தமது சொந்த நிலத்தைப் பறிக்க முயன்ற ஆதிக்க சாதிவெறியர்களின் அக்கிரமத்தை எதிர்த்துப் போராடிய தாழ்த்தப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு நேர்ந்த கோர முடிவு இது.
அம்பேத்கர் பிறந்த மகர் சாதியைச் சேர்ந்த பைய்யாலால் போட்மாங்கே சுரேகா தம்பதியினர், கடந்த 1617 ஆண்டுகளாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகருக்கு அருகில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில் வசித்து வந்தனர். அக்கிராமத்தில் போட்மாங்கே குடும்பத்துக்குச் சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் இருந்தது. இவர்களுக்கு 19 வயதான கல்லூரியில் படித்து வந்த ரோஷன்; 21 வயதான ஓரளவே பார்வைத்திறன் கொண்ட சுதிர் என்ற இரு மகன்களும்; மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட 17 வயதான பிரியங்கா என்ற மகளும் இருந்தனர். தமது சொந்த நிலத்தில் இருந்தும்; வெளி வேலைகளுக்குச் செல்வதன் மூலமும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இந்தக் குடும்பம், ஆதிக்கச் சாதியினரை அண்டியிராமல், ஓரளவு பொருளாதார சுதந்திரத்தோடு, சுயமரியாதைமிக்க வாழ்க்கையை நடத்தி வந்தனர். போட்மாங்கே குடும்பம் இந்து மதத்தின் சாதி ஆதிக்கத்தில் இருந்து விடுபட, அம்பேத்கர் வழியில் புத்த மதத்தைத் தழுவிய பொழுதிலும் ஆதிக்க சாதிவெறியர்கள் இவர்களைச் சாதி ரீதியில் ஒடுக்கி வைக்கவே முனைந்தனர்.
கயர்லாஞ்சி கிராமத்தில் வசித்து வரும் 125 குடும்பங்களில், மூன்றே மூன்று குடும்பங்கள்தான் தாழ்த்தப்பட்ட சாதியினர். பிற குடும்பங்கள் அனைத்தும் குன்பி, தெலி ஆகிய ஆதிக்க சாதியினைச் சேர்ந்தவை. அந்தக் கிராமத்திலேயே, பைய்யாலாலின் மகன் ரோஷனும், மகள் பிரியங்காவும்தான் அதிகம் படித்தவர்கள். பிரியங்கா பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பைய்யாலாலின் மனைவி சுரேகா கடுமையான உழைப்பாளி மட்டுமல்ல, தினந்தோறும் ஆதிக்க சாதியினர் கொடுத்து வந்த தொல்லைகளை எதிர்த்து நிற்கும் மனோதிடமும் உடையவர். பைய்யாலால் குடும்பம் கல்வியறிவோடும், சுயமரியாதையோடும் சொந்தக் காலில் நின்று வாழ்ந்து வருவது ஆதிக்க சாதிவெறியர்களின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது.
பைய்யாலால் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கத் திட்டம் போட்ட ஆதிக்க சாதியினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்துக்குச் சாலை போட வேண்டும் எனக் கூறி எவ்வித நட்டஈடும் இன்றி பைய்யாலால் நிலத்தில் இருந்து கணிசமான பகுதியை எடுத்துக் கொண்டனர். இப்படியாக கிராம பொதுக் காரியம் என்ற பெயரில், ஐந்து ஏக்கரில் ஏறத்தாழ இரண்டு ஏக்கர் நிலம் கொஞ்சம் கொஞ்சமாக பைய்யாலாலிடமிருந்து அபகரிக்கப்பட்டது. கயர்லாஞ்சி கிராம பஞ்சாயத்துத் தலைவனும், சாதிவெறி பிடித்தவனுமான உபாஸ்ராவ் காந்தேட்தான் இந்த அபகரிப்புக்கு மூளையாக இருந்து வந்தான். எனினும், இதற்கு மேலும் நிலத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் பைய்யாலால் குடும்பம் உறுதியாக நின்றுவிட்டது.
