தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் மொரப்பூர், நல்லம்பள்ளி ஒன்றியங்களைச் சேர்ந்த பருத்தி விவசாயிகளின் எதிர்கால வாழ்வே இன்று இருண்டு போய்க் கிடக்கிறது. இப்பகுதியில் ஏறத்தாழ 4,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பருத்திச் செடிகள் பூவும் பூக்காமல், காயும் காய்க்காமல் மலடாகி நிற்பதால், ஏறத்தாழ 20 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நட்டமேற்பட்டுள்ளது.
நட்டமடைந்துள்ள பருத்தி விவசாயிகள், தங்களிடம் பருத்தி விதையை விற்பனை செய்த ""மாஹிகோ'' நிறுவனம்தான், இந்த நட்டத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்கள். இவர்களுக்கு விற்கப்பட்ட பருத்தி விதையின் உறையில், இவ்விதைகள் ஆராய்ச்சிக்கானது என அச்சடிக்கப்பட்டுள்ளது. மாஹிகோ நிறுவனமோ இந்த உண்மையை விவசாயிகளிடம் சொல்லாமலேயே விதைகளை விற்றுள்ளது.
மேலும், ஒரு விதையைப் பரிசோதனை அடிப்படையில் பயிர் செய்யும் பொழுது, அதன் விளைச்சலுக்குத் தேவையான அத்துணை செலவையும் விதை விற்பனை நிறுவனம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மாஹிகோ நிறுவனமோ, ""புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட விதை; இது அதிக மகசூல் தரும்'' என்ற பொய்யைச் சொல்லி, பி.டி. 6918 இரக பருத்தி விதைகளை விற்பனை செய்ததால், பயிர்ச் செலவு முழுவதும் விவசாயிகளின் தலையில் விழுந்துவிட்டது.
வறட்சி பாதித்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுநடுத்தர விவசாயிகள் கைக்காசைப் போட்டு விவசாயம் செய்யும் அளவிற்கு வசதியானவர்கள் கிடையாது. கடன் வாங்கித்தான் விவசாயம் செய்ய வேண்டியிருப்பதால், உற்பத்திச் செலவும் இரண்டு மடங்காக எகிறி விடுகிறது. 250 ரூபாய் பெறுமான பூச்சி மருந்தை கடனுக்கு வாங்கும் பொழுது, ரூ. 530 என்றும்; டி.ஏ.பி. உர மூட்டையைக் கடனுக்கு எடுக்கும் பொழுது, ஒவ்வொரு மூட்டைக்கும் 50 ரூபாய் ஏற்றி வைத்தும், விவசாயிகளின் இரத்தத்தை பூச்சி மருந்து கடை முதலாளிகள் உறிஞ்சி விடுகின்றனர். பருத்தி மகசூல் பல்லைக் காட்டி விட்டதால், கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்ற மன உளைச்சலில் இப்பகுதி விவசாயிகள் சிக்கிக் கொண்டிருப்பதோடு, இப் பகுதியில் தற்கொலைச் சாவுகள் நடக்கத் தொடங்கி விடுமோ என்ற பீதியும் பரவி வருகிறது.
விவசாயிகளிடம் விற்கப்படும் விதைகள் தரம் வாய்ந்தவைதானா எனச் சான்றிதழ் அளிக்க வேண்டிய பொறுப்பு வேளாண் துறைக்குத்தான் உண்டு. ஆனால், அவர்களோ தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக, விவசாயிகள் ஏமாற்றப்பட்ட பிறகு, மாஹிகோவிடம் நஷ்ட ஈடு பெற்றுத் தரவேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய பிறகுதான், பருத்தி வயல்களுக்குள் காலடி எடுத்து வைத்தனர். ஆனாலும், அதிகாரவர்க்கம் 4,000 ஏக்கர் பரப்பளவில், மாஹிகோ கொடுத்த விதைகள் மலட்டுச் செடியாக வளர்ந்து நிற்பதை, கண்ணுக்குத் தெரியும் ஆதாரத்தை நம்ப மாட்டார்களாம். அந்த விதைகளைச் சோதனைச் சாலையில் பரிசோதித்த பிறகே எந்த முடிவுக்கும் வருவார்களாம். எப்பேர்ப்பட்ட நடுநிலை!
ஆந்திராவையும் மகாராஷ்டிராவையும் சேர்ந்த பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மாஹிகோ விற்ற பி.டி. பருத்தி இரக விதைகள்தான் காரணம் என்பதும்; இந்த மாஹிகோ நிறுவனம், அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான மாண்சாண்டோவின் இந்திய ஏஜெண்டாகச் செயல்பட்டு வருவதும் ஊரறிந்த உண்மையாக இருக்கும்பொழுது, பரிசோதனைச் சாலை முடிவுகளைத்தான் நம்புவோம் என வேளாண் துறை சொல்வது, மாஹிகோவைக் காப்பாற்றும் முயற்சியாக முடிந்து விடலாம்.
கோவை வேளாண் பல்கலைக்கழகம்தான் இந்த ஆய்வை நடத்தி வருகிறதாம். கோவைஆலந்துறையில் மரபணு மாற்றம் செய்த நெல் விதைகளை இரகசியமாக நட்டு மாஹிகோ நடத்திய பரிசோதனையை விவசாயிகள் எதிர்த்துப் போராடியபொழுது, அந்த நெல் விதைகளுக்கு நற்சான்றிதழ் கொடுத்தவர்கள் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். பி.டி. பருத்தி இரக விதை பற்றி இங்கு நடத்தப்டும் ஆய்வில் நியாயம் கிடைக்கும் என எப்படி நம்ப முடியும்?
எனவே, மாஹிகோவால் ஏமாற்றப்பட்ட பருத்தி விவசாயிகள், அதிகாரிகளிடம் மனு கொடுத்ததோடு முடங்கிப் போய் விடாமல், தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டுமே நட்டஈட்டைப் பெற முடியும். புதிய தொழில் நுட்ப விதைகள் என்ற போர்வையில், இவை போன்ற மலட்டு விதைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் களமாக இந்தியா விவசாயம் மாற்றப்பட்டு வருகிறது. இம்மலட்டு விதைகளுக்கு எதிரான போராட்டத்தை நாடு தழுவிய அளவில் வளர்த்துச் செல்வதன் மூலம் மட்டுமே, இந்திய விவசாயத்தையும், விவசாயிகளின் எதிர்கால வாழ்க்கையையும் பாதுகாக்க முடியும்.
வி.வி.மு., பென்னாகரம்.