"இந்த உலகமானது, எப்போதும் போல, எங்கேயும் போல மதத்தாலும், மதவெறியாலும், மதங்கள் பல ஆயிரம் வருடங்களாகச் சேமித்துக் கடத்தித் தொலைத்த காட்டு மிராண்டித்தனத்தின் உச்சமானவர்கள் வாழும் புனித பூமியென மீண்டுமொரு முறை உணர்ந்து கொண்டேன். இந்த முறை புனித பெளத்தக் காவிகள் எனக்கு அறிவுக்கண்னைத் திறந்து விட்டார்கள்".
"நேற்று அருந்தப்பில் உயிர் பிழைத்தோம். இன்றோ நாளையோ, ஏன் நாட்கள் பல கடந்தும் கூட எம் மீதான வன்மம் தொடரலாம். வாள் கொண்டு பல நூறு பேரால் வெட்டி வீழ்த்தப்படலாம். நானோ...எனது வீட்டிலுள்ளவர்களோ...எங்கள் வீட்டிலுள்ள பச்சைக் குழந்தையோ கூட. உங்களுக்கு நினைவிருக்கக் கூடும், எங்கள் வீட்டிற்கு மிக அருகில் பெளத்த விகாரை இருப்பதைப் பற்றியும், மிகச் சத்தமாக பிரித் ஓதுவதைப் பற்றியும், கலை நிகழ்ச்சிகளை ஒலிபெருக்கியில் ஒலிபரப்புவது பற்றியும் சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்" என்று தமிழ்ப் பெண்ணாக இருப்பதினால் பெளத்த மதவெறியர்களினால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் நடந்த அநியாயங்களை மேலுள்ள வரிகளில் மனம் கசந்து ஒரு பெண் எழுதுகிறார்.
இலங்கையில் கொழும்பு நகரில் வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தினருக்கு பெளத்த மத வெறியர்களினால் நடந்த கொடுமை இது. அந்தக் குடும்பத்தினரின் வீட்டிற்கு மிக அருகில் இருக்கும் விகாரையில் இருந்து மிகச் சத்தமாக இரவும், பகலும் ஒலிபெருக்கிகளில்பிரார்த்தனைகளையும், பிரசங்கங்களையும் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த குடும்பத்தைச் சேர்ந்த மதப் பயங்கரவாதம் பற்றிய மேலே உள்ள வரிகளை எழுதிய பெண்ணிற்கு மிகக் கடுமையான ஒற்றைத் தலைவலி இருந்ததினால் அவர் அந்த விகாரைக்குச் சென்று ஒலியின் அளவை சிறிது குறைக்க முடியுமா என்று மிகவும் பணிவாகக் கேட்டிருக்கிறார்.
"திடீரென பெளத்த மதகுருக்கள், அடர்ந்த சிவப்பு நிறக் காவியணிந்தவர்கள் பாய்ந்து வந்தார்கள். தலைமை பீடாதிபதியெனச் சொல்லிக் கொண்டே ஒருவர் வந்தார். வாயில் சாராய நாற்றம். நாள் முழுவதும் நிறுத்தாமல் "பண" ஓதுவதற்கு ஒரு சாதாரன மனிதரால் முடியாது. சாராயம் முதலிய மெல்லிய ஊக்கிகள் மிக அவசியம்)".
"நீ வெளியே போ!
இது சிங்கள பெளத்த நாடு. நாங்கள் இப்பிடித்தான்.
நீ வெளியே போ தமிழ் பறை...."
அந்தச் சக்கர வியூகம் மிக நெருங்கியது. காற்றுப் புக முடியாத, சுமார் இரு நூறு பேரைக் கொண்ட வியூகமாக மாறியது.
"இது பெளத்த நாடு! நீ இந்தியாவிற்குப் போ!
கொலை செய்து போடுவோம்... போய்த் தொலை தமிழ(னே)!"
அன்பையும், அகிம்சையையும் தன் போதனையாகச் சொன்னவன் என்று சொல்லப்படும் போதி சத்துவனின் சங்கத்தைச் சேர்ந்த பிக்குவும், அம் மதத்தைச் சேர்ந்தவர்களும் தான் ஒரு பெண்ணிற்கும், அவரது குடும்பத்திற்கும் சொல்கிறார்கள் "இது சிங்கள பெளத்தர்களின் நாடு; உங்களிற்கு இங்கு இடமில்லை; உங்களைக் கொலை செய்வோம்".