இது ஒருபுறமிருக்க, கயர்லாஞ்சி கிராமத்திற்கு அருகேயுள்ள துஸாலா கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த் கஜ்பியே, சுரேகாவுக்குச் சகோதரர் முறை கொண்ட நெருங்கிய உறவினர். மகாராஷ்டிரா போலீசுத் துறையில் ""பட்டீல்'' எனும் கௌரவ வேலை பார்த்து வரும் சித்தார்த், சுற்று வட்டார கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். சித்தார்த் கொடுக்கும் தைரியத்தில்தான் பைய்யலால் குடும்பம் தங்களுக்குப் பயப்படுவதில்லை எனக் கருவிக் கொண்டிருந்த ஆதிக்க சாதி வெறியர்கள், அக்காள் தம்பி உறவு முறை கொண்ட சித்தார்த் சுரேகா இடையே கள்ள உறவு இருப்பதாகக் கதை கட்டி விட்டனர்.
இந்நிலையில், சித்தார்த் கஜ்பியே, செப்.3 அன்று கயர்லாஞ்சியைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டார். இத்தாக்குதல் பற்றி போலீசில் அவர் புகார் கொடுத்தார். அவரைத் தாக்கியவர்களை சுரேகாவும், பிரியங்காவும் அடையாளம் காட்டினர். எனினும், குற்றவாளிகள் தாக்குதல் நடந்து 26 நாட்கள் கழித்துதான் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடராமல், சாதாரண அடிதடி வழக்கே போடப்பட்டதால், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்ட அன்று மாலையே (செப். 29) பிணையில் விடப்பட்டனர்.
அன்றே, ஆதிக்கசாதி வெறியர்கள் ஒன்றுகூடி, சித்தார்த், அவரது சகோதரர் ராஜேந்திரா, போட்மாங்கே குடும்பத்தினரைப் பழி வாங்கத் திட்டம் போட்டுக் கொண்டனர். அச்சதியின்படி, அன்று மாலை பைய்யாலால் வீட்டிற்கு வந்த சாதிவெறி கும்பல், "ஒட்டு மொத்த குடும்பத்தையே ஒழித்து விடுவோம்' என எச்சரித்துவிட்டு, சித்தார்த்தையும், அவர் தம்பி ராஜேந்திராவையும் தேடிச் சென்றது. அவர்களைக் கண்டறிய முடியாததால் மேலும் ஆத்திரமாகி மறுபடியும் பைய்யாலாலின் குடிசைக்கு வந்த அந்தக் கும்பல், குடிசையின் கதவைப் பிய்த்து எறிந்தது. பைய்யாலால் அப்போது வீட்டில் இல்லை. இரவு உணவைச் சமைத்துக் கொண்டிருந்த சுரேகாவையும், மகள் பிரியங்காவையும் இரு மகன்களையும் பலவந்தமாக வீட்டிற்கு வெளியே இழுத்துப் போட்டனர். அவர்களின் வீட்டு வாசலிலேயே, சுரேகாவும், பிரியங்காவும் நிர்வாணமாக்கப்பட்டு, கிராமத் திடலுக்கு ஊர்வலமாக, அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர்.
பைய்யாலால் குடும்பம் தண்டிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க ஊரில் இருந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த அனைவரும் கிராமத் திடலில் கூடி நின்றனர். சைக்கிள் செயின், கோடாரி, மாடு ஓட்டப் பயன்படுத்தப்படும் தார்குச்சி எனக் கையில் கிடைத்தவற்றை எல்லாம் கொண்டு கண்மண் தெரியாமல் தாயும், மகளும் தாக்கப்பட்டனர். அவ்விரு பெண்களையும், ஆதிக்கசாதி பெண்கள் சிறுவர்கள் முன்பாக ஆதிக்கசாதி ஆண்கள் அனைவருமே வன்புணர்ச்சி செய்து கொன்றனர். இருவரும் பிணமான பின்னரும் வன்புணர்ச்சியில் ஈடுபட்டன அம்மிருகங்கள். பிணங்களின் பிறப்புறுப்புக்களில் மூங்கில் குச்சிகளைச் செருகினர். சுதா எனும் ஒரே பெண்ணைத்தவிர எந்தப் பெண்ணும் இதை எதிர்க்க முன்வரவில்லை. எதிர்த்த அந்தப் பெண்ணும் மிரட்டப்பட்டதால், சம்பவத்தின்போதுதான் அந்த இடத்திலேயே இல்லை என்று சாதித்தார்.
