இந்தியத் தொழில்நுட்பக் கழகம், இந்திய மேலாண்மைக் கழகம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் உள்ளிட்ட அதிஉயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பார்ப்பனமேல் சாதிவெறியர்களின் கூடாரமாக இருப்பதை, இடஒதுக்கீடுக்கு எதிராக அக்கல்லூரிகளில் நடத்த
போராட்டங்கள் அம்பலப்படுத்தின. இடஒதுக்கீடு என்ற பிரச்சினையில் மட்டும்தான் அக்கல்லூரி களில் படிக்கும் மேல்சாதி மாணவர்களும், ஆசிரியர்களும் சாதிப் பற்றோடு நடந்து கொண்டார்கள் என்பதில்லை. இக்கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களை அவர்களில் வசதி படைத்தோரையும் (creamy layer) கூட மேல்சாதி மாணவர்களும், ஆசிரியர்களும் அன்றாடம் சாதிரீதியாக இழிவுபடுத்துவதும், துன்புறுத்துவதும் எவ்விதத் தடையோ, தயக்கமோ, தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமோ இன்றி நடந்து வருகிறது. மிகவும் நுணுக்கமாகவும், நுண்ணிய வடிவத்திலும் இக்கல்லூரிகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை, கிராமப்புறங்களில் நடைபெறும் தீண்டாமைத் தாக்குதல்களுக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை.
· அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் இளங்கலை மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) படிக்கும் உமாகாந்த் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். உமாகாந்த் அக்கல்லூரியின் விடுதி எண்: 1இல் தங்கிப் படித்து வந்தார். ஒருநாள் அவரின் அறைக் கதவில் ஒரு நோட்டீசு ஒட்டப்பட்டிருந்தது. அதில் அவரைச் சாதிரீதியாக இழிவாகத் திட்டியும், கிண்டலும் செய்யப்பட்டிருந்ததோடு, அவர் உடனடியாக அந்த அறையைக் காலி செய்துவிட்டு ஓடிவிட வேண்டும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் தொடர்ந்து தங்கினால், மன உளைச்சல் ஏற்பட்டு படிப்பே பாழாகிவிடும் எனப் புரிந்து கொண்ட உமாகாந்த், அந்த அறையைக் காலி செய்துவிட்டு விடுதி எண்: 4க்கு மாறிவிட்டார்.
மற்றொரு தாழ்த்தப்பட்ட மாணவர் வகுப்புக்குச் செல்வதைத் தடுப்பதற்காக, அவரது அறைக் கதவை வெளியே பூட்டி விட்டுச் சென்றுள்ளனர், மேல்சாதி திமிர் பிடித்த மாணவர்கள். இந்தத் தீண்டாமைத் தொல்லையில் இருந்து தப்பிக்க, அவரும் தனது அறையை மாற்றிக் கொண்டு சென்று விட்டார்.
· தில்லியில் உள்ள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகக் கல்லூரியின் விடுதி உணவகத்தில் மேல்சாதி மாணவர்களுக்குத் தனியாகவும், தாழ்த்தப்பட்ட / பழங்குடியின மாணவர்களுக்குத் தனியாகவும் உணவு பரிமாறும் தீண்டாமை வெளிப்படையாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருவதை ""டைம்ஸ் ஆப் இந்தியா'' என்ற நாளிதழ் அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறது.
இச்சாதிப் பிரிவினையைப் பற்றி அறியாத விக்ரம்ராம் என்ற தாழ்த்தப்பட்ட மாணவர், அக்கல்லூரியில் சேர்ந்த புதிதில், விடுதி உணவகத்தில் மேல்சாதி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் உணவு உண்ண அமர்ந்திருக்கிறார். உடனடியாக விக்ரம்ராமைச் சூழ்ந்து கொண்ட மேல்சாதி மாணவர்கள், ""எங்களோடு உட்கார்ந்து சாப்பிட உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது போக்கிரிப் பயலே'' என அவரை இழிவுபடுத்தித் துரத்தியடித்து விட்டனர். அக்கல்லூரியின் விடுதியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உணவருந்தும் பகுதியில் ""இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என மீண்டும் மீண்டும் எழுதி வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்.
அக்கல்லூரியில் படிக்கச் சேர்ந்த ராகேஷ் குமார் என்ற தாழ்த்தப்பட்ட மாணவருக்கு, மேல்சாதி மாணவர்களோடு தங்குவதற்கு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டபொழுது, ""கக்கூஸ் கழுவுகிறவனெல்லாம் எங்களோடு தங்கக் கூடாது'' என அவர் அவமானப்படுத்தப்பட்டு, வேறு அறைக்குத் துரத்தப்பட்டுள்ளார்.
