ்போர்ட்டே'' இல்லை என்பதும்தான் இந்தப் பயங்கரவாதப் பீதி நாடகத்தில் வேடிக்கையான காட்சி.

 

கைதானவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து எவ்விதமான பணப்பரிவர்த்தனைகளும் நடந்திராதபோதிலும், அவர்களின் வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியது. அவர்களுக்கு எதிராக சிறு துரும்பைக்கூட ஆதாரம் காட்ட முடியாத போதிலும், வெடிகுண்டு பயங்கர பீதியைக் கிளப்பி விட அனைத்துவிதமான பிரச்சார சாதனங்களையும் டோனி பிளேரின் அரசு முடுக்கி விட்டது.

 

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து ஒரு குண்டுகூடக் கைப்பற்றப்படவில்லை. அவர்களிடமிருந்து குண்டு தயாரிக்கும் முறை பற்றியோ, அதை வெடிக்கச் செய்யும் முறை பற்றியோ எவ்விதமான பிரசுரங்களும் அகப்படவில்லை. அவர்களிடமிருந்து பாட்டில்களோ, திரவ வேதிப்பொருட்களோ பிடிபடவில்லை. வேறு எங்கிருந்து இவர்களால் குண்டுகளை வரவழைக்க முடியும் என்ற கற்பனையைக் கூட இங்கிலாந்து சூரப்புலிகளால் சொல்ல முடியவில்லை.

 

பிரிட்டிசு போலீசு உயர் அதிகாரி பீட்டர் கிளார்க் ஒருபடி மேலே போய் ""குண்டு தயாரிக்கத் தேவையான ரசாயனத்தையும், எலெக்ட்ரானிக் கருவியையும் கண்டுபிடித்து விட்டோம்'' என்று ஒரே போடாய்ப் போட்டார். அதுவரை திரவ வெடிகுண்டு எனச்சொல்லி வந்த போலீசார், இப்போது சொன்ன ஆதாரமோ பழைய வகை வெடிகுண்டு சம்பந்தமானதாய் இருந்தது.

 

கைது செய்த பாகிஸ்தானியரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 400 கம்ப்யூட்டர்கள், 200 செல்போன்கள், 8000 டிவிடி, சிடிக்களை போலீசு பட்டியல் இட்டதும், அவர்களின் துப்பறியும் அதிபுத்திசாலித்தனம் சந்தி சிரித்தது. இந்தப் பொருட்களை வைத்திருப்பதைக் குற்றம் என்றால், பல லட்சம் லண்டன்வாசிகள் சிறையில்தான் கிடக்க வேண்டி வரும்.

 

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் கம்யூட்டரில் ஜிஹாத் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் சில செய்திகள் இருந்ததாம். இணையதளத்தில் இருந்து ஜார்ஜ் புஷ் கூட இறக்குமதி செய்து படிக்கத்தக்க ஆவணம் ஒன்றையே ஆதாரம் காட்டி இந்தக் கதைக்கு கிளைக்கதைகள் தயாரித்தனர். இதை ஓர் ஆதாரமாகக் காட்டுவது எந்த நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என பிரிட்டனின் சட்ட நிபுணர்களே கூறுகிறார்கள்.

 

அடுத்து, கைப்பற்றப்பட்ட கணினிகளின் ""ஹார்டு டிஸ்க்''குகளைக் கழற்றி எடுத்து 69 மாடிகள் ஏறிப்போய் அவற்றை அழிக்கவும் செய்தனர், இந்த அதிமேதாவிகள். பிறகு, பாகிஸ்தானியரைக் கைது செய்ய விசித்திரமான காரணத்தைக் கண்டறிந்தார்கள். கடந்த ஆண்டில், கைதானவர்களில் சிலர் ஆண்டு இறுதி விடுமுறையை பாகிஸ்தானில் கழித்தனராம். இது போன்ற கடுமையான குற்றத்தை செய்ததற்காக ஒருவரைக் கைது செய்ய முடியும் என்றால், பல ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்களை உள்ளே தள்ள முடியும் என்ற விசயம், சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் "ஜேம்ஸ்பாண்டு' மூளைக்குத் தெரியாமல் போய்விட்டது.