கண் எதிரேயே தன் தாயையும், தங்கையையும் ஆதிக்க சாதிவெறியர்கள் சீரழித்துக் கொண்டிருந்தபோது, சுதிர் தனது செல்போனில் போலீசை அழைக்க முயன்றார். உடனே செல்போனைப் பிடுங்கி நொறுக்கிய கும்பல், சுதிரையும் ரோஷனையும் கொடூரமாகத் தாக்கி, அவர்களின் முகங்களை உருத்தெரியாமல் சிதைத்தனர். அவர்களின் பிறப்புறுப்புக்களை அறுத்தெறிந்தனர். பின்னர் அவர்களை வானத்துக்கும், பூமிக்குமாகத் தூக்கிப் போட்டுப் பந்தாடியே கொன்றனர்.
அந்த நால்வரின் மூச்சு அடங்கிய பிறகு, அவர்களின் உடல்களில் இனி தாக்கிக் காயப்படுத்துவதற்கு இடமேஇல்லை என்ற பிறகு, சாதிவெறிக் கும்பலின் காமவெறியும், பழி தீர்த்துக் கொள்ளும் இரத்த வெறியும் அடங்கிய பிறகு, நால்வரின் பிணங்களும் மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டு அக்கிராமத்திற்கு அப்பாலுள்ள கால்வாயில் வீசியெறியப்பட்டன. ""பைய்யாலாலா, அப்படியொருவர் இக்கிராமத்தில் வசிப்பது எங்களுக்கே தெரியாதே'' என மேல்சாதி பெண்கள் சாதிக்கும் அளவிற்கு, தாக்குதலுக்குப் பிறகு கயர்லாஞ்சியில் சாதிக் கட்டுப்பாடு நிலவுகிறது.
இச்சம்பவம் போலீசுக்குத் தெரியாமல் நடந்துவிட்டதாகக் கூற முடியாது. செப். 29 மாலை தனது வயல் வேலைகளை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த பைய்யாலால், கிராமச் சதுக்கத்தில் தனது குடும்பமே மேல்சாதி வெறியர்களால் தாக்கப்படுவதைப் பார்த்தவுடன், அந்தக் கொலைகாரர்களின் பார்வையில் பட்டுவிடாமல், அருகில் உள்ள துஸாலா கிராமத்திற்குத் தப்பியோடி, தனது உறவினர் சித்தார்த் வீட்டில் இருந்து போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பாகவே, பைய்யாலாலின் மனைவி சுரேகா, ஆதிக்க சாதி வெறியர்களால் மிரட்டப்பட்டவுடனேயே வார்தி கிராமத்திலுள்ள தனது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்ததோடு, சித்தார்த்தின் சகோதரர் ராஜேந்திராவுக்கும் ஆபத்தை உணர்த்தித் தகவல் கொடுத்துள்ளார். பைய்யாலால் போலீசுக்குத் தகவல் கொடுக்கும் முன்பாகவே, ராஜேந்திரா போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.
அநாதரவான நிலையில் இருக்கும் இத்தாழ்த்தப்பட்டோரின் குரல்களை உள்ளூர் போலீசார் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தினர். சம்பவம் நடந்து முடிந்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் கழித்து பாபன் மேஷ்ராம் என்ற ஒரேயொரு போலீசுக்காரர், சம்பிரதாயத்துக்காக கயர்லாஞ்சி கிராமத்தை எட்டிப் பார்த்துவிட்டு உடனே திரும்பி விட்டார். பைய்யாலாலும், ராஜேந்திராவும் போலீசுக்குத் தகவல் கொடுத்தது பற்றியும் போலீசின் கோப்புகளில் எந்தப் பதிவும் செய்யாமல் மறைத்து விட்டனர்.