· தில்லியைச் சேர்ந்த ""முன் அறிதல் மற்றும் ஆராய்ச்சி மையம்'' என்ற அரசுசாரா தன்னார்வ அமைப்பு, இந்திய மேலாண்மைக் கல்லூரிகளில் படிக்கும் / படித்து முடித்து வெளியே வரும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் நிலை பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆராய்ந்து அளித்துள்ள அறிக்கையில், ""இக்கல்லூரி நிர்வாகங்கள், தங்கள் கல்லூரிகளில் முதலாளித்துவ நிறுவனங்கள் நடத்தும் வளாகத் தேர்வின் பொழுது, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நிர்வாக மேலாண்மைப் பட்டதாரிகளை வேண்டுமென்றே, சாதிப் பாகுபாட்டோடு, குறைவான ஊதியம் தரப்படும் வேலைகளுக்கே அனுப்புவதாகக் குற்றஞ் சுமத்தியுள்ளது. மேலும், ""பொதுத்துறை நிறுவனங்கள்தான் தாழ்த்தப்பட்ட மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களோ, பார்ப்பனியக் கண்ணோட்டத்தின்படி, அவர்களைப் பெரும்பாலும் புறக்கணித்துவிடும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றன'' என அம்பலப்படுத்தியிருக்கிறது.
தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் இயங்கி வரும் ""சம வாய்ப்புக்கான மருத்துவர்கள் மன்றம்'' எனும் அமைப்பு, ""இட ஒதுக்கீடு பிரச்சினை மீண்டும் முன்னணிக்கு வந்ததில் இருந்தே, இக்கல்லூரியில் தீண்டாமை முன்னைவிடத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுவதாக''க் குற்றஞ்சுமத்தியுள்ளது. சமீபத்தில் மட்டும் 23 தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தீண்டாமை காரணமாக அறை மாறிவிட்டதாகவும்; விடுதி எண்: 1 பார்ப்பன அக்ரகாரமாகவும்; விடுதி எண் 4ம், 5ம், காலனியாக மாற்றப்பட்டு விட்டதாகவும்; இத்தீண்டாமை பற்றி புகார் கொடுக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், மேல்சாதிவெறி பிடித்த ஆசிரியர்களால் திட்டமிட்டே தோல்வியடையச் செய்யப்படுவதாகவும் இவ்வமைப்பு அம்பலப்படுத்தியுள்ளதோடு, இது பற்றிய புகாரை இந்திய அரசுத் தலைவருக்கும் அனுப்பியிருக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், தி டெலிகிராப் ஆகிய ஆங்கில நாளேடுகளும் தில்லி மருத்துவ அறிவியல் கழகத்தின் விடுதியில், மேல்சாதி மாணவர்கள் கடைபிடிக்கும் தீண்டாமையை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆதாரங்களைப் பெற்று அம்பலப்படுத்தியுள்ளன. இதன் பின்னர், அக்கழகத்தின் நிர்வாக இயக்குநர்கள் குழு, இக்குற்றச்சாட்டுகள் பற்றி பதில் அளிக்குமாறு, அக்கழகத்தின் தலைமை இயக்குநர் வேணுகோபாலுக்கு நோட்டீசு அனுப்பியது. ஆனால், அச்சாதிவெறி பிடித்த பார்ப்பனரோ, அந்த நோட்டீசுக்கு இதுவரை பதில் அளிக்காமல் புறக்கணித்தே வருகிறார்.
பல்கலைக்கழக மானியக் குழுவும் தில்லிமருத்துவ அறிவியல் கழகத்தில் நடந்து வரும் தீண்டாமைக் குற்றங்களை விசாரிக்க ஒரு கமிட்டியை அமைத்திருக்கிறது. இக்கமிட்டி, ""தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்களை அணுகி தீண்டாமை பற்றி புகார் கொடுக்கலாம்'' என்ற நோட்டீஸை மருத்துவக் கல்லூரியிலும் / விடுதியிலும் ஒட்டுமாறு கோரியதையும் வேணுகோபால் புறக்கணித்துவிட்டார். இத்தீண்டாமைக் கொடுமைகள் பற்றி, மைய அரசின் உயர் கல்வித்துறை செயலர் அறிக்கை அனுப்புமாறு போட்ட உத்தரவினையும் வேணுகோபால் குப்பைக் கூடைக்குள் வீசிவிட்டார்.
நியாயமாகப் பார்த்தால், ஆதிக்க சாதித் திமிரோடு நடந்து வரும் வேணுகோபாலை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், அவரோ, தில்லி உயர்நீதி மன்ற நீதிபதிகளின் ஆதரவோடு பதவியில் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்.
இந்த இலட்சணத்தில், தில்லி மருத்துவ அறிவியல் கழகம் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், தங்களுக்கு மைய அரசிடமிருந்து அதிகப்படியான சுதந்திரம் வேண்டும் என்று கோர ஆரம்பித்துள்ளன. அவை கோரும் சுதந்திரம் அளிக்கப்பட்டால், நடைமுறையில் அதன் பொருள் என்னவாக இருக்கும் என்பதை நீங்களே அனுமானித்துக் கொள்ளுங்கள்!
· ரஹீம்