மட்டக்களப்பு மங்கலராம விகாரையில் காவி உடைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மதவெறி பிடித்த மிருகம் "தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன்" என்று தன் கடமையைச் செய்த ஒரு தமிழ் அலுவலரை மிரட்டி ஊளையிட்டது. இலங்கையின் வரலாறு முழுக்க நிறைந்திருக்கும் சிங்கள பெளத்த மதவெறியின் வன்முறைக்கு ஒரு உதாரணம் தான் இது.
பஞ்ச சீலம் இல்லற வாழ்க்கையில் உள்ள மக்களிற்கு உரிய அறங்கள்; அட்ட சீலம் இல்லற வாழ்க்கையில் உயர்ந்தோரிற்கு உள்ள ஒழுக்கங்கள்; தச சீலம் (பத்து ஒழுக்கங்கள்) புத்த பிக்குகளிற்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்கள் என்கிறது புத்த மதம். இந்த மூன்று பிரிவினருக்கும் முதலாவது ஒழுக்கமாக உயிர்களைக் கொல்லாதீர்கள், தீங்கு செய்யாதீர்கள் என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் புத்த மதத்தவன் என்று சொல்லும் மகிந்த ராஜபக்ச முதல் இந்த மங்கலராம விகாரையின் பிக்கு வரை கொலையாளிகளாக இருக்கிறார்கள், வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.
இலங்கையில் அரசியலும், பெளத்த மதமும் இரண்டறக் கலந்திருக்கின்றன. இலங்கையின் ஆட்சியாளர்கள் இலங்கையின் ஏழை மக்களை ஏமாற்றுவதற்காக அன்றில் இருந்து இன்று வரை சிங்கள பெளத்த வெறி பேசி வருகிறார்கள். சிங்கள பெளத்தர்கள் தான் இலங்கையில் ஆட்சியில், அதிகாரத்தில் அன்றில் இருந்து இன்று வரை இருந்து வருகிறார்கள். தமது கொள்ளைகளினாலும், ஊழல்களினாலும் பெரும்பான்மையான இலங்கை மக்களை வறுமையில் வாழ வைத்து விட்டு சிங்கள மக்களின் வறுமைக்கு தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களுமே காரணம் என்று கை காட்டுகிறார்கள். இந்த அரசியல் அயோக்கியர்களின் இரட்டைப் பிறவிகளாக நிறுவனமயப்பட்ட பெளத்த மடங்களும், பெளத்த வெறி பிடித்த பிக்குகள் இருக்கிறார்கள்.
அதனால் தான் பெளத்த மதத்திற்கு இலங்கையின் அரசியல் யாப்பில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. பெளத்த பிக்குகள் சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்களாக நடைமுறையில் இருக்கிறார்கள். இலங்கையின் சாதாரண குடிமக்களை காரணம் எதுவும் இன்றியே அடித்துத் துவைக்கும் காவல்துறை சிங்கள பெளத்த வெறி பேசும் பிக்குகளிற்கு முன்னால் பம்மிக் கொண்டு நிற்கிறது. அந்தத் துணிவில் தான் இந்த மட்டக்களப்பு பிக்கு போன்ற மண்டை கழண்ட வன்முறையாளர்கள் வீர வசனம் பேச முடிகிறது.
ஆனால் இவர்களின் வீர வசனமும், தொலைச்சுப் போடுவேன் என்ற பயமுறுத்தல்களும் அப்பாவி தமிழ், முஸ்லீம் மக்களின் மட்டும் தான் மேடையேறுகின்றன. சுதந்திர வர்த்தக வலயம் என்ற பெயரில் சர்வதேச முதலாளிகள் ஏழைச் சிங்கள மக்களைச் சுரண்டும் போது இவர்களின் வீரமெல்லாம் எங்கே என்று தெரிவதில்லை. தமது குடிநீரை விசமாக்கும் இந்திய பெரு முதலாளிகளின் தொழிற்சாலைக்கு எதிராக வெலிவேரிய மக்கள் போராடிய போது இந்த மஞ்சள் ஆடை மாயாவிகள் எங்கே மறைந்திருந்தார்கள்? வெலிவேரியாவின் ஏழைச் சிங்கள மக்களை மகிந்த ராஜபக்சாவின் கொலைகார இராணுவம் சுட்ட போது "நாயே உன்னைக் கொல்லுவேன்" என்று ஊளையிட்ட பேய்கள் எங்கே ஒளிந்திருந்தன?
பெளத்த மத ஒழுக்கங்களில் மூன்று பிரிவினருக்கும் ஐந்தாவது சீலமாக மது உண்ணாதிருக்க வேண்டும் என்ற ஒழுக்கம் வருகிறது. இலங்கையின் அரசுகள் மதுக்கடைகளிற்கு அனுமதி வழங்கி ஏழைச் சிங்கள பெளத்த குடும்பங்களை வறுமையில் வைத்திருப்பது ஏன் இந்த சிங்கள பெளத்த மக்களிற்காக பொங்கி எழும் பெளத்த வீரர்களிற்கு தெரிவதில்லை? ஏன் மதுக்கடைகளிற்கு எதிராகவும், அவற்றிற்கு அனுமதி வழங்கும் இலங்கை அரசிற்கு எதிராகவும் இவர்கள் போராடுவதில்லை?
மகிந்த ராஜபக்ச முதல் விமல் வீரவன்ச வரையான இலங்கையின் அரசியல்வாதிகள் திடீர்ப் பணக்காரர்களாகி கோடிகளில் புரள்வது ஏன் இவர்களிற்கு தெரியாதா? ஏழை மக்களின் உழைப்பையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கொள்ளையடித்ததினால் தான் இவர்கள் கோடீஸ்வர்கள் ஆனார்கள் என்பது இவர்களிற்கு தெரியாதா? அரசியல்வாதிகள் அரசியலை வைத்துப் பிழைத்தால் இவர்கள் மதத்தை வைத்து பிழைப்பவர்கள் அதனால் தான் இரு பக்கத்து அயோக்கியர்களும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ஆனால் இலங்கை அரசுகளின் அநியாயங்களையும், பெளத்த மதவாதிகளின் இனமத வெறிகளையும் தமது அரசியல் அறிவினாலும், அனுபவங்களினாலும் உணர்ந்து ஒடுக்கப்படும் இலங்கை மக்கள் விடுதலை பெற வேண்டுமாயின் இந்த அயோக்கியர்களின் அரசியலையும், மத வெறியையும் எதிர்க்க வேண்டும் என்னும் தெளிந்த சிந்தனை கொண்ட பெளத்த பிக்குகள் இன்று இலங்கையில் இருக்கிறார்கள். சோபித தேரர் போன்ற பிக்குகள், பிக்கு மாணவர் சங்கம், அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் சங்கம் போன்றவற்றில் அங்கம் வகிக்கும் பிக்குகள் இன மத வெறிகளிற்கு எதிராகப் போராடுகிறார்கள். "அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வியை விற்காதே" என்று தனியார் மயமாக்குவதிற்கு எதிராகப் போராடுகிறார்கள்.
ஆனால் இந்த மண்டை கழண்ட மங்கலராம விகாரையின் பிக்கு "தமிழ் நாயே உன்னை கொலை செய்வேன்" என்று தமக்கு முன்னாலேயே கொலை மிரட்டல் விட்ட போது பம்மிப் பதுங்கி நின்ற இலங்கையின் பொலிசார் இலங்கை அரசுகளின் அநியாயங்களிற்காக போராடும் பிக்குகளின் மேல் பாய்ந்து விழுந்து தாக்குகிறார்கள். ஆம், அநியாயங்களிற்கு எதிராக, ஊழல்களிற்கு எதிராக போராடினால் பெளத்த பிக்குவாக இருந்தாலும் அதிகாரங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
இந்த இன, மதவெறி கும்பலை தமிழ் மக்கள் தனியே போராடி வெல்ல முடியாது. முஸ்லீம் மக்கள் இலங்கை அரசை எதிர்த்து தனியே போராடி வெல்வது சாத்தியமற்றது. சிங்கள மக்கள் இலட்சக்கணக்கில் கிளர்ந்து எழுந்து போராடிய போதும் வெல்ல முடியவில்லை என்பதை நடைமுறை யதார்த்தம் எமக்கு காட்டி நிற்கிறது. இலங்கையின் மக்கள் விரோத அரசுகளை ஒடுக்கப்படும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் இணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே வெல்ல முடியும். தியாகிகளின் குருதியில் வரைந்த செங்கொடி சடசடத்துப் பறக்கும் நாள் இலங்கையின் சுதந்திர நாளாக மலரும்.