மறுநாள் (செப்.30) கயர்லாஞ்சி கிராமத்தில் இருந்து 12 கி.மீ தொலைவு தள்ளி பிரியங்காவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனை விபத்தாக போலீசார் பதிவு செய்தனர். இதனிடையே பைய்யாலால் மீண்டும் போலீசாரை அணுகி, தனது குடும்பத்தினரைக் காணவில்லை எனப் புகார் செய்தார். இதன்பிறகுதான், போலீசார் சடலங்களைத் தேடத் தொடங்கினர்.
இத்தாக்குதல் பற்றிய விவரங்கள் மெதுவாக வெளியுலகுக்குத் தெரிந்து, பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், தாழ்த்தப்பட்டோரும் போராடிய பிறகுதான், மகாராஷ்டிரா காங்கிரசு அரசு அசைந்து கொடுத்தது. இத்தாக்குதல் தொடர்பாக இதுவரை 44 பேர், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்டு பல்வேறு கிரிமினல் குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் மீது ""கற்பழிப்பு'' குற்றச்சாட்டோ, சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டோ சுமத்தப்படவில்லை.
சுரேகா, பிரியங்காவின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த அரசு மருத்துவர், ""அவர்கள் கற்பழிக்கப்படவில்லை'' என அறிக்கை கொடுத்திருப்பதோடு, போலீசார் அது பறறிய விவரங்களைத் தங்களிடம் கேட்க வில்லை என்றும் சொல்லியிருக்கிறார். எனினும், ""பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டு தொடர்பாக இரண்டாவது பிரேதப் பரிசோதனை அக்.4 அன்று நடந்தது. ஆனால், அதற்குள் அப்பெண்களின் உடல்கள் மிகவும் அழுகி விட்டதாலும்; முதல் பிரேதப் பரிசோதனையின் பொழுது அறுத்து எடுக்கப்பட்ட கர்ப்பப்பை மற்றும் பெண் குறி திரவங்கள் சட்டப்படி பாதுகாக்கப்படாமல் அழிக்கப்பட்டு விட்டதாலும், பாலியல் வன்புணர்ச்சி நடந்ததற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை'' என அதிகார வர்க்கம் கையை விரித்து விட்டது.
அப்பெண்கள் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதற்கு அறிவியல் ஆதாரம் திட்டமிட்டே அழிக்கப்பட்டது என்றால், அத்தாக்குதலைக் கண்ணால் பார்த்த பைய்யாலாலின் சாட்சியமோ திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராக பைய்யாலாலால் அடையாளம் காட்டப்பட்டுள்ள, கயர்லாஞ்சி கிராமத் தலைவர் உபாஸ்ராவ் காந்தேடையும் போலீசார் கைது செய்ய மறுக்கின்றனர்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, தலித் மக்கள் மீது எவரேனும் கும்பலாய் வன்முறைத் தாக்குதல் நடத்தினால், ஒட்டு மொத்த கிராமத்துக்கே பத்து இலட்சம் ரூபாயிலிருந்து இருபது லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும். அரசு இச்சட்டப் பிரிவையும் அமல்படுத்த மறுக்கிறது.
ஒப்புக்காகக் குற்றவாளிகளுள் சிலரைக் கைது செய்வது; பைய்யாலால் போட்மாங்கேக்கு நட்டஈடும், அரசு வேலையும் கொடுத்து, அரசின் நடுநி லைத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வது; இதன் மூலம் இப்பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்து விடுவது என்பதுதான் அரசின் திட்டம். ஆனால், பைய்யாலாலோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் நீதிதான் எனக்கு வேண்டுமே தவிர, அரசின் சன்மானங்கள் தனக்குத் தேவையில்லை எனக் கூறி, மகாராஷ்டிர அரசின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார்.