 

17 வயதேயான பையன் ஒருவனை ""தீவிரவாதத்தைத் தூண்டும் பிரசுரம் வைத்திருந்தாய்'' எனக் குற்றம் சுமத்தி கைது செய்துள்ளனர். அப்பிரசுரத்தை, அவனோ, அவன் குடும்பத்தாரோ வாசித்தார்களா? அதனை அவன் பிறருக்குத் தந்தானா என்பதெல்லாம் ஆராயப்படவே இல்லை. கைதானவர்களில் இரண்டு பேரை மட்டும் விடுவித்துவிட்டு, 11 பேர் மீது குற்றம் சாட்டி, மீதம் 11 பேரை விசாரணை ஏதுமின்றி சட்டவிரோதக் காவலில் வைத்த பிரிட்டிஷ் போலீசுக்கு கைது செய்ததன் முகாந்திரங்களைக் காட்டமுடியாததால், இப்போது கைதானவர்களுக்கு ஸ்பெயின், இத்தாலி, மேற்காசிய நாடுகளுடன் தொடர்பு உள்ளது என்றும் புதிய கதையை எழுதத் தொடங்கியுள்ளனர்.

 

இவர்களைத் தவிர, தமது பணியை ஒட்டி பயணம் செய்த ஆசிய நாட்டவர் 53 பேரை சந்தேகத்தின்பேரில் கைது செய்ததுடன், அவர்களை இரண்டு நாட்களாய் அலைக்கழித்தனர். பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆசிய மாணவர்களை, அதிலும் குறிப்பாக இசுலாமிய மாணவர்களை வேவு பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி ஊடகங்களே சொல்லுகின்றன.

 

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்களின் தகர்ப்பிற்குப் பின்னர், இம்மாதிரியான பீதியூட்டல்களால், அமெரிக்க பொதுமக்கள் படும் அவதி உச்சத்தை எட்டி உள்ளது. ஜான் கென்னடி விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த ஒரு தாய்க்கு நிகழ்ந்த கொடுமை, அமெரிக்க உளவுபோலீசுதுறையினரின் வக்கிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. விமானப் பயணத்தின் போது குழந்தைக்குப் புகட்டவென மூன்று புட்டிகளில் தாய்ப்பாலை எடுத்து வந்திருந்த அப்பெண்ணிடம் போலீசார் என்ன அதுவெனக் கேட்டனர். தாய்ப்பால் என்று சொல்லியும் நம்பாத அவர்கள், அத்தாயையே அதைக் குடித்து நிரூபிக்கச் சொன்னார்கள். மூன்று பாட்டில்களும் காலியான பிறகே அந்தப் பெண்ணைப் பயணம் செய்யவே அனுமதித்தனர்.

 

லண்டன் மாநகரே, திரவ வெடிகுண்டுக்கு அலறிப்போய் நடுங்கிக் கிடந்த வேளையில், இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் பிளேர், சுற்றுலா சென்றிருந்தார். அவரின் எஜமானன் புஷ்ஷûம் இதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏற்கெனவே சொல்லி வைத்துப் பரப்பப்பட்ட நூதனப் பொய்தான் இது என இருவருக்கும் நன்றாகவே தெரியும். பிரிட்டனின் உயர்மட்ட அதிகாரிகள் கூட, புஷ்ஷûம், பிளேரும் முன்னமேயே இந்நாடகத்தை அறிந்திருந்தனர் என்றே சொல்கின்றனர். இவ்வளவு பரபரப்புக்கு நடுவிலும், நியூயார்க்கின் பங்குச் சந்தை சரியவே இல்லை என்பதில் இருந்தே, ஏகாதிபத்தியத்தின் பொய்யை அந்நாட்டு மக்களே நம்பத் தயாராயில்லை என்பது நிரூபணமானது.

 

திடீரென ஏன் இத்தகைய பயங்கரவாதப் பீதி கிளப்பி விடப்பட்டது?