எல்லா மத வெறியர்களும் இப்படித் தான் இருக்கிறார்கள். இலங்கையில் சிங்கள பெளத்தர்களை தவிர மற்றவர்களிற்கு இடமில்லை. இந்தியாவில் இந்துக்களைத் தவிர மற்றவர்களிற்கு இடமில்லை. பாகிஸ்தானில் முஸ்லீம்களைத் தவிர மற்றவர்களிற்கு இடமில்லை. அமெரிக்காவில் வெள்ளை நிற கிறிஸ்தவர்களைத் தவிர மற்றவர்களிற்கு இடமில்லை. இஸ்ரேலில் யூதர்களைத் தவிர மற்றவர்களிற்கு இடமில்லை.
பெளத்த மதம் இந்தியாவில் இருந்து வந்தது. சிங்களப் பெளத்தர்களின் வழிபாட்டு மொழியாக இந்தியாவில் இருந்து வந்த பாளி மொழி இருக்கிறது. எல்லா இனங்களையும் போல சிங்கள இனமும் தமிழர், ஒரிசா, வங்கம் போன்ற மொழி பேசும் மக்களின் தொடர்புகளும், கலப்புகளும் கொண்ட இனமாகவே இருக்கிறது. சிங்கள மொழி எழுத்துக்கள் இந்திய பிராமி எழுத்துக்களில் இருந்து தோற்றம் பெற்றவையே. இருந்தும் அவர்கள் சொல்கிறார்கள் "நாங்கள் கலப்பற்ற தூய பெளத்த சிங்களவர்கள்; மற்றவர்களிற்கு இங்கு இடமில்லை.
ஆனால் இந்த மண்டை கழண்ட மதவெறியர்கள் ஒரு சின்ன விடயத்தை மட்டும் மறந்து விடுகிறார்கள். அல்லது மறைக்கிறார்கள். உலகைப் படைத்த கடவுள்கள் என்பவர்கள் ஏன் உலகம் முழுவதும் அறியப்படுவதில்லை? நாடுகளை ஆக்கிரமித்தவர்கள்; மக்களைக் கொன்றவர்கள் தான் மதங்களைப் பரப்பினார்கள். வணிகம் செய்து கொள்ளை இலாபம் அடித்தவர்கள் தான் மதங்களைப் பரப்பினார்கள். ஆக்கிரமிப்பாளர்கள், வியாபாரிகள், கொலைகாரர்கள் கருணை கூர்ந்து தம் மதங்களை தம்மால் சுரண்டப்பட்ட மக்களிற்கு கொடுத்தார்களாம். நீங்கள் நம்பித் தான் ஆக வேண்டும்.
மதங்கள் என்றைக்கும் மக்களைப் பிரிப்பவை. அதனால் தான் அதிகாரவர்க்கங்கள் மதங்களை தம் இணை பிரியா நிழல்களாக வைத்திருக்கின்றன. உழைக்கும் ஏழை மனிதர்களிற்கு அவர்களை ஒடுக்கும் முதலாளிகள் காரணமில்லை; மற்ற மதத்தவர்களால் தாம் அவர்கள் வறுமையில் வாழ்கிறார்கள் என்னும் மிகப் பெரிய பொய்யை சொல்லி ஏழை மக்களை ஒருவரோடு ஒருவர் மோத வைக்கிறார்கள். இலங்கையின் ஆளும் வர்க்கமும், பெளத்த மதவெறியர்களும் இந்தப் பொய்களை சொல்லித் தான் சிங்கள மக்களை ஏமாற்றுகிறார்கள்.
பிரித்தானிய காலனித்துவவாதிகளிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து அண்ணளவாக எழுபது வருடங்கள் ஆகின்றன. இவ்வளவு நீண்ட நெடிய காலங்களிலும் பெளத்த சிங்களவர்களால் இலங்கை ஆளப்படுகின்றது. ஆனால் மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் இன்னும் வறுமையில் தான் வாழ்கிறார்கள். பெளத்த சிங்கள நாடு ஏன் பெளத்த சிங்கள மக்களை வறுமையில் வைத்திருக்கிறது என்று கேட்டால் இந்த மதவெறியர்களிற்கும், இலங்கையின் ஆட்சியாளர்களிற்கும் மறுமொழி சொல்ல முடிவதில்லை.
இலங்கை அரசினையும், அதற்கு துணையாக இருக்கும் பெளத்த மதவெறியர்களையும் அம்பலப்படுத்துவதற்கு சிங்கள மக்களிடையே உள்ள சிங்கள இனவாதம், பெளத்த மதவாதம் என்பன களையப்பட வேண்டும். அதற்கு இலங்கையின் ஒடுக்கப்படும் எல்லா மக்களும் சேர்ந்து போராட ஒரு பொதுத்தளத்தை கட்ட வேண்டும். ஒடுக்கப்படும் மக்கள் இணைந்து போராடும் போது ஒடுக்குபவர்கள் சொல்வதற்கு பொய்கள் இன்றி ஓடி ஒழிவார்கள் என்பதை உலகெங்கும் போராடும் மனிதர்கள் எமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.