இச்சம்பவம் நடந்து முடிந்த ஒரு சில நாட்களிலேயே, அம்பேத்கர் புத்தமதத்துக்கு மாறியதை நினைவு கூறும் பொன்விழா நிகழ்ச்சி நாக்பூரில் நடைபெற்றது. இவ்விழாவுக்குத் திரண்டு வந்த தாழ்த்தப்பட்டோர், கயர்லாஞ்சி சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, பாதுகாப்பு என்ற பெயரில் பெரும் போலீசு பட்டாளம், விழா நடந்த தீக்ஷா பூமியைச் சுற்றி வளைத்துக் கொண்டது.
அன்று அந்த விழா தீண்டாமைக்கு எதிரான பெரும் போராட்டமாக மாற்றப்படாதது தாழ்த்தப்பட்ட அமைப்புகளிடம் அரசியல் முன்முயற்சி இல்லாததைக் காட்டினாலும், அதைத் தொடர்ந்த நாட்களில் நாக்பூர், பந்தாரா, யவட்மால் பகுதிகளில் கயர்லாஞ்சி தாக்குதலைக் கண்டித்து ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் சில, போலீசாருடனான மோதலாகவும் மாறின. இப்போராட்டங்களை நடத்துபவர்களை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்வது; இரண்டு மூன்று நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைப்பது; நாக்பூரில் இருந்து கயர்லாஞ்சிக்குச் செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்த ஊர்வலத்திற்குக் கொடுத்த அனுமதியை மறுப்பது என இப்போராட்டங்களை ஒடுக்குவதில் அரசு மும்முரமாக உள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிர மாநில அரசின் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டில், இப்போராட்டங்களை நக்சல்பாரிகள் தூண்டிவிடுவதாகக் கூறி, தீண்டாமைக்கு எதிராகச் சட்டபூர்வ வழியில் போராடுவதைக் கூட பயங்கரவாதமாகக் காட்ட முயன்றார். எனினும், உள்ளூர் அளவில் செயல்படும் 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றாக இணைந்து இப்படுகொலைக்கு நீதி கேட்டு குரல் கொடுத்து வருகின்றன.
கயர்லாஞ்சி தாக்குதல் ஒன்றும் அரிதாக, அபூர்வமாக நடந்துவிட்ட சம்பவம் அல்ல. தாழ்த்தப்பட்டோர் மீது இப்டிப்பட்ட தாக்குதல்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும், அதற்கான பழியை அத்தாக்குதலில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் மீது, அவர்களை ஆதரிக்கும் ஓட்டுக் கட்சிகள் மீது, அதிகார வர்க்கத்தின் மீது போட்டுவிட்டு, பெரும்பான்மையான மக்கள் மாற்று மதத்தினரையும் சேர்த்துதான் அமைதியாகி விடுகின்றனர். சாதிவெறியைப் போன்றே, இந்த அமைதியும், கண்டு கொள்ளாமையும் அபாயகரமானதுதான்.
""இப்பவெல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க?'' எனத் தோளைக் குலுக்கிக் கொள்ளும் நகர்புறத்து படித்த நடுத்தர வர்க்கத்தினரில், எத்தனை பேரின் மனச்சாட்சியை இச்சம்பவம் உலுக்கியிருக்கும்? பிரியங்கா மட்டூ, ஜெஸிகாலால் போன்ற மேல்தட்டு பெண்களின் படுகொலைக்கு நீதி கேட்டு ஊர்வலம் போன கனவான்களில், எத்தனை பேர் சுரேகாவுக்காக, பிரியங்காவுக்காக நீதி கேட்டுப் போராட வந்திருக்கிறார்கள்? இத்தாக்குதலை நடத்திய சாதிவெறியர்கள் ஏன் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவதில்லை? இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும் சாதிவெறியர்களை, அச்சாதியைச் சேர்ந்த ""அப்பாவி மக்கள்'' ஏன் ஒதுக்கி வைப்பதில்லை? இவை போன்ற கேள்விகளை உங்களிடமே கேட்டுப் பாருங்கள். அதற்கான பதிலில்தான் நீங்கள் சாதிய சமூகத்தை எதிர்ப்பவரா, இல்லை ஆதரிப்பவரா என்ற உண்மை உங்களுக்கே தெரியக்கூடும்!
·கவி