Language Selection

jan_07.jpg

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை ஆக்கிரமித்து, விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடித்துவிட்டு, இந்தியர்களோ இந்தியச் சட்டங்களோ நுழைய முடியாதபடி தனி சமஸ்தானங்களாக

 உருவாக்கப்படும் இம்மண்டலங்களில், வரைமுறையின்றிச் சூறையாட எல்லையற்ற அதிகாரத்தை உள்நாட்டு வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு இந்திய அடிமை ஆட்சியாளர்கள் அள்ளிக் கொடுத்துள்ளனர்.

 

இது வெறுமனே விவசாய நிலங்கள் பறிபோகின்ற விவகாரமல்ல; நாடே அன்னிய ஏகாதிபத்தியங்களிடம் பறிபோகின்ற காலனியாதிக்கத் தாக்குதல் என்பதை விளக்கியும், சீர்திருத்தங்களோடு இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவக் கோரி எதிர்ப்பு நாடகமாடும் பலவண்ண ஓட்டுக் கட்சிகளை அம்பலப்படுத்தியும், இரண்டாவது சுதந்திரப் போருக்காக அனைத்து உழைக்கும் மக்களும் அணிதிரள வேண்டிய அவசியத்தை விளக்கியும் தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், தாங்கள் செயல்படும் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

 

இதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் மாதத்தில் கோவை, திருச்சி, தருமபுரி, இராணிப்பேட்டை, சென்னை ஆகிய நகரங்களில், ""நாட்டைச் சூறையாட வரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரட்டியடிப்போம்!'' என்ற தலைப்பில் அரங்கக் கூட்டங்களை நடத்தின. சென்னையில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதர நகரங்களில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள், வணிகர் சங்கப் பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர். காலனியாதிக்கத்துக்கு எதிராகத் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் சுதந்திரப் போரின் வீரமரபை உயர்த்திப் பிடித்து, இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் இரண்டாவது சுதந்திரப் போருக்கு உழைக்கும் மக்களை அறைகூவுவதாக இக்கூட்டங்கள் அமைந்தன.


பு.ஜ. செய்தியாளர்கள்