12_2006.jpg

எட்டு மணி நேர வேலைக்குப் பதிலாக, சட்டவிரோதமாக 10 மணி 12 மணி நேர கட்டாய உழைப்பு; வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புச் சாதனங்கள் எதுவும் தரப்பட மாட்டாது; தொழிற்சாலை சட்டங்கள் பின்பற்றப்பட மாட்டாது.

 கடந்த பத்தாண்டுகளில் இங்கு வேலை செய்து உயிரை இழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 10. படுகாயமுற்று உடல் உறுப்புக்களை இழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையோ ஏராளம்.

 

· பத்தாண்டுகளாகப் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளிக்குக் கூட அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் கிடையாது; தொழிற்கல்வி முடித்து பணியில் சேரும் இளம் தொழிலாளருக்கு கிரேடு முறை கிடையாது. ஈராண்டுகளாகத் தொடர்ந்து வேலை செய்யும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு சட்டப்படி பணி நிரந்தரம் கிடையாது. இவர்களுக்கே இந்த கதி என்றால், ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

 

· இந்தக் கொத்தடிமைத்தனத்தை எதிர்த்து தொழிலாளர்கள் முணுமுணுத்தால், இருட்டறையில் தொழிலாளிகளை அடைத்து ரௌடிகள் மிருகத்தனமாகத் தாக்குவார்கள். அதையும் மீறி இந்த ரௌடித்தனத்திற்கு எதிராக வாய் திறந்தால், அடுத்த நிமிடமே போலீசு ஓடோடி வந்து பொய் வழக்குப் போட்டு தொழிலாளிகளை வதைக்கும்.

 

இவையெல்லாம் ஆந்திரா கர்நாடகாவில் கொத்தடிமைகளாக செங்கற்சூளைகளிலும் கல்குவாரிகளிலும் தொடரும் கொடூரங்கள் அல்ல. தலைநகர் சென்னையை அடுத்துள்ள, பொன்னேரி அருகே மாதவரத்தில் இயங்கும் ""நெல்காஸ்ட்'' நிறுவனத்தில் கடந்த பத்தாண்டுகளாக நடந்து வரும் அட்டூழியங்கள்.

டிராக்டர், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு கேஸ்டிங் உதிரி உறுப்புகளைத் தயாரிக்கும் இக்கொத்தடிமை நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 220பேரும், தற்காலிகத் தொழிலாளர்கள் 400 பேரும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 500 பேரும், பெண் தொழிலாளர்கள் 200 பேரும் பணிபுரிகின்றனர். இத்தனை தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த நிர்வாகம், தொழிலாளர்களை ஒடுக்க இரகசியமாக கூலிப்படையையும் கட்டி வைத்துள்ளது. இக்கூலிப்படைக்கு வழக்குரைஞராக உள்ள இரவிக்குமார் என்ற ரௌடி தலைமை தாங்குகிறான். இவன், இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராகவும், தொழிலாளர்களை கூலிக்கமர்த்தும் ஒப்பந்ததாரராகவும் இருந்து தொழிலாளர்களை அடித்து மிரட்டி அடாவடித்தனம் செய்து வருகின்றான்.

இக்கொடுமைகளைக் கண்டு தொழிலாளர்கள் குமுறிக் கொண்டிருந்த நிலையில், கடந்த 23.5.06 அன்று ஜானகிராமன் என்ற தொழிலாளி, மேலிருந்து கிரேன் அறுந்துவிழுந்து மின்சாரம் பாய்ந்து மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மாண்டு போனார். அவரது உடலை தரதரவென ஆலைக்கு வெளியே போட்டு விட்டு தொடர்ந்து ஆலையை இயக்கிய நிர்வாகத்தின் திமிர்த்தனத்தைக் கண்டு வெகுண்டெழுந்த தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக சாலைமறியல் போராட்டத்தில் இறங்கினர். பிறகு, போலீசு வந்திறங்கி தொழிலாளர்களை விரட்டியடித்துவிட்டு, மாண்டுபோன தொழிலாளி குடும்பத்துக்கு கணிசமான தொகை கொடுக்க கட்டப் பஞ்சாயத்து நடத்தி, இக்கோர கொலையை மூடி மறைத்தது.

 

இனி நமக்கும் இந்த கதிதான் ஏற்படும் என்பதை உணர்ந்த வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள், பு.ஜ.தொ.மு.வுடன் தொடர்பு கொண்டு தொழிற்சங்கம் கட்டியமைக்கும் முயற்சியில் இறங்கினர். நிர்வாகத்தின் அச்சுறுத்தல், ரௌடிகளின் மிரட்டல்களை மீறி 150க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களும், பலநூறு தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து சங்கமாகத் திரண்டு முறைப்படி தொழிலாளர் துறையிடம் சங்கத்தைப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 5.11.06 அன்று ஆலை முன்பு பறை முழக்கம் எதிரொலிக்க, தொழிலாளர்கள் வர்க்க உணர்வோடு முழக்கமிட, பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சங்கத்தின் கொடியை ஏற்ற, மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் சங்கப் பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார். சங்கம் தொடங்கப்பட்டதையறிந்து ஆத்திரமடைந்த ரௌடி இரவிக்குமார், தனது அடியாட்களுடன் வந்து உதார் விட்டுப் பார்த்து, கோடிக்கால் பூதமாகிய தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைக் கண்டு பீதியடைந்து ஓடிவிட்டான். அன்று மாலை பொன்னேரியில் தொழிலாளர்கள் தமது குடும்பத்தோடு திரண்டு வந்து நடத்திய சங்கத் தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில், முன்னணியாளர்கள் வாழ்த்துரை வழங்க, ம.க.இ.க. மையக்கலைக் குழுவினர் நடத்திய புரட்சிகர கலை நிகழ்ச்சி வர்க்கப் போராட்டத் தீயை மூண்டெழச் செய்வதாக அமைந்தது.

 

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு கோழைத்தனமாக சங்கப் பலகையை உடைத்தெறிந்த ரௌடி இரவிக்குமாரை கைது செய்யக் கோரி சுவரொட்டிப் பிரச்சாரம் செய்த தொழிலாளர்கள், மீண்டும் 15.11.06 அன்று சங்கக் கொடியை நட்டு பெயர்ப் பலகையையும் நிறுவினர். இந்த ரௌடி வழக்குரைஞருக்கு நீதித்துறை மூலமாகவும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. பு.ஜ.தொ.மு. சங்கத்தின் வர்க்க உணர்வும் போர்க்குணமும் தொழிலாளர்களிடம் ஒற்றுமையையும் புதிய நம்பிக்கையையும் ஆழமாக வேரூன்றியுள்ளது. இது பொன்னேரி வட்டாரமெங்கும் எதிரொலித்து இதர ஆலைத் தொழிலாளர்களும் புரட்சிகர சங்கத்தை நிறுவ முயற்சித்து வருகின்றனர். தொழிலாளி வர்க்கம் தோற்றதாக வரலாறு இல்லை.


— நெல்காஸ்ட் புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம்,
பொன்னேரி.