Language Selection

12_2006.jpg

· அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்யும் ஆட்சியாளர்களைப் பற்றி பத்து பக்கங்களுக்கு ஒரு விரிவான கட்டுரை எழுதுவதைவிட, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த அட்டைப்படக் கேலிச் சித்திரம் எடுப்பாக அமைந்துள்ளது.
சங்கரலிங்கம், நாமக்கல்.

 

· பார்ப்பன பக்தியுடன் ஏகாதிபத்திய சேவை செய்யும் சி.பி.எம். கட்சியினரை அம்பலப்படுத்திக் காட்டியது அருமை. இனி வரும் காலங்களில் சி.பி.எம். கட்சியினர் பக்தியோடு கோவில்களுக்குக் காவடி தூக்கிப் புரட்சி செய்யக் கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இராணி, மாத்தூர்.

 

· மணிப்பூர் வீராங்கனை ஷர்மிளாவின் போர்க்குணமும் போராட்ட உறுதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்தகைய உயர்ந்த பண்புகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
பகத், பென்னாகரம்.

 

· சுபாஷ் சக்ரவர்த்தி அடுத்த கட்டமாக தமிழ்நாடு பார்ப்பன சுஜாதா, மதனுடன் சேர்ந்து வேதத்திலும், உபநிடதத்திலும் மார்க்சிய கருத்துக்கள் உள்ளதாக உபதேசிப்பார். இதற்கு பிமன்போஸ் ஜால்ரா போடலாம். பூணூல் கம்யூனிஸ்டுகள் சந்தியாவந்தனம் செய்து இந்து தர்மத்தோடு புரட்சி செய்யலாம். பார்ப்பன கம்யூனிஸ்டுகள் எதையும் செய்வார்கள்; யார் கண்டது?
ம. கிருஃச்ணமூர்த்தி, புதுக்கோட்டை.

 

· ஜார்கண்டு மாநிலத்தில் 50 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட துயரச் செய்தியை, தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக் கண்ணீர் விடும் அற்பத்தனத்துடன் ஒப்பிட்டு வர்க்க உணர்வோடு எழுதியிருப்பது சிறப்பு.
ஜீவா, செயங்கொண்டம்.

 

· தனியார்மயம் என்பது பகற்கொள்ளைதான் என்பதை அரசின் கணக்கு தணிக்கை அறிக்கையிலிருந்து நிரூபித்துக் காட்டியது அருமையாக உள்ளது. இப்போது அடிக்கட்டுமானத் துறையிலும் தனியார்மயம் புகுத்தப்பட்டு, சூறையாடல் நடப்பதை எளிமையாக விளக்கியிருப்பது பெரிதும் பயனளித்தது.
அ.ப., கொத்தமங்கலம்

 

· பு.ஜ. இதழின் அட்டைப்படத்தைப் பார்த்த பல வாசகர்கள் ஆச்சரியத்தோடு இதழை வாங்கிப் பாராட்டினார்கள். போலி கம்யூனிஸ்டுகளின் பார்ப்பன பக்தியை அம்பலப்படுத்திக் காட்டியதன் மூலம், உண்மையான கம்யூனிச இயக்கம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக கட்டுரை அமைந்திருந்தது. விவசாயக் கடன் தள்ளுபடியின் பின்னுள்ள மோசடிகளைப் பற்றித் தமிழகம் தழுவிய விவரங்களைத் தொகுத்து எழுதினால் பெரிதும் பயனளிக்கும்.
வாசகர் வட்டம், தஞ்சை.

 

· மன்மோகன் சிங்கின் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை அட்டைப்படக் கேலிச்சித்திரம் எடுப்பாக உணர்த்தியது. தேசப் பாதுகாப்புக்காகவே இந்திய இராணுவம் உள்ளதாக இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு, ""சந்தி சிரிக்கும் ஆயுத பேர ஊழல்'' எனும் கட்டுரை நல்ல சவுக்கடி. தனியார்மயத்தின் பகற்கொள்ளையையும், சட்டமும் நீதியும் இக்கொள்ளையை அங்கீகரிப்பதையும், தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து விளக்கிய கட்டுரை எளிமையாக உணர்த்தியது. வாசகர் வட்டக் கூட்டத்தின் இறுதியில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இன்னுமொரு காகிதச் சட்டம்தான் என்பதை விளக்கி, வழக்குரைஞர் தோழர் இராமலிங்கம் ஆற்றிய சிறப்புரை, வாசகர்களுக்குப் புதிய பார்வையை அளிப்பதாக அமைந்தது.
வாசகர்வட்டம், திருச்சி.

 

· இம்மாத இதழின் அட்டைப்படம் வாசகர்களிடையே விவாதத்தைத் தூண்டி, மன்மோகன் சிங் விசுவாசமான அமெரிக்க அடிமைதான் என்பதை வாசகர்களே விளக் குவதாக அமைந்தது.
வாசகர் வட்டம், ஓசூர்.