 

டோனி பிளேரும், புஷ்ஷும் ஈராக் மீது போர் தொடுக்கக் காரணமாய், சதாம் ஹூசேன் உயிர்க்கொல்லி ஆயுதங்களைத் தயாரித்தார் என்றுசொல்லி வந்த பொய்யை நம்பும் அமெரிக்க, இங்கிலாந்தியர்களின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்து போய், அவர்களின் நம்பகத்தன்மையை மக்கள் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். பெருமளவில் நடைபெறும் போர் எதிர்ப்புப் பேரணிகளே இதற்கு சான்று. புஷ்ஷின் ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்களையும், இசுரேலின் லெபனான் மீதான தாக்குதல்களையும் ஆதரித்தமைக்காக, பிளேரின் அரசு மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது. பிளேரின் தொழிற்கட்சியிலேயே எம்.பி.க்கள் பலரும் பிளேரை எதிர்த்துக் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

 

இசுரேலின் லெபனான் தாக்குதலை ஆதரிக்கும் புஷ்ஷின் மேலாதிக்கக் கொள்கை, அமெரிக்க மக்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தது. எதிர்நோக்கி இருந்த அமெரிக்க காங்கிரசு தேர்தலில், குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெருவது கேள்விக்குறியாகி இருந்தது. சொந்த நாட்டில் மதிப்பிழந்து போய் நிற்கும் இந்தப் போர்வெறியர்கள், தமது செல்வாக்கைத் தூக்கி நிறுத்த, மக்களை வேறொரு விசயம் நோக்கி திசை திருப்புவது தேவையாய் இருந்தது.

 

இனவெறி நாசிசக் கொடுங்கோலன் ஹிட்லர், ஜெர்மனியின் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு தாமே தீ வைத்துவிட்டு, கம்யூனிஸ்டுகள் தான் தீ வைத்தனர் என அபாண்டமாய் பழி சுமத்தி விட்டு, கம்யூனிஸ்டுகளையும் யூதர்களையும் வேட்டையாடியதைக் கடந்த நூற்றாண்டின் வரலாறு சொல்கிறது. பொதுவுடைமை இயக்கத்தை வேரறுக்கவும், ஆரிய ஜெர்மானிய தேசிய வெறியை வளர்க்கவும், இவ்வாறு கேவலமான பொய்கள் பலவற்றை ஹிட்லர் பரப்பிட, அவனுக்கென்று கோயபல்சு போன்ற திறமையான பொய்ப் பிரச்சாரகர்கள் அன்று இருந்தனர். ஆனால், அத்தகைய திறமையாளர்கள் யாரும் தமக்குக் கிடைக்கவில்லையே என ஜார்ஜ் புஷ்ஷும், டோனி பிளேருக்கும் வருத்தம் இருக்கக்கூடும்.

 

ரசிய சமூக ஏகாதிபத்தியத்துடன் பனிப்போர் நிலவிய காலகட்டங்களில், ரசியாவை எதிரியாய் கட்டமைத்து தேசிய வெறியை கம்யூனிச எதிர்ப்பை அமெரிக்கரிடையே உருவாக்கி வந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு இன்று சொல்லிக் கொள்ளும்படியான எதிரி இல்லாமல், ஒற்றைத் துருவ உலகம் உருவாகி விட்டது. எனவே, செயற்கையான எதிரிகளை உருவாக்கி உலவ விட வேண்டிய நெருக்கடி ஏகாதிபத்தியத்துக்கு உள்ளது.

 

""பயங்கரவாதமே நம்முன் உள்ள இன்றைய எதிரி'' என்று தன் மக்களை நம்ப வைத்திட இம்மாதிரி பொய்களை அமெரிக்க அரசும் உளவுத்துறையும

 

இந்நிலையில், பரந்து விரிந்த உலகெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் ஆக்கிரமிப்புப் போர்கள் பல நடத்தியிருக்கும் அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத் தியங்களுக்கு எதிரான உலக மக்களின் போராட்டமானது, அகிம்சா வழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.


விளக்குமாற்றைத் தின்ற கழுதை, ஈக்கியைத்தானே கழிந்தாக வேண்டும்!


· பாலன்