முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நியாய உரிமைகளை மறுத்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வரும் கேரள மாநில அரசைக் கண்டித்தும், உச்சநீதி மன்ற தீர்ப்பைச் செயல்படுத்தக் கோரியும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 14.12.06 அன்று எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
திருப்புவனம் வட்ட வி.வி.மு. அமைப்பாளர் தோழர் குணசேகரன் தலைமையில் திருப்புவனம் சந்தைத் திடலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கேரளத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஓட்டுக் கட்சிகளின் தகிடுதத்தங்களைத் தோலுரித்தும்; குறிப்பாக "மார்க்சிஸ்டு' முதல்வர் அச்சுதானந்தன், நீர்ப்பாசன அமைச்சர் பிரேமச்சந்திரன் முதலானோரின் அடாவடித்தனங்களைக் கண்டித்தும், பேச்சு வார்த்தை தேசிய ஒருமைப்பாடு என்று பசப்பி வரும் பார்ப்பனபனியா ஆளும் கும்பலை எதிர்த்தும், உச்சநீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்த "மார்க்சிஸ்ட்' கட்சியின் மத்திய கமிட்டியை வலியுறுத்தாமல் அச்சுதானந்தனுக்கு வால் பிடித்துச் செல்லும் தமிழக சி.பி.எம். கட்சியின் துரோகத்தை அம்பலப்படுத்தியும், தமிழக ஓட்டுக் கட்சிகளின் கையாலாகாத்தனத்தை வெளிச்சப்படுத்தியும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் முன்னணித் தோழர்கள் உரையாற்றினர். திரளான உழைக்கும் மக்களின் பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைத்து ஓட்டுக் கட்சிகளின் துரோகத்தை அம்பலப்படுத்திப் போராட அறைகூவுவதாக அமைந்தது.
பு.ஜ. செய்தியாளர்,
சிவகங்